தலைப்பு

வெள்ளி, 19 நவம்பர், 2021

ஒரு வீட்டின் குத்துவிளக்கை பாபா ஆசீர்வதிக்க அனைவர் வீட்டிலும் ஜெகஜோதியாய் எரிந்தன விளக்குகள்!

பேரிறைவன் ஸ்ரீ சத்யசாயி விளக்கேற்றவே வந்திருக்கிறார். மனித உள்ளத்தில் அறியாமை இருள் கவ்விக் கொண்டிருப்பதால் அதைப் போக்குவதற்கே அவர் இதய விளக்கேற்றுகிறார்.  சத்யசாயி இறைவனா ? என சந்தேகப்படுவது விளக்கில் எரிவது ஜோதியா? என சந்தேகப்படுவது போல் அபத்தமானது. அவர் ஏற்றிய பக்தி விளக்கில் எங்கிருந்து இருள் வெளிப்படும்? அவரின் எண்ணற்ற லீலா ஜோதியில் ஓர் உன்னத வெளிச்ச அனுபவப் பதிவு இதோ...


1960களில் பிரசாந்தி நிலைய ஆசிரமத்திற்குள் வரிசையாக பல வீடுகள் கட்டப்பட்டன.. அவை பிளாக்குள் (north / east / south / west block) என அழைக்கப்பட்டன...


அந்த ஒவ்வொரு வீடுகளும் மிகவும் எளிமையாக .. உன்னத பக்தர்கள் தங்குவதற்காக கட்டப்பட்டிருந்தன. இப்படி எளிமையாய் கட்டி முடிக்கப்பட்டதற்கு கிரகப்பிரவேசம் செய்யும் நன்னாளும் நெருங்கியது. அதற்கும் மேலாக சுவாமியே அதை நிகழ்த்த வேண்டும் என்ற அவர்களின் நிர்மல பிரார்த்தனையும் பலிதமானது.

பக்தர்களின் இதயப்பூர்வ பக்திக்காக தன்னையே தருபவர் சுவாமி. எனவே அவர் கிரகப்பிரவேசம் செய்து வைக்க ஒரு வீட்டிற்குள் நுழைகிறார். சுவாமி ஏற்றி வைக்க வேண்டும் என்றே வீட்டு குத்துவிளக்கு திரி முக்கிய எண்ணையோடு .. வெளிச்சம் பெற வேண்டிய எண்ணத்தோடு காத்துக் கொண்டிருந்தது.

சுவாமி அந்த திருவிளக்கின் முன் வந்ததும்.. "தீப்பெட்டி எங்கே?"என்கிறார். அந்த வீட்டு பக்தர் எங்கேயோ தீப்பெட்டியை மறந்து வைத்துவிட பதட்டம் அடைகிறார். பரபரப்பாகிறார்.

சுவாமி அதை உணர்ந்து "ஓ..‌ தீப்பெட்டி வைக்கவில்லையா.. சரி.. பரவாயில்லை" என அவரை புன்னகையால் நிதானப்படுத்துகிறார். அதுதான் சுவாமி.

பக்தரின் பரபரப்பை நிதானமாக்கி .. அசாந்தியை பிரசாந்தியாக்குவதே சுவாமியின் கருணை.

அதற்கு பின் நடந்தது தான் பேராச்சர்யம்.

சுவாமி அந்த திருவிளக்கை நோக்கி தனது திருக்கரத்தால் அதற்கு ஆசி வழங்குகிறார்.

பட்டென உடனே அந்த ஐந்து முக தீபத்திரியும் சாயி ஜோதி எனும் சைதன்ய ஜோதியால் பற்றிக் கொள்கின்றன... கூடி இருந்தவர்கள் பரவசப்படுகின்றனர்.

'சாயி ராம் சாயிராம்' என கோஷம் எழுப்புகின்றனர்.

வீட்டு பக்தரின் விழி எனும் விளக்கிலோ கண்ணீர் தீபம் வழிகிறது.

சுவாமி இப்படியே ஒவ்வொரு வீட்டிற்கும் வந்து கிரகப்பிரவேசம் நிகழ்த்தி விளக்கேற்றுவார் என பக்தர்கள் நினைத்தனர். சுவாமியோ மெதுவாய் நகர்கிறார். அவர்களின் ஆர்வத்தைப் புரிந்து கொண்டு அவர்களின் முகத்தை புன்னகையால் பார்த்தபடி "அனைவர் வீட்டிலும் கிரகப்பிரவேசம் நடந்தாயிற்று" என சொல்லிவிட்டு ஆசிவழங்கி நகர்கிறார்.

அந்தந்த வீட்டு பக்தர்களோ ஓடிச் சென்று அவர்களின் வீட்டிற்குள் ஆவலாய் நுழைந்தபடி பார்க்க.. பரவசம் பிரகாசமாய் அவர்களுக்காக காத்திருப்பதாக... அந்தந்த புது வீட்டு பக்தரின் குத்துவிளக்குகள் ஏற்கனவே ஏற்றப்பட்டது போல் கண்சிமிட்டி ஒளிர்ந்து கொண்டிருந்தன...

பக்தர்கள் பரவசத்தில் முகத்தோடு சேர்ந்து அவர்களின் அகமும் பக்தியால் மேலும் ஒளிர தொடங்கின...

சுவாமி ஒரு வீட்டில் தனது கை அசைவாலும்.. மற்ற எல்லா வீடுகளிலும் தன் நாவசைவாலும் விளக்குகள் ஏற்றி...

தான் தர்மத்தை ஒவ்வொருவர் இதயத்திலும் விளக்கேற்ற வநதவனே என்பதனை மக்களுக்கும் பக்தர்களுக்கும் உணர வைக்கிறார்!! 

ஆதாரம்: Leela Mohana Sai, Chapter 10 / P. 55, 56


🌻 இதிலிருந்து பக்தர்கள் ஒன்றை நன்றாகப் புரிந்து கொள்ளலாம். சுவாமியின் சொல் சாதாரணமானதல்ல.. சுவாமியின் சொல்லில் சத்தியம் தனது விஸ்வரூபத்தையும்..அடி ஆழத்தையும் அடைகிறது. இந்த ஒட்டுமொத்த பிரபஞ்சத்திலும் சுவாமி சொல்வது மட்டுமே நிகழும். அவர் ஏற்கனவே பக்தர்களுக்கு எல்லாவற்றையும் தனது திருச்சொல்லால் தெளிவுபடுத்தி விட்டார். அதை நெஞ்சில் நிறுத்தி நாமே கடைபிடிக்க வேண்டும். சுவாமி சொல்படி மட்டுமே நடக்க வேண்டும். ஆம்.. தேர் என்பது அச்சாணியின் சொல் படியே நகர வேண்டும்.. நமக்கு சுவாமியின் சொல்லே அச்சாணி. அச்சாணி இல்லா தேர் குடைசாய்ந்து விறகுக் கடைக்குத்தான் போகும்.🌻

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக