முதன் முதலாக சத்ய சாயி அகண்ட பஜன் 1946ல் பெங்களூரில் உள்ள சில சாயி குடும்பத்தினரால் ஆரம்பிக்கப்பட்டது.
பகவானின் ஆரம்பகால பெங்களூர் பக்தர்களான திரு. சேஷாத்ரி, திரு. பத்மநாபன் மற்றும் சிலர் பகவானை காண 1940களில் புட்டபர்த்திக்கு அடிக்கடி சென்று வருவார்.
1945ல் இந்த பக்தர்கள் இணைந்து ஒவ்வொரு வியாழக்கிழமைகளிலும் தங்கள் வீடுகளில் சாயி பஜன் ஏற்பாடு செய்து நடத்தத் துவங்கினர்.
தொலை தொடர்பு மற்றும் போக்குவரத்து வசதிகள் குறைவாக இருந்த அந்த காலத்திலும் அந்த 6 குடும்பத்தினர் வாரம் தோறும் வியாழக்கிழமை சாயி பஜன் செய்வதை தொடர்ந்தனர்.
ஒரு வருடம் சாயி பஜன் செய்து நிறைவு செய்த அவர்களுக்கு, அதனை கொண்டாடும் வகையில் 24 மணி நேர அகண்ட சாயி பஜன் ஒன்றை நடத்தலாமா என யோசித்தனர்.
அந்நேரம் புட்டபர்த்தியில் இருந்த திரு. சேஷாத்ரி அவர்களுக்கு மற்ற பக்தர்கள் ஒரு போஸ்ட் கார்ட் மூலம் தங்கள் யோசனையை பகவானிடம் தெரிவித்து, அவரின் அனுமதியையும் ஆசியையும் வேண்டுமாறு கேட்டுக் கொண்டனர்.
பதில் விரைவில் போஸ்ட் கார்ட் மூலமே வந்தது. பகவான் இந்த யோசனையை வெகுவாக விரும்பினார். நடத்த அனுமதியும் வழங்கினார். அனுமதி வழங்கியது மட்டுமல்ல, தானே நேரில் வந்து அதில் கலந்து கொள்வதாகவும் கூறினார்!
இந்த பதிலை கண்ட பெங்களூர் பக்தர்கள், பகவானை 'தயவு செய்து வர வேண்டாம்' என மற்றொரு கடிதம் மூலம் தெரிவித்தனர்!!!
பகவான் வந்தால் அவரை சரியாக உபசரிக்க இயலாது என்றும், அவர் வந்தால் அவரைக் காண வரும் கூட்டத்தை கொள்ளும் வகையில் இட வசதி இல்லை என்பதே அன்பு பகவானை அவர்கள் வர வேண்டாம் என கூறியதற்கு காரணம்.
வர வேண்டாம் என்ற தகவல் அடங்கிய போஸ்ட் கார்டை போஸ்ட் செய்த உடனே, அவர்களுக்கு திரு. சேஷகிரிராவிடம் இருந்து ஒரு தந்தி வந்தது, "நாங்கள் கிளம்பிவிட்டோம்" என்று!
ஆக, அகண்ட பஜன் நடத்த எண்ணியுள்ள பிப்ரவரி 1946 க்கு இரண்டு வாரத்திற்கு முன்னரே பகவான் பெங்களூர் வந்து சேர்ந்தார்.
அகண்ட பஜனுக்கு பக்தர்கள் செய்யும் ஏற்பாடுகளில் தானும் உற்சாகமாக பங்கு கொண்டார்.
சிறு குழுவாக பக்தர்கள் சுறுசுறுப்பாக மேடை அலங்காரங்களிலும், பிரசாத தயாரிப்பிற்கு தேவையான பொருட்களை சேகரிப்பதிலும் ஈடுபட்டனர். பஜன் நேரத்தில் பகவானே மேடையில் தனது ஆசனத்தில் அமர்ந்து பஜனையை அர்பணமாக ஏற்றுக்கொள்வார் என எண்ணியிருந்த பக்தர்கள், பஜன் துவங்கும் நாள் வரை மேடையில் பகவானின் திருவுருவப் படம் ஒன்றை வைக்க வேண்டும் என்பதை மறந்திருந்தனர்.
அகண்ட பஜன் நடைபெறும் நாளன்று, அதற்கான ஆயத்த பணிகள் முடிவடையும் சமயத்தில், குடும்பம் குடும்பமாக பக்தர்கள் நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்கு, 'அகண்ட பஜன் எங்கே நடக்கிறது?' என விசாரித்த வண்ணம் வந்துகொண்டே இருந்தனர். ஆச்சரியமடைந்த ஏற்பாட்டு குழுவினர் விசாரித்த போது அவர்கள் கூறினார்கள், 'ஓ, பகவான் எங்கள் கனவில் வந்து, சிறப்பான இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சொல்லி அழைத்தார்' என்றனர்.
மைசூர், சென்னை போன்ற நகரங்களில் இருந்தும் பக்தர்கள் சாரை சாரையாக வந்து கொண்டே இருந்ததை கண்ட ஏற்பாட்டாளர்கள், தாங்கள் சேகரித்து வைத்துள்ள பொருட்களை கொண்டு, அவர்களுக்கு பிரசாதம் ஏற்பாடு செய்ய முடியாதே என எண்ணி கவலையுற்றனர்.
பெங்களூரு பக்தர்களில் சிலர் பகவானை விட வயதில் மூத்தவர்களாக இருந்தனர். அவர்கள் சகஜமாக பகவானிடம் உரையாற்றக் கூடியவர்கள். சில சமயங்களில் கோபமாகவும் பேசும் உரிமையை எடுத்துக்கொள்வர். அவர்களில் ஒருவரான திருமதி. சாவித்திரி அம்மையார் பகவானிடம், "யார் உங்களை இத்தனை பேரை வரவழைக்க சொன்னது? யார் இவர்களுக்கு உணவளிப்பர்? எனக்கு தெரியாது, நீங்கள் சமையலறைக்கு வந்து, அத்தனை பாத்திரத்தையும் ஆசீர்வதித்து, 'அக்ஷய' என்று கூற வேண்டும். அவ்வாறு இல்லை எனில் எங்கள் மானம் போய்விடும்." என்றார்.
பகவான் அம்மையாரை ஆசுவாசப் படுத்தினார். "சாவித்திரி அம்மா, கவலை வேண்டாம். இவர்கள் அனைவரும் என் பக்தர்கள். நான் அழைத்துதான் வந்திருக்கிறார்கள். எந்த குறையும் ஏற்படாது. நான் பார்த்துக்கொள்கிறேன்." என்றார்.
ஆனால், பகவானின் சமாதானத்தை ஏற்றுக்கொள்ளாத அம்மையார், பகவானை சமையலறைக்கு கையோடு அழைத்து சென்று, ஒரு தேங்காயை கையில் கொடுத்தார். அதனை இரண்டாக உடைத்து, அந்த தண்ணீரை அனைத்து பாத்திரங்களிலும் தெளித்து, 'அக்ஷய அக்ஷய அக்ஷய' என்று கூறினார் பகவான். அம்மையாரை நோக்கி, "இப்போது சந்தோஷமா?" எனக் கேட்டார். "ஆம்" என்றார் அம்மையார்.
அகண்ட பஜன் காலை 10.30க்கு துவங்கியது. சரியாக 24 மணி நேரம் நடைபெற்ற பஜனில் பகவான் பல மணி நேரம் கலந்து கொண்டார். அற்புதமான பஜனையை பலர் கேட்டு இன்புற்றனர். நிறைவில் பகவானுக்கு மஹாமங்கள ஆரத்தி காண்பிக்கப்பட்டது.
பஜனின் நிறைவில் கலந்து கொண்ட அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. கலந்து கொண்ட அனைவருக்கும் பிரசாதம் வழங்கிய பின்னும் பிரசாதம் குறைவில்லாமல் வளர்ந்து கொண்டே இருந்தது. பிரசாதம் வழங்கும் பணி, மதியம், மாலை, இரவு என தொடர்ந்து கொண்டே இருந்தது. இலவச உணவு வழங்கப்படுகிறது என அறிந்து சுற்று வட்டாரத்தில் உள்ள கிராம மக்கள் படையெடுக்க ஆரம்பித்தனர்.
பிரசாதம் வழங்கி வழங்கி சோர்வுற்ற பக்தர்கள், பகவான் தங்கி இருந்த இடம் சென்று, "ஸ்வாமி, போதும், பிரசாதம் வளர்வதை நிறுத்தி விடுங்கள். நாங்கள் சோர்ந்து விட்டோம்" என மன்றாடினர். அதனை கேட்ட பகவான், "நீங்கள் தானே வளர வேண்டுமென வேண்டினீர்கள், இப்போது நிறுத்த சொல்கிறீர்கள்." என முரண்டு பிடித்தார்.
பின் ஒரு வழியாக பிரசாதம் வளர்வதை நிறுத்தினார் ஸ்வாமி!
இவ்வாறு துவங்கிய அகண்ட பஜன் ஒவ்வொரு வருடமும், பகவானிடம் தேதி கேட்டு நடைபெற்றது. பகவானும் ஒவ்வொரு முறையும் நேரில் வந்து கலந்து கொண்டார்.
25 ஆண்டுகள் தொடர்ந்து பெங்களூர் பக்தர்கள் குடும்பத்தினர் இல்லத்தில் நடைபெற்ற இந்த அகண்ட பஜன் 1974 முதல் உலகம் முழுவதும், பகவானின் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, நடத்த பகவான் ஆசி வழங்கினார்.
பகவான், பெங்களூர் பக்தர்களிடம், "நீங்கள் ஏற்றிய இந்த ஒளி, இப்போது உலகெங்கும் பரவி ஒளி வீசும்" என்று அன்புடன் கூறினார்.
mnv_mdu
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக