தலைப்பு

புதன், 27 நவம்பர், 2019

செளந்தர ஸாயி சௌபாக்கிய ஸாயி! (பிரபல பாடகர் T.M.S அவர்களின் சாயி அனுபவங்கள்)


 பிரபல பாடகர் டி.எம்.எஸ் என்னிடம் பகிர்ந்து கொண்ட சுவாமி அனுபவங்கள். - கவிஞர் வைரபாரதி✍🏻

கனிவை ஊற்றி நிரப்பிய தொண்டை ‌.. தமிழை அழுத்தம் திருத்தமாய்ப் பாடிய குரல்..
ரசங்கள் ஒன்பது மட்டுமல்ல அதன் உட்பிரிவுகளையும் ஊடுறுவிப் பாடிய இதழ்...
மனிதப் பிறவிகளின் எல்லா பரிணாமங்களிலும் அவன் கைகளைப் பிடித்து ஊர்வலம் வரும் ஒரே பாடகர்...
பிறப்புக்கு தாலாட்டு .. வளர்ப்புக்கு போதனை .. மகிழ்வுக்கு காதல்..‌ வலிக்கு ஆறுதல் .. இளைப்பாறலுக்கு பக்தி ... இறப்புக்கு ஒப்பாரி என அங்கிங்கெனாது எங்கும் வியாபித்த ஒரே உலகப் பாடகர் என் பாட்டன் டி.எம்.எஸ்...

அவரோடு பழகிய நேரங்கள்.. நாட்கள்..  ஆசிகளோடு அருளை அள்ளிப் போட்டுக் கொண்டு இருதயத்தை இதமாக்கிக் கொண்ட தெய்வீகக் காலங்கள்...
அவர் குரலைக் கேட்கும் போதெல்லாம் அவர் தந்த இதம் .. நடந்து கொண்ட இங்கிதம் .. அவரின் நேர்மறை அதிர்வலைகள்..
நம் சுவாமி மேல் அவர் வைத்திருக்கும் பக்தி.. முருகா எனச் சொல்லும் பக்குவம்...
மனிதனால் அவ்வளவு எளிதில் அடையமுடியாத வேறொரு தளத்தில் வாழ்ந்து வந்த அவரின் ஜீவிதம் அற்புதமானவை...
ஆச்சர்யமானவை...

நான் தாய்ப்பால் பருகி வளர்ந்ததை விட அவர் பாடலைப் பருகியே வளர்ந்தேன்...
அவர் சுவாமி பக்தரென்று முதலில் தெரியாது...
கோவில் காற்றலையில் அசரீரியாய் எதிரொலித்த கற்பனை என்றாலும் என்னவோ செய்யும் என் ரோமங்களை...


என் பள்ளி காலம் ...எட்டாம் வகுப்பு.
ஒரு வியாழக் கிழமை சுவாமிக்குப் பூ பறிக்க பள்ளி வளாகத்தில் யாருக்கும் தெரியாமல்  போய் மாட்டிக் கொண்ட மாலை நேரம்...
இம்போஷிஷன் எழுதச் சொல்லி நாளை வரும்படி அனுப்பினார்கள் நான் சுவாமிக்காக பூப்பறித்த காரணம் சொன்னவுடன் ...
மனம் சோர்வாகி இருந்தது ...

என்னிடம் அப்போது ஒரே ஒரு பிரேம் செய்த சுவாமி படம் தான் இருந்தது...
எனக்கு வியாழன் என்றாலே ஒருவித புளகாங்கிதம் ஏற்படும் அது சுவாமி நாள் என்று ...
அன்று சோர்வாக மிதிவண்டியை உருட்டிக் கொண்டு வந்தேன்.. சைக்கிள் பஞ்சர் .. ஓ.. இது வேறா என நினைத்துக் கொண்டேன்...

இடம் விவேகானந்தபுரம் கன்னியாகுமரி ...
விவேகானந்த கேந்திர வித்யாலயாவில் தான் மூன்றாண்டு படித்தேன் ...
பஞ்சர் ஒட்ட கொடுத்துவிட்டு .. ஒரு கேசட் கடையை விறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தேன் ..

அந்த காலத்தில் ... கேசட்டில் பாடல் கேட்பது வைகுண்டத்திற்கே போய் சுப்ரபாதம் கேட்பது போல் ஒரு அலாதி சுகம்.
அந்த கேசட் அடுக்கி வைக்கப்பட்டிருந்த ரோவில் திடீரென ஒரு புகைப்படம் ...
எனக்குத் தூக்கி வாரிப் போடப்பட்டது ...

இந்த ஊரில் சுவாமி சம்மந்தமான கேசட்டா?
ஆச்சர்யத்தின் விளிம்பில் நின்றேன் ..
1996 ஆண்டு வாக்கில் கன்னியாகுமரியில் சுவாமி சமிதி இருந்ததாக என் கவனத்திற்கு வந்ததில்லை...

என் அக்ரஹாரத்தில் கூட என்னையும் சேர்த்து மூன்று பேர் வீட்டில் சுவாமி புகைப்படம் இருக்கும்...
ஒருவர் கிருஷ்ணா அக்கா .. நன்கு நாற்காலியில் அமர்ந்து ஒரு கை உயர்த்தி சிரித்து ஆசிர்வதித்துக் கொண்டிருக்கும் சுவாமி படம் ...
இன்னொன்று சுபா அக்கா .. சுவாமி சோபாவில் சாய்ந்து கொண்டு சிரித்தபடி ஒரு கை ஆசிர்வாதப் படம் ..
இன்னொன்று என் வீட்டில்.. கான்வகேஷன் வெல்வட் உடையில் ஒரு கை உயர்த்தி சுவாமி சிரித்திருப்பார் ...
பிற்காலத்தில் ஒரு முதியவர் குடும்பம் வந்தது ..
அவர் பூஜை அறையில் சுவாமி கருப்பு வெள்ளை குட்டிப் படம் மகாத்மா ஆஃப் புட்டபர்த்தி என கீழே எழுதி இருக்கும் ...
இன்னொரு வீட்டில் ( ராம சுப்பைய்யர் வீடு) சுவாமி நந்தியில் அமர்ந்த படம் வாசலில் பிரேம் இல்லாமல் இருக்கும்..
இதை விவரிப்பதற்கு காரணம் அந்தக் காலத்தில் சுவாமி ஒரு மகான் என நினைத்து பல மகான்களோடு அவரையும் சேர்த்து  சிலர் வைத்திருந்தனர் ...
ஆனால் சமிதி போலவோ ... சுவாமிக்கான பஜனை .. ஆராதனை நிகழ்வுகள் போலவோ ஏதும் நடந்ததாக என் கவனத்திற்கு யாரும் எடுத்துக் கொண்டு வரவில்லை...
ஆதி முதல் சுவரொட்டிகள் ஒட்டும் பழக்கம் நம் பக்தர்களிடம் இல்லை என்பதாலும் சிலர் வீட்டில் விளம்பரமே இல்லாமல் வழிபாடுகள் நான் செய்து கொண்டிருந்தது போல் நிகழ்ந்திருக்கும்..
அன் ஆர்கனைஸ்ட் பக்தர்கள் என்னோடு சேர்த்து ஆங்காங்கே...
நான் வயதிலும் மிக மிகச் சிறியவன் என்பதால் தைரியமாக பேருந்து ஏறி ஊர் சுற்ற விட மாட்டார்கள்..
தாயில்லா பிள்ளை. வீட்டில் செல்லம் வேறு.


இப்படி இருந்த கன்னியாகுமரியில் ஒரு கேசட் கடையில் சுவாமி படம் போட்ட ஒரு கேசட் ...
தூக்கி வாரிப் போட்டது..
அதுவும் தமிழ் பாடல்கள் ...
அப்போது பஜனைப் பாடல் கேசட் ஒன்றே ஒன்று தான் பாடகி சுசிலா குரலில் கேட்டிருக்கிறேன்...
இது யாருடையது என எடுக்கச் சொல்வதற்கு முன் பெயர் வாசித்தேன்.
டி.எம்.எஸ் என்று அதைத் தொடர்ந்து வேறொரு பெயரும் படித்தேன் ...

ஓ... நம் டி.எம்.எஸ் சுவாமி பக்தரா ... அவருமா ?
அதனால் தான் அப்படி அமுதம் சொட்டச் சொட்டப் பாடுகிறாரா ...
அவர் பெயரோடு இன்னொரு பெயரும் வருகிறதே .. புகைப்படத்தில் இவர் யார்? என எனக்குள் கேள்வி எழுப்பினேன் ...
வாங்க வேண்டுமே என அவசரப்பட்டேன்..
கையில் காசில்லை ...
அதற்குள் சைக்கிளில்
பஞ்சர் ஒட்டப்பட்டிருந்தது ஆனால் என் இதய பலூனில் காற்று இறங்கி இருந்தது ...
எப்பாடு பட்டாவது இந்த டி.எம்.எஸ் கேசட்டை வாங்கியே தீர வேண்டும் என திட்டமிட்டேன் ...
இதில் ஒரு சிறப்பம்சம் என்னவெனில் சுவாமி மேல் தீரா பக்தியுடனும் .. டி.எம்.எஸ் மேல் தீரா காதலுடனும் இருந்த நான்
டி.எம்.எஸ் அவர்களை பார்த்தது கூட இல்லை...
சுவாமியை தரிசித்தது கூட இல்லை.. புட்டபர்த்தி எங்கே இருக்கிறது என்று கூட தெரியாது .


பிற்காலத்தில் சுவாமி என் கவிதையை வாங்கி வாசிப்பார் என்றோ .. சுவாமி பற்றி எழுதுவேனென்றோ ..
டி.எம்.எஸ் சுடன் நெருங்கிப் பழகுவேனென்றோ .. நான் கேட்கக் கேட்க சலிக்காமல் டி.எம்.எஸ் பாடிக் காட்டுவார் என்றோ ...
என் புத்தகத்தை கடைசி வரை அவர் அறையில் தன் பார்வையில் படும்படி வைத்திருப்பார் என்றோ .. அந்த புத்தகத்தை அடிக்கடி வாசிப்பார் என்றோ நான் கற்பனை செய்து கூட பார்த்ததில்லை.சைக்கிளை அழுத்தி வேகமாக சென்றேன்.
வீட்டில் ஒரு பொய் சொல்லி நாளை பள்ளியில் டிராயிங் ஃபீஸ் கட்ட வேண்டும் எனக் கேட்டு பணம் வாங்கிக் கொண்டு காலையில் காற்றையும் விட மிக வேகமாய் மிதித்து அந்தக் கடைக்குச் சென்றேன் பூட்டியிருந்தது... சுவாமி எப்போதுமே இப்படித் தான் என்னோடு விளையாடுவார். எனக்கும் விளையாடுகிற வயது தான்... அன்று உடம்போ பள்ளியில்... மனசோ கேசட் கடை வாசலிலேயே சுற்றிக் கொண்டிருந்தது. பள்ளி முடிந்து ஒரு அழுத்து அழுத்தினேன்.. கேசட் கடை திறந்திருந்து என் மூச்சையும் திறந்து விட்டது .. அப்பாடா என வாங்கிக் கொண்டு வீடு வந்தேன்...
வீடு வந்த உடனே பாடல்களைக் கேட்கவில்லை. சந்தேகம் வந்துவிடும்.. பொய் சொன்னதைக் கண்டுபிடித்துவிடுவார்கள் என அடுத்த வியாழன் வரை காத்திருந்தேன்...

அந்தக் காலத்தில் என் குடும்பத்தில் தன் பக்தனாக என்னையே முதலில் தேர்ந்தெடுத்தார் நம் சுவாமி. குடும்பமே சுவாமி பக்தராக இல்லாத போது அந்த சிறிய வயதில் சுவாமியை நேரிலோ.. இதர சுவாமி நிகழ்ச்சிகளோ சில காலம் வரை அணுக முடியவில்லை..

ஒரே ஒரு பிரேம் செய்த படம்.. அதனருகே நான்.. எனக்கு உலகமே கிடைத்து விட்டதைப் போன்ற பேருணர்வு...

பாடல்களைக் கேட்டேன். சின்மய தேஜா சாயி ராமா ... ஹரியும் ஹரனும் பிரம்மனும் அறிந்த தேவன்...
அனைத்துப் பாடலும் சுவாமி தரும் அமிர்தம் போல் தித்தித்தன...
பெயர் டி.எம்.எஸ் பால்ராஜ் என வாசித்தேன்..
ஓ. இவர் தான் நம் டி.எம்.எஸ் சின் மகனா.. என்னம்மா பாடுகிறார்..
அவரைப் போலவே குரல் கொஞ்சி விளையாடுகிறதே .. அவர்களின் குடும்பமே பக்தர்கள் தானா என எண்ணி ஆனந்தப் பட்டேன்..
என் பள்ளி காலங்களில் ஒரு வியாழன் மாலைகளில் கூட அந்தப் பாடல்களைக் கேட்க நான் தவறியதே இல்லை..

ஒரே ஒரு பிரேம் செய்த சுவாமி படம்.. இரண்டு சுவாமி கேசட்.. ஒரு பிளாஸ்டிக் சுவாமி மோதிரம்.. கை நிறைய சிகப்பு செம்பருத்திப் பூக்கள்... மனப்பாடமாய் சுவாமி அஷ்டோத்ரம்... நினைவிலிருந்த ஓரிரு பஜனைப் பாடல்கள்.. என் வழிபாட்டு பேரின்பத்தை தேவேந்திரன் கூட அடைந்திருக்க முடியாது.

காலங்கள் உருண்டோடின...

கவிஞனாகி... தனிப் பாடல்கள் மற்றும் குறும்படங்களுக்கு வசனம் எழுத ஆரம்பித்த காலம்... அது விஷயமாக
என் நண்பன் ஸ்ரீ கண்டன் இல்லம் வந்தேன்.. மந்தவெளி..
வரும் வழியில் ஒரு வீட்டில்  டி.எம்.சௌந்தரராஜன் என கல்வெட்டு பார்த்தேன்..
உடம்பு சிலிர்த்தது.. ஒரு நாள் இரவு கூட அவர் பாடலைக் கேட்காமல் நான் உறங்கிய தில்லையே...
அவன் நினைத்தானா இது நடக்குமென்று என்ற அந்தப் பாடல் எத்தனை ஆறுதல் ...

என்னோடு சேர்ந்து கதறி அழுமே அந்தக் குரல்.. பின்மண்டையில் தட்டி உற்சாகம் தந்து எழுப்புமே அதே குரல் இங்கேயா கூடுக் கட்டிக் கொண்டிருக்கிறது. நண்பனிடம் கேட்டேன்.
ஆம். வாக்கிங் செல்லும் போது பார்த்திருக்கிறேன் என்றார்... வாருங்கள் அவர் இல்லம் செல்வோம் என்றேன்.. ஏதாவது கோபப்பட்டுவிட்டால் என சந்தேகப்பட்டார் என் நண்பர்...
அடித்தால் கூட வாங்கிக் கொண்டு ஒரு முறை பார்த்து வணக்கம் சொல்லிவிட்டு வந்துவிடுவோம் என்று சொல்லி அவர் வீட்டு வாசலில்... கதவருகே கம்பிகளாய் நின்றோம்.. அவர் இங்கே இல்லை.. எதிர் வீட்டு பிளாட்டில் இருக்கிறார் என்றது ஒரு பெண் குரல்...

எதிர் பிளாட்.. மாடி ஏறி... ஒவ்வொரு படி ஏறும் போதும் அவர் ஒவ்வொரு சூழலில் பாடிய ஒவ்வொரு பாடல்  மனதில் கேட்க ஆரம்பித்துவிட்டன...

காலிங் பெல் அழுத்தினேன்... அந்த ஒலியில் கூட அவர் குரலே எனக்கு கேட்டது..

ஒரு பெண்மணி கதவு திறந்தார்கள்.. டி.எம்.எஸ் அய்யாவை பார்க்க வேண்டும் அவரது ரசிகர்கள் என்றேன்..
சௌராஷ்ட்ரா மொழியில் அவர்கள் ஏதோ சொல்ல.. உள்ளே எங்களையும் அவர்கள் அழைக்க அந்த தெய்வ கம்பீர திரு உருவம் மிக எளிமையாய் ... அருட் புன்னகை செய்து வரவேற்றது ...

அய்யா என்று கால்களில் விழுந்தேன்.. கரம் தொட்டு எழுப்பினார்.. அன்று அவர் பிடித்த அந்தப் பிடி அவரின் உடல் தாண்டிய இன்றும் என் இதயத்தை சிக்கெனப் பிடித்திருக்கிறது...
அய்யா நானும் சுவாமி பக்தன் என்றேன்.. உங்கள் மகன் பாடிய பாபா பாடல்களைக் கேட்டே என் வியாழன்கள் நிறையும் என்றேன்..


நானும் சுவாமிக்கு நிறைய பாடிருக்கேன்..
சுவாமி நல்லா ஆசிர்வாதம் பண்ணுவாரு..

இப்போது இதை எழுதும் போது அவர் என்னிடம் பேசிய குரல் கேட்டுக் கொண்டிருக்கிறது ...

நாங்க ரெண்டு பேரும் ரொம்ப நெருக்கம் ...
சௌந்தரம் சௌந்தரம்னு தான் ஆசை ஆசையா கூப்டுவாரு ...
மனிதர்களை காக்க வந்த அவதார புருஷர் அவர்.

இத்தனைக் காலம் டி.எம்.எஸ் பாடிக் கொண்டிருப்பார் நான் கேட்டுக் கொண்டிருப்பேன்... அந்த நாள் அவர் பேசிக் கொண்டிருந்தார் நான் கேட்டுக் கொண்டே இருந்தேன்...

என் நண்பனும் எங்களின் குறும்பட முயற்சி சொன்னான்.. ஆசி வழங்கினார்.

இரண்டாவது சந்திப்பிற்கு முன் நானெழுதிய ஸ்ரீ சாயி மகா காவியம் வெளியானது.. அவரிடம் கொண்டு போக சிறகு விரித்தேன்.. என் நண்பர் ஆனந்த்'தும் கூட வந்தார்...

உள் நுழைந்து சுவாமி புத்தகம் கொடுத்து கால்களில் விழுந்தேன்.. பிரித்துப் படிக்க ஆரம்பித்தார்..‌

ஒரு இடத்தில் ஆஹா அற்புதமா எழுதி இருக்கீங்க என்று

பழுத்த பழம் பார்த்து
பச்சைக் கிளிகள்
பறந்து வருவதைப் போல் சுவாமியின்
பழுத்த நிலை பார்த்து பக்தர்கள் வந்தனர் போன்ற கருத்தில் கவிதை வரிகள் வரும் ...

வாசித்துப் பாராட்டி.. எனக்கு உடல்நிலை சரியாக இருந்தால் இந்த சுவாமி காவியம் முழுக்க இசை அமைத்துப் பாடிவிடுவேன் என்றார்..
அவர் சொன்ன வார்த்தையே எனக்கதைப் பாடி அரங்கேற்றம் செய்து விட்டதைப் போல் ருசித்தது..


அய்யா உங்களுக்கு நிகழ்ந்த சுவாமி அனுபவம் ஏதேனும் இருந்தா சொல்லுங்க என்றேன்...

ஒண்ணா ரெண்டா ... எத்தனயோ இருக்கு ... சுவாமி பாடச் சொல்வார் .. பாடுவேன் .. ஆனந்தமாய் தலை அசைப்பார் ... ஒரு முறை இறைவா நீ எப்போது வருவாய் என்ற பொருளில் ஒரு பாடல் பாடிக் கொண்டிருக்கையில் பல்லவியிலேயே என்னை நிறுத்தி...

சௌந்தரம் நான்தான் வந்துட்டேன்ல அப்றம் என்ன எப்போ வருவேன்னு பாடற... என்று திருத்தினார்...

உணர்ந்து கொண்டேன் அவர் உண்மை கடவுளென...

அவர் பாடுவார் நாங்கள் கேட்போம்.. அவர் கடவுள் என்ற எண்ணம் சில நிமிடம் விலகி சுவாமி நீங்க பாடினதுல இந்த இடத்துல ஸ்ருதி விலகிடுச்சு எனச் சொல்லி இருக்கிறேன்...


அதற்கு சுவாமி அர்த்தச் சிரிப்போடு நீங்க பாடுற சங்கீதமே நான் தான் சௌந்தரம் எனச் சொல்லி எங்களை சிலிர்க்க வைப்பார்...

எனக்கும் அன்று சிலிர்த்தது ...

அய்யாவின் மானசீக குருவான எம்.கே.தியாகராஜ பாகவதருக்கு நடந்த சுவாமி அனுபவம் சொன்னார்..‌ பேச்சற்றுப் போனேன்...


அடேங்கப்பா அவரும் சுவாமியை தரிசித்திருக்கிறாரா என...

அடிப்படையில் தீவிர தெய்வ பக்தி கொண்டவர் பாகவதர்.. தன் திரைக் காலம் நொடிந்து மீண்டும் நடிக்கையில் நாத்திக கருத்துள்ள ஒரு படத்தில் நடிக்க அழைத்திருக்கிறார்கள்.

வறுமை கோலத்திலும் தன் பக்தி நெறியை விடவே இல்லை ... நடிக்க மறுத்துவிட்டார். இப்படிப்பட்டவரை சுவாமி அழைக்காமல் விட்டிருப்பாரா எனப் பின்னாளில் தோன்றியது...

சுவாமி வெளியே பார்ப்பதே இல்லை.. உள்ளே நாம் எப்படி இருக்கிறோம் என்பதை மட்டுமே பார்க்கிறார்..

சிறை சென்று வந்த பாடல் பௌர்ணமி பிறையாகி இருந்தது ..
அந்த பாடல் பாற்கடல் நம் ஜீவ நதியை அழைத்தது ...
சௌந்தரா உன் குரு ஒருவர் இருக்கிறார் என்றாயே அவரை தரிசிக்க என்னை அழைத்துச் செல்வாயா ?
பாகவதர் என் டி.எம்‌எஸ் பாட்டனிடம் கேட்கிறார்...


எப்படி அவர் மறுப்பார் ?
அவரோ பொய்வழக்கில் சிறை புகுந்து திரை வாழ்வு நலிந்து பூர்வ கர்ம விளைவால் துன்புற்று சர்க்கரை அதிகமாகி கண் பார்வையும் இழந்து வருந்திக் கொண்டிருந்தார்...

இறைவனைப் பாடி அவர் வாய் செய்த புண்ணியம்.. அதே வாய் நம் சுவாமியைப் தரிசிக்க அழைத்துப் போவாயா என கேட்கிறது ..

இதை டி.எம்.எஸ் அய்யா சொல்லச் சொல்ல என் ஆவல் அதிகமானது.. அங்கே என்ன நிகழ்ந்திருக்கும் என அவரின் அடுத்தடுத்த சம்பவங்களைக் கேட்க காதை கூர் தீட்டிக் கொண்டேன்.. அப்போது அவர் குரலைத் தவிர மின்விசிறி சத்தம் கூட என் காதில் கேட்கவில்லை...

பாகவதருக்கு தான் கண் பார்வை இல்லையே.. அழைத்துச் சென்றாலும் எப்படி தரிசிக்க முடியும்.. இவரால் தான் முடியாது.. சுவாமியால் பார்க்க முடியுமே என நினைத்து பாகவதரை என் டி.எம்.எஸ் நம் சுவாமியை பார்க்க அழைத்துச் சென்றார் ...

எவ்வளவு சத்தியம் ...
நம் பார்வை கடவுள் மேல் படுவதை விட கடவுளின் பார்வை தான் நம் மேல் பட வேண்டும்

ஒன்றல்ல இரண்டல்ல எத்தனையோ வாழ்வியல் சத்தியம் பேசி இருக்கிறார் என் டி.எம்.எஸ்...


சுவாமி தரை தொடாத நடையில்... நளினத்தில் காவி அங்கி பூமியில் புரண்டு புரண்டு புனிதமாக்கிக் கொண்டு வர  நடந்து வருகிறார் ... நேராக பாகவதர் மற்றும் டி.எம்.எஸ் இருவர் அமர்ந்திருக்கும் இடத்திற்கு நேராக வருகிறார் .. இருவரும் எழுந்து கொள்கின்றனர் ...


பாகவதர் கண் கலங்கி உருகிப் போகிறார் ... உணர்ச்சிவசப்படுகிறார்...
உங்களை பார்க்க முடியாத பாவியாகப் போய்விட்டேனே என இரு கை கூப்புகிறார்.. அந்தக் கையை நம் சுவாமி பிடித்துக் கொள்கிறார்... டி.எம்.எஸ் சுவாமி என்று ஏதோ பேச முற்பட அதற்குள் பாகவதர் முந்திக் கொண்டு சுவாமி உங்களை ஒரு முறை பார்த்துவிட வேண்டும் போலிருக்கிறது என அவசரப்படுகிறார் ...

சுவாமியிடம் இருந்து வெளிப்படும் தெய்வீக அதிர்வலைகளை பாகவதர் நிச்சயமாய் உணர்ந்திருக்க வேண்டும்... இல்லையேல் ஏற்கனவே தெய்வ பக்தி கொண்ட பாகவதர்.. வாழ்வின் நிலையாமையை முழுதாய் உணர்ந்து ஞானப் புரிதலில் கரை ஒதுங்கி இருந்த பாகவதர்... பன்னீரிலேயே குளித்து பட்டுடுத்தி அவரை அவதாரமாய் நினைத்து வழிபாடு செய்த ரசிகர் கூட்ட மாயை எல்லாம் முடிவுக்கு வர ஆன்ம விழிப்புக்கு வந்துவிட்ட பாகவதர் சுவாமியிடம் கரைந்து போனதில் ஆச்சர்யமே இல்லை எனக்கு..

அவருக்கு நிகழ்ந்த துரோகமும்... கிடைத்த அவமானமும் .. ஏற்பட்ட வலியும் .. நேர்ந்த பழியும் அப்படி ... அதை அனுபவித்தவர்களால் மட்டுமே அவர் வலியை உணர்ந்து கொள்ள முடியும்...

ஒரு திருடனைப் பார்த்து நீ திருடன் என்று யாரேனும் சொன்னால் அவன் நிலை குலையமாட்டான்... அவனுக்கே அவனைப் பற்றி தெரியும்.. சட்டையே செய்யாமல்  உத்தமன் போல் இல்லை என்று சாதித்து நடிப்பான்... தெரிந்தே பாவம் செய்பவன் கடவுள் அவனுக்கு பூஜை போடும் காலம் வரை கும்மி அடித்துக் கொண்டே வருவான்...

பாகவதரோ செய்யாத கொலைக்கு பழி எனும் வேதாளத்தைத் தோளில் சுமந்து சிறை சென்று வந்தவர்...

எல்லோருக்கும் ஒரு நொடி வரும் .. அந்நொடி இதயத்தைப் புரட்டிப் போடும்... நிலையாமைச் சுத்தியல் டங் என உச்சி மண்டையில்  அடிக்கும் ... உலகம் பற்றிய ...உறவு பற்றிய... இவை மாயை எனும் கீதை புரிய ஆரம்பிக்கும் ... இதிலிருந்து இளவரசன் சித்தார்த்தன் கூட தப்பித்ததில்லை...

பூமியில் மானிட ஜென்மம் எடுத்துமோர் புண்ணியமின்றி விலங்குகள் போல்...
சொப்பன வாழ்வில் மகிழ்ந்து ... பாகவதர் பாடல் தான் ...
மாயையில் மிதந்து கொண்டிருந்த நேரம் யாருக்கும் இதன் அர்த்தம் புரிய வாய்ப்பே இல்லை .. இதை எழுதியவருக்கும் கூட...

உள்ளிருந்து இதை எல்லாம் சுவாமி பாட வைத்து நற்கதி அருள அனுபவமும் தந்து அதன் அர்த்தத்தை அனுபவத்தின் வாயிலாக நம் சுவாமி அழுத்தம் திருத்தமாய் விளக்கிவிடுவார் ...

சுவாமி டச் என்பதே அது தான்...

பாகவதர் செய்த புண்ணியம் யாரும் பெறாத காந்த குரல்.. பாகவதர் பெற்ற வரம் சுவாமியிடம் கேட்ட கேள்வி ...

அதற்கு சுவாமி புன்னகைத்து பாகவதரின் கண்களைத் தொடுகிறார்...

கண்கள் கண்ணீரில் ததும்பி வழிகிறது ... ஆஹா சுவாமி என உணர்ச்சி வசப்படுகிறார் அந்த பொற்குரல் பாகவதர்...

நீங்கள் எவ்வளவு தேஜஸோடு இருக்கிறீர்கள் என ஆனந்தக் கரைதலாய் மாறிப்போகிறார் ...

கால்களில் விழுகிறார்...

தன்னிச்சையாய் ஒவ்வொரு செயலும் நடந்து கொண்டிருக்கிறது ...

என்  டி.எம்.எஸ் அவர்கள் இதைச் சொல்லும் போது அவர் குரலிலும் முகத்திலும் எழுந்த பொலிவும் ... உணர்ச்சிவசப்படலும் .. என்னால் அந்த சம்பவத்தை மனக் கண்ணில் திரையிட முடிந்தது ...

ஒரு குழந்தை போல் என்னிடம் விவரிக்கிறார்...
நான் இடைமறிக்கவே இல்லை .. அந்த அருவிப் பேச்சு தடைபடும் என்பதால் விட்டுவிட்டேன்...

ஆனந்தப்படுகிறார் பாகவதர்... சுவாமியைப் தரிசிக்க முடிகிறதே என பரவசப்படுகிறார்...

அவர் பரவச முகத்தை என் அய்யன் டி.எம்.எஸ் முகத்தில் அந்நாளில் அந்நொடியில் பார்த்து பிரம்மித்தேன்...

அதில் இரண்டு அம்சம் ஒன்று பாகவதரை எவ்வளவு டி.எம்.எஸ் நேசித்தார் என்பதும்.. இரண்டாவது சுவாமி
மேல் என் அய்யன் டி.எம்.எஸ் வைத்த தூய பக்தியும் அன்று என்னால் உணர்ந்து கொள்ள முடிந்தது ...

இது நிகழ்ந்து பல ஆண்டுகள் உருண்டோடி இருக்கிறது ... எவ்வளவு துல்லியமாய் நினைவில் வைத்திருக்திறார் என நான் நினைவிக்கவில்லை...

என்னிடம் இந்த அனுபவம் அவர் சொல்லியே பத்தாண்டுகளுக்கு மேலாகிவிட்டது...

மறக்கக் கூடிய அனுபவமே அல்ல அது ... காரணம் அந்த சம்பவத்தின் முத்தாய்ப்பாக வேறொன்று நிகழ்ந்தது.. அது தான் சுவாமி என சிலிர்ப்பை எனக்கு அன்றும் சரி .. பதிவு செய்கிற இன்றும் சரி அந்த மெய்யுணர்வின் தெய்வீகச் சிலிர்ப்பு தொடர்ந்து கொண்டிருக்கிறது...

பொதுவாக கோவிலுக்குச் சென்று கர்ப்பகிரகத்தில் ஆரத்தி காட்டும் போது கண்களை மூடிவிடுவோம்...
வாழ்க்கை என்பது வெளியே இல்லை உள்ளே என்பதற்கான அத்தாட்சியில் அதுவும் ஒன்று...

அப்படி பரவசப்பட்ட பாகவதர் சுவாமியை தரிசித்து கண்களை மூடியிருக்கிறார். மூடிய கண்கள் திறக்கப் படுகையில் அதே பார்வையற்ற பழைய கண்கள்... துடிதுடித்துப் போயிருக்கிறார் பாகவதர்...

சுவாமி இப்படி கண்களைக் கொடுத்து மீண்டும் பறித்துக் கொண்டு விட்டீர்களே என புலம்பியிருக்கிறார்...

அதற்கு சுவாமி சொன்ன விளக்கம் பகவத் கீதையின் சாரம்.. பிரபஞ்ச சத்தியப் பேருணர்வின் சர்வ சாட்சியம்... ஆழமான ஆன்மீகம் ...

நீ என்னிடம் என்ன கேட்டாய்? சுவாமி உங்களை ஒருமுறை பார்க்க வேண்டும் எனக் கேட்டாய் ... தரிசித்துவிட்டாய்... பார்வை வேண்டும் எனக் கேட்டாயா?? இல்லையே ... உன்னைக் கேட்க விடவில்லை உன் கர்மா ... காரணம் நீ இதை அனுபவிக்க வேண்டும் என்பதும் கர்ம விதியே ....

கடவுள் கண்டிப்பான கருணையாளனும்... கருணையான கண்டிப்பாளனும்...

இந்த சுவாமி உரையாடலை என் டி.எம்‌.எஸ் சொல்லச் சொல்ல நான் பேச்சற்று சுவாமி சொன்ன அந்த சத்தியத்தை ஆழமாய் உணர முயற்சித்தேன்...

எண்ணத்தின்...பேச்சின்...செயலின் பின்விளைவுகளை அனுபவித்தே ஆக வேண்டும்... யாராக இருப்பினும்... இன்று இல்லையேல்... அதற்கான ஒரு நாள்...

சுவாமி கருணை இருப்பின் எளிதாய் அந்த அக்னிப் பரிட்சையை சேதாரம் இல்லாமல் கடந்து விடலாம்...

அலட்டிக் கொள்ளாமல் அல்லல் விட்டு அகலலாம்...
புலம்பாமல் பெருந்துயர் கடந்து பயணிக்கலாம்...
சுவாமியின் பாதத்தை சம்பாதிக்க வேண்டும்.. சுவாமியின் பார்வையை இதய வங்கியில் சேமிக்க வேண்டும்...
இந்த அனுபவம் என்னவோ செய்தது என்னை...


என் அய்யன் டி.எம்.எஸ் சுவாமி மேல் கோபமும் கொண்டு பேசாமலும் இருந்திருக்கிறார்...

அவரின் புதல்விகள் இருவர் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த சமயத்தில் சுவாமிக்கு டிரங் கால் செய்திருக்கிறார் ... தொடர்பு கிடைத்தும் இருவரின் உரையாடலும் தடங்கலாகி இருக்கிறது.. மகள்களின் பிரிவு துக்கத்தில் துவண்டு போயிருக்கிறார்... சில காலம் கழித்து மனதின் இறுக்கம் சற்று விலக சுவாமியை தரிசிக்கையில்... சௌந்தரம் ஏன் கவலப்படற அவங்க என் பாதத்த வந்து சேந்தாச்சு என சத்தியம் பேசி இருக்கிறார்...

மரணம் என்பது நாம் அணிந்த பல நூறு சட்டை கிழிந்ததைப் போல் இந்தப் பிறவியில் இன்னொரு சட்டையும் கிழிவது...

அலுத்து விட்டது இனி சட்டையே வேண்டாம் என்ற வேண்டுதலோடு தான் சுவாமியை அணுகுவதே ஆத்மார்த்தமான பக்தி...

என் அய்யன் டி.எம்.எஸ் அடிக்கடி என்னிடம் சொல்லும் சத்திய கூற்று "நாம் நினைத்தபடி வாழவில்லை .. விதித்தபடியே வாழ்கிறோம்" என்பதே

நிறைய சந்திப்புகள்.. நிறைய கலந்துரையாடல்..நேரம் போவதே தெரியாது .. மாலை வந்தால் இரவு எட்டாகி விடும்.. குறுகிய காலப் பழக்கம் என்றாலும் என்னையும் ஒரு துரும்பாய் மதித்து .. சுவாமி காவிய புத்தகத்தால் நெருங்கி..

நல்ல பொருள் பொதிந்து .. கருத்தாழமா.. எல்லாரும் ரசிக்கிற மாதிரி எழுதுங்க...

அந்த வார்த்தையை அப்படியே தருகிறேன்..
இதில் பொருள் பொதிந்து என்ற வார்த்தையில் அவரின் தமிழ் ஆழம் உணர்ந்தேன்... எதுக்கு கவலப்படற கண்ணதாசனாட்டம் எழுத மட்டும் செய்.. மத்ததெல்லாம் வேணாம்.. நீ பெரிய ஆளா வருவ.. நான் சொல்லல முருகன் சொல்றான் என சுவாமி வந்தது போல் பேசி குழந்தை போல் நாக்கை என் முன் நீட்டி இதுல முருகன் இருக்கான் என்று சொன்னார் ஒருமுறை.. நான் உணர்ச்சிவசப்பட்டு அழுது விட்டேன்..

அவர் சொன்ன வாக்கு ஆறே மாதத்தில் பலித்தது.. திரைத்துறையில் பாடல் எழுதும் வாய்ப்பு முருகனின் இயற்பெயர் கொண்ட இயக்குநர் விக்ரமன் அவர்கள் வழங்கினார்...

ஒரு சந்திப்பிலே நான் நான்கைந்து முறை தன்னிச்சையாய் அவர் கால்களில் விழுவேன்..

எனக்கும் அவருக்குமான ஆத்ம பந்தம் நம் சுவாமி அமைத்ததே..  என்னால் அதை இன்று வரை உணர முடிகிறது...

எனக்கு ஒரு தியான முத்திரை கற்றுக் கொடுத்தார்.. இதை இப்படி வெச்சிட்டு தியானம் பண்றேன்.. நல்ல எனர்ஜியா இருக்கு .. என்றார்

அந்த முத்திரை யோகாவில் பிறகு கற்றுக் கொண்டேன் ..
ஆனால் இன்று வரை என் அளவில் அதற்கு நான் வைத்த பெயர் டி.எம்.எஸ் முத்திரை

அதை வைக்கும் போதெல்லாம் அவரின் ஞாபகமே வரும்...

சுவாமி சுப்பம்மாவின் உயிரையே மீட்டு துளசி தீர்த்தம் விட்டு பாத கதி தந்திருக்கிறார்..
பாகவதருக்கான அனுபவம் பாகவதர் பூர்வ ஜென்மத்து புண்ணியம்‌.

என் அய்யன் டி.எம்.எஸ் சுவாமி பற்றிய  அனுபவம் பகிர்ந்தே பிரபல பாடகி சுசீலா சுவாமி பக்தையாகி அய்யனைத் தாண்டியும் ஆழமானார் என அவரின் மாணவர் ஜி.ஆர் மகாதேவன் என்னோடு சிலிர்த்தபடி கூறி இருக்கிறார்...

அய்யன் டி.எம்.எஸ் அவர்களுக்கு நம் சுவாமி பற்றி முதன் முதலில் யார் சொன்னது எனச் சொன்னால் மிகுந்த ஆச்சர்யம் அடைவீர்கள்...


பிரபல பாடகி கே‌.பி சுந்தராம்பாள்...
ஒரு முறை இல்லமொன்றில் கே.பி.எஸ் பாட ..சுவாமி வர‌.. கூட்டம் எழ.. வேண்டாம் என சுவாமி சைகை காட்ட.. பாடி முடித்து சுவாமியை தரிசித்து முருகா என கால்களில் விழுந்திருக்கிறார் ...

முருக தரிசனம் கேபிஎஸ் .. வாரியார் சுவாமி என பலருக்கு சுவாமி தந்திருக்கிறார்...

சுவாமி கீழ் இறங்கி போயும் போயும் நமக்காக அவதரித்ததே என் அளவில் பெரிய ஆச்சர்யம்.. மற்றதெல்லாம் அடுத்ததே...

அந்த காலத்தில் சாதாரண செல்பேசி என்பதால் என்னால் ரெக்கார்ட் செய்ய முடியவில்லை.. நானும் அவரும் எடுத்த புகைப்படமே நண்பனின் கேமரா செல் மூலமாகத் தான்.‌


இப்படித் தான் சுவாமியின் மகிமை ஆதி காலத்தில் செவி விட்டு செவி பரவியது...

ஆதி கால பக்தர்கள் கொடுத்து வைத்தவர்கள் .. குழந்தை மனம் கொண்டவர்கள்.. சுவாமியை சந்தேகமின்றி சுவாமியை அப்படியே ஏற்றுக் கொண்டார்கள்..

அதனால் தான் அவர்களின் பக்திக்கு இணங்க சுவாமி அவர்களுக்கு விஸ்வரூப தரிசனமே காட்டியிருக்கிறார்...அவர்களின் பக்திப் பாங்கைப் பின்பற்றவே முயற்சிக்கிறேன்...

எனக்கும் என் அய்யன் டி.எம்.எஸ் க்குமான ஆத்ம பந்தத்தின் சாட்சியாக அய்யன் நம் சுவாமியோடு இரண்டற கலந்தது அடியேன் பிறந்த ஜென்ம நட்சத்திரமான வைகாசி அனுஷம்...

அய்யன் டி.எம்.எஸ் ஒரு மாபெரும் தெய்வீகக் கருவி.. அவருள்ளிருந்து சுவாமியே பாடிக் கொண்டிருக்கிறார் இன்றுவரை...

அவர் வாழ்ந்த வீட்டின் பூஜை அறையில் இரண்டே இரண்டு படம் தான் பெரிதாக இருந்து மாலை ஏற்று வருபவர்களை புன்னகை செய்து ஆசிர்வதிக்கும் .. ஒன்று மயிலை அணைத்தபடி பெரிய முருகர் படம்.. அதன் அருகே அதே அளவிற்கு சுவாமியின் இளவயது படம்..‌
என் அய்யன் டி.எம்.எஸ் அவர்களுக்கு முருகனும் சுவாமியும் இரண்டு கண்கள்...


இன்றும் மந்தவெளியில் அந்த தெய்வீக பூஜை அறையில் பேரருள் பாலிக்கிறது முருக சாயி ரூபங்கள்...

செளந்தர சாயி அவரின் சௌந்தரத்திற்கு சௌந்தர குரலும் .. சௌபாக்கிய வாழ்வும் தந்து பூரண வயது வாழ வைத்து பாடல் வழி இன்றும் நம்மிடையே வாழ்வாங்கு அவரை வாழ வைத்துக் கொண்டிருக்கிறார்

சுவாமிக்கு பல பாடல்கள் இயற்றி தானே இசையமைத்துப் பாடிய அந்த இறையருட் பாடகர் சுவாமியோடே நிரந்தர நித்யமாய் ஐக்கியமாகி இருக்கிறார்...

சத்திய சாயி பாபா
சமரசம் கமழ் பூபா
அருள் புரிவாய் நீ அருள் புரிவாய்
          -- டிஎம்எஸ்

பக்தியுடன் 
கவிஞர் வைரபாரதி✍🏻

4 கருத்துகள்:

 1. இதைப்படிப்பதே ஸ்வாமி எனக்குத் தரும் தெயவீக அனுபவ
  ம்..மிக்க நன்றி.. பலமுறை படித்தாலும்..அலுக்காத எழுத்து உங்களுடையது.. மீண்டும் நன்றி.!!

  பதிலளிநீக்கு
 2. Evvalvu padithsl krttalum no Swamiyin mahimai arpud anandam sairam

  பதிலளிநீக்கு
 3. நெஞ்சில் நிறைந்த.. நீங்காத நினைவுகளாய்வெளிவரும் காவியம்

  பதிலளிநீக்கு
 4. அருமையான பதிவு. வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு