தலைப்பு

புதன், 27 நவம்பர், 2019

கவிதா வாஹினி! (பக்கம் -1) - கவிஞர் வைரபாரதி

1) அமர சாயி அமரத்துவ சாயி:

எந்த மரம் செய்த புண்ணியமோ? 
தேக்கா 
சந்தனமா 

நாங்கள் என்ன 
மரத்து விட்டோமா ? 
கடவுளே நீ 
மறந்து விட்டாயா என 
மற்றவை
முறையிடுமா? 
உன் ஒவ்வொரு நாற்காலியும் 
சுவாமி 
அவைகள் 
மரங்கள் அல்ல 
வரங்கள் 

நளினமாய் நீ அமர்ந்து 
நல்லபயம் காட்டும் 
உன் ஸ்பரிசம் பெற்ற 
அம் மரங்கள் 
அடுத்த ஜென்மத்து 
அகலிகைகள் 

காற்றுக்கும் இடம்விட்டு
ஒருக்களித்த உன் அமர்வு 

தொற்றிக் கொள்கிறது 
அவ்விடத்தில் என் 
மழலை மனம் 

பற்றிக் கொள்கிறது 
மனமற்ற வெளியில் எங்குமுன் 
மலர் மணம்  

உன் சமாதி
கோலத்திலும் இப்படமே 
ஆன்ம மூலம் 

நீ மரங்களையும்
    மனிதர்களாக்க வந்த
ஆதி மூலம் 

2) மடப்பள்ளி மகத்துவ சாயி:

சுவாமி நீ
அடுப்பில் வைக்கிறாயா 
இல்லை 
இறக்கி வைக்கிறாயா 

நீ 
பக்குவப்படுத்துவதையும் 
ஆசுவாசப்படுத்துவதையும் 
அனுபவிக்கிறது ஒன்றாய் 
ஆன்மா

நீயே சமைக்கிறாய் 
பூமி இலையில் 
சம்பவ உணவு

பிரபஞ்ச இலையில் 
பூமியே உணவு 

சுவாமி உன் கை நிறைய
நீ சமைத்த உணவு 

மனங்களை ஜனங்கள் 
காலியாக வைத்தால் தானே 
நீ வந்து பரிமாற முடியும் 

அய்யோ அரிசி 
அடுப்பில் வேகிறதே என
வயல் தாய் 
வருத்தப்படுவதில்லை 

எத்தனை நாளைக்கு 
உணவாகவே உழல்வது?

சுவாமி நீ எனை
இருவிரலால் ஏற்றுக் கொள்
இன்றே பிரசாதமாகிவிடுகிறேன் 

3) ராம சாயி நாம சாயி:

வில்லாகவே இருக்கிறேன் 
உன் சங்கல்பம் எதுவோ 
அதுவே 
அம்பாகிறது சுவாமி 

இலக்கையும் நீயே 
தீர்மானிக்கிறாய் 

நாணேற்றுவதும் 
நானல்ல 
நீயே 

நானாய் இருந்தவனை 
பக்தியெனும் 
நாணாய் மாற்றியது 
நீதான் 

நீ குறி வைப்பது 
ஆப்பிளை அல்ல 
அண்டத்தை 

ராவணன் வெளியே இல்லை
நாணேற்றும் போது 
 வில்லையே உடைக்கும் 
அவசரமில்லை 

வில் முறித்த பின் 
மணம் கொண்டது 
அந்த யுகம் 

எனை
 மணம் கொண்ட பிறகே 
உன் வசதிக்கு எனை 
வளைக்கிறாய் 

ஒவ்வொருவருள்ளும்
ஒரு வில்லனிருக்கிறான் 

உன் விரல் பட ஒருநாள்
வில்லனும் 
வில்லாகி விடுகிறான் 

அம்பாக இருந்தால் 
உனைப் பிரிய வேண்டும் 

வில்லாகவே உன்
தோளில் 
தொற்றித்
தொடர்ந்து வருகிறேன்

அம்புக்கு 
நீ வைப்பது இலக்கு 
வில்லுக்கு 
நீயே இலக்கு 

4) கங்கா சாயி காருண்ய சாயிி:

தண்ணீர் காட்டியவர்களுக்கே நீ 
தண்ணீர் நீட்டினாய் 

சென்னை 
அன்னை என
உன்னையே 
அழைக்க  வேண்டும்

நீ தான் சுவாமி 
வாய்ப் பால் சுரக்கும் 
மனிதர்க்கு நீ வழங்கிய
வாய்ப்பால் 
தாய்ப்பால் ஊட்டினாய்

உன்கை என்பதை 
கங்கை என்றே 
உணர்கிறேன்

ஆசீர்வதித்தும் புனிதனாக்குகிறாய் 
அரவணைத்தும் நீ
மனிதனாக்குகிறாய்

அகத்தியரையே
கமண்டலமாக்கி 
நீ தான் அதில் 
தமிழை ஊற்றி நிரப்பினாய் 

சேவையே 
சாற்றிய சந்நதிக்கான 
சாவி என
மனிதப் பூட்டுக்களைத் 
திருப்பினாய்

கடல் தாகம் 
நதி தீர்க்கிறது 
நதி தாகம் 
மழை தீர்க்கிறது 
மழை தாகம் 
முகில் தீர்க்கிறது 

முகில் தாகம்
உன் கார்முடிகளையே 
உற்றுப் பார்க்கிறது 

நீ மனிதர்க்கு 
தண்ணீரையும் 
உன் பக்தர்க்கு 
தாகத்தையும் தருகிறாய்

தண்ணீர் பெற்றவர் 
பருகிவிடுகின்றனர்
தாகம் பெற்றவர் 
உன்னையேப் பருகுகின்றனர் 

5) தாக சாந்தி தர்ம சாயி:

என்ன நினைத்திருக்கும்
எத்தனை நாளாகியிருக்கும் 

பூமிக்குள் மூச்சடிக்கி 
புதைந்திருந்தது 
இதற்காகத் தானே சுவாமி 

நீரைச் சுமந்தாலும் 
பழரசம் சுமந்தாலும் 
தான் அருந்தாது 
தாங்கிப் பிடித்திருந்து 

சுட்டாலும் சுடட்டும் என
சீடன் குருவுக்கு 
சிறு தீபம்
வெறுங்கையில் 
சுமந்திருப்பதாய்

 தனக்கு 
தாகமோ 
பசியோ நீ 
பருக வேண்டியே 

கண்ணில் நீரைத்
  தேக்கும் பக்தியாய் ...
மண்ணில் நீரைத் 
  தேக்கும் சக்தியாய் ...
விண்ணில் நீரைத் 
  தேக்கும் யுக்தியாய்...

உனக்காகவே 
உள் நெஞ்சில் 
தேக்கி வைத்திருக்கிறதே 

வடிவமாவதற்குள் ஒரு    
 வழியாகி இருக்கும் 
வலிகள் சுமந்து 
வாய் திறந்த ஜீவனாய் 
உன் 
சந்நதி வந்து சேர்ந்திருக்கிறதே 

எதற்காக ? 

உன் உதட்டு உற்சவம் 
ஒவ்வொரு மடக்கும் பெற 

உன் முக்தி முத்தம் 
ஒவ்வொரு நொடியும் வர

சுவாமி 
சத்தியமாய் 
வரம் பெற்றிருக்கிறது 
அந்த 
வெள்ளிக் கோப்பை 

எங்கள் தாகத்திற்கு நீ 
உன்னையே தருவதை 
உன்னிப்பாய் கவனித்த 
அது 

உன்னதமே சுவாமியே 
உந்தன் தாகத்திற்கு 
தன்னையே தந்திருக்கிறது

6) போஜன சாயி போஷித சாயி

விரதத்திற்கு 
விருந்து நடக்கிறது 

உலக விருந்து 
உடனே விரதம் ஏற்கிறது

தயிரை உண்டவன்
பூதகி 
உயிரை உண்டவன் 

அவலை உண்டவன் 
பக்தர் 
கவலை உண்டவன் 

கடித்த
கனியை உண்டவன் 
பிடித்த
கலியை உண்டவன் 

உண்பவர் பசியென 
உள்ளே நின்றவன் 

உண்டவர் பெறுகின்ற 
திருப்தி நான் என்றவன்

உண்ண உண்ண 
பசியைத் தருபவன் 

நாராயண சேவையின் 
ருசியைத் தருபவன் 

கனவாக நீ எனை 
கருதாமல் நாளும் 

சுவாமி 

உணவாக நீஎனை 
உண்டாலே போதும் 

உன் விரல் படும் போது
தியானத்தின் 
முதல் நிலை

உன் இதழ் படும் போது 
தியானத்தின் இரண்டாம் நிலை 

உன் வயிற்றுள் விழும் போது 
தியானத்தின் மூன்றாம் நிலை 

நீ ஜீரணிக்கிற போது 
நீயாகவே நான் 
நானாகவே நீ 

அத்வைதம் தா சுவாமி 
அகமதை உணவாய் 
அகமகிழ்ந்துண் 

நீ உண்ணாது போயின்
உடல் போல் 
இகம் அதும் புண் 

துதிக்கை தூக்கிய 
கஜேந்திரனுக்கு 
கதிக்கை தூக்கிய 
மூல சாயியே

யானை அளவு 
இல்லாவிடினும் 
பூனை அளவேனும் 
பக்தியை 
பானை அளவில் 
தருகிறேன் 

பானை உடைத்து 
வெண்ணெய் உண்டவன் 
சுவாமி நீ -- தியான
வானை கொடுத்து
என்னை உண்பவன் 

உண்பவனுக்கு 
வயிறு தேவை 
உன்னால் 
உண்ணப்படுபவனுக்கு 
இதயமே போதும் சுவாமி

7) அம்ருத வர்ஷ ஆனந்த சாமி:

சுவாமி 
உன்னால் மட்டுமே 
மழையாகவும்...
மழை தரவும்...
மழைக்காக 
ஏங்க வைக்கவும் முடியும் 

அந்தக் குடைக்கு தெரியாது 
அதைப் பிடித்துக் கொண்டிருப்பதே 
மழை தான் என்று...

அடுத்த படம் என்னவென
யோசித்தேன் 
ஏதும் பிடிபடவில்லை 

பிடிபட நீ என்ன 
மழையா 

பிறகு 
சிறகு ஒடுக்கி 
தியான லயம் கண்டேன் 

அப்போது காட்டினாய்
இந்தப் படத்தை
இதுவே 
அடுத்த கவிதைக்கான 
அடி நாதம் என
அச்சாணி பூட்டினாய்

என்ன இது 
எதிர் முரண்
மழையும் நீ 
மழையில்லை நீ 

ஆம்
தண்ணீர் மழை 
விட்டு விட்டு பெய்யும் 
கண்ணீர் மழை 
பட்டு விட்டால் பெய்யும்

பன்னீர் மழை 
வரவேற்கும் 
வெண்ணீறு மழை 
வரம் ஏற்கும் 

ஆணின
அடிவார மழை 
மேலெழும்பி 
ஆயிரம் தாமரையில் தேனாகும் 
அப்போதே ஆன்மா
வானாகும் 

நீ நனைக்காது அணைக்கும் 
மூச்சு மழை 

வெளியிலிருந்து 
உள்ளேயும் 
உள்ளிருந்து 
வெளியேயும் 
உன் நடமாட்டமே 

பாலையிலிருந்த
பாலுக்கோர் 
இடமாற்றமே 

மேக மழை போல் உனக்கு
பாகுபாடில்லை 

யோக மழை நீ 
உன்னைத் தவிற 
உள்ளத்திற்கு வேறு 
ஈடுபாடில்லை 

மழையாக நீ 
கீழ் இறங்கிய போது 

அருள் பெற்றவர்களை
குடையாக்கினாய் 
அகம் பெற்றவர்களை
குடமாக்கினாய் 
அருகே அழைத்துக் 
குளமாக்கினாய் 

அனுபவிக்கவா எங்களை
உடலாக்கினாய் 

இல்லை அதையும் தாண்டிட 
கடலாக்கினாய் 

இடிகள் எடுத்து வந்த 
வான மழை 
மரங்கள் வளர்க்கிறது 

சுவாமி நீ 
அடிகள் எடுத்து வந்த 
தியான மழை 
உன்னால் 
வரங்களுக்கும்
கரங்கள் துளிர்க்கிறது

அடுத்த யுகம் தாண்டியும்
விடாது உன் 
அடை மழை 

இப்போதே துளியாக்கு 
அப்போதே 
அடுத்த கட்டமாய் 
ஆழ்கடலாக முடியும்

8) ஆன்மீக ஆசன ஆலய சாயி:

சுவாமி நீ 
காத்திருக்கிறாய்

உன் காத்திருப்புக்கு 
கால் வலித்து 
நாற்காலியில் உட்காருகிறதே தவிர 
நீ காத்திருக்கிற இதயங்கள் 
நின்று கொண்டு
 வேடிக்கையே
பார்க்கின்றன ...

உனக்காக ஆசனமிட்ட
ஒவ்வொரு வழிபாட்டிலும் 
நீ அமர்ந்து கொண்டு அருள்கிறாய் 

நீ ஆசனமிட்ட 
உன் இதய நாற்காலி 
காலியாகவே இருக்கிறது 

பிரகலாதன்
துருவன்
மார்க்கண்டேயன்  அமர்ந்திருக்கிறான் 

அனுமன் கூட 
உன் பாதமே போதுமென
உனதருகே 
உட்கார்ந்துவிட்டான் 

உன் இதயத்தில் அமர 
நீ தான் சுவாமி இழுக்க வேண்டும் 

பேருந்தில் கூட நின்று கொண்டே
பயணப்படும் சராசரி நாங்கள் 

மிதிவண்டி இருக்கை 
மட்டுமே என்னிடத்தில் 

எளியவன் நானுன்
மடி அமர 
மனம் திறந்து 
மடியில் அமர்த்து

மடியில் அமர்ந்த உன் 
மழலை 
இதயத்தில் அமர 
எத்தனை நேரமாகும் 

தியானம் போதவில்லை 
ஜபம் போதவில்லை 
உனை நினைக்கும் 
உண்மையான நொடிகள் 
ஓரிரண்டு நிமிடங்களே 

எல்லா செயலின் முன்
உன் பெயர் அழைக்கும் 
பக்குவம் கூட இல்லை

சேவை கூட 
தேவைப்படும் நேரத்தில் இல்லாமல் 
சௌகரியப்படும் நேரத்திலேயே 
செய்கிறோம்

கலி 
கர்ம வினை 
முதுகில் ஏறி அமர்ந்திருக்க 

உன் இதயத்தில் 
அமர்வதற்கு 
வேதாளத்தை விரட்டு 
முதுகுச் சுமை 
முடிவுக்கு வரட்டும்

நாங்கள் அமரும் 
நாற்காலியின் அடியில் 
பணம் 
குடும்பம் எனும் 
மாயப் பஞ்சடைத்திருப்பதே
சுகமானது போல்  
சுயம்வரம் நடத்துகிறது
கனவுகள்

கனவுகளை 
வலி கொடுத்தோ 
ஒளி கொடுத்தோ கலை 

நாங்கள் 
அமர்ந்த நாற்காலியில் 
காமம் குரோதம் 
மோகம் லோபமும் 
கால்களாய்

மீதமிரண்டுக்கு 
இடமில்லை என்று 
எங்கள் தலையில் 
கொம்புகளாய்

கொம்புகளை உடைக்கையில் 
நாற்காலியையும் சேர்த்து உடை 

கூழாங்கற்கள் எறியப்பட்ட பின் 
வைரங்கள் எடுக்க 
விரல்கள் உன் அருகே
 வந்தே ஆகவேண்டும் 

அதுவரை 
கூழாங்கற்களையே 
வைரங்களாய் நம்பும் மனம் 

பக்தி எனும் 
முதுகுத் தண்டை 
நீ தான் சுவாமி 
நிமிர்த்த வேண்டும்

சாதனாவை நடத்தி 
சேவையை அமர்த்தி
பஜனையால் தூக்கி 
தியான ஆசனத்தில் 
உட்கார்த்தி வை 

பிறகு 
உலக நாற்காலியே 
உட்கார அழைத்தாலும் 
உன் 
உள்ளத்து நாற்காலியே 
போதும் என 
பூரணத்துவம் எய்துவோம்

நீ கடவுள் என 
உணர்ந்து கொண்ட பின் 
உட்கார்ந்திருக்கும் 
உன் இதய நாற்காலி 
உயரத்தில் அழைத்துச் செல்கிறது

சுவாமி
உன் இதய நாற்காலி 
மானசரோவரின் 
அன்னப் பறவை

இதோ இமயத்தை நோக்கி 
இதமான உன் 
இதயத்தை நோக்கி
நடக்க ஆரம்பித்துவிட்டோம்

9) லீலா சாயி லிகித சாயி:

இப்படித் தான்
இறைவா 
கையில் ஏந்திக் கொண்டிருக்கிறாய் 
உன் பக்தரை ...

புரிந்தவர்களை வைத்து உன் 
பெயர் எழுதுகிறாய் 

உணர்ந்தவர்களை வைத்து
 உன் ஒளியை எழுதுகிறாய்

கலந்தவர்களை வைத்து உன் 
கவிதை எழுதுகிறாய் 

கரைந்தவர்களை வைத்து 
நீ காவியமே எழுதுகிறாய்

கேட்டவர்களுக்கு 
கேட்டதை நீ 
காலம் பார்த்து 
எழுதித் தருகிறாய் 

தலையெழுத்தை எழுதுபவன் 
உன்னை வைத்து 
மனிதர்கள்
மளிகைக் கடை பட்டியலுக்கே 
மகிழ்ச்சி அடைகிறார்கள் 

பாற்கடல் படுத்தோன் நீ
சுவாமி உன் கையில் 
பால் கணக்குக்கே 
பிரார்த்தனை செய்கிறார்கள் 

சில பேனாக்கள் 
தான் 
தங்கமாகவில்லையே எனத் 
துயரப்படுகிறது 

எழுத்தில் தங்கம் நீ 
எழுதிக் கொண்டிருக்க

எழுதுகோலில் தங்கம் எதற்கு 
எடுத்துணர்த்து சுவாமி 

ஒவ்வொருவருக்கும் 
ஒவ்வொரு மொழி 

ஒவ்வொருவருக்கும் 
ஒவ்வொரு கையெழுத்து

பிரியமானவர்களைப் பிடித்துப் 
புத்தகம் எழுதுகிறாய்

அதையும் 
உன் 
பேனாக்களே வாசிக்கின்றன

நீ இழுத்த இழுப்புக்கு
அசைத்த அசைவுக்கு 
அழுத்திய அழுத்தலுக்கு
நீ 
எழுதிடும் எழுத்துக்கு 

எழுதுவதற்கு முன் 
எழுத்து வேறு 
கருத்து வேறு 
பேனா வேறு 

நீ எழுதிய பின் 

மூன்றுக்கும் ஒரு 
முடிச்சிடுகிறாய்

அப்போது ஆகிறது 
காகிதமும் 
கல்யாணப் பத்திரிக்கையாய்...

உன் உள்ளங்கை ஸ்பரிசம் 
விரல்களின் ஆலிங்கனம் 

பேனாவாக என்ன 
புண்ணியம் செய்தோமோ 

உன்
நகக் கண்களும் 
நிஜக் கண்களாக
ஆனந்தக் கண்ணீராய்
கவிதைத் துளிகள் 

இந்தப் பேனாவுக்கு 
தியான லிபியில்
பிரபஞ்சம் வாசிக்க 
அதை வைத்துன்
கையெழுத்திடு போதும் 

உனைப் பிடிக்கும் வரை
கையெழுத்தும்
அர்த்தமில்லா
கை நாட்டே 

நீ பிடித்துவிட்டால் 
அந்த கைநாட்டும் 
அடுத்த நொடி கையெழுத்தே

10) நய மய சாயி  லய வய சாயி:

இப்படித்தான் 
இருந்து கொண்டிருக்கிறாய்
இறைவா என் 
இதயத்தில் 

என்று மாறுவானோ 
என்பதாகவும் 
என்ன ஒரு ஆனந்தம் 
என்பதாகவும்

இதயங்களுக்கு 
இரட்டை முகமா ?

புயலே அடித்தாலும் உன்
பாதத்தை விடாத 
பக்தி வருமா சுவாமி 

துணிக்கு வலிக்கும் என்று நீ
வெளுக்காமல் விட்டதில்லை 

வெளுத்தாலுமுனை 
விலகாத 
வரங்கள் நேருமா ?

நீ ஒருவனே போதுமென்ற 
திருப்திப்படுமா ? 
இதயம் 
திருத்தப்படுமா? 

உறவு நெரிசலை விட
உன் உரசலே பெரிதெனும் 
உண்மை விளங்குமா?
உள்ளம் துலங்குமா?

தியானம் போலொரு 
திகட்டா போதை இல்லை எனும்
தவ சத்தியம் 
உள்ளுணர்வு உணருமா?

நீ கண் திறந்து 
பார்க்க வேண்டியதே இல்லை 

எழுதி இயக்குபவன்
உனக்கு தெரியாதா 
அடுத்த காட்சி என்னவென்று 

நீ தூங்கிவிட்டாயோ 
என்று தான் 
எண்ணுகிறார்கள் 

பாம்பணையில் படுத்தால் மட்டுமே 
துயில் கொள்வாய்

பூமியில் படுத்தால் 
எப்படி ஏகாந்தமாய் 
உறங்க முடியும் 
உன்னால் ? 

பூமியா
பாம்பா உனக்கு
எது கொடிதெனும் 
எதார்த்தம் புரியாதா

யாகத்தில் ரிஷிகள்
நெருப்பை எழுப்புவதாய் ...

நீ எழுப்பி விடவே வந்தவன் 

இப்போது ஆழ்ந்திருக்கிறாய் 

ஆழ்ந்திருக்கும் போதே 
அம்மா நீ 
வாழ்ந்திருக்கிறாய் 

உனை பஜிக்கிறோம் 
உளம் தொட ஜபிக்கிறோம் 

கத்தினாலும் நீ 
கானம் என்கிறாய்

சாய்ராம் என்றாலே 
சேவை என்கிறாய் 

இமைப் பொழுதும் நீங்காமல் 
நெஞ்சில் வா குட்டா 
நானே தேவை என
நெஞ்சு திறந்து அழைக்கிறாய்

உன் இந்த ரூபம் 
உற்று நோக்க 
உற்று நோக்க 
உள்ளே இழுத்துக் கொண்டு விடுகிறாய்

உனக்குள்ளே தான் 
ஒவ்வொன்றும் நிகழ்கிறது 

வெளியே எதுவுமில்லை
வெளியே உனையன்றி
வெளியே எதுவுமில்லை

தியானம் என்பது 
திறந்த கண்களை 
மூடும் போது மட்டுமல்ல

திறந்த உன் கண் 
மூடிய  படத்திலும்
திறந்து கொள்கிறது 

நான் லயிக்கையில் 
நான் மறைகிறேன்
நீ தெரிகிறாய்

நீ லயிக்கையிலும் 
நானே மறைகிறேன் 
நீயே தெரிந்து கொண்டிருக்கிறாய் 

நான் நீ என்பது வெறும் 
பேச்சு வழக்கு 
ஆழமாய் மிக 
ஆனந்தமாய் 
லயித்துப் போக 

வார்த்தைகளால் எழும்
விலங்கும் உடைந்து போகிறது ..

வார்த்தைகள் உறுமும் 
விலங்கும் மறைந்து போகிறது

11) சிருஷ்டி கர்த்த சாட்சி சாயி:

நீ எழுதுவதை 
நீயே வாசிக்கிறாய்

நீ வரைவதை 
நீயே ரசிக்கிறாய் 

நீ பாடுவதை
நீயே கேட்கிறாய் 

நீ ஆடுவதற்கு 
நீயே தாளமிடுகிறாய் 

செயலாகும் போது 
செய்பவனும் 
செயலும் 
நீயாகி விடுகிறாய் 

செயல் அறும் போதும் 
செயலின்மையாய் 
நீயே எஞ்சுகிறாய் 

வெற்றுக் காகிதத்திலும் 
வெறுமையாய் 
நீயே மிஞ்சுகிறாய் 

எழுதாதவற்றை எழுதி 
எழுத்திற்கும் அப்பாலுள்ளதை
எடுத்துக் காட்டி 
நீயே விஞ்சுகிறாய் 

மொழிகளால் 
நிறங்களால் 
ஒலிகளால் 
உறவாடியது போதுமென 

மௌனங்களாலும் 
நீயே கொஞ்சுகிறாய் 

சுவாமி 
வேலை செய்து கொண்டே அதை
வேடிக்கைப் பார்ப்பது 
உன்னால் மட்டுமே முடியும் 

மின்சாரம் நின்று போன 
மின்விசிறி 
காற்றில் சுற்றுவதாக 
இங்கு உன்னால் 
இயக்கப்படாதது எதுவுமில்லை 

எழுத்துப் பிழைகளோ 
கோடுகளோ 
இரைச்சல்களோ 
நீ படைப்பதில் 
இல்லவே இல்லை

அனர்த்தங்களும் உன்
அதரத்திலிருந்து எழும் போது
அர்த்தமாகிவிடுகிறது 

இப்படித் தானே 
வலிய வாங்கி
பிரித்துப் படித்து 
கண்ணீர் விட வைத்தாய் 
நானெழுதியதாய் 
நினைத்துக் கொண்டிருந்த 
கவிதைகளுக்கு 

நீ எழுதிவிட்டு 
எழுத்தாய் தங்கிவிடுகிறாய் 

நீ வரைந்து விட்டு 
ஓவியமாய் 
உட்கார்ந்து கொள்கிறாய் 

நீ பாடிவிட்டு 
ரீங்காரமாய் 
சுற்றி வருகிறாய் 

நீ படமெடுத்து 
படமாய் மாறி 
பேசிக் கொண்டிருக்கிறாய் 

படைப்பவன் நீ 
படைத்துவிட்டு 
பெயரை எனக்கு 
பரிசளிக்கிறாய் சுவாமி

கடவுளே சுவாமி 
கருணைக்கு நீ 
உன் 
காலடிக்கு நான் 

உன் அருளைப் பருகும் 
என்னை ஆனந்தத்தில் 
கதறி அழ விடு 
சித்ராவதியில் 
நீர்மட்டம் உயரட்டும்

12) பசுபதி சாயி பிரகஸ்பதி சாயி:

பசுக்கள் செய்திருக்கும் 
புண்ணியம் 
யுகம் விட்டு யுகம் தொடர்கிறது சுவாமி 

இரு கண் மத்தியில் 
உன் தொடுகை 
புருவ மத்தியில் 
அதன் தொழுகை 

உன் கோகுலத்துப் பசுக்கள் 
உன் கோகுலத்திலேயே 
பிறந்திருக்க 

அது அசைபோடுவது 
புற்களை உள்வாங்கியதால் அல்ல
சுவாமி உன் 
பேரருளை உள்வாங்கியதால் 

வெறும் புற்களோடு மட்டும் 
நின்றிருந்தால் 
எங்கோ ஓர் மூலையில் 
நின்றிருக்கும் 

உன் 
புல்லாங்குழலையும் சேர்த்து ருசித்ததால் தானே 
சுவாமி அது
புட்டபர்த்தியில் நின்றிருக்கிறது 

மஞ்சள் மாய வண்ணன் 
உன்
மகிமையை 
எத்தனை படி கறந்தாலும்
வழிய வழியப்
பொழிந்திருக்கும் 

பிரசாந்தியே
பாம்பணையாகும்
சிறு கற்களும் சாளகிராமமாகும் 

பௌர்ணமிப் பசு
உன் 
சித்ராவதியில் நீராட 
பசுந் தீர்த்தமும் 
பாற்கடலாகும் 

பேசாமல் 
பேசாத பசுவாக   மாற்றிவிடேன் என்னை
அப்போதும் நாயாய் 
அருகே உன்னிடம் 
வாலாட்டிக் கொண்டிருப்பேன் 

நீ அவதரித்த 
சிவன் கோவில் லிங்கத்திற்கு
பாலூற்றிக் கொண்டிருப்பேன் 

 சுவாமி 
மனிதனாய்ப் பிறந்தேதும்
மகிமை இலையெனப் 
பசுவாய் மாற்றிவிடு 

இறந்தால்
என் தோலும் 
சாய் பஜன் வாசிக்க 
உன் பேர் பாடி வாழ்ந்திருப்பேன் 

என் சாணமும்
உன் பூந்தோட்டத்திற்கு எருவாய் 

ம்மா ம்மா என
ஒரே ஜபம் 
உனையே அழைத்துக் கொண்டிருப்பேன் 

உறவுகள் 
உப்புமாக்கள் 
உத்தியோகங்கள் 
ஏதுமற்று ஏகாந்தமாய் 
லயித்திருப்பேன் 

என் பிள்ளையையும் 
உன் சேவைக்காய் 
ஈன்றிடுவேன் 

கொடுப்பினை கொடு 
கலியில் பசுவதை 
பஞ்ச மா பாதகம் என
பிற ஜனங்களுக்கு 
படிப்பினை கொடு 

வீட்டு தொழுவத்தில் 
விறகாவதை விட 
உன்
மாட்டு தொழுவத்தில் 
மலர்ந்திருந்தால் 
நாட்டு தொழுவத்தின் 
நாகரீகத்தில் தப்பித்து 
உன் 
பாட்டு தொழுவம்  
தாக சாந்தி பெற 
படிப் படியாய் சுரந்திடலாம் 
உருப்படியாய் 
உயர்ந்திடலாம் 

பசுக்கள் 
ரிஷிக்கள் 

சுவாமியே தாயே 
பணத் தொகையில் 
புதையுண்ட ஜனங்களைக் குறைத்து ..
பசுத் தொகையை பூமியில் அதிகரி 

நீயே சுவாமி 
பசுக்களின் அதிகாரி 

கர்மாவினால் 
எருமையாகி விட்டேன் 
கடவுளே என் சுவாமியே 
மீண்டும் எனை 
பசுவாக்கி அருமையாக்கு 

மனிதனாகும் போது 
அது வெறும் 
ஜனிதம் 
பசுவாகும் போதே 
புனிதம்

13)ஆபத்பாந்தவ அபய சாயி:

அபயம் காட்டுகிறாய்
அப்படி என்ன நீ 
கடன் பட்டாய் சுவாமி 
எனக்கும் போய் 
அபயமளித்துக் கொண்டிருக்கிறாய் ? 

என்ன தகுதி 
என்ன நிலை 
எனக்கு ? 

நீ கடவுளா என்ற 
சந்தேகமே கொண்டதில்லை
நான் முதலில் மனிதனா 
என்ற சந்தேகமே 
எனக்கு

உன்னையும் 
என்னையும் பிரிப்பதே 
மனசு தானே 

பிரிக்கிற மனதை
  வந்து நீ
பிடிக்கிற போது தானே 
கர்ம பூஜைகள் நடந்துன்
கதிக்கு ஆளாகிறது  அது

இப்படி வைத்திருப்பதற்கு 
காப்பாற்றுவது என 
நினைக்கிறார்கள் 

அதற்கு மட்டுமா சுவாமி 
அப்படி வைத்திருக்கிறாய்

உலக எண்ணம் போதும் 
கவலை போதும் 
புலம்புதல் போதும் 

போதும் நிறுத்து 
என்பதற்கும் தான் 
இப்படி வைத்திருக்கிறாய்

நீ உலகத்தையே கொடுக்கப் போனாலும் 
இன்னொரு உலகம் கேட்கிறார்கள் சுவாமி 

பட்டில் கறை பட்டால் 
பட்டை விட்டு சிறிய
கறைக்கே கவலைப்படுகிறார்கள் 

விபூதி நீ 
பொழிந்து கொண்டிருந்தாலும்
விபூதி வராத படங்களையே 
வெறிச்சோடிப் பார்க்கிறார்கள் 

அவர்களுக்கு இன்னும் 
என்னவோ வேண்டியிருக்கிறது 

என்ன வேண்டுமென்று தான் உன்னை
வேண்டுபவர்களுக்கு
விளங்கவில்லை 

திருப்தியோடிரு என்பதற்காகவும் 
உன் கரங்களை 
திருப்தி தரும் 
வரங்களாக்கி உயர்த்துகிறாய்

திருப்தியே நீ வசிக்கின்ற 
திருப்பதி 

புருவ நெற்றியே
நீ வசிக்கின்ற 
புட்டபர்த்தி 

சஹஸ்ரஹாரமே நீ
 பூத்து வரும்
பிரசாந்தி நிலையம்

வேண்டுதலை விடுத்து 
வேண்டுபவனே வேண்டும் என்ற 
வேண்டுதல் தானே சுவாமி 
வேண்டுதலுக்கான விடுதலை

நீ வேண்டுவதைத் தருவது இருக்கட்டும் 
முதலில் என்ன
வேண்ட வேண்டும் என 
உணர்த்து சுவாமி

இப்படி கை வைத்திருக்கிறாயே
புரியவில்லை என
நினைக்கிறாயா 

மாயையில் தள்ளி விடட்டுமா ... இல்லை
தியானத்தில் தள்ளி விடட்டுமா 
என சைகை காட்டுகிறாய் தானே

நேரம் பார்த்து 
மாயையில் தள்ளிவிட்டு
மீட்கிறாய் 

நெஞ்சம் பார்த்து 
தியானத்தில் தள்ளிவிட்டு 
மீட்டுகிறாய்  

பொழுதைக் கடந்தவன்
உலகப் 
பழுதைக் கடந்தவன் 
உறவின் 
விழுதைக் கடந்தவன் நீ 
பொழுது போகவில்லை என்றா 
பொழுது தோறும் விளையாடுகிறாய் 

நீ
கண்ணைக் கட்டி விட்டு 
என்னைத் தொடு என்கிறாய் 

எந்த உன்னை தொடுவது? 

உள்ளே இருக்கும் உன்னையா ?
வெளியே இருக்கும் 
உன்னையா ?

போ சுவாமி 
மக்கு எனக்கு 
திக்கு தோறும் நீயே 
தெரிகிறாய் 

போதும் அதிகம் பேசாதே 
நிறுத்திக் கொள்
தியானத்திற்கு நேரமாகிவிட்டது 
வா விளையாடலாம் என்கிறாய் 

உடனே 
கண்களை மூடி
மௌனமாகிவிடுகிறேன்

14)ஆரம்ப சாயி பேரின்ப சாயி:

ஆரம்பிக்கட்டும் என்கிறாய் 

எங்கிருந்து? எதை?
எப்படி ? எதனால் ?
எவ்வாறு ? சுவாமி 

ஆரம்பத்தின் முடிவும் 
முடிவின் ஆரம்பமும் 
நீதானே இன்னும் 
நான்
புரியாமலா இருக்கிறேன்!

பொம்மலாட்டக்காரன்
உன் 
பொம்மை நான்
நீ 
அசைக்கும் போது 
அசைகிறேன்

இயக்கும் போது 
இயங்குகிறேன்

நீ நிறுத்திவிட்டால் 
நின்று விடுகிறேன்

இறைவா உன் 
இடுப்பில் அமர்ந்த 
குழந்தை நான் 

நீயே எனக்கு
உலகம் காட்டி 
உணவூட்டுகிறாய் 

எனக்கு இந்த 
உலகம் விட 
உன் விரல்களே  ருசிக்கின்றன 

முதுகைத் தட்டுகிறாய் 
மாயையின் சப்தங்கள் 
அப்படியே உன் 
தோள் சாய்ந்து 
தூங்கிப் போகிறேன் 

துயரக் கிள்ளல் புரிகிறாய்
நிலையாமை வலி தந்து
எழுப்பி விடுகிறாய் 

இறுக்கமாய் 
இறைவா உன் 
இடுப்பையே
 இறுகப்பிடிக்கிறேன்

உலகம் அழைக்கிறது
போ போய் விளையாடு 
என்கிறாய் 
அடி வாங்கி 
அழுது கொண்டு உன்னிடமே வருகிறேன் 
உன் பஜனையால் 
காயங்களை 
மாயங்கள் செய்கிறாய் 

போக்கிடம் நீ 
வேறெங்கு போவது 
கடலே இந்த மீனுக்கு 
பறக்கத் தெரியாது

வாழ்விடம் நீ 
வேறெங்கு வாழ்வது? 
மேகத்தை கூடாக்கி
முட்டை இடும் 
அறிவு இல்லா 
அன்னம் நான் 

பத்தான உன் கோட்பாடுகள் 
ஒவ்வொன்றாய்
திற... திற என்கிறாய்  
எதை வைத்து திறப்பது
சுவாமி உன் 
விரல்களே சாவிகள் 

எழுந்து வா என்கிறாய் 
சிரிப்பு வேறு 
என்ன சுவாமி 
எப்படி தவழ்வது என்பதே தெரியாதவன் 

நீயே கைத் தூக்கி
எழுப்பு 
விழாமல் நின்றுவிடுகிறேன் 
உன் இதயத்தில் 

தங்கத்தில் உனக்கு 
பாதச்சுவடுகள் ...
பூஜைகள் செய்துவிட்டு 
எடுத்துக் கொள் என்கிறாய்

எடுத்தால் அதை என் 
தலை மட்டுமே சுமக்கும்

எனக்குன் 
பாதங்களே வேண்டும் 
அப்போது தான் 
கலையில் உன்னை 
சுமக்க முடியும் 

என் பாதை எங்கும் 
உன் பாதச்சுவடுகளே
நீயே நடக்கிறாய்
என்னையும் சுமந்து கொண்டு....

15) தூத சாயி தெய்வ சாயி:

மனுக்கள் வைத்திருக்கிறாய் 
மாதவா 

நீ வைத்திருக்கும் மனுக்கள் 
உன் கரங்களில் கூடுகட்ட வந்த 
குல்வந்த் ஹால் 
காகிதப் புறாக்கள் 

கண்களில் வழியும் நீரை
மொழியாக்கி 
முன்னால் நீட்டுகிறோம்

நீ 
வாங்க வேண்டியவைகளை 
வாங்குகிறாய்

தாங்க வேண்டியவைகளை
நீ கைகளில் தாங்கி 
நாங்கள் 
தாங்க வேண்டியவைகளையும் 
தாங்கும் படி 

நீங்க வேண்டியவைகளை
நீங்கும் படி ...
தூங்க வேண்டியவைகளுக்குத் 
தூங்கும் படி ...
ஏங்க வேண்டியவைகளே
இல்லாத படி 

இறைவா 
இளைப்பாற 
சுருள்முடிப் பஞ்சணையில்
சுகமளிக்கிறாய் 

பிரபஞ்சம் ஆள்பவனே 
பாரங்களை
உன் மேல்தான் வைக்க முடியும்

புற்களிடம் சென்று போயா 
பாரங்களைத் தாங்கு
என
புலம்புவது?

உன்னைத் தான்
 கொஞ்சுவேன் 
உன்னிடம் தான் 
 கோபப்படுவேன் 
உன்னைத் தாலாட்டி 
உன் மடியிலேயே 
 விளையாடுவேன் 

காற்று 
மணலில் மோதினால்
இசையாகுமா ?

சுவாமி
என் புல்லாங்குழலும் நீதான்
பூக்களும் நீதான்
நாசியும் நீ தான் 

வேறெங்கு செல்லும் 
உனக்கான காற்று நான்

கர்மாவிடமிருந்து 
விவாகரத்து
வேண்டுமென்றே 
சுவாமி உன்னிடம் 
சிபாரிசு கடிதம் நீட்டுகிறோம் 

அதன் 
முன்ஜென்ம முகவரி தெரிந்த
உன்னால் மட்டுமே 
எங்கள் 
துயரத் தபால்களைச்
  சேர்க்க முடியும்

கடிதங்கள் 
மனுக்கள் 

நீ தரும் விபூதியோ 
விடுதலைப் பத்திரங்கள் 

கண்ணீரே வருகிறது 
கடவுள் உன்னை 
தபால்காரனாக்குகிறோம்

புன்னகையோடுப்
 பெற்றுக் கொண்டு 
அபயம் வேறு அளிக்கிறாய்

என்ன கருணை சுவாமி 
இது 

குறை தீர்ந்த பின் 
நன்றி சுவாமி என
ஒரு வார்த்தை எழுதி 
ஒப்படைத்திருக்கிறோமா 
உன்னிடம்...?

மன்னித்துவிடு எங்களை 
மழலைகள் நாங்கள் 

லவ் யு சுவாமி
ஐ நீட் யு ஆல்வேஸ் என 
நான் 
விளையாட்டு போக்கில் 
எழுதிய துண்டு சீட்டையும்
வாங்கிக் கொண்டு 
சிரித்தபடியே 
ஏற்றாயே ...

பெற்ற தாய்க்கும் இல்லா
பெருங்கருணை 
பிறவித் தாய் 
உன்னிடம் மட்டுமே 
பெற்று வருகிறேன் சுவாமி

எது வேண்டுமென்றாலும் 
உன்னிடமே வருவோம் 

துணி வேண்டுமென்று 
துச்சாதனிடமா 
கேட்க முடியும்? 

நான் வேண்டியதால் அல்ல 
நீ வேண்டுமென்றே தான் 
நீயாக வந்து என்னிடம் 
மாட்டிக் கொண்டாய்

நீ 
மாட்டிக் கொண்டதால் தானே
சுவாமி என்னை 
மாற்றிக் கொண்டிருக்கிறாய் 

மூச்சு விடுவதே 
நானுனக்கு 
எழுதிக் கொண்டிருக்கும் 
மனு தான் 

உள் மூச்சால் எழுதி 
வெளி மூச்சால் அனுப்புகிறேன் 

வெற்றுக் காகிதம் 
என்னை 
ஏற்றுக் கொள் 

நீ ஏற்றுக் கொண்டபின் 
என்னிடம் 
எழுத்துப் பிழைகள் இனி
ஏது?

16) விருக்ஷ சாயி விருபாக்ஷ சாயி


வேதம் தாங்கும் 
ஓலைகள் சுவடிகளாக 
முக்தி வந்தது 

இதோ 
ஓலைகள் தாங்கும் 
வேதம் 
சுவடுகளாக 
பக்தி தந்தது 

அப்பாவித்தனத்தை 
அப்பிக் கொண்டிருக்கும் 
அண்டமே 
அதெப்படி உன்னால் மட்டும் 
அப்படி இருந்து கொண்டே 
அகிலத்தை ஆட்டிப் படைக்க முடிகிறது !

இறைவனே 
இளநீராய் 
இறங்கி
காய்த்துக் குலுங்குவதான 
காட்சி 

இதைக்
காணக் காண
கண்ணீரும் 
இளநீராகி விடுகிறது 

சுவாமி பிறர்
தாகம் தணிக்காத போது
இளநீரும் 
கண்ணீராகி விடுகிறது 

நின்ற கோலம் உன் 
பாதம் பட்ட மணல் 
பக்குவமாகி 
பிறவி எடுத்து 
பக்தராகி இருக்கும் 

நீ 
எங்கே செல்லும் போது 
எதன் மேலுன்
கால் பட்டதோ சுவாமி 
பக்தனாக்கி என்னையுன்
பாதங்களிலேயே 
சுற்ற வைக்கிறாய் 

தூசி துடைக்கையில்
உன் விரல்பட்டு 
மனிதனாகி இருப்பேன் 

நீ விபூதி 
துடைத்துப் போடும் 
கைக்குட்டை நான் 

துடைக்கும் போது 
அந்தக் கைக்குட்டையையே 
விரல்களாக்கிக் கொண்டாய் 

உன் கருணையை 
 நினைத்து அழ
இரண்டு விழி மட்டும் 
எப்படிப் போதும் ? 

பிரபஞ்ச பகவன் 
உன் மேல்
பக்தி செலுத்த
ஒரே ஒரு இதயமா? 

ஐந்து விரல்கள் 
ஓரிதயம் 

ஆகாய உதடு தரமாட்டாயா 
பாற்கடலே உன்னைப் 
பருகி முடிக்க?

சாதும்மா சொல்லுன்
சாந்நித்யமன்றி 
எதை 
சாஸ்வதம் எனச் 
சாரச் சொல்கிறாய் ?

உன் 
பக்தர் சங்கம் தவிர 
எது பிறவிப் பயன் 
எனச் சேரச் சொல்கிறாய்?

அன்னையே நீ 
அரவணைத்த போது
தென்னை 
விண்ணைத் தீண்டி 
விமோச்சனம் அடைந்திருக்கும்

சூரபத்மன்
சிவனே நீ 
திண்ட வேண்டுமென்று 
மீண்டும் மரமாகி இருப்பான்

சித்தர்கள் 
கண்ணுக்கு தெரிவதில்லை
அவர்கள் 
மண்ணுக்கு வெளியே 
மரமாகி நிற்கிறார்கள் 

மரத்தடியில் சாய்ந்து
மகா ஞானம் பெற்றும்
திருப்தி இல்லா புத்தன் 
உனதடியில் சாய
இதோ மரமாகியிருக்கிறான்

ஒரு 
போதி 
தென்னையானது 
ஜோதியே உன்னிடம்
ஐக்கியமாக 

மாயை 
இருண்டதா ...
ஆதிசேடன் 
சுருண்டதா 

கருவெளியை அடைந்துவிட்டோமா ?
காட்டுக்குள் தொலைந்து 
காணாமல் போனோமா ?

என்னவெல்லாம் 
நினைத்திருக்கும்
உன் தலை தீண்டிய 
தென்னை ஓலைகள் 

கர்ம வேர் கால்களில் சிக்கியிருப்பதால் ...
நீயே 
இழுத்துப் பிடித்து 
இதம் அளிக்க அரவணைத்திருக்கிறாய்
இந்த தென்னையைப் போல்
என்னையும்...

17) கஜ சாயி நிஜ சாயி:

இந்த 
கடுகுக் கண்
கடலே 
உன்னை மட்டுமே 
ஊற்றி இருக்கிறது 

இந்த 
விசிறிக் காதுகள் 
உள்ளே இருந்து நீ 
பேசிக் கொண்டிருக்க 
உனக்காக மட்டுமே
விசிறிக் கொண்டிருக்கிறது 

இரு கை இருந்தும் 
இறைவா உனை 
வழிபடாத 
மனிதனுக்கு மத்தியில் 
ஒற்றைக் கையால் இது
ஓங்காரமிடுகிறது 

பிள்ளையார் 
அனுமனாய் உன் 
ஆலயத்தை அலங்கரிக்கிறான் 

ஆதிமூலமே என
அலற வேண்டிய 
அவசியமில்லை அதற்கு 

ஆகாயம் கிழித்து 
அபயம் அளிக்க
அவசரமுமில்லை உனக்கு 

ஆயிரம் வேலை என்பதால் 
அருகிலேயே 
அமர்த்திக் கொண்டாய்

அசைந்து வரும் 
அண்ணாமலையே உன் 
அசைவுக்கு அசையும் 
கஜ மலை இதுவே 
பக்திக்கு உதாரண 
நிஜ மலை 

கீதைப் புத்தகம்
இத்தனை 
கனமென்று நீ அதற்கு
பெயரிட்ட பிறகே 
புரிகிறது 

எது உன் 
அருகில் இருந்தாலும்
அதுவாய்ப் பிறந்திருக்கலாமோ எனப்
புலம்புகிறதென் மனசு

மானச பஜரே எனப்பாட 
நீ அமரப் போகிறாய் 
எனத் தெரிந்திருந்தால் 
அகலிகையே மீண்டும் 
கல்லாகி இருப்பாள் 
நான் 
ஆகியிருக்க மாட்டேனா
சுவாமி 

என் பக்தியின்
கனத்திற்கு 
யானையாகாவிட்டாலும் 
பூனையாகவாவது உன் 
பாதம் சுற்றி 
பாலைத் திருடி 
செல்லமாய் நீ திட்டும் 
சுவாரஸ்யங்களைப் 
பெற்றிருக்கக் கூடாதா 
சுவாமி 

என் படம் ஒன்றே உனக்கு 
போதுமென பலகாலம் 
இருக்கச் சொன்னாய் 

உன் கீதாவை மட்டும் 
ஒவ்வொரு நாளும் 
பெருக்கச் சொன்னாய் 

காட்டில் விட்டாலும் 
துணை தேடாது 
துணை நீ ஒருவனே என
தேடி வந்த அதன் 
பிரம்மச்சரியத்தாலா ! 

குஷியாக 
இருக்க வேண்டி
இறைவா உன்னிடம் வரும்
மனிதனைக் காட்டிலும் 

ரிஷியாக 
இருக்க வேண்டி வருவதற்கே 
சலுகை வழங்குகிறாய் தானே 
சொல் சுவாமி 

நீ 
இதனருகில் 
இதமாகும் போதெல்லாம் 

அங்குசமே எழுந்து
நடந்து 
நலம் விசாரிப்பதாகத் தோன்றும் 

சுவாமி நீ 
அதற்கு மட்டுமா 
அங்குசம் ! 

ஓர் நாள் அதன் 
உடல் வீழ்ந்தது 

சேவை முடித்து 
சுற்றிக் கொண்டிருந்த 
எனக்கும் 
பார்க்கின்ற பாக்கியம்

அதனருகே நீ 
அழுதாய்...
உன் 
கண்ணுக்கும் கைக்கும் 
தூது போனது கைக்குட்டை 

நீ சிந்திய 
அந்தத் துளிகள் 

அதற்காகத் தானே சுவாமி 
அத்தனை கடலையும் 
அத்தனை ஆண்டுகளாய் 
அது சேகரித்தது

நீ ஒரு துளி சிந்த
கடல் பக்தி தேவை 

மனிதனோ 
உன்னிடமிருந்து கடலையேப் பெற
ஒரே ஒரு துளியைச் சிந்துகிறான் 

அந்தத் துளிகள் 
கண்களிலிருந்து வந்தால் மட்டும்
அவன் யானையாகிவிடுகிறான்
நீ 
அப்போதே ஆதிமூலமாகிறாய்

18) விபூதி சாயி அனுபூதி சாயி:

சாணத்திலிருந்து 
விபூதி எடுப்பதை மட்டுமே 
அறிந்த மனிதன் 

நீ 
வானத்திலிருந்து 
விபூதி எடுக்கிறாய் என 
அறிந்தவுடன் 
கடவுளே உன் 
கால்களில் விழுகிறான் 

விபூதி எடுப்பதாலா நீ 
இறைவன் 
இல்லை எங்கள் 
வினைகளையும் சேர்த்து 
எடுப்பதாலேயே 
ஈசன் 

 கண்கட்டு வித்தையாம்
இதயத்தில் கண்ணற்றவர் 
இயம்புவர் 
அது 
கட்டவிழ்க்கப்பட்ட கர்மா 
எனும் 
உண்மை உணர்ந்து
கண்ணைத் திறந்தவர் 
கரைந்திருப்பர் 

குடத்திலிருந்து 
வெளிப்படும் விபூதி 
நீ வரவழைப்பதால் அது
விடத்திலிருந்து வெளிப்படும் 
நாக ரத்தினமாய் 
ஒளிர்கிறது 

எந்த ஜென்மத்தில்
எந்த ரிஷியோ 
உன் லீலைகளை
ஒன்று விடாமல் கண்டு
ஒன்றிவிட்டு 
ஓங்காரமே உனைச்
சுமந்திருக்கிறார் 

இதயத்தில் வளர்ந்திருந்தது 
இறங்கி 
வயிற்றில் வளர்ந்திருக்கிறது 

கஸ்தூரி 
இரண்டு ஜென்மத்திலும் 
கர்ப்பப்பையோடு தான்
பிறந்திருக்கிறார்

ஷீரடி அவதாரத்தில் 
நீரால் நீ குளித்தாயா
நிதமும் தெரியாது 

சுவாமி 
உன்னை நீயே 
நீறால்
நீராட்டிக் கொண்டிருக்கிறாய் 

முழங்கை முழுக்க விபூதி 

உன் கை 
வெறும் கை அல்ல 
வாழ்க்கை என 
விளங்கி இருக்கிறது 

நீ வசிக்கும் இதயம் 
கிரகம் அல்ல
அனுக்கிரகம்  என 
அனுபவித்திருக்கிறது 

அதைப்போல் 
உன் கைகளிலேயே 
இருக்க வேண்டுமென்றால் 
சாம்பலாகக் கூட எனக்கு
சம்மதம் சுவாமி 

சாம்பலலிருந்து 
எழுந்து வருகிறது 
மகிமை எனும் 
ஃபீனிக்ஸ் பறவை 

பிணிக்கு மருந்து 
பிறவிக்கு சஞ்சீவி 
ஜென்மத்திற்கு சாபல்யம்
தவத்திற்கு சாயுஜ்யம்

நெற்றியில் எழுதப்பட்ட
கிறுக்கல்களை அழிக்கும்
பஸ்ப அழிப்பான் 

உள்ளப் பிழைகளை 
இல்லை என்றாக்கும்
வெள்ளை இழைகள்

உன் 
கர்மாவை 
எரித்துக் கொண்டிருக்கிறேன் 
பார் என 
உள்ளங்கை நீட்டுகிறாய் 

ஈசன் நீ எரிக்கிறாய்
தியான இடுகாட்டிலும் 
சுவாமி உன் மணம்

கடவுள் துகள் இது
விஞ்ஞானிகளுக்கு 
விளங்கும் நேரத்திற்கு முன்பே
உன் 
பக்தரிதை என்றோ 
புரிந்து கொண்டனர் 

விபூதியாகிறேன் சுவாமி 

நீ 
விபூதி தருவதை விட 
உன் கையில் 
விபூதியாவதே சுகம் 

 சாம்பலை 
கங்கையிடம் தந்து
உன்னிடம் அனுப்புவோம் 

சுவாமி நீ 
சாம்பலை 
எங்களிடம் தந்து 
கங்கையை அனுப்புகிறாய் 

காசிக்குள் நடக்கும் அது 
எங்கள் 
நாசிக்குள்ளும் நடக்கிறது 

உன்னருகே நான் அமர்ந்திருந்திதைக் 
கண்டிருந்தால்

இரண்டு அபிஷேகம் 
இங்கேயே நடந்திருக்கும்

ஒன்று நீறால் 
இன்னொன்று நீரால் 

அதிருத்ர யாக 
பூர்ணாஹுதியிலும் 
அப்படித் தானே 
நடந்தது 

நீ நெருப்பில் இட்டாய்
நான் நீரில் இட்டேன்

உன் இதய யாகம்
எங்கள் கண்ணீரை மட்டுமே 
நெய்யாக ஏற்கிறது

இந்தக் 
கண்ணீர் ஒன்றுதான் 
சுவாமி 
பக்தி விளைச்சலுக்கான
ஈரப்பதம் 
மழையின் இதம் 

குடம் கலசமானது 
விபூதியைச் சுமந்து 

இந்த மண் குடமும்
அனுபூதியைச் சுமக்க 
காத்திருக்கிறது 

தாங்கிப் பிடிக்க 
துணை நீ இன்றி 
யாருமில்லை 

விபூதிப் பொழிதல் போல் 
அனுபூதி பொழிய வேண்டும் 
எப்போது என்னுள்ளே நீ 
கரம் விட்டு அசைப்பாய் ?

வரம் யாருக்கு வேண்டும்
உன் 
உற்ற கரம் தாங்குதல் விட 
பெற்ற வரம் 
பெரிதாய் என்ன செய்யும்? 

வா 
வந்தென் 
குடத்துக்குள் கைவிடு 

எண்ணத்தைச் சுமந்து 
அழுக்கேறிவிட்டது 
வெற்றுக் குடமாக்கி 
வெற்றிக் கரமிடு 

பொழியும் அனுபூதி 
பகவானே உனக்கே 
அபிஷேகமாகட்டும் 

பூர்ணாபிஷேகம்

19) ஜப தவ சாயி தவசிவ சாயி:

உலகமே உன் 
பெயர் சொல்லி அழைக்க
இறைவா நீ 
யாரை அழைக்கிறாய் ? 

கடவுளே 
உனக்கான ஜபம் 
உத்தமர் புரிய 
கருணையே 
யாருக்கான ஜபம் 
நீ புரிகிறாய் ? 

அந்த காயத்ரியே 
உனக்கான 
காயத்ரியை ஜபித்திருக்க 

பிரம்மா உன் 
பாதம் கழுவி 
அந்த நீர் தெளித்து 
அகிலம் படைத்திருக்க

ருத்ரனுன் 
சுவாசத்தின் சூலமெடுத்து 
சம்ஹாரம் புரிந்திருக்க

விஷ்ணுவுன்
சுருள்முடி மேல் 
சயனத்தை அனுபவிக்க

அவர்களை அழைத்து ஐந்தொழிலை யாரும் 
தொந்தரவு செய்யாதீர்கள் என்றா 

ஐந்தொழிலை ஆட்டுவிக்கும் 
ஐயனே நீயே எங்களுக்கு 
ஜபம் கற்றுத் தரவா 
இப்படி
அமர்ந்திருக்கிறாய்! 

பரிபூரணமே இந்த 
பிரபஞ்சமே 
உனை ஜபித்து உய்வதற்குத் தான் 

ஜபத்தை முன்னெடுக்க 
நீயே ஜபிக்கிறாயா !
லயமே நீ ஆழ்ந்திருக்க
லயமே நீ லயிக்கிறாயா!

உன் ஐயப்பன் 
அமர்ந்த புலியா ! 
அதன் மேலுள்ள 
வரி எல்லாம் 
வாசிக்கிறேன் 
உன் புகழை அல்லவா 
எழுதியிருக்கிறது

என் தோல் எதற்கும் உபயோகம் இல்லை என்றா 
புலித்தோலில் அமர்ந்திருக்கிறாய்
பகவானே 

சில நேரம் நாய் 
சில நேரம் நரி 
பல நேரம் 
மனிதன் மனிதனாக 
இல்லை என்றா 

புலி புலியாகவே
இருக்கிறதென்றா 
இல்லை
வன்புலி எனும் 
மனதின் மேலா 

புலியின் 
வெளியே அமர்ந்து 
தெரிகின்ற நீ
மனிதனின் 
உள்ளே அமர்ந்து 
ஏன் சுவாமி ஒளிந்திருக்கிறாய்

நீ காட்டும் ஜபம் 
படகுகளுக்கானது மட்டுமா இல்லை
அலைகளையும் சேர்த்து
கரை சேர்க்கும் 
கலங்கரை விளக்காகவே அது
ஆன்மாவில் ஒளிர்கிறது

ரிஷிகளுக்குள் நீதானே 
சுவாமி 
தவமாகிறாய் 

ஜீவராசிகளுக்குள் நீதானே 
சுவாமி 
சிவமாகிறாய் 

காற்றுக்குள்ளும் 
நீ தானே சுவாமி 
ஜபமாகிறாய்

தாமரையே உன் 
தாமரை ஆசனத்தில் 
இதயத் தாமரை அல்லவா 
குளத்தை விட்டு உன் 
ஜபத்தில் தவழ்கிறது 

மூச்சற்ற கணத்தில் 
சூட்சுமத்தில் 
ஓம் ஜபித்து

சாயீஷ்வராய வித்மஹே 
சத்ய தேவாய தீமஹி என
உள்மூச்செடுத்து 

தந்ந சர்வ ப்ரசோதயாத் 
என
வெளி மூச்சு விட்டு

உனக்கான ஜபம் 
உயிரின் ஒளிக்கு 
உற்சவம் நடத்துகிறது 

நீ 
பிரபஞ்சத்திற்கு கூட 
ஓம் என்ற 
ஒற்றை ஜபத்தையே 
மந்திர தீட்சை அளித்திருக்க 

உன் பக்தருக்குத்தானே 
சுவாமி
சாயி காயத்ரியை 
வரமளித்திருக்கிறாய் 

ஜபிக்காமல் இருந்தால் 
வாழ்க்கை 
சபிக்காமல் இருக்குமா 

இந்த
 உடம்பு வாகனத்தில்
ஜபமே சிறகு தருகிறது 
ஜபிக்க ஜபிக்க 
சுவாமி உன் 
சாந்நித்யம் வருகிறது

இரண்டு மாலையில் 
எந்த மாலை புண்ணியம் செய்திருக்கிறதோ

உன்
கையிலிருப்பதா 
கழுத்திலிருப்பதா 

அஃறிணை என
எதுவுமில்லை இங்கே

நீ படைத்த எல்லாமே 
உயர்திணை தானே 
சுவாமி 

இந்த அஃறிணைக்கும் 
இறைவா உன் 
ஜபவரம் தந்து 
உயர்திணையாக்கு 

சின்மயனே 
நீ வைத்திருக்கும் 
சின்முத்ரையில் தான் 
அண்டமே ஒரு கட்டுக்குள்
அடங்கி இருக்கிறது

வீண் பேச்சில் 
விளையும் தேவையற்ற
வினையும் உன்னை
ஜபிக்க ஜபிக்க 
கரைகிறதே சுவாமி 

மனதோடு 
ஜபிக்கச் சொல்கிறாய்
மனமே இல்லாமல் போக
ஜபிக்கச் சொல்கிறாய்

திரியில் ஏற்றிய 
பொறி 
திரியையும் பொறியாக்கி
தீர்த்துவிடுவது போல்

 கோடிகளின் இலக்கில் 
உன் நூற்றி எட்டும் 
ஆயிரத்தெட்டும் காத்திருக்க 

காகிதங்களில்
கோட்டை கட்டும் மும்முரத்தில் உன் 
கருணையை 
கோட்டை விடுகிறார்களே சுவாமி

நீ 
நாவை அசைவிப்பதும் 
ஒரு 
பூவை அசைவிப்பதும் 
பல 
வாழ்வை அசைவிப்பதும் 
ஜபிக்கத் தானே சுவாமி 

ஜபமே வேலையானதும்
வேலையே ஜபமாகிறது

ஒன்பது துளையின் 
புல்லாங்குழல்
காற்றால் மூச்சாகிறது 
அது 
ஜபத்தால் தானே சுவாமி
இசையாகிறது

பிண்டம் 
அண்டமாவது
அண்ட ஜபித்தில் 
பிண்ட ஜபம் 
பிணையும் போதே...

சுவாமி 
ஜபத்தில் 
நானுன் பேர் அழைக்கிறேன்

தியானத்தில் 
நீயென் பேர் அழைக்கிறாய்

சுவாமி வா 
நீ என்னுள்ளே தியானமாகு
நான் உன்னுள்ளே 
ஜபமாகி விடுகிறேன்! 

20) ஆகாய சாயி ஆவாகன சாயி:

அங்கே என்ன இருக்கிறது சுவாமி
ஆகாயமா 

ஆகாயமே 
நீ இங்கே இருக்க 
ஆகாயத்தில் என்ன இருக்கிறது சுவாமி

மீண்டும் நீ 
மண்ணில் இறங்கி 
தரிசனம் தருவாய்
எனக் காத்திருக்கிறார்கள் 

நீ ஏறினால் தானே
இறங்கி வர முடியும் 

இறங்கியது இறங்கியதாய் 
நீ 
இரங்கியபடியே தான் எப்போதும்
இருக்கிறாய் சுவாமி 

இவர்களுக்குக் தான் 
பார்க்க முடிவதில்லை 

பார்க்கும் திசை 
பார்த்தால் தானே 
பார்க்க முடியும் 

உள் நோக்கிப் பார்ப்பதை 
ஓரம் கட்டிவிட்டு 
வெளி நோக்கிப் பார்ப்பதிலேயே 
வெறிச்சோடி போகிறது
விழிகள் 

நீ 
வெளி நோக்கி நடந்ததே 
உள் நோக்கிய பயணத்திற்கான 
உள்நோக்கம் தானே 

தரிசன அதிர்வலைகளில் 
கண்களை மூடிக் 
கலந்திருக்கிறோமே

உனக்கு 
ஆரத்தி எடுத்தாலும் 
தன்னிச்சையாய் கண்மூடி
தவத்திலிருந்தோமே 

பரவசம் மேலிட 
பார்வைகளை 
உள்ளத்திற்குள் 
உறையவிட்டோமே 

நீ 
வெளியே நடந்த போதெல்லாம் 
உள்ளே பார்த்துவிட்டு 
நீ 
உள்ளே நடந்து கொண்டிருக்கையில் 
வெளியே பார்த்து
வா வா என 
வேண்டுகிறோமே 

நீ எங்கிருந்து வந்தாயோ
அதன் வடிவமாய் 
அகமிருக்க 
நீ அங்கே சென்றிருக்கிறாய்

உற்று நோக்குவது 
உள் என்பதை 
சற்று கொடு 
உற்று நோக்குதலை 
கற்றுக் கொடு 
சுவாமி 
உற்று நோக்கப் 
பற்று கொடு 
உற்று நோக்குவதில்
உன்னையே 
உள்ளத்திற்குப் 
பெற்றுக் கொடு 

மேல் நோக்கியதே வாழ்க்கை
என்கிறாய் 
கீழ் நோக்கிய 
வழி தவறல்களை 
உன் இதே விரல் தானே
பிடித்திழுத்து 
நெறி செய்ய வேண்டும் 

எல்லா மனமும் 
எதிர்பார்ப்பால் 
அழுக்காயிருக்கிறது 

பள்ளத்தில் இருப்பவரை
உள்ளத்தில் 
அழைத்து வந்து நீயே 
சரி செய்ய வேண்டும் 

சைதன்ய ஜோதியே 
உன் திரிகள் 
உலக ஈரத்தில் 
ஊறிப்போயிருக்கிறது 
நீயே 
நிலையாமை வெய்யிலில் 
உலர்த்தி எடுத்து 
ஆன்ம விளக்கில் 
பொறி செய்ய வேண்டும் 

ஐம்பொறிகளால் 
முயற்சிக்கிறோம் 
மலர்த்துவாயா ?

ஐந்து பொறி தந்து 
இது தான் 
பொறி வைத்து பிடிப்பதா ? சுவாமி

ஆறாம் பொறி ஏற்று
ஆன்மாவுக்கு நீ 
தெரிந்தாக வேண்டும் 

விழி திறந்தாலும் 
உள்ளே இருந்து நீ 
விரிந்தாக வேண்டும்

சிற்றின்பத்தில்
சிறகு சிக்கி இருக்கிறது 
உன் 
குல்வந்த் ஹால் 
வெண்புறாக்கள் 
பரமானந்தத்தில் 
பறந்தாக வேண்டும் 

குரல் காட்டி நீ 
மீட்டாத கீதையா ! 
விரல் காட்டி நீ 
மீட்காத பாதையா! 

சுவாமி 
மேலே என்ன இருந்தாலென்ன 
இதோ நீயே தெரிகிறாய்
இந்த விரல் கொடு 

இதயத்தை 
உழுது கொள்கிறேன் 
இதிகாசத்தை 
எழுதிக் கொள்கிறேன் 

விரல் பிடித்து 
வேடிக்கைப் பார்க்கும் 
உன் குழந்தையாய் 
திருவிழாவில் 
நடந்து போகிறேன் 

எதிரே எது நடப்பினும் 
தாயே நீ மட்டும் போதுமென
உனைப் பிடித்துக் 
கடந்து போகிறேன் 

சந்நிதானத்திற்குள் 
கலந்து போக  
நடப்பவர்கள் ஏன் 
விழிகள் அலைபாய
திருவிழாக்களில் 
தொலைந்து போக வேண்டும்?

இந்த விரல் தானே 
நெற்றிக் கண்ணுக்கான 
சாவி 
சுவாமி வந்து
திறக்க மாட்டாயா 

ஈஸ்வரன்னைக்கும் 
கஸ்தூரிக்கும் 
கர்ப்பத்தில் இறங்கியதாய்

நெற்றி கர்ப்பத்தில் 
பிறக்க மாட்டாயா 

பாரத்தை 
தலையில் வை என
திருவிரல் காட்டுகிறாய் 

ஆ பாரம் என்பதெல்லாம்
அபாரம் ஆகிவிடுகிறது
நீ சுமப்பதால்

பாரம் வைக்க வேண்டும் என்றால் 
என் எண்பது கிலோவையும் வைக்க வேண்டும் 

கடல் எடை தாங்கும் 
கருணை உனக்கு 
உடல் எடையா கனக்கும்!

நீ 
துளசிக்கே தராசு தட்டை 
இறக்கியவன்
பக்திக்குத் தான் 
நியாய முள்ளை அசைக்கிறாய்

இதோ அள்ளி வைத்துவிடுகிறேன் 
கனமே இல்லை 
வைத்து விட்டால் 
கணமே இல்லை 

நீ என்ன எடை ?
அதுவே என் 
ஆன்மாவுக்கான எடை!

21) பூஜா சாயி பூஜித சாயி:

ஜோதியே நீ 
ஏற்றுகிற போது
சூரியன் தன் விடியலை
கிழக்கில் இல்லாமல் 
விளக்கில் வந்து  
வெளிச்சம் காண்கிறது 

நறுமணமே நீ
பூக்களைத் தொடுகிறபோது
தனக்கு வாசனை வந்துவிட்டதாக அது புல்லரித்துப் போகிறது

ஊதிவர்த்தி 
நீ எப்போது தொடுவாய்
என
ஏங்கியிருக்கிறது

ஏற்கனவே மெலிந்திருப்பதை 
எதற்கு மேலும் 
மெலிய வைக்கிறாய்
சுவாமி? 

பச்சை வாழைப்பழத்திற்கு
பசலை நோய்
நீ நெய்வேத்யம் செய்தபிறகே 
பிரசாந்தியாகும்

இவை நான்குமே 
குழம்பிப் போய் உன்
கைகளில் முழிக்கிறது 

உனக்கான 
பூஜைக்குரியதை நீ 
 யாருக்கு உரியதாக்குகிறாய் என்று ?

பூர்வ அவதாரத்திற்கு 
நீ செய்யும் 
பூஜைகள் போதாது என
உன் அவதாரத்திற்கான
பூஜையை 
பக்தர் வந்தே 
பூர்த்தி செய்ய வேண்டும்

புண்ணியம் 
செய்தவைகளைப் 
பூக்களாக்கி விட்டு 
எங்களை 
மனிதராக்கிவிட்டாய் 

அதிகாலை தோறும் 
ஆனந்தக் கண்ணீரை 
அதற்குத் தானே தருகிறாய் 

பரவசப் பனி ஈரம் 
விழி ஈரங்களை விட 
விலைமதிப்பில்லாதவை

பூப்பதைச்  செடிகளுக்கு வைத்து விட்டு
புன்னகையை எங்களுக்கு வைத்தாய் 

புன்னகைத்தால் 
பொற்காசுகள் தொலையாது எனப் 
புரியவை சுவாமி 

அகத்தில் இறுக்கத்தோடும்
முகத்தில் சுறுக்கத்தோடுமே
முடிந்து போகிறது 
பாதி பேர் வாழ்க்கை 

மீதி பேர் 
கோபப்பட்டே 
சிவபூஜையில் கரடியாகின்றனர் 

துர்வாசரை விட 
நாங்களுன் மேல் 
விஸ்வாசராய் 
இருக்க வை போதும்

எங்கள் புன்னகையை 
நீ பூக்களாய் ஏற்கிறாய்

நிம்மதிப் பெருமூச்சை 
ஊதுவர்த்தியாய் 
உவக்கிறாய் 

கண்களின் வெளிச்சத்தில் 
கற்பூரம் பார்க்கிறாய்

சிந்தனைத் தெளிவில்
அடிநிழல் அண்டாத 
விளக்காய் உன் 
முடி நிழலில் எங்களை 
பிரகாசமாக்குகிறாய் 

இப்படி நீயே உன்னை
பூஜிப்பது 
அத்வைதத்தின் 
செயல்முறை விளக்கம் 

இப்படித்தான் 
பூஜிக்க வேண்டும் 
என நீ செய்வது
துவைதத்தின் 
தத்துவ முழக்கம் 

சுவாமி நீ 
பக்தர் நாங்கள் 
மந்திரப் பாக்கள் 
விசிஷ்டாத்வைதத்தின் 
பாசுரச் சுருக்கம் 

கிரகங்களை 
அலங்கரிப்பதிலும் 
அகங்களில் 
அவதரிப்பதிலும் 
யுகங்களை
அனுபவிப்பதிலும்

 சுவாமி நீ 
கடந்து மட்டுமா 
உள்ளிருக்கும் கடவுள்

பரந்து விரிந்து 
உறைந்திருந்து பக்தியில்
உருகி ஊற்றெடுக்கும் 
இறைவன்

படையல் சமர்ப்பித்து 
பகவானே என்கிறோம் 
நீ 
படைப்பது தானே
சுவாமி
 எல்லாம் 

எங்களுடையது எது? 

பூஜைகள் நடத்தி 
பஜனைகள் புரிகிறோம்
நீ 
படைப்பது தானே சுவாமி
எதுவும் 

எங்களுக்குரியது எது ?

பக்தராய் 
பாடகராய் 
கவிஞராய்
தொண்டராய் 
நிர்வாகியாய் 

நீ படைப்பது தானே சுவாமி
எதிலும்

எங்களுக்கானது எது? 

நாங்கள் என்பதே 
இல்லையே சுவாமி 

நீ கை அசைத்த போது
வந்த நாங்கள் தான் 
நீ கை அசைத்து 
தருவதை எல்லாம் 
கண் அசைக்காது 
வாங்கிக் கொள்கிறோம்

உன் 
போதம் உண்டால் 
வருகிற ஜீரணம் 
பேதம் உண்டால் 
எப்படி வரும்? 

உன் 
பாதம் பிடித்திருப்பதும்
வேதம் புரிந்திருப்பதும் 
ஒன்று தானே‌ சுவாமி 

வேதம் படிக்க 
பல்லாண்டுகள் தேவை 
உன் 
பாதம் பிடிக்க 
சரணாகதியே போதும் 

ஏன் மயிலேறி 
சுற்றி வரவேண்டும் 
சிவசக்தியே 
உனையேச் சுற்றி வந்துவிட்டு

நீ தரும் பழத்தை 
உனக்கே 
நெய்வேத்யமாக்கி விடுகிறேன் 

சுவாமியே 
என் செல்லமே 
உனையே 
பூஜித்து பூஜித்து 
பூஜையாகிவிடுகிறேன் 

அதன் பிறகு
பொழுதெல்லாம் ஒளிரும்
புருவ மத்தியின்
ஆரத்தியில்
ஓம் ஜெய் ஜெகதீச ஹரே

22) ஏக சாயி அநேக சாயி:

இப்படித் தான் நீ 
எங்களைப் பார்க்கிறாய் 
சுவாமி 

உற்று நீ 
எங்களின் கண்களைப் 
பார்க்கும் போது 
நீயே தெரிகிறாய் 

உருவம் எடுத்து நீ 
எழுந்து வந்ததே 
உருவம் கடந்து எங்களை 
எழுப்பி விடத் தான் 

நீயே உன்னை 
அன்பு செய்கிறாய் 
எங்களை நேசிக்கிறாய்
என
நினைத்துக் கொள்கிறோம் 

நீயே உன்னிடம் 
பேசிக் கொள்கிறாய் 
உன்னோடு சம்பாஷனை ஆனதெனப்
பூரித்துப் போகிறோம் 

நீயே உன்னோடு விளையாடுகிறாய்
லீலைகள் என
லயத்தில் ஆழ்கிறோம் 

நீ படைத்ததை 
நீயே கொடுக்கிறாய்
நீ கொடுத்ததை 
நீயே எடுக்கிறாய் 

ஐந்தொழிலுக்கு 
அப்பாலும் நீ 
உனக்குள் வாழ்கிறாய் 
நாங்கள் தியானிப்பதாக
நினைத்துக் கொள்கிறோம்

தனக்காகவே நிலா 
ஒளிர்வதாய் 
தனக்காகவே மலர் 
மணப்பதாய் 
தனக்காகவே நதி 
நடப்பதாய் 
தனக்காகவே அலை 
குதிப்பதாய் 

நீ 
உனக்காகவே உன்னைப் 
படைத்துக் கொள்கிறாய்

எங்களுக்குத் தான்
நீ வேறாக 
நாங்கள் வேறாக 
தெரிந்து கொண்டிருக்கிறோம் 

சுவாமி 
பிரபஞ்சத்தைக் கடந்தும்
நீ 
ஊடுறுவுகிறாய்

உன் வேகத்தில் விரிய பிரபஞ்சத்திற்குத் தான்
விஸ்வரூபம் எடுக்கத் 
தெரிவதில்லை 

நீ விழிக்கிறாய்
வெளிச்சம் என்கிறோம் 
நீ நடக்கிறாய்
நொடிகள் என்கிறோம் 

நீ அசைகிறாய்
சுவாசித்துக் கொள்கிறோம் 
நீ உண்கிறாய் 
உயிர் வாழ்கிறோம் 

நீ சிரிக்கிறாய் 
உதடுகளால் ஸ்வரங்களை எழுப்புகிறோம் 

நீ கோபப்படுகிறாய் 
இயற்கை சீற்றமென 
பெயர் வைக்கிறோம் 

நீ உன் 
புருவ மத்தியில் 
கை வைக்கிறாய்
எங்களின் 
வாழ்க்கை நடக்கிறது 

விபூதி வரவழைக்கும் போது
ஆசைகளின் சாம்பலை
அடையாளம் காட்டுகிறாய்

உயிரின் ஒளியை 
உருண்டை திரட்டி 
அதரம் வழியே 
ஆவாஹனம் செய்கிறாய்

லிங்கோத்பவம் என்கிறோம் 

எனக்குள்ளே தான் 
எல்லாம் என்பதை 
எடுத்துக் காட்டுகிறாய்

எங்களுக்குத் தான் 
புரிவதில்லை 

நீ கனவு காணும் போது 
எங்களைப் படைக்கிறாய்
நாங்கள் கனவு காண்பதாய் நினைக்கும் போதும் 
நீயே எங்களைச் சுமக்கிறாய் 

உன் கனவு கலையும் போது
உன்னுடனேயே 
கடைசியில் 
கலந்து விடுகிறோம் 

கடவுளே நீ காணும் கனவே 
இந்த உலகமும் 
எங்கள் வாழ்க்கையும்

அடுத்தது என்னவென்பதை
அறிவதால் 
அனைத்திற்கும் நீ 
அமைதியாகவே இருக்கிறாய் 

அடுத்தது என்பதை 
படைப்பதும் நீ 
கடந்தது என்பதை 
மறைப்பதும் நீ 

உன் உடம்புக்குள் 
வெறும் 
வெட்ட வெளியே என்பதை
எவரும் அறியவில்லை 

தெரிவதற்காக
தோலின் மேல் 
பேரொளி அணிந்து 
புறப்பட்டு வந்தாய் 

வெட்ட வெளியை 
வேடிக்கைப் பார்க்க 
அதுவும் உன் உருவம் 

விளக்கிலிருந்து 
வெளிப்படும் ஒளிக்கும் 
உன் 
உடம்பிலிருந்து 
வெளிப்படும் ஒளிக்கும் 
வித்தியாசமே இல்லை 

இடத்தில் இருந்து நீ 
இயங்குவதற்கும் 
படத்தில் இருந்து நீ 
இயங்குவதற்கும் 
பாகுபாடே இல்லை 

எங்களின் மாயை தான் 
உனக்கான சுவாரஸ்யம் 
எங்களின் மாய நீக்கம் தான்
உனக்கான பெருமிதம் 
எங்களின் பக்குவம் தான் 
உனக்கான வெளிப்பாடு 
எங்களின் பற்றின்மை தான் 
உனக்கான சாப்பாடு 
எங்களின் உற்று நோக்கல் தான் 
உனக்கான புறப்பாடு 

காரணம் நீயே 
உனக்குள் 
நடத்திக் கொள்வதை எல்லாம் 
நாங்கள் நடத்திக் கொள்வதாய் நம்ப வைக்கிறாய் 

பின்னலை இழுத்து 
பின்னால் ஒளியும் குழந்தையாய் ...
பின்னாலிருந்து 
கண்களை மூடி 
நான் யார் எனக் கேட்கும் 
குறும்பனாய் ...

நிகழ்வுகள் நீ
நிகழ்த்துவதெல்லாம்

இலையிலிருந்து 
விழுகின்ற துளிகள் 
மழையால் என்பதை 
மனம் அறிவதற்குள்
மேகம் மறைவதைப் போல் 

நீயே எழுதி 
நான் எழுதியாய் ஊரை 
நம்ப வைக்கும் உன் 
நிதர்சன நாடகம் 

அதை
நம்பாமல் இருக்க முடியுமா !

நீ 
அமாவாசை வரும் முன்பே 
தர்ப்பணம் செய்து 
நாடகமாடியவன் தானே !

கவிஞர் வைரபாரதி✍🏻

23) சங்கல்ப சாயி சங்கம சாயி:

ஆழமாய் ஏதோ ஒன்றை
சுவாமி நீ
சங்கல்பிக்கிறாய்

எந்த பிரபஞ்சத்தின் 
எந்த கிரகங்களின் 
எந்த பூமியின் 
எந்த ஜீவராசிக்கு 
என்ன பிரச்சனையோ ! 

உன் மனிதர் 
நாங்களே சிந்திக்கிறோம்
சுவாமி நீ 
சங்கல்பிக்க மட்டுமே
செய்கிறாய் 

சங்கல்பத்தின் அடிவாரத்திலிருந்து தான் 
சிந்தனையின் பாதை 
ஆரம்பிக்கிறது 

சிந்தனை 
எங்களைக் கைவிடும் போதெல்லாம் 
சுவாமி உன் 
சங்கல்பமே 
கைதூக்கிவிடுகிறது 

கனவுலகின் மேகங்கள் 
சிந்தனைகள் 
மனிதனே அதை
கல்வெட்டாய்க் கருதுகிறான் 

செயல் குழந்தையின் 
சிந்தனைத் தாய் 
செவிலித் தாயாகவே இருக்கிறாள் 

பூக்கள் மலர்வதற்காக 
நீ கொடுத்தது 
குப்பைகளைச் சேகரிப்பதற்கே 
பயன்படுத்துகிறான் 
மூளையை மனிதன் 

சிந்திக்காமல் ஏது 
செயல்பாடென அவன் கேட்கிறான்
செயலாற்றிய பின்னரும் 
சிந்தனை முடிகிறதா என நீ
கேட்கிறாய் 

சிந்தனையில் 
கள்ளச் சாவிகள் இட்டே
ஆசைகள் நுழைகின்றன

சிந்தனைக்கான உணவையும் 
ஆசைகளே தின்று 
பேராசையாய்ப் 
பெருத்துப் போகின்றன

சிந்தனை தனக்கென்று 
இரண்டு கடிகாரம் வைத்திருக்கிறது 

ஒன்றின் நொடிமுள்
பின்னோக்கிச் சுற்றுகிறது 

இன்னொன்றில் 
நொடி முள்ளே இல்லை
அது
இரக்கைப் பொருத்திப் பறக்கிறது

சிந்தனைக்கும் 
நிகழ்காலத்திற்கும்
என்ன சம்மந்தம் 
எனக் கேட்கிறாய் சுவாமி 

சிந்தனையை 
முன் நோக்கி திருப்பும்வரை
அறிவுக்கு அமைதி இல்லை 

அதை 
உன் நோக்கி 
திருப்பும் போதே 
இன்றில் வாழ்கிறது 
இதயம் 

இன்றில் வாழ்வதே 
குன்றில் வாழ்வது 
இந்நொடிக்கான 
இறைவன் நீ 

உன் சங்கல்பமே
உறுதியாய் நிறைவேறுகிறது 
எங்களின் திட்டமெல்லாம் 
தூசியாய் உன் 
படத்தில் படிகிறது 

மனிதன் 
சிந்திக்கிறான் 
பக்தன் 
பிரார்த்திக்கிறான் 
சரணாகதி அடைந்தவன் 
உன் சங்கல்பத்தின் முன்பாக 
மௌனமாய் அமர்ந்துவிடுகிறான் 

சிந்தனையின் 
கூட்ட நெரிசலில்
நீ நடமாடுவது 
தெரிவதில்லை 

யோசனை போடும் 
கூப்பாட்டில் 
உன் கீதம் 
காதுகளில் விழுவதில்லை 

தூங்குவதில் 
அருகமர்ந்து நீ எங்கள் 
தலை கோதுவதெல்லாம் 
தலைக்கேறுவதில்லை 

அலைகளின் அலைச்சலில் 
ஆழ்கடல் தெரியாததாய்

பதட்டத்தில் 
பகவானே நீ 
பக்கத்தில் வந்தாலும் 

எதையோ தேடிப்போகும் 
எங்களின் பயணம் 
நிற்பதில்லை 

எண்ணங்களின் 
கிண்ணங்களில்
நீ தரும் 
பாலைப் பருகாமல் 
உலகாயதக் கள்ளுக்கே 
உஞ்சவிருத்தி எடுத்து 
ஊரூராய் அலைகிறோம்

கூட்டிலிருக்கையில் 
ஆகாயச் சிந்தனையும் 
ஆகாயப் பறத்தலில் 
கூட்டின் சிந்தனையும் 
கூடு விட்டு கூடு பாய்கிறது

உன் சங்கல்பமே 
உள்ளத்தை மாற்றி அமைக்கும் 
உன் சாந்நித்யமே 
கள்ளத்தைக் கரைத்தெடுக்கும் 
உன் பஜனையே 
துள்ளலை ஆசுவாசப்படுத்தும் 
உன் சேவையே 
நல்லதை நிகழ்த்தும் 

நிந்தனையே 
சிந்தனையாகிற போது

கந்தனைப் பிறப்பித்த
கடவுளே உனக்கான 
வந்தனை 
எந்தனை 
ஏகத்துவப்படுத்தும் 

நெருப்போடு போகிறவை
நெருப்பாகிறது 

உனையே 
நினைக்கும் படிச் செய் 

நினைவுகளின் 
நதிமூலம் 
கடலே உன்னோடு 
கலக்கட்டும் 

சங்கமமாக வேண்டும் 
சுவாமி உன்னோடு 

சங்கல்பித்துக் கொண்டே இரு

24) தாள சாயி ஜால சாயி:

தாளங்களின் காதுகளைத் 
தாங்கிப் பிடித்திருக்கிறாய் 

நீ தாங்கிப் பிடித்திருப்பதால் சுவாமி 
காதுகளே நாக்குகளாய்
மாறிவிடுகின்றன

சிரவணம் செய் என்பதாய் 
என் 
காதுகளையும் சேர்த்துப் பிடித்திருப்பதாகவே 
பூரித்துப் போகிறேன் 

வெங்கடாச்சலமே நீ 
விரும்பி ஏற்றதால்
என்ன புண்ணியம் 
செய்திருக்கிறதோ அந்த
வெங்கலம் 

சிக்கிமுக்கி கற்களாய்
தாளக் கருவி 
ஒன்றோடு ஒன்று மோத
ஓங்காரமே ஒலி ஜ்வாலை 
எழுப்புகிறது 

சூரிய சந்திரனை 
பக்கவாட்டில் வெட்டியதான
ஒலித் துண்டுகள் 
ஒன்றோடு ஒன்று உரச 
சுவாமி நீ
பாடிக் கொண்டிருக்கும் போதே 
உனக்கே அது
தாம்பாள ஆரத்தியாய்
தாள ஆரத்தி எடுக்கிறது 

பஞ்சு விரல் உன்னிலிருந்து 
புறப்படும் ஓசைகளை 
பகவத் பாஷைகளாய்ப்
பேசுகின்றன 

நீ எத்தனை முறை தான் 
அடித்தாலும் 
உன் பஜனைப் பாடலுக்கே
பக்கவாத்தியமாகிறது 

அதை நீ அடித்தாலும் 
அதற்கு வலிப்பதில்லை சுவாமி

இப்படி ஒரு பக்தியை 
இறைவா எனக்கு 
வழங்க மாட்டாயா 

உன் பாடல்களின் 
கருவியாக்கி 
கருணையே எனக்குள் 
பாடலாய் 
முழங்க மாட்டாயா 

நீ அதிகம் வாசிப்பது 
இதயத்தையும் 
இதையும் 

இதயம் போடும் 
இரைச்சல்கள்
இது போடும் தாளம் 
இரண்டையும் 
ஒன்றாகவே ஏற்கிறாய் 

லவ குசனாய் 
இந்த இரண்டையும் 
அசைத்து உன் 
ரகு வம்சத்தை வாசித்துக் கொள்கிறாய் 

புல்லாங்குழல் போல் தானும்
விரல் புக விரதமேற்றதோ ...

வில்லுக்கு நீ வழங்கிய 
விரல் விருந்தை -- தாளச்
சொல்லுக்கு வழங்க வேண்டுமென்றே 

தாளக் கருவி 
தாபக் கருவியாய் இருந்ததோ 

சங்க நாதம் பெற்ற 
உதடுகளில் 
எங்கள் நாதம் பெற 
ஏற்பாயா என
தியானத்தில் 
உறையும் உடம்பாய் 
உறைந்து உன் விரல்களில்
உட்கார்ந்ததா

பஞ்ச பூதங்கள் 
தாங்கி இருக்கும்
தேகமாய் உன் 
பஞ்ச விரல்களதைத் 
தாங்கி இருக்கிறதே சுவாமி 

மெளனமாகவே இருக்கிறது 
நீயே பேச வைக்கிறாய் 

மௌனத்தின் பேச்சுக்கள் 
உன் பேரையே 
உச்சரிக்கின்றன 

ஜால்ராக்கள் 
ஓம் ஓம் என 
உன்னை ஆராதிக்கின்றன 
அது உன் பாடலை 
ஆம் ஆம் என 
ஆமோதிக்கின்றன

நீ எது சொன்னாலும் 
நீ எதைச் செய்தாலும் 
ஏற்றுக் கொள்வதால் 
அதை நீ 
ஏற்றுக் கொள்கிறாய்

தொப்புள் கொடி 
கயிறிணைத்து 
குழந்தைகளை அசைத்து
கானம் இசைக்கும் 
கடவுளே 

எதையும் ஏற்றுக் கொள்ள...
எதையும் ஏற்றுக் கொள்ளும்
 உன் 
பாதம் ஏகிவிட்டேன் 

என்னை உன் 
விரல்களால் ஏற்று 
வாசி சுவாமி 

அதுவே என் 
நாசிக்கான வாசி

25) சிலா சாயி கலா சாயி:

யுகம் யுகமாய்
உனக்கும் கல்லுக்கும் 
உள்ள தொடர்பு
உனக்கும் எங்களுக்கும் 
உள்ள தொடர்பு 
சுவாமி

நீ ராமர் என்பது
பெண்ணை  எழுப்பிவிட்டதால் அல்ல
உன் பூர்வீகத்தையே 
எழுப்பி விட்டதால் 

இதே கல் தான் 
மீண்டும் நீ யாரென 
பூமிக்கு உணர்த்தியது

இந்தக் கல் தான் 
உன் திருக்கோவிலுக்கான 
அடிக்கல் 

சீரடி சுவாமியாய் ஆன
சுடர் கல் 

எரிகல்லும் உன் 
இருவிரல் தீண்ட 
விரி கல்லாகவே 
விஸ்வரூபம் எடுக்கிறது 

இதே கல் தான் 
கிண்டியிலும் வந்ததன்
கருணை நடக்கிறது

கல்லுக்குள் கடவுளைக்
காணும் இதயங்களின் 
கல்லுக்குள் ஈரத்தைக் 
காண்கிறாய் நீ 

கல்லாக உடல் 
உறைகிற போதே 
கடவுளே நீ 
காட்சி தருகிறாய் 

என்பதற்கான 
ஏகாந்தக் குறியீடே 
கல் வழிபாடு 

தவ நிலையை 
கற்களே உணர்த்தி 
அகத்தின் சிவநிலையை
அதுவே வெளிப்படுத்துகிறது 

கற்களின் முன் 
ஆரத்தி காட்ட 
சிவனோடு சக்தியாய் 
ஒளிப்படுத்துகிறது 

சந்நிதானக் கற்களோடு 
தரிசிப்பவர்களின் கற்கள் 
உரசிக் கொண்டால் தானே 
ஜோதி உற்சவம் நிகழ்கிறது 

சுவாமி
உன் ஒவ்வொரு
 விரல்களிலும் 
உளி வைத்திருக்கிறாய் 
நீ 
எல்லாரையுமே 
ஏகாத்ம பாவத்திலேயே தொடுக்கிறாய் 

சிலரே 
சிலையாய் உறைய முடிகிறது 
தன்
நிலையில் நிலைத்து 
கலையில் நிறைய முடிகிறது 
உன் கருணையைத் தன் 
கண்ணீரால் வரைய முடிகிறது 
எண்ணங்களை உதறியுன்
பாதங்களில் விரைய முடிகிறது  

உளியின் செதுக்கலையும் 
மயிலிறகு வருடலாய் 
மாற்றிவிடுகிறது உன் 
மந்தஹாசம் 

ஒளியின் சிலைகளுக்கு முன்னால் 
வலியின் கற்கள் கனக்கின்றன 

வலிக்கிறது பிறகே 
வாழ்க்கையின் சாரம் 
பலிக்கிறது 

நிலை எனும் ஆமை 
நிதானமாய்த் தான் வருகிறது 
அது வருகைப் புரிவதற்கு முன்பே 
நிலையாமை 
வீடு வந்து சேர்ந்துவிடுகிறது

கற்கள் நாங்கள் 
உன் குளத்தில் நீயே 
எறிந்து கொள்கிறாய் 
குதித்து குதித்துக் 
கடைசியில் உன் 
குளத்திலேயே மூழ்கி 
கும்பாபிஷேகம் காண்கிறோம்

ஆன்மீகம் எனும் 
உண்டி வில் வைத்திருக்கிறாய் 
அதில்
எங்களை வைத்து 
முக்தி மாங்காயை இலக்காக்கி 
அது வீழ அதை நீயே 
ருசித்துப் பார்க்கிறாய் 

எங்களின் அனுபவம் 
எல்லாம் 
உன்னை நீயே 
அனுபவித்துக் கொள்வதே 

கற்களே 
செதுக்கிக் கொள்ள முடியாது என்பதை
உணராத வரை 
தனக்குத் தானே அவை 
பாரமாகிப் போகின்றன 

உன் விரலுக்காகக் 
கண்மூடிக் காத்திருக்கும் கற்கள் 
விக்ரஹமாய் உன் 
வினயத்தைப் பெறுகின்றன 

சந்நிதான சிலைகளில் 
சுவாமி நீ
விபூதி  பொழுகிறாய் 
படிக் கற்களில் நீ 
ஸ்பரிசங்களைப் பொழிகிறாய் 

எவை  உயர்வு ?
எவை தாழ்வு ?

கழுத்தில் நீ இடும்
மாலைகளும் 
எழுத்தில் நீ இடும்
மாலைகளும் 
உன் பேரையே 
மணக்கின்றன 

கற்களிலும் அப்படியே 

இப்படி அப்பாவியாய் 
திருமுகம் காட்டி 
தினந்தோறுமெனை 
சிலையாக்கவே 
கல்லாக்கிக் கொண்டிருப்பது 

உன்னால் மட்டுமே 
முடிகிறது சுவாமி

26) கம்பளி சாயி காந்த சாயி:

இமயமே 
உனக்கே குளிர்கிறதா 

குளிர்விட்டுப்போன 
குரங்கு மனதில் -- பக்தி
துளிர்விட 
நெருப்பள்ளிப் போடும் 
ஜோதியே 

உனக்கே நடுக்கமா...
உலகுக்கே அடுக்குமா 

தசாவதாரம் மட்டுமா 
நீ 
தடுத்தாட் கொள்ள எடுக்கும்
அவதாரங்களை 
அடுக்கினால்

உன் அருணையும்
ஓரடிக் குள்ளமாகும்

கண்ணீர் தேங்கிடும் 
கருணைக் கண்களில் 
என்னைக் 
காப்பாற்றிக் கரை சேர்த்த 
காருண்ய ஆழத்தில் 
கங்கையும் 
ஓர்நொடிப் பள்ளமாகும்

வரண்ட இதயங்களில் 
உன் 
காயத்ரி ஊற்றிவிட்டால் 
வெறிச்சோடியது எல்லாம்
வெள்ளமாகும் 

பதறிப் பாழானதெல்லாம் 
உன் பஜனைப் பாட
இல்லமாகும் 

உனை நினைத்தே 
உருகிக் கொண்டிருந்தால்
சிதறல் மனமுமுன் 
செல்லமாகும் 

ஒரே அவதாரத்தில்
ஓராயிரம் அவதாரங்கள் எடுக்க
அவதரித்தது இந்த
அவதாரத்தில் தானே 
சுவாமி 

திங்களை அணிந்தவன் 
தாழ் விழுந்து 
தாள் பணியும் 
எங்களை அணிபவன் 

உனக்கு
கம்பளி அணிவதும் 
அம்புலி அணிவதும் 
ஒன்று தானே சுவாமி 

நவ கோள்கள்
உனைச் சுற்ற
நவ விதமாய் 
நீ சுற்ற 

அந்தத் துணிகள் 
தான் பிறந்து 
செய்ய வேண்டிய 
பணிகளைச் 
செய்து விட்டது 

எங்களைத் தான் 
கடவுளே நீ சுற்றாமல்
கர்மாக்களால்
சுற்ற விடுகிறாய் 

பஞ்சு நாங்கள் 
நூலாவதற்குள் உனை 
நொந்து கொள்கிறோமே 

நீ அணிவதற்கே 
நெய்கிறாய் என்பதில் 
நெய்வேத்தியம் தானே 
நாங்கள்

என்னை
அரவணை சுவாமி 
அதுவே பக்தியில்
அரி உனை நினைந்தமரும்
அரியணை 

மேலாடையும் உனக்கான 
நூலாடையும் 
உன் புகழையே 
நெய்திருக்கிறது 

பக்குவ இழையில் பக்தரை நெய்யும் 
பிரபஞ்ச நெசவாளன்
உனக்கிந்த 
துணி நெய்தவர் யார் 
கபீரா ? 

உன் நாமத்தையே 
உடுத்தியிருக்கிறாய் 
சுவாமி உன் 
நாமம் ஜபிக்க ஜபிக்க 
அகத்தில் அடுத்திருக்கிறாய் 
நொடி மறைய 
அதுவாகியிருக்கிறாய்

முடி தீண்டுமந்த 
முக்காடு உன் 
அக்காடு அதில் மூழ்கி
முக்தியே அடைந்திருக்கும் 

பிரபஞ்சம் கூட அறியமுடியா
ரகசியமானவன் நீ என்றா 
முக்காடு அணிந்திருக்கிறாய்? 

நீ 
அருவ முக்காடு 
அணிந்து கொண்டு தானே எங்களின்
ஆராதனைகளில் கலந்து கொள்கிறாய்

பார்த்திருக்கிறாய் பக்தியாலெனைப் 
போர்த்தி இருக்கிறாய்

உன் கதகதப்பைக் 
கண்மூடுகையில் 
உணர்கிறேன்

அது போதுமா...

காற்றுடம்புக்கு 
ஆடையாகி இருக்கிறேன் 
சுவாமி படுத்தாதே 
சீக்கிரமெனை உடுத்திவிடு

27) லிங்க சாயி ஆலிங்கன சாயி:

இந்த லிங்கத்திற்கு 
உயிரூட்டுகிறாய் 
சுவாமி

அதற்காகத் தானே 
அத்தனை ஆண்டுகளாய் 
அது 
தவ உறைதலில் 
திளைத்தது 

உன் 
பிராணத்தை 
பகிர்ந்து கொள்கிறாய்

நீ
பூஜை செய்கிறாய் என 
நினைத்துக் கொண்டனர் 

உன்னை நீயே அபிஷேகிக்க 
கங்கை தலை கொண்டாய் 
உனக்கு நீயே விளக்கேற்ற 
கங்கை நுதல் கொண்டாய் 

நீ
மிருகத் தோல் 
உடுத்துவதும்
மனிதத் தோல் 
உடுத்துவதும் 
அருவத் தோல் 
உடுத்தி 
அகிலத்தை நடத்துவதும் 

உன்னால் முடியாதது 
ஒன்றே ஒன்று தான்
எங்களையும் 
உடுத்திக் கொண்டு
மாற்றுடை தேடுவது 

மனித உடுத்தல்கள் 
நாகரீகப் படுத்தல்கள் 

இறையே நீ 
இதயத்தை உடுத்திக் கொண்டால் 
நைந்தாலும் அதை
தைத்து உடுத்துகிறாய் 

அழுக்கேறி விட்டால் 
அனுபவத் துவைத்தலோடு 
அணிகிறாய்

நீ ஏற்ற பிறையில் 
அழுக்கில்லாமலா ! 

ஏற்பதாகிவிட்டால் 
உனக்கு
இடுகாடும் இமயமாகிறது 

காப்பதாகிவிட்டால் 
கண்ணப்பனும் 
உன்னப்பனாகி விடுகிறான் 

நான் வாங்கிய அடிகள் 
நீயே வாங்கிக் கொண்டவை 
ஆகவே தான் 
அவ்வளவாக 
வலிக்கவில்லை 

நீ வலிகளையும் வாங்கி
என் 
வருத்தத்தையும் வாங்கி 

ஏற்றுக் கொண்டதற்காக 
எழுதித் தருகிறாய் 
உன்னையே 

என் அறியாமையை 
ஏற்கிறாய் 
இருளை ஏற்கும் 
ஒளி போல 

என் மாயையை ஏற்கிறாய் 
சப்தத்தை ஏற்கும் 
இசை போல

நீ அணிந்து கொள்வதற்குத் தான் 
எத்தனை ஆடைகள் 

பெண்ணாடை ஆணாடை 
என்ற 
பேதமே இல்லை 

எல்லாவற்றிலும் 
பொருந்திப் போகிறாய் 

பேதங்கள் 
பார்ப்பவர்களுக்கே அன்றி 
உடுத்திய உனக்கில்லை 

எனக்குப் பிடித்த உடை 
இந்த உடையே 

பம்பை கேசம் 
பிள்ளை முகம் 
பிரகாச வடிவம் 
கருவெளி கண்கள்
காவி உடை 
மிதக்கும் நடை 
பூவின் உயரம் 
கருவண்டு மச்சம் 

இந்த உடை காட்டித் தான் 
இறைவா எனை 
இழுத்து விட்டாய்

அந்தப் புன்னகை 
அந்த அதிர்வலைகள் 
அந்த கருணை 
அந்தப் பிடிமானம் 

குழந்தை 
கையை உதறினாலும் 
மேலும் கை இறுக்கி 
அழைத்துப் போகும் 
அன்னை போல் 

நீ அழைத்துப் போகும் 
அனுபவம் 
கண்மூடியும் 
கரைகிறேன் 
கண்திறந்தும்
நிறைகிறேன் 

இந்த 
லிங்கத்தின் மேல்  
பிராணப் பூக்களையும் 
என் 
அங்கத்தினுள் 
பக்திப் பூக்களையும் 
போடுகிறாய் 

இரண்டில் இருந்துமே 
எழும் அதிர்வலைகள் 
சுவாமி நீ அமர 
சிம்மாசனமாகின்றன

28) நித்ய சாயி வித்யா சாயி:

இப்படி ஒரு 
கொடுப்பினை 
கிடைத்தால் தான் 
படிப்பினை இதயம் 
பெறும் சுவாமி

தேற மாட்டேன் என்றுதான் 
தேர்ந்தெடுக்கவில்லையா என்னை 

புத்தகம் என்பது 
தாள்களில் அல்ல 
உன் 
தாள்களில் என்றா 
தாட்சண்யத்தில் எனைத்
தேற்றுகிறாய் 

வெளியே விழித்து 
வாசித்ததை விடுத்து 
உள்ளே விழித்து
வாசிக்க வைக்கிறாய் 

நீ 
போதிப்பதும்
பாதிக்கிறது 

பாதிப்பதும் உனை 
போதிக்கிறது 

அறிவுக்கும் 
ஓர் அடி அப்பால் 
அனுபவம் காத்திருக்கிறது 

கொடிமரம் கண்டு 
கோவிலை விட்டு 
திரும்புகின்றனர் 

நீ சந்நிதானத்தில் அல்லவா 
சுவாமி பிரகாசிக்கிறாய் 

கொடிமரத்திற்கும்
சந்நதிக்கும் தூரம்
ஆயிரம் கிலோ மீட்டரா

எந் நதியில் மூழ்கி 
பாவம் கரைந்தாலும் 
உன் 
சந்நதியில் மூழ்கினால் மட்டுமே 
கர்மா கரைகிறது 
சுவாமி

நொறுக்குத் தீனிகளிலேயே 
பசியாறிவிடுகின்றனர் 

உன் 
அன்னம் 
எண்ணத்தைத் தாண்டி அல்லவா 
ஜென்மப் பசியாற்றுகிறது 

 பிரசாந்தியின் 
அன்ன சேவையும் 
பிரசாந்தமான 
எண்ண சேவையும் 

உனை
வந்து சேரும் போதே 
உயிர் 
வந்து சேர்கிறது 

குழந்தைக்கு நீ 
ஓம் எழுதித் தருவதும் 
பக்தர்க்கு நீ 
ஆம் எழுதித் தருவதும் 

உன் 
விழுக் கல்வியால் 
விருட்சங்கள் 
விழுதுகள் பெறுகின்றன

மதிப்பெண்களின் 
மகசூலில் 
மதியின் பெண்கள்
முதிர்க் கன்னிகளாய்  

சுவாமி 
உன் ஞானத்தோடு
கலந்திடும் போதே
பிரபஞ்சத்தை 
அளந்திட முடியும் 

அரசியை 
அளக்க மட்டுமா 
படி என்கிறாய்

அண்டத்தையே 
அளக்க அல்லவா 
படி என்கிறது உன் அடி

வகுப்பறையை 
உலகம் என்கிறது 
அனுபவம் 

அதை 
அகம் என்கிறது 
அனுபூதி 

விடுதலை பெற 
யாருக்குமே விருப்பமில்லை சுவாமி

மனச்சிறையில் 
மக்கள் 
மன்றாடிக்கொண்டும் 
மயங்கியும் 

மயக்கமே மகிழ்ச்சி என்றும்  
மல்லாந்து போகிறார்கள் 

நீ விடுவிக்க வந்தவன் 
உன்னிடமே சங்கிலி கேட்கிறார்கள் 

நீ 
விரிவாக்க வந்தவன் 
உன்னிடம் சுயநலம் பார்க்கிறார்கள் 

பிறவி போக்க நீ
 பொழியும் விபூதி
பிணி போக்க மட்டுமே எனப்
புரிந்திருக்கிறார்கள் 

உன் வாஹினிகளுக்குள்
வந்து சேர்வதற்கு
உடல் எனும் வாகனம் 
எத்தனை நெரிசல்களை
எதிர் கொள்கிறது 

நேரடிப் பாதையில் நீ 
நின்றிருக்க
எத்தனை திருப்பங்களில் சென்று 
வரவேண்டி இருக்கிறது 

என் திருப்பங்களை 
நீ தான் திருத்தினாய் 
என் பிழைகளையும் 
நீ தான் திருத்தினாய்

என் மனம் என்னன்னெமோ பேசுகிறது 
உன் மௌனமோ 
என் பெயரை மட்டுமே அழைக்கிறது 

என் விழிகள் 
எதையெதையோ வாசிக்கிறது 
உன் இதயம் 
என் 
பக்தியை மட்டுமே 
படித்துக் கொண்டிருக்கிறது 

உலகத்தின் கல்வி 
உன்னைத் தவிர 
எல்லாவற்றையும் 
சொல்லித் தருகிறது 

நீ மட்டும் தான் சுவாமி
இந்த உலகத்தை
எனக்குக் 
கற்றுத் தருகிறாய் 

அது கற்க 
உன்னைத் தருகிறாய்  

குடும்பத்திற்காகவே 
கும்பிடுகிறார்கள் 
அந்த சுயநல பக்திக்கும்
அருள்கிறாய்
கடவுள் இல்லாமல் நீ 
வேறு யார்? 

கொடுத்து வைத்ததைப் போல் 
கேட்பார்கள் 

வட்டி கட்டாதவன் மேலும் 
கடன் கேட்பதைப் போல் 
வாசலில் நிற்பார்கள் 

அடுத்த நொடியே கிடைக்க
அரை நொடியே உன்னை ஆராதிப்பார்கள் 

பிரகலாத பக்திக்கே நீ
தூணை உடைப்பாய் 

சுயநலத்திற்கு ஏன் 
சுவரைப் பிரித்து நீ
வர வேண்டும் ? 

நன்றி இல்லாதவர் 
நெஞ்சில் ஏன் நீ 
நடமாட வேண்டும் ? 

பாத்திரமறிந்து தருபவன் நீ 

சுவாமி இவர்கள் 
சொம்பில் உன் 
சமுத்திரத்தை எப்படி 
சேர்க்க முடியும் ?

சுவாமி முதலில் 
பக்தியைக் கற்று கொடு 
பிறகு பகவானே நீ 
காட்சி கொடு

29) ஜூலா சாயி ஜ்வாலா சாயி:

சுவாமி நீ 
ஊஞ்சலாடுகிறாய் 
என்
உள்ளமும் சேர்ந்து ஆடுகிறது 

விழுது பிடித்து ஆடுவதாக 
நீ எனது
விருப்பம் பிடித்து ஆடுகிறாய்

நான்
விரும்பியதெல்லாம் 
நீ 
பிடித்துக் கொள்ள 
உனை விரும்புவது மட்டுமே 
சுவாமி 
விருப்பமாகியிருக்கிறது

திருப்பம் தரமுடியா 
விருப்பம் என்ன 
விருப்பம் சுவாமி

நீயே 
திருப்பியவன்
உன்னை உள்ளே
நிரப்பியவன்

உன் 
ததும்பலும்
தளும்பலும்
தவமாய்க் கிடைக்கிறது

 அசைவற்றதிலும் 
நீயே 
அசைகிறாய் 

தியான அனுபவம் 
இந்த 
ஞான அனுபவத்தை 
நிகழ்த்துகிறது 

கண் திறக்கையில் 
எல்லாமோர் நொடி 
அசைந்து கொண்டிருக்கிறது 
இதோ நீ அசைவது போல்

உயிரற்றவை என்று 
உலகில் எதுவுமே இல்லை என
உணர வைக்கிறாய் 

தினந்தோறும் உன் 
 திவ்யங்களைப் பருகுவதில்
திணற வைக்கிறாய்

உனைப் பிடித்தே 
நான் அசைகிறேன் 
சுவாமி 

உனைப் பிடித்திருக்கிறதே 
அது உன்
அண்ணன் பலராமனா 

இருவரும் 
இப்படிக்
 கைக் கோர்த்துத் தான் 
விளையாடினீர்களா 

போன ஜென்மத்து வாசனையோ என்னவோ

என் பால பருவத்திலிருந்து 
உன் பால பருவமே 
பிடித்து இழுத்துக் கொண்டிருக்கிறது 
சுவாமி 

கடவுளே நீ ஒருபுறம் 
கர்மா ஒரு புறம் 
எனை இழுத்ததில் 
கடவுளே 
உன் பிடிமானத்தின் முன்
கர்மாவின் கைபலம் 
கழன்று கீழ் விழுந்தது 

சுவாமி நீ 
கைவிடுவதே இல்லை 
அந்த விழுது பெற்றது போல் 
இந்தப் பழுதும் 
நீ பிடித்தபடியால் 
புனிதமாகிறது 

பரவசத்தில் 
பாஷைகள் தோற்றுப்போய் என்
கண்ணீரே தன் 
கரம் எடுத்து
கும்பிடுகிறது உன்னை

இதைப் பார்ப்பதில் 
சுற்றிப் பார்ப்பவர்களின் 
பாதங்களிலும்
சேர்த்து விழத் தோன்றுகிறது 

பிரேம சாயியாகி 
நீ 
பால லீலைகளைத் 
தொடங்குகையில் 
அழுது அடம்பிடித்து உன் 
அடியில் உறைந்து 

சத்ய சாயி உன் 
சாந்நித்யத்தையே 
சுகித்திருப்பேன் 

ஓரிதயமே இருக்க 
எதையளிப்பேன்
பிரேம சாயிக்கு? 

உன்னிந்த வடிவமே 
அதிகம் பிடிக்க 
உன் உருவ தரிசனத்தையே கேட்டுக்
கலந்திருப்பேன் 

கீழே இறங்கி வந்தவன் 
என்றா இப்படிக்
காட்சி அளிக்கிறாய்

அந்தக் கிளைகள் 
துரௌபதியின் 
மேல் நோக்கிய கரங்களா ? 

பக்தியைப் பிடித்தே 
இதயத்தில் இறங்குகிறாய் 

இறங்கி என் 
இதய வடிவத்திற்குச் 
சுருங்குகிறாய் 

உன் 
விஸ்வரூபத்தை எல்லாம் 
தியானத்திலே காட்டி 
சுவாமி என 
அழைக்க முடியாதபடி
மோனத்திலே எனை 
மூழ்கடிக்கிறாய் 

கல்லாகி உடல் உறைய 
கவிதைச் சொல்லாகி 
குடமுழுக்கு நடத்துகிறாய்  

மேகத்திலிருந்து 
மழை வருவதாக உன் 
முடியிலிருந்தே 
வடிவத்தை வார்த்து 
அருளை அள்ளித் தெறிக்கிறாய் 

இதே இந்தப் புன்னகையால் ...
மரணக் கட்டிலில் 
மல்லாந்து படுத்த இருளை 
மரிக்கச் செய்கிறாய் 

மண்ணிலிருந்து வந்த 
எனதுடலை 
சித்ராவதி மண்ணாகச் 
செய்திருந்தாலும் 
நீ 
நடக்க நடக்க 
உயிர்த்தெழுந்து நதியோடு கலந்திருப்பேனே சுவாமி

எனைக்
கண்ணாகச்
 செய்துவிட்டபடியால்
திறந்தும் கலக்கிறேன் 
மூடியும் மூழ்குகிறேன்

கோகுலத்துக் கோலாகலமே 
சுவாமி  என்
கண்கள் வெண்ணெய் ஆகவே 
உருகி ஓடுகிறது 

ஆடிக் களைத்துவிட்டால் 
அதை எடுத்து 
அள்ளிச் சாப்பிடு 

உனையன்றி
யாரிருக்கார் 
இங்கெனை 
நலம் விசாரிக்க ? 

உற்றவனே எனைப் 
பெற்றவனே
புருவ மத்தியில் வரவழைத்து 
பர்த்தீசனே கூப்பிடு 

வாழ்க்கையை விளையாடுவோம் !

30) சாந்நித்ய சாயி சந்நிதான சாயி:

இது 
கடவுளின் பூஜை அறை 

பக்தரின் பூஜையறை
கண்ணீரால் மெழுகப்படுகிறது 

கடவுளின் பூஜையறை 
கருணையில் எழுதப்படுகிறது 

எந்த கிரகத்தில் 
எந்த அகத்தில் 
எந்த பூமியில் 
எது யார் வேண்டினாலும் 
இங்கேயே வந்து சேர்கிறது 

கோவில்கள் அவர்களின்
கோரிக்கைகளை இங்கே தான் 
அனுப்புகின்றன 

இங்கிருந்தே அதிர்வலைகள் 
இதயத்தில் சென்று 
ஐக்கியமாகின்றன 

இங்கிருந்தே பிரபஞ்ச இயக்கம் 
வழிகாட்டப்படுகின்றது 

உருவமாயிருக்கையில் வந்து 
உருகிப் போனவர்களை விட 

அருவமாயிருக்கையில் 
வந்து 
ஆராதிப்பவர்களையே 
சுவாமி நீ 
அதிகம் நேசிக்கிறாய் 

உருவ அருவங்களைக் கடந்து 
உலாவும் நீ 

உன் பூஜையறையிலும் 
என் பூஜையறையிலும் 
நீயே நிறைந்திருக்கிறாய்

இப்போதும் உருவத்தோடே 
இதயத்தில் இறங்கி இருக்கிறாய்

வெளியே பயணிப்பதில் 
விசாவுக்கு காத்திருப்பவர்கள் 
உள்ளே பயணிப்பதற்குத் தான் 
யோசிக்கிறார்கள் 

பர்த்தியில் உனை 
பார்த்துப் போனவர்களை விட 
பக்தி கொண்டவர்களையே நீ 
பிடித்துக் கொள்கிறாய் 

கோடி பேர்கள் உனை பார்த்திருக்கிறார்கள் 
சில ஆயிரம் பேர்களே 
தரிசித்திருக்கிறார்கள் 

தரிசித்தவர்களுக்கே நீ இன்னமும்
தரிசனம் தந்து கொண்டிருக்கிறாய் 

மழை நீ 
சமமாகவேப் பொழிகிறாய் 

பக்தர் பாத்திரம் 
உன்னை நோக்கியா 
மண்ணை நோக்கியா 
என்பதிலேயே 
நிறைதலும் 
வெளியே சிதறுதலும் 

கடவுள் மூலம் இது 
இதிலிருந்தே 
ரிஷி மூலங்களும் 
நதி மூலங்களும் 

எங்களின் பஜனை 
உன்னை நோக்கி
எங்களைத் திருப்புகிறது‌

எங்களின் சேவை 
சுவாமி
எங்களை நோக்கி 
உன்னைத் திருப்புகிறது

பஜனை சேவையெனும்
இரண்டு சிறகு தந்திருக்கிறாய் 

ஜபக் கால்களாலும் 
நடந்து போகிறோம் 

உன் தியான வானத்திலும் 
மிதந்து போகிறோம் 

உன் 
மந்திரப் பறவை 
நாங்கள் 

படுக்கை அறையும் 
சமையலறையுமே 
மனிதர்க்குப் பிடித்திருக்கிறது 

அலுவலக அறையிலேயே
அவர்களின் 
கடிகாரங்கள் 
புதைந்து போகிறது 

எல்லா அறைகளும் 
உன் 
பூஜை அறைக்கே 
வழிகாட்டிக் கொண்டிருக்கிறது 

சிலரை நீ 
வா என்றால் வந்துவிடுவார்கள் 
சிலரை கைப்பிடித்து அழைத்துச் சென்றால் தான் வருவார்கள் 

சிலரை நீ 
தற தறவென இழுத்தும் 
கட்டியும் 
உன் பூஜையறைக்குக் 
கூட்டிச் செல்ல வேண்டும்

எங்களின் பூஜையறையில் 
பூக்கள் 
பக்தர் 
பூஜை என
ராமானுஜர் வழி 

உன் பூஜை அறையில் 
பூக்களும் உன் 
பக்தராகி 
பக்தரும் உன் 
பூக்களாகி 

பூஜை மட்டுமே 
நடை பெறுகிறது 
சங்கரர் வழி

இதயத்தை மலர்த்தி 
இது தான் பூக்கள் என்கிறாய் 
புன்னகை பிரகாசிக்க 
இது தான் தீபம் என்கிறாய் 

கண்ணீர் வழிந்தோட 
உனக்கு
உத்தரணியில் 
ஆசமனம் என 

சுவாமி நீ
இது தான் பூஜை 
என்கிறாய்

கேசவாய நம:
மாதவாய நம:
கோவிந்தாய நம:

மூன்று துளிகள் 
போதும் உனக்கு 

எனது கண்ணீரோ 
உன்னையே நனைத்துவிடுகிறது

ஒவ்வொரு நாளும் 
இரண்டு முறை நீ
குளிக்கிறாய் 

ஒன்று உதயத்தில் 
மற்றொன்று என் 
இதயத்தில்

மந்திரத்தோடு எழுகின்ற மூச்செல்லாம் 
ஊதுவத்தியே என்கிறாய் 

ஆறு கால பூஜையில் 
மூன்று வேளை உனக்கு 
நெய்வேத்யம் 
பக்தர்கள் படைப்பதை மட்டுமே நீ 
உண்கிறாய் என நினைக்கிறார்கள் 

பக்தர்கள் உண்பதையும்
நீ தான் ஏற்கிறாய் 

வைணவம் கலந்த சைவமே 
சைவமே உன் உணவு 

வேண்டுதல்கள் ருசித்தால் ரசிக்கிறாய்
ஜீரணமானால் மட்டுமே 
ஏற்கிறாய் 

பால்வெளிப் பிரகாசமும்
கருவெளி இழுப்பும்
கலந்ததுன் பூஜையறை 

இந்த பூமியின் 
ஆன்மப் பகுதி 

உதிரிகளை நீதான் 
மாலையாக்குகிறாய் 
உன் சமிதிகளில் 
உன் குழுக்களாய்ச் 
சேர்ந்து மணக்கிறோம் 

கடைசிக் காலத்து
மருத்துவ மனை அறைகளிடம் இருந்து 
தப்பித்துக் கொள்ள 
உனது 
பூஜையறையே உதவுகிறது சுவாமி

ஈட்டுவது பணம் என்றால் 
அது வாங்கிக் கொள்கிறது 

ஈட்டுவது பக்தி என்றால் 
நீ வாங்கிக் கொள்கிறாய்

31) கருட வாகன கருணா சாயி:

யுகம் யுகமாய் 
உனைச் சுமக்கும் 
கருடனுக்குத் தெரியுமா 
அவன் 
பக்தனையும் 
சேர்த்துத் தான் 
சுமக்கிறான் என்று ?

அந்தச் 
சக்கரத்தாழ்வாரின் 
சுழற்சி மட்டுமா நீ 

காலத்தின் கடையாணியே உன் 
விரலிடுக்கில் தான் 
வீற்றிருக்கிறது

நீயே முறுக்கிவிடுக்கிறாய்
உனை நினைக்கும் போது
உள்ளத்திற்குள் 
தளர்த்தி விடுகிறாய் 

காலமெனும் மாயையை 
கட்டவிழ்த்தவனே நீதான் 
சுவாமி 

உருவ மாயையை வேறு 
ஊற்றிய படி 
நீ காற்றில் அடிக்கின்ற 
வர்ணங்கள் 
ஒன்றா ! இரண்டா !

உன்னைத் தொந்தரவு 
செய்வோம் என்றா 
உனக்குப் பதிலாக 
மாயையை அனுப்பிவைத்தாய் 
வாழ்க்கையாக ...

உன்னோடு காற்றாகி
கலந்திருந்த எங்களை ஏன் 
உடம்புக்குள் அடைத்தனுப்பினாய்? 

பூமி கோலியோடு 
மனிதச் சொப்பும் 
வேண்டி இருக்கிறது
உனக்கு விளையாட 

கர்ம விதிகள் தீர 
எங்களை நீ 
விளையாடுவது நின்று 
உன்னோடு சேர்ந்து விளையாடுவது 
அரங்கேற ஆரம்பிக்கிறது 

குவிந்த சடையோடு நீ 
கலியுகம் வந்தும் 
சிவனோ நீ என இன்னமும் இவர்களுக்கு
சந்தேகம் 

சங்கு சக்கரம் உன் 
பாதம் கொண்டும் நீ
விஷ்ணுவோ என
வினா எழுப்புகின்றனர் 

கையில் நீ கொண்டிருந்ததை
காலில் நீ கொண்டிருப்பது 
உன் சங்கல்பம் 

சந்தேக நோயை 
உன் 
சாந்நித்யமே தீர்க்க முடியும் 

இவர்களின்
இறந்த குணத்தை 
உன் இரக்க குணமே 
உயிர்ப்பிக்க முடியும்

இவர்களுக்கு 
ஒரு சுப்பம்மா தான் தெரியும் 

பக்தியையே உயிர்ப்பிக்கும் 
உனக்கு 
உயிரை உயிர்ப்பிப்பது
ஒரு விஷயமே இல்லை 

கருடனின் 
முதுகுத் தண்டே நீ தான் 

நீ தீர்மானிப்பதில் 
திரள் விசும்பிலும் நிறைகிறாய் 
திவ்ய பிரபந்தப் புத்தகத்திலும்
அடங்குகிறாய் 

எனக்கு ஆச்சர்யமே இல்லை சுவாமி

உன் ஒவ்வொரு மகிமைகளும் 
என்னை எனக்குள்ளே 
அனுப்பிக் கொண்டிருக்கிறது 

விரும்பியது தருபவன் 
விபூதியைத் தருபவன் 
என
வியந்து போகிறார்கள் 

சுவாமி நீ 
தராதது எதுவேனும் 
வாழ்க்கையில் 
வாழ்ந்து போகிறதா ? 

நாங்கள் 
அமைத்துக் கொண்டதெல்லாம் 
நிலைத்திருக்கிறதா? 

அமைப்பதும் 
சமைப்பதும் நீ 

நீயே பசிக்கவும் வைக்கிறாய் 
படையலும்
வைக்கிறாய் 
புசிக்கவும் வைக்கிறாய் 
ஜீரணிக்கவும்
வைக்கிறாய் 

மனித முயற்சியென்று 
ஏதேனுமொன்றைச் சொல் ?

பிரியமாய் நீ அளித்தால் தான்
பிரயத்தனமும் புரிய முடிகிறது

இவர்கள் என்ன செய்கிறார்கள் ?
உருப்படியாய் 
என்னத்தான் செய்கிறார்கள்? 

கோபுரக் கலசத்திற்கு விடப்படும் 
குடத்து நீர் 
பொம்மைக்கும் சேர்வதாக 
சந்தோஷப்படுகின்றனர்

நீ 
பறவையின் முதுகில் 
சவாரி செய்பவன்

எங்களை 
உயர்ந்து எழத்தான் 
உத்தரவிடுகிறாய்

கால மரத்தின்
கர்ம வேர் 
கால்களைச் சிக்கி இருக்கிறது 
அறுத்தெறிய வலிக்குமென 
மரமாக நிற்கிறார்கள் 

மாதவ சுவாமி நீதான் 
வேரில்லை அது 
சிலந்தி வலை என
சிந்தைக்குச் 
சுடரேற்ற வேண்டும்

கதவு சாற்றப்பட்டிருக்கிறது 
பூட்டப்படவில்லை எனப்
புரியவில்லை 

கைகள் முழுக்க கனவுகள் 
இவர்கள் திறப்பதற்குள் 

கதவே பொறுமையிழந்து 
தானே தன்னைத் 
திறந்து கொள்ள வேண்டும்

பறவையோடு மட்டும் 
பிரியமிருந்திருந்தால் 
பறந்து கொண்டே தான் 
இருந்திருப்பாய்

மனிதரோடு 
இரக்கமிருப்பதால் 
இறங்கி வந்தாய்
சுவாமி 

உன் கருணைக்கான 
நன்றியையே நாங்கள் 
ஒரு ஜென்மத்தில் 
அடைக்க இயலாமல் 
தவிக்கிறோம்

நீ வாழ்க்கையாக 
எதைத் தந்தால் என்ன 
தராவிட்டால் என்ன 

நீ போதுமென்ற 
திருப்தியும்...
உன் 
அதிர்வலைகளின் 
ஆத்மார்த்தமும்... 
உன் சந்நதியின்
சாட்சியும் 
உன் மகிமையின் 
ஆலிங்கனமும் 
பஜனையின்
அமிர்தமும் 
சேவையின் 
சாயுஜ்யமும் 
உன் மந்திரங்களின் 
சங்கமமும் 

இதற்கே 
இன்னொரு பிறவி எடுக்கலாம்

உனக்குத் தான் 
தேவையில்லாத 
பராமரிப்பு செலவு சுவாமி

ஐக்கியமாவதால்
வாக்கியமாகி நீ 
வருவதைப் போல் 
ஐக்கியமாக்கவும் வா 

இதயத்தில் நீ 
சவாரி செய்யத்தான் 
சிறகு பொருத்தித் தந்திருக்கிறாய்

சாதனா சிறகு 

கருடனுக்கு 
உலகப் பார்வை 
உனக்கு 
கருடப் பார்வை 

உன் குழந்தைக்குக்
கண்மூடுகையில்
கடவுளே 
உனக்கான பார்வை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக