ஸ்வாமி, ஸ்ரீ ராமருக்கு இளவரசர் பட்டமளிப்புக்கு சற்று முன்னதாக கைகேயி ஸ்ரீ ராமரை காட்டுக்கு அனுப்பினார். கைகேயிடம் ஸ்ரீ ராமரின் அணுகுமுறை எப்படி இருந்தது? பொதுவாக ஸ்ரீ ராமரின் அணுகுமுறை விரோதமாகத் தான்
இருந்திருக்கும் அல்லவா?
பகவானின் பதில்:
ஸ்ரீ ராமர் தர்மம், அமைதி ஆகியவற்றின் வடிவமாகும். அவர் எந்த சூழ்நிலையிலும் கைகேயியை வெறுக்கவில்லை. ககேயியை நமஸ்கரித்த பிறகு தான் லக்ஷ்மணர், சீதையுடன் காட்டிற்கு புறப்பட்டார். ஸ்ரீ ராமரை தரிசிக்கும் பொருட்டு பரதனும் காட்டிற்கு புறப்பட்டார். சிற்றரசர்கள், சேனை, அயோத்தியின் மக்கள் மற்றும் முனிவர்களும் பரதனுடன் காட்டிற்கு புறப்பட்டனர். பரதன் ராமரின் கால்களில் விழுந்து, தன்னை மன்னிக்குமாறும், அயோத்திக்கு திரும்பி ராஜ்ய பரிபாலனம் செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். கைகேயி பரிதாபமாக ஒரு பகுதியில் நின்று கொண்டிருந்தார். ராமர் பரதனிடம் ' பரதா, அன்னை கைகேயி வந்திருக்கிறார்களா? அவர் எங்கே' என கேட்டார், கைகேயியை பார்த்தவுடன், அவரது பாதங்களை நமஸ்கரித்தார்.
பட்டாபிஷேகத்திற்கு முன் கைகேயின் வார்த்தைகள் ஒரு மாபெரும் நாடகத்தின் முன்னோடியாக அமைந்திருந்தது. கைகேயி தன்னுடைய விருப்பத்தை தெரிவிக்காமல் இருந்திருந்தால், ராமாயண நிகழ்வுகள் நடைபெற்றிருக்கிறத. இறைவனின் 'மாஸ்டர் ப்ளானை' ஆரம்பித்து வைத்தவர் கைகேயி. ஸ்ரீ ராமருக்கு இது நன்கு தெரியும். எனவே விரோதத்திற்கும் வெறுப்புக்கும் நோக்கமே இல்லை.
இந்த சூழ்நிலயில் ஸ்ரீ ராமர் மேலும் ஒரு தர்மத்தை நிலை நிறுத்த வேண்டிய சூழ்நிலையில் இருந்தார்.
கைகேயி தசரத சக்ரவர்த்தியை மணமுடிக்கும் நேரத்தில், கைகேயியின் தந்தையான கேகய நாட்டு மன்னர் தசரதனிடம் ஒரு கோரிக்கை வைத்திருந்தார். 'ஓ தசரதா, உங்களுக்கு சந்ததி வேண்டும் என்று எனது மகள் கைகேயியை மணம் முடிக்க எண்ணுகின்றீர்கள். எனவே அவருக்கு பிறக்கும் மகன் அரசராக , உங்களது வாரிசாக இருக்க வேண்டும். இது உங்களுக்கு சம்மதமா? உங்களது ராணிகள் கௌசல்யை அல்லது சுமித்ராவிற்கு ஆண் குழந்தை பிறந்தால், கைகேயியின் மகனுக்கு அரசராகும் வாய்ப்பு கிடைக்காது. அல்லவா? 'என்று கேட்டார்.
தசரதன் அவரது விருப்பத்தை கேட்டுக் கொண்ட பிறகு, கௌசல்யை, சுமித்ரா ஆகியோரிடம் இதன் விளைவுகள் பற்றி விவாதித்தார். அவர்களின் அனுமதியும் பெற்றார். கௌசல்யை குறிப்பிட்டார்,'ஸ்வாமி, கைகேயியிடம் நீங்கள் வாக்குறுதி கொடுத்த பின், அவரின் மகன் தான் அயோத்யாவின் அரசர் ஆவான். நாங்கள் இருவரும் கருத்தரித்து, எங்களுக்கு மகன்கள் பிறந்தாலும், தந்தையின் வாக்குறுதியை மீற மாட்டார்கள். தந்தையின் விருப்பத்தை நிறைவேற்ற வேண்டும் என்ற பொறுப்பு உள்ளவர்கள் மட்டுமே இந்த குலத்தில் பிறப்பார்கள்'
ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்திக்கு தர்மத்தை நிலை நாட்டுவதும், தனது தந்தையின் வாக்கை காப்பற்றுவதும் அதி முக்கியமானதாக இருந்தது. எனவே கைகேயியின் விருப்பம் சரியானதாகவும் முறையானதாகவும் இருந்தன. இது ஸ்ரீ ராமருக்கு தெரியாதது அல்ல.
கேள்வி:
ஸ்வாமி, முழு நிறைவான சகோதரத்துவம் ராமாயணத்தில் சித்தரிக்கப் படுகின்றது என்பதை தாங்கள் விளக்கியுள்ளீர்கள். சகோதரர்கள் எவ்வாறு இருக்க வேண்டும் என்பது ராமாயணத்தில் எவ்வாறு குறிப்பிடப் பட்டுள்ளது என்பதை தாங்கள் கூற முடியுமா?
பகவானின் பதில்:
உலகில் கடவுளின் அவதாரம் தோன்றும் போது ஒரு ரகசியம் இருக்கும். ஒவ்வொருவரும் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும், லௌகீக வாழ்க்கைக்கு ஏற்ப நடத்தை எப்படி இருக்க வேண்டும் என்பதை மனிதனாக அவதரித்த கடவுள் செயல்படுத்திக் காட்டுவார். ராமர் தனது சகோதரர்களை எவ்வாறு கையாண்டார் என்பது இதற்கு உதாரணம்.
ராமர், லக்ஷ்மணர், பரதன், சத்ருக்குனன் ஆகிய நான்கு சகோதரர்களிடையே உன்னதமான அன்பு நிலவியது. இன்று சகோதரர்களிடையே இது போன்ற உன்னத அன்பு இல்லை. அவர்களது அன்பு சொத்து விவகாரமாக சகோதரர்கள் உச்ச நீதி மன்றம் கொண்டு செல்வதாகவே உள்ளது. தனது தாய் கைகேயி ராமரை அனுப்பியதற்கு காரணம் என்று தெரிந்தவுடன் பரதன் மிகவும் கோபப் பட்டார். தனது கோபத்தை கட்டுப் படுத்த முடியாமல் கைகேயியின் தலையை வெட்டவும் தயாராக இருந்தார். பரதன் தனது சகோதரர் ராமன் மீது வைத்திருந்த அன்பின் ஆழத்தையும் அளவையும் இது காட்டுகிறது. சத்ருக்னன் பரதனை நிழல் போல பின் தொடர்ந்தார். அவர்களிடையே இருந்த அளவிட முடியாத அன்பின் வெளிப்பாடு ஆகும்.
குழந்தை பருவத்திலிருந்தே ராமரும் லக்ஷ்மணரும் இணைபிரியாதவர்கள் என்பது உங்களுக்கு தெரியும். அவர்கள் எப்போதும் இணைபிரியாமல் இருப்பார்கள். அவர்கள் இருவரும் குழந்தைகளாக இருக்கும் போது என்ன நடந்தது தெரியுமா? ராமர் தூங்குவதற்கு ஒரு தொட்டிலில் இடப் பட்டார். மற்றும் ஒரு தொட்டிலில் லக்ஷ்மணன் விடப்பட்டார். இரு குழந்தைகளும் இடைவிடாது அழுது கொண்டு இருந்தனர். கௌசல்யா, சுமித்ரா, கைகேயி ஆகிய மூன்று ராணிகளாலும் அவர்களை தூங்க வைக்க முடியவில்லை, அழுகையையும் நிறுத்த முடியவில்லை. முனிவர் வசிஷ்டர் அங்கு வந்த போது, ராணியர் மூவரும் இந்த சம்பவத்தை எடுத்துக் கூறினர். முனிவர் வசிஷ்டர் இரு குழந்தைகளையும் ஒரே தொட்டிலில் விடுமாறு அறிவுறை கூறினார். அவர்களை ஒரே தொட்டிலில் இட்டவுடன், குழந்தைகள் இருவரும் அழுகையை நிறுத்தினர், உறங்கலாயினர். குழந்தை காலம் தொட்டே அந்த சகோதரர்களிடையே பிரிக்க முடியாத, நெருக்கமான பந்தம் இருந்தது
லக்ஷ்மணர் யுத்தத்தில் மயங்கி விழுந்த போது, ஸ்ரீ ராமர் மிகவும் வேதனை அடைந்தார் எனபதை நீங்கள் கவனித்து இருப்பீர்கள். அப்போது ஸ்ரீ ராமர் கூறுவார், "பதவி, செல்வம், நண்பர்கள், மனைவியைக் கூட இழந்தாலும் திரும்ப பெற்று விடலாம். ஆனால் ஒரு சகோதரனை இழந்து விட்டால், மீண்டும் கிடைக்க மாட்டார்." ஸ்ரீ ராமர் சகோதரர்கள் பற்றி குறிப்பிடும் போது, "பரதன் இவர்கள் எல்லோரிலும் சிறந்தவன், எனது பாதுகையை அரியணையில் வைத்து, எனது நாமத்தை ஜெபித்துக் கொண்டு, துறவி போல கிழங்குகளையும் இலையயும் உண்டு கொண்டு, எனது வரவை எதிர் நோக்கி நந்திகிராமத்தில் இருந்து மொத்த ராஜ்யத்தையும் ஆண்டு கொண்டிருக்கிறான்." பக்தியின் இரண்டு வகைகளை நாம் இங்கே பிரிந்து கொள்ள வேண்டும். லக்ஷ்மணரின் பக்தி இறை வடிவத்தின் மீதான 'சகார பக்தி'. பரதனின் பக்தி உருவமில்லா அம்சத்தின் மீதான 'நிராகார பக்தி'
பஞ்சவடியை அடைந்தவுடன், லக்ஷ்மணர் விருப்பப் பட்ட இடத்தில், ராமர் ஒரு சிறிய குடிசை கட்டச் சொன்னார். லக்ஷ்மணர் ராமரின் காலில் வீழ்ந்து கண்ணீர் விட்டார். அப்போது ஸ்ரீ ராமர் லக்ஷ்மணரிடம், "சகோதரா, ஏன் அழுகிறாய்? என்ன நடந்தது? உன்னை அழ வைக்கும் படி நான் ஏதாவது கூறினேனா?" எனக் கேட்டார். அதற்கு லக்ஷ்மணர் பதில் கூறினார், "ராமா, நான் விருப்பப் பட்ட இடத்தில் நீ குடிசை அமைக்க சொன்னாயே, எனக்கென்று முன்னுரிமையோ, தேர்வோ, விருப்பமோ கிடையாது. உனது விருப்பமே எனது விருப்பம். உன்னை பின் தொடரவும், உனது கட்டளைகளுக்கு அடிபணிவதும் மட்டுமே எனக்கு தெரியும். சகோதரர்களிடையே இது போன்ற விஸ்வாசம், நேர்மை, நெருக்கம், அன்பு இருக்க வேண்டும். இதுவே ஸ்ரீ ராமர் நமக்கு அளித்த ஏற்புடைய தத்துவம் ஆகும்.
கேள்வி:
ஸ்வாமி, தங்களின் கருத்துப் படி, ராமாயண காலத்தில் பகை இருந்ததா? ஸ்ரீ ராமரை காட்டுக்கு அனுப்பியதும், பரதனுக்கு முடி சூட்டியதும் அடிப்படையில் சாதாரண அரசியல் தானே?
என்னுடைய அறியாமையாலும், எனது புலப்படல் தன்மைக்கு அப்பாற்பட்டதாகவும் இருப்பதால்தான் எனது எல்லையை தாண்டி நான் கேட்டதற்கு மன்னிக்கவும். இந்த விஷயங்கள் பற்றி தங்களின் மேலான கருத்துக்களை கூறி ஆசீர்வதியுங்கள்.
பகவானின் பதில்:
தர்மத்தை நிலைநாட்டுதலும், உலகிற்கு புதிய ஏற்புடைய தத்துவங்களை எடுத்துக் காட்டுவதும் ராம பட்டாபிஷேகத்தின் குறிக்கோள் ஆகும். ராமாயணத்தின் எல்லா நிகழ்வுகளும் சத்தியத்திற்கு எடுத்துக் காட்டாக உள்ளன.
ராமாயணத்தின் முதல் நிகழ்வை பார்ப்போம். சீதை, லக்ஷ்மணனுடன் ஸ்ரீ ராமர் கானகத்திற்கு வந்திருந்த போது, பரதன் ராமரைக் காண வருகிறார். அவருடன் அயோத்தியின் குடிமக்கள், சந்நியாசிகள், போர்படைகள் வந்துள்ளனர். அவர்களின் நோக்கம் ஸ்ரீ ராமரை மீண்டும் அயோத்திக்கு அழைத்துச் செல்வதே ஆகும். அவர்களுடன் ஜபாலியும் வந்திருந்தார். ஜபாலி ஸ்ரீ ராமரைப் பார்த்து, 'உங்களது பிரிவை தாங்க முடியாமல், தசரதன் மாண்டு விட்டார். கைகேயையின் விருப்பத்தினால் தங்களை காட்டுக்கு அனுப்பியது உங்களை இனி கட்டுப் படுத்தாது. இனி ராமர் தான் ஆட்சி செய்ய வேண்டும்' என்று கூறினார்
இந்த உரையாடலை ராமர் உதாசீனப்ப்டுத்திவிட்டு, பரதனை நோக்கி கூறினார். 'பரதா, ஜபாலியைப் போன்றவர்களை உனது அரசவையில் வைத்திருப்பதால், நமது தந்தையின் மதிப்பு குறைகிறது. ஜபாலியைப் போன்றவர்களை பேச அனுமதிக்காதே. எனக்கு தந்தை தசரதரின் வாக்கை காப்பாற்றுவதை விட முக்கியம் எதுவும் இல்லை. கைகேயின் கணவர் தசரதரருக்கும், எனது தந்தை தசரதரருக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. எனது தந்தையின் மரணத்திற்கு நான் அவரை விட்டு பிரிந்தது தான் காரணம் என நீ நினைக்கலாம். ஆனால் நமது தந்தை விடுத்த அம்பு ஸ்ரவணகுமாரின் மரணத்திற்கு காரணமாக இருந்தது. அதை நினைத்து ஏங்கியபடியே ஸ்ரவணகுமாரின் வயது முதிர்ந்த பெற்றோர் இறந்தனர். அவர்கள் இட்ட சாபமே நமது தந்தையின் மரணத்திற்கு காரணம். எனக்கு எனது கடமை தான் முக்யத்துவம் வாய்ந்தது.
ஜபாலி இந்த உரையாடலில் குறிக்கிட்டு, 'ராமச்சந்திரா, தங்களின் சத்தியமான தன்மையும் நீதி தவறாமையும் அனைவருக்கும் தெரிந்ததே. உங்களை அயோத்திக்கு மீண்டும் அழைத்துச் செல்லும் நோக்கத்துடனே நான் அவ்வாறு பேசினேன்.' எனக் கூறினார்.
இவற்றில் இருந்து ஸ்ரீ ராமர் சத்தியத்தின் வழியிலும் நீதி தவறாமல் இருப்பதிலும் எப்போதும் பிடிவாதமாக இருந்தார் என்பது புலப்படுகிறது. ஸ்ரீ ராமர் இந்த தத்துவங்களை கடைப்பிடிப்பதில் மிக பிடிவாதமான ஒழுக்கத்தை கடைப் பிடித்தார். இதையே அனைவருக்கும் அறிவித்தார்.
கேள்வி:
ஸ்ரீ ராமர் வாலியை மறைந்திருந்து கொன்றது தர்மம் ஆகுமா?
நீ ராமர் வாலியை கொன்றது பற்றி கேட்கின்றாய்.
வாலி இறக்கும் தருவாயில், ஸ்ரீ ராமரிடம் கேட்கிறார், "ஓ ராமா, மரத்தின் பின்னால் இருந்து என்னை அம்பால் வீழ்த்தினாயே, இது நியாயமா?
அதற்கு ஸ்ரீ ராமர் பதில் கூறுகிறார், 'நீ ஒரு குரங்கு, நான் அரசன். விரட்டுதல் என்பது அரசரின் இயல்பு. காட்டில் உள்ள மிருகங்களை அவர்கள் காயப் படுத்தவோ கொல்லவோ செய்யலாம். எனவே மரத்தின் பின்னால் இருந்து உன் மீது அம்பு எய்தினேன் என குறை சொல்ல முடியாது. “
வாலி மீண்டும் ஸ்ரீ ராமரிடம் கேட்கிறார், "எனது தம்பி சுக்ரீவனின் உதவியை நீ நாடினாய். எனவே என்னை கொல்ல முடிவு செய்தாய். இது சரியா> என்னிடம் கேட்டிருந்தால், நான் உனக்கு உதவ முன் வந்திருக்க மாட்டேனா? எனது பலத்திற்கு ராவணன் ஈடாக மாட்டான். அப்போது சுக்ரீவனின் பலம் தேவையற்றதாகி விடுமே.”
அதற்கு ஸ்ரீ ராமர் பதிலளித்தார், “ஓ வாலி, எனக்கு சுக்ரீவனின் துயரம் புரியும். நான் சீதையை பிரிந்து வருத்தப் படுவது போல், சுக்ரீவனும் அவரது மனைவியை பிரிந்து படும் கஷ்டத்தை நான் நன்கு அறிவேன். எனக்கும் சுக்ரீவனுக்கும் நட்பிற்கான அடிப்படை காரணம் எங்களது நிலையில் உள்ள ஒற்றுமையே. போரிடுதல், பொறுத்தம் , நட்பு ஆகியவை சமமாக இருப்பவர்களிடையே தான் இருக்க முடியும்.”
வாலி மீண்டும் குறிக்கிட்டு சொல்வார், "ஓ ராமா, நீங்கள் அயோத்திற்கு அரசனாக இருக்கலாம். ஆனால் இது கானகம். சுதந்திரமாக சுற்றித் திரியும் எங்களை தண்டிக்கலாமா?"
இதற்கு ஸ்ரீ ராமர் பதில் கூறுகிறார், "அயோத்தியின் அரசர் எனது தம்பி பரதன் நந்தி கிராமத்தில் இருந்து எனது பெயரில் ஆட்சி செய்கிறார். இந்த பிரதேசம் எங்களது ராஜயத்தின் கீழ் வருகிறது. நீதிக்கு மாறாக இருப்பவர்களை எதிர்ப்பதும், தண்டணை கொடுப்பதும் எனது பொறுப்பு. நீதியை காப்பதும் எனது பொறுப்பு. எனவே உனக்கு தண்டணை பெரும் தகுதி உள்ளது.
வாலியின் கேள்விகள் அனைத்தும் முழுமையான பதில் அளிக்கப் பட்டுவிட்டது. இறுதி வாதமாக வாலி ஸ்ரீ ராமரிடம் கேட்டார், "ஸ்ரீ ராமா! நாங்கள் குரங்குகளின் தார்மீக குறியீட்டின் அடிப்படையில் வாழ்ந்து வருகிறோம். மனிதர்களுக்கான தார்மீக குறியீடு எங்களுக்கு பொருந்தாது. தாங்கள் என்னை கொன்றது தர்மமான செயலா?"
வாலியின் கேள்விகளுக்கு முற்றுப் புள்ளி வைப்பது போல், ஸ்ரீ ராமர் பதில் உரைத்தார்.
ஓ வாலி, குரங்கு என்று உன்னை நீயே சொல்லிக் கொண்ட போதும், நீதி பற்றி நீ பேசுகிறாய். உனக்கு நீதி பற்றி ஒன்றும் அறியாமல் இருந்தால், உனது நடத்தை பற்றி கேள்வி கேட்க முடியாது. ஆனால் நீதி பற்றி நீ பேச ஆரம்பித்தாய் அல்லவா? உனது தம்பியின் மனைவி உனது மகளுக்கு சமம் அல்லவா? உனது செய்கை நீதிக்கு புறம்பானது அல்லவா? உனக்கு நீதி பற்றி நன் கு தெரிந்தும் நீதிக்கு புறம்பான செய்கையை எவ்வாறு செய்யத் துணிந்தாய்? எனவே உனக்கு தண்டனை கொடுப்பது நியாயம் ஆனது தான், என்றார்.
இந்த முறையில், ஸ்ரீ ராமர் நீதி வழி நடப்பதும், அதை உலகிற்கு அறிவுறுத்துதலும் எந்த அளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்தது எனபதையும் எடுத்துக் காட்டியுள்ளார்
கேள்வி:
ஸ்வாமி, ஸ்ரீ ராமர் தாடகை என்ற பெண்ணை கொன்றது சரியா?
பகவானின் பதில்:
ஸ்ரீ ராமர் தர்மத்தின் வடிவம். விஸ்வாமித்திர மகரிஷி வழி நடத்த லக்ஷ்மணருடன் ஸ்ரீ ராமர் பேய்களை அழிக்க கானகம் செல்கிறார். இந்த பேய்கள் யக்ஞத்தையும், யாகத்தையும் தீட்டாகியது மட்டுமன்றி, முனிவர்களையும் கொன்றனர். மேலும் ஆசிரமங்களை சுடுகாடாக்கினர். விஸ்வாமித்திரர் பேய்களை அழிப்பதற்காக ராமர், லக்ஷ்மணர்களை தன்னுடன் அனுப்புமாறு தசரதனிடம் வேண்டியிருந்தார். முனிவர் விருப்பப் பட்டிருந்தால், அவரே இந்த பேய்களுக்கு முடிவு கட்டியிருக்கலாம். ஆனால் அவர் யக்ஞத்தில் இருந்ததால், அவர் வன்முறையில் ஈடுபடுவதற்கு தடை உண்டு. மேலும், ஸ்ரீ ராமரின் பட்டாபிஷேக வைபவத்திற்கு இது பூர்த்தி செய்வதாக அமைந்தது. ஒரு மாஸ்டர் ப்ளான் அடிப்படையில் எல்லாம் நடந்தன. பேய்களின் செயல்கள் மிக குரூரமானவை. கொடூரங்களை முழுமையாக அழித்து, தர்மத்தை நிலை நாட்ட வேண்டிய அவசியம் ஏற்பட்ட காரணத்தால், பேய்களை அழிக்க நேர்ந்தது. தாடகையையின் செயல்கள் பேய் தன்மை உடையதாக இருந்தது அல்லவா? எனவே தாடகையை கொன்றது சரியானதாகவும் , முழுமையாக தர்மத்தின் அடிப்படையிலும் இருந்தது.
பொல்லாத செயல்களில் ஈடுபடுபவர்கள் ஆண்களா பெண்களா என்பது முக்கியம் இல்லை. அவர்களின் செய்கைகளின் தன்மை தான் முக்கியம். முறை கேடான செய்கைகளில் ஈடுபட்டதால், வாலி குரங்காக இருந்தாலும் தண்டனையிலிருந்து தப்பவில்லை அல்லவா?
தாரா வாலியிடம் அறிவுரையாக," பிரபு, சில நாட்களுக்கு முன் தான் சுக்ரீவன் படுகாயம் அடைந்து தப்பி ஓடி விட்டான். இப்போது உங்களை எதிர்க்கும் தைரியம் எங்கிருந்து வந்தது? அவருக்கு ஸ்ரீ ராமரின் ஆதரவு உள்ளது என்பது தங்களுக்கு தெரியுமா? ராமர் சாதாரணமான் நபர் அல்ல. நீங்கள் வீரனாக இருந்தாலும், ராமர் சுக்ரீவனுக்கு உதவி செய்து, தங்களை கொல்ல குறியாக உள்ளார்.இதற்கு உங்களின் நேர்மையற்ற செயல்களே காரணம். ராமரின் காலில் வீழ்ந்து சரண் அடையுங்கள். " என்று கூறினாள்
வாலி தாராவின் அறிவுரையை கேட்கவில்லை. ராமனின் அம்பிற்கு இரையானான். தர்மத்தை காப்பதே முதல் அடிப்படை. இதில் ஆண், பெண் வித்தியாசம் கிடையாது.
கேள்வி:
ராமாயணமும் அத்யாத்ம ராமாயணமும் வெவ்வேறு காரணங்களுக்காக எழுதப் பட்டவையா?
பகவானின் பதில்:
ராமாயணம் ஏற்புடைய தர்மத்தை கடைப் பிடிப்பதற்காக எழுதப் பட்டது. அத்யாத்ம ராமாயணம் தெய்வீக ஆத்மாவை மனித குலம் தெரிந்து கொள்ளும் நோக்குடன் எழுதப் பட்டது.
கேள்வி:
கேள்வி:
சுந்தர காண்டம் மீண்டும் மீண்டும் படித்து, மனப் பாடம் செய்யச் சொல்வதன் காரணம் என்ன?
பகவானின் பதில்:
சுந்தர காண்டம் முழுமையும் சுந்தரமானது, அழகானது. அருமையான விளக்கங்கள், இலங்கை பற்றிய ரம்யமான சித்திரங்கள், ஒத்த வர்ணனை, அனுமன் கடலை தாண்டுதல், இன்ப தோட்டங்கள், அன்னை சீதையின் 'சோகங்கள்' முடிவிற்கு வருதல் 'அ சோகம்’ (அதுவே அசோக வனம்), துன்பம் இல்லாத வனம், எனவே சுந்தர காண்டம் படிப்போற்கு துன்பம் , வருத்தம் காணாமல் போதல் இவையே சுந்தர காண்டம் மீண்டும் மீண்டும் படிக்க சொல்வதற்கு காரணம்.
பகவானின் பதில்:
சுந்தர காண்டம் முழுமையும் சுந்தரமானது, அழகானது. அருமையான விளக்கங்கள், இலங்கை பற்றிய ரம்யமான சித்திரங்கள், ஒத்த வர்ணனை, அனுமன் கடலை தாண்டுதல், இன்ப தோட்டங்கள், அன்னை சீதையின் 'சோகங்கள்' முடிவிற்கு வருதல் 'அ சோகம்’ (அதுவே அசோக வனம்), துன்பம் இல்லாத வனம், எனவே சுந்தர காண்டம் படிப்போற்கு துன்பம் , வருத்தம் காணாமல் போதல் இவையே சுந்தர காண்டம் மீண்டும் மீண்டும் படிக்க சொல்வதற்கு காரணம்.
மூலம்: sathyasaibaba1.tripod.com
தமிழில்: Prof. N.P. ஹரிஹரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக