தலைப்பு

செவ்வாய், 16 நவம்பர், 2021

நான் உங்கள் ஒவ்வொருவரின் வருகைக்காகவும் காத்திருக்கிறேன்! -ஸ்ரீ சத்யசாயி

சுவாமி பரப்பிரம்மம்... புகை எழா தூய அக்னி அவர்... அத்தகைய அருட்பெருஞ் ஜோதியான சுவாமி எத்தகையவர்... தன் பக்தர்க்காக எவ்வாறு காத்திருக்கிறார் என்பதை நெகிழ்வோடு எடுத்தியம்பும் சுவாரஸ்ய பதிவு இதோ... 

ஒரு நாள் சுவாமியின் தரிசனத்தின் போது, ஒரு பக்தர் மிகுந்த மனத்துயரத்துடன், வேதனையுடன், சுவாமி.. சுவாமி.. என்று தொடர்ந்து அழைத்துக் கொண்டேயிருந்தார். சுவாமி அவரைக் கவனித்து பேட்டியறைக்குக் கூட்டிச்சென்றார். சுவாமி அறைக்குள் நுழைந்து கதவை மூடினார், தாழிட்டார். பக்தரால் அதற்கு மேல் தாங்க இயலவில்லை. சுவாமி, உங்களுக்காக நான் கடந்த மூன்று நீண்ட வாரங்களாகக் காத்துக் கொண்டிருக்கிறேன் சுவாமி என்று உளறினார். சுவாமி அன்புடன் கூறினார், "பங்காரு நான் எவ்வளவு வருடங்களாக உனக்காகக் காத்துக்கொண்டிருக்கிறேன் என்பது உனக்குத் தெரியுமா? அந்த பக்தர் அதிர்ச்சியில் ஸ்தம்பித்தார். பகவான் தனக்காக நிஜமாகக் காத்துக்கொண்டிருக்கிறாரா? இந்த எண்ணம் அவரை நிலைகுலைய வைத்தது.சுவாமியின் அன்பு வெள்ளத்தின் தாக்குதலைத் தாங்க முடியாமல் அவர் அழத் தொடங்கினார்.

ஆம், ஒவ்வொரு கணமும் நம் ஒவ்வொரு வருக்காகவும் எப்போது வருவான் எப்போது? என்று யோசனை செய்துகொண்டே சுவாமி நமக்காகக் காத்திருப்பது நிஜம். எப்போது நீ வந்தாலும்,  பங்காரு, அப்போது நான் உனது வருகைக்காக காத்துக் கொண்டிருப்பதைக் காண்பாய். ஆனால் பக்தர்கள் தமக்குத் தாமாகவே காரணம் கற்பித்துக் கொள்கிறார்கள்.

சுவாமி, இப்போது என்னால் வர இயலாது, நான் பல விசயங்களில் சிக்கிக்கொண்டியுக்கிறேன். நானே அடிமைப்பட்டுக் கிடக்கிறேன். இப்போது என்னால் வரமுடியவில்லை சுவாமி. சுவாமி விட்டுக் கொடுக்கிறார்.

பக்தர்களுக்கு ஆறுதல் ஈந்து ,உறுதியும் தருகிறார். நீ கவலைப்பட வேண்டாம். எப்போது உன்னால் வர இயலும் என்பது முக்கியமல்ல. உனக்கென்று உரிய நேரத்தில் நீ வா. என்னைப் பொறுத்த வரையில், நான் எப்போதுமே உனது வருகைக்காகக் காத்திருப்பேன். நாம் அவரிடம் செல்வதற்கு  பல பிறவிகள் கூட ஆகலாம்.

பல பக்தர்கள் , சுவாமியிடம் பிரத்யேகப் பேட்டி வேண்டுமென்று மன்றாடுகிறார்கள். சுவாமி, சுவாமி, ப்ளீஸ் ஒரு பேட்டி கொடுக்க வேண்டும் என்று கெஞ்சுகிறார்கள். சுவாமி Wait - காத்திரு என்கிறார். அவர்கள் தங்கள் முறை வரவேண்டும்  என்று காத்திருப்பது மட்டுமல்ல.அவர்கள் மிகவும் Weighty-கனமாக இருக்கிறார்கள். அவர்கள் பற்பல நாட்கள் ஏங்க வேண்டும். பற்பல வருடங்கள் கூட ஏங்க வேண்டும். அவர் எதிரில் வர அழைக்கப்படவில்லையே என்ற மன வேதனையில் துன்பப்பட வேண்டும். இத்தகைய தபஸ் மேற்கொண்ட பிறகு சுவாமி அவர்களைப் பேட்டிக்கு அழைக்கிறார்.

அதாவது , சாதகன் புலனடக்கம், பச்சாதாபத்தால் வருந்திக் கொள்ளுதல், இடைவிடா நாமஸ்மரணம், சுவாமியைப்பற்றி தியானித்தல், இவை மூலமாக கனத்தை இழக்கவேண்டும், அவனைக் கீழே தள்ளுகின்ற ராகத்துவேஷம்(பற்றுதலும், வெறுப்பும்) ஆன சுமையை இறக்க வேண்டும். பக்தன் இவ்வாறு தன்னை தயார் செய்து கொள்ளும்போது, கனத்தின் சுமை கீழே இறக்கப்படும் போது, அவன் லேசாகும் போது, சுவாமி கட்டாயம் அவனைத் தன்னருகில் வர அழைப்பார்.


சுவாமியே இதனை வித்தியாசமான முறையில் விளக்குகிறார். "என்னிடம்  அதிகமாக நெருங்கும்போது, நீ அதிகமாக என் அன்பைச் சம்பாதிக்கிறான.நீ  அதிகமாக எரிவதற்கும் வாய்ப்பு இருக்கிறது. நமது தீய இயல்புகள் , குறைபாடுகள், மாசுகள், எரிக்கப்படும். அவ்வாறு எரிதல் ஆன்மீகத் தூய்மைக்கும் , பண்பாட்டுக்கும் இட்டுச் செல்கிறது. எரிதல் எனும் இச்செயல்பாட்டுடன் சுவாமியின் அன்பும் சேர்ந்துகொண்டால், சுவாமியின் அன்பு கவசம் போல இருந்து சாதகன் இந்த பொசுக்கப்படுதல் என்ற  தீவிர சாதனையின் உக்கிரத்தைத் தாங்கிக் கொள்கிறான்.

ஆதாரம் : தபோவனம்


🌻அக்னியிடம் நெருங்குகிற யாரும் /எதுவும் அக்னியாகவே மாறக்கூடிய தன்மையைப் பெறுகின்றன(ர்).. அத்தகைய ஞானாக்னி சுவாமி.. நம்மை ஆன்ம சாதனைக்குள் ஆட்படுத்தும் தியானாக்னி சுவாமி... அத்தகைய சுவாமியை உள்ளும் புறமும் நாம் நெருங்க நெருங்க ஜென்ம குப்பைகள் எரிக்கப்பட்டு ஆன்மா பரிசுத்தமாக்கப்படுகிறது என்பதற்கு நம் பரிபக்குவ வாழ்க்கையே சாட்சியாக இருக்கப் போகிறது வெளிச்ச மிகு பிரேமை மிகுந்த வருங்காலத்தில்...!! 🌻


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக