தலைப்பு

வியாழன், 21 நவம்பர், 2019

சுவாமியின் பிறந்த நாள் கொண்டாட்டங்கள் - 1960 மற்றும் 1975


இறைவன் ஸ்ரீ சத்யசாயியின் ஆதிகாலத்து அவதாரத்திருநாள் கொண்டாட்டத்தில் இப்போதுள்ள பலர் கலந்து கொண்டிருக்க வாய்ப்பில்லை... ஊடகப்புரட்சி அற்று வெறும் ஆன்மீகப் புரட்சியே நிகழ்ந்து கொண்டிருந்ததால் எல்லா அவதார வைபவங்களும் காணொளி பதிவாக அரங்கேறும் வாய்ப்புமில்லை.. இதோ அந்தக் குறை இனிதே அகன்று போகிறது இதோ... ஸ்ரீசத்யசாயி யுகத்தின் பதிவு வழியாக... நாம் நமது வாசிப்பில் இறைவனின் திருக்கொண்டாட்டத்தில் கலந்து கொள்ளப் போகிறோம் இதோ...

🌷சுவாமியின் 35வது பிறந்த நாள்:

நவம்பர் 23, புதன்கிழமை 1960, காலை 8:30க்கு ஸ்வாமி பிரசாந்தி கொடியை ஏற்றினார். ஸ்வாமி அவருடைய வெள்ளி சிம்மாஸனத்தில் அமர்ந்த  போது, திரு பெத்த வெங்கப்ப ராஜுவும் திருமதி ஈஸ்வரம்மாவும் சுவாமியின் சிரஸில் எண்ணை வைத்து வணங்கினர். அதைத் தொடர்ந்து, பர்குலா ராமகிரிஷ்ண ராவ் தம்பதியினரும் திரு பகவந்தம் தம்பதியினரும் மற்றும் சில பக்தர்களும் சுவாமியை நமஸ்கரித்தனர். அங்கு குழுமியிருந்த ஒவ்வொரு பக்தரும் சுவாமிக்கு மாலை அணிவிக்க அற்புத வாய்ப்பு வழங்கப் பட்டது. மாலையில் ஜூலா தரிசனம் அளித்து ஸ்வாமி பக்தர்களுக்கு ஆசி வழங்கினார்.ஸ்வாமியின் தெய்வீக அருளுரைக்கு முன்னதாக ப்ரம்மஸ்ரீ பைராகி சாஸ்திரி உரை நிகழ்த்தினார்.


சுவாமியின் பிறந்த நாள் செய்தியாக சுவாமி கூறினார். என்னை நம்புங்கள், இந்த புட்டபர்த்தி மிக விரைவில் ஒரு திருப்பதி போல் ஆகப் போகின்றது. ஆயிரக் கணக்கில் யோகிகளும், சாதுக்களும் பக்தர்களும் எதிர் காலத்தில் இங்கு மன அமைதிக்காகவும் பிறவிப் பயனை அடையவும் வருவார்கள்".

சுவாமி 35வது பிறந்த நாளை ஒட்டி, பிரசாந்தி நிலையத்திற்கு வற்றாத மின்சாரம் தரும் 'டைனமோ ஹவுஸ்' ஆரம்பித்து வைத்தார்

24 நவம்பர் 1960, புட்டபர்த்தியின் வரலாற்றில் பொன்னால் பொறிக்கப்பட வேண்டிய நாள். டாக்டர் புர்குலா ராமகிருஷ்ண ராவ் அவர்களால் புட்டபர்த்தியின் பள்ளி அடிக்கல் நாட்டு விழா நடை பெற்றது. பஞ்சாயத்து தலைவர், கர்ணம் மற்றும் ரெட்டி இவர்களுடன் கிராமத்து மக்கள் திரளாக இந்த விழாவில் கலந்து கொண்டனர். சுவாமி "நான் இந்த இடத்தை விட்டு வேறெங்கும் செல்ல மாட்டேன்" என்று அவர்கள் மத்தியில் உறுதியான அறிவிப்பு செய்தார்.


🌷சுவாமியின் 50வது பிறந்தநாள்:

சுவாமியின் 50வது பிறந்தநாள் பிரசாந்தி நிலையத்தில் 1975, நவம்பர் 14 வெள்ளிக்கிழமை முதல் நவம்பர் 24 திங்கள் கிழமை வரை நடைபெற்றது. மூன்றாவது அகில இந்திய சத்ய சாய் சேவா தள மாநாடு மற்றும் மூன்றாவது பாலவிகாஸ் குருமார்களின் மாநாடு நவம்பர் 15, 16, 17 தினங்களில் நடைபெற்றது. நவம்பர் 18 காலை 8:30 மணிக்கு ரதோத்ஸவம் ஆரம்பமாயிற்று. பகவான் முன்நிலையில் நவம்பர் 19 முதல் நவம்பர் 23 வரை சண்டி யக்ஞம் நடைபெற்றது. நவம்பர் 23 காலையில் சுவாமி பூர்ணாஹுதி செய்வித்தார்.


ஸ்ரீ சத்ய சாய் நிறுவங்களின் இரண்டாவது உலக மாநாடு 1975 நவம்பர் 19 முத்ல் 21 வரை பகவானின் தெய்வீக முன்னிலையில் நடைபெற்றது. பாலவிகாஸ் மாணவர்களின் ஊர்வலம் 22ம் தேதி நடைபெற்றது. சத்ய சாய் சர்வதேச நிறுவனங்களின் உறுப்பினர்களாக . திரு இந்துலால் ஷா, டாக்டர் ஜெ. ஹிஸ்லாப், டாக்டர் கே. பானி, திரு சீதாராம், நவநகர் ராஜமாதா, டாக்டர் பகவந்தம்,  திரு சோஹன்லால், திரு பாலசிங்கம் மற்றும் திருமதி நாடால் ஸான்டோஸ் ஆகியோரை  சுவாமி நியமித்தார்.


23 காலையில் ஹெலிகாப்டரில் ஸ்வாமி தரிசனம் அளித்து ஆசி வழங்கினார். அப்போது ஆந்திர பிரதேசத்தின் முதல்வராக இருந்த திரு. வெங்கல் ராவ் உடன் சர்வ தர்ம ஐக்கிய ஸ்தூபத்திற்கு சுவாமி ஊர்வலமாக சென்றார், ஸ்தூபத்தை முதல்வர் திறந்து வைத்தார்.


பூர்ண சந்திரா ஆடிடோரியத்தில் 23 மாலையில் சத்ய சாய் சென்ட்ரல் ட்ரஸ்ட் உறுப்பினர்கள், இந்தியாவின் பல மாநிலங்களின் மாநில தலைவர்கள், மற்றும் உலகளாவிய சாயி நிறுவங்களின் தலைவர்கள் ஸ்வாமியின் பொற் பாதங்களை நம்ஸ்கரிக்க, அவர்களுக்கு சுவாமி ஆசி வழங்கினார். மத்திய கனரக தொழில் மற்றும் குடிமைப் பொருட்கள் அமைச்சர் டாக்டர் டி.ஏ. பை அவர்கள், மற்றும் ஆந்திர அமைச்சர்கள் திரு சுப்பராயுடு மற்றும் திரு ஸாகி சூர்ய நாராயண ராஜுவிற்கும் ஸ்வாமி ஆசி வழங்கினார். பின் ஸ்வாமி தெய்வீக உரை நிகழ்த்தினார்.

ஆதாரம்:
1) Sri Sathya Sai Digvijayam Part 1 (1926 – 1985)
2) SATHYA SAI WITH STUDENTS

தமிழாக்கம் :   Prof. N.P. ஹரிஹரன்



1 கருத்து: