பகவான் ஸ்ரீ சத்ய சாய்பாபா தான் ஒரு அவதார புருஷர் என உலகுக்கு அறிவிப்பதை, பல சமயங்களில் தவிர்த்து வந்தார். எனினும் தவிர்க்க முடியாத சூழ்நிலையில், தனது 14வது வயதில் தான் ஒரு அவதாரம் எடுத்து வந்திருப்பதை பிரகடனப்படுத்தினார். அவருடைய இளம் பருவத்திலேயே தன்னுடைய தெய்வீக சக்தியை வெளிப்படுத்தி, தன்னுடன் இருந்தவர்களை ஆச்சரியப்படுத்தி அருள்பாலித்தார். அவர் கடந்த காலத்தையும் எதிர்காலத்தையும் அறிந்தவராயிருந்தார்.
அவர், மனிதர்களின் மனதில் தோன்றும் எண்ணங்களை அறிந்திருந்தார். மேலும் ஒன்றும் இல்லாத வெட்ட வெளியிலிருந்து எதை வேண்டுமானாலும் உருவாக்கினார். அனைத்திற்கும் மேலாக எவருக்கேனும் அறிவுரை வழங்கும் போது, அவரது உதடுகளிலிருந்து ஆழ்ந்த அறிவுடன் கூடிய கண்டிப்பும் அக்கறையும் மிகுந்த சொற்கள் வெளிப்பட்டன. அது நிச்சயமாக தெய்வத்தின் குரலேயாகும்.
சுவாமி, இரு வெவ்வேறு சமயங்களில் துறவிகளுக்கு அளித்த அறிவுரை ஒன்றே, அது அவரது அவதார மகிமையை உணர்த்துவதாகும். முதலாவது அறிவுரை, 15 வயதாகும் போதும், 16 வருடங்களுக்குப் பிறகு ஒருமுறையும் அறிவுரை வழங்கினார். இவ்விரு சமயங்களிலும், இருவருக்கும் அவர் கூறிய அறிவுரை, அதிசயத்தக்க முறையில் ஒன்றாக இருந்தது. இவ்விரு சம்பவங்களும் ஒரு முழுமையான கடவுளின் அவதாரம் மட்டுமே ஒருவருடைய ஆளுமையில் ஆழமாகப் பதிந்து, அவரை மிகுந்த அன்போடும் கருணையோடும் கண்டிப்பது மட்டுமன்றி, அவருக்கு உறுதிப்பட வரமும் வழங்க முடியும் என்பதை வெளிப்படுத்துகிறது.
1951ஆம் வருடம், புட்டபர்த்திக்கு அருகில் உள்ள புக்கபட்டினம் எனும் கிராமம், திகம்பர சுவாமி என்ற துறவியின் வருகையை எதிர்நோக்கி விழாக்கோலம் பூண்டிருந்தது. அவர் தன் கால்களை இழந்திருந்த காரணத்தினால், அவரது பக்தர்களுள் சிலர் அவரை பல்லக்கில் அமர்த்தி சுமந்து செல்வர்.
அவர், புலமைக்கும், ஆன்மீகத்திற்கும் மிகவும் புகழ் பெற்றவர். புக்கபட்டினத்தில் இருந்த அவரது பக்தர்கள், புட்டபர்த்தியில் இருந்த நம் இளமையான பாபாவுடன் கருத்து பரிமாற்றம் செய்ய வேண்டும் என்றும் அதைக் காணவும் ஆவலாய் இருந்தார்கள். மிகப்பெரிய கதாநாயகனைப் போன்ற ஒருவரும், இனிமையான தெய்வீகம் பொருந்திய இளவயது பாபாவும் மோதிக் கொள்வதைப் பற்றி யார்தான் பேசமாட்டார்கள்?!!
எனவே ஒருநாள் மாலை வேளையில் அவர்கள், அவரை புட்டபர்த்திக்கு சுமந்து சென்று, பாபா இருந்த வீட்டில் அமரச் செய்தார்கள். பாபா, திகம்பர சுவாமிக்கு, ஒரு துண்டை அளித்தார். கூடவே அறிவுரையும் வழங்கினார் ; “நீங்கள், இந்த சமூகம் மற்றும் அதன் நிகழ்வுகளில் இருந்து விடுபட்டு, துறவு பூண்டுள்ளீர்கள். நான் அதனைத் தவறு என்று கூறவில்லை. நீங்கள் இருக்க வேண்டிய இடம் ஒரு காடோ அல்லது மலையிலுள்ள குகையோ ஆகும். அதை விடுத்து நீங்கள் சமூக சுக வாழ்விற்கு ஆசைப்பட்டீர்களேயானால், இந்த பற்றற்ற துறவு வாழ்க்கையை நாடுவதாகக் காட்ட வேண்டாம்”, என்று கூறிய இளம் பருவத்தில் இருந்த பாபா, மேலும் தொடர்ந்து பேசியதாவது ;
“எனக்கு உங்களுடைய கஷ்டம் புரிகிறது. இந்த மனிதர்களை விட்டு பிரிந்து விட்டால், உமக்கு தினமும் உணவு கிடைக்காமல் போய்விடும், என்று அஞ்சுகின்றீர்கள் அல்லவா? நான் கூறும் வார்த்தைகளை குறித்து வைத்துக் கொள்ளுங்கள்; நீங்கள் எங்கேயிருந்தாலும், அது ஹிமாலய மலையானாலும் சரி அல்லது தண்டகாரண்ய காடாக இருந்தாலும் சரி, நான் உங்களுக்கு தவறாமல் உணவு வழங்குவேன் என்று உறுதி அளிக்கிறேன்”, என்று நம்பத்தகுந்த அதிகாரபூர்வ குரலில் கூறினார். ஒரு பரிபூரண அவதாரம் மட்டுமே அங்கனம் பிரகடனப்படுத்த முடியும். இது நிச்சயமாக “தெய்வத்தின் குரல்” அன்றி வேறென்ன?!!
பதினாறு வருடங்கள் கழித்து, பாபா மற்றொரு துறவியை சந்திக்க நேர்ந்தது. அவர் கிழக்கு மற்றும் மேற்கத்திய தத்துவ மேதையாவார், மற்றும் பக்தியையும் செயலையும் இணைக்கும் பாதையான ராஜயோகத்தில் தேர்ந்தவராயிருந்தார். எழுபது வயதைக் கடந்த அவர், ஒரு மத சம்பந்தமான நிறுவனத்தைத் தொடங்கி, அதை வளர்ப்பதில் ஈடுபட்டு வந்தார். பாபாவை சந்தித்த பிறகு, புட்டபர்த்தியில் ஒரு கூட்டத்தில் அதை விவரித்தார்.
“பாபா பிறப்பதற்கு முன்பாக, எனக்கு யோகக் கலையில் ஏற்பட்ட அபூர்வ அனுபவங்களைப் பற்றி குறிப்பிட்டது இனிமையானதாகும்!. நான் என்னுடைய செயல்கள் மூலம் இந்த உலகத்திற்கு நன்மை செய்வதாக நினைத்துக் கொண்டிருந்த மாய தோற்றத்தைக் கைவிடும்படி அறிவுறுத்தினார். நான் இப்போது செய்யும் முயற்சிகளை விட, ஆரம்ப காலத்தில் செய்த யோகப்பயிற்சியின் மூலம் பெற்ற தூண்டுதலின் படி செயல்படும்போது தான், உலகத்திற்கு நன்மை கிடைக்கும்”, என்று எடுத்துரைத்தார்.
இத்தகைய அருமையான அறிவுரையைக் கூறி இதற்கு முன் எவரும் ஆசீர்வதித்ததில்லை. மேலும் இது எனக்கு, என்னுடைய ஆன்மீக வளர்ச்சிக்கு ஏற்ற, சரியான தருணத்தில் அளிக்கப்பட்ட அறிவுரை என்று தோன்றியது. நான் அவரிடம் விடைபெற்று வரும்போது பாபா என்னை நோக்கி திரும்பி, “நீ எங்கிருந்தாலும் கவலைப்படாதே. நான் உன்னை கவனித்துக் கொள்வேன்; உனக்கு வாழ்வாதாரம் அளிப்பேன்”, என்று உறுதியளித்தார்.
பதினாறு வருடங்களுக்கு முன்பு பாபாவால் கூறப்பட்ட அதே வார்த்தைகள்!! அதுவே “தெய்வத்தின் குரல்”.
சத்யசாய்பாபாவைப் போன்ற ஒரு அவதாரத்தால் அல்லாமல், வேறு யாரால் அத்தகைய உறுதியை அளித்து, அதை நடத்திக் காட்டவும் முடியும்?!!!
- N.கஸ்தூரி
ஆதாரம்: ஸனாதன ஸாரதி, ஜூலை 1958.
தமிழாக்கம்: தி.கல்யாணி, சென்னை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக