தலைப்பு

சனி, 16 நவம்பர், 2019

சத்ய சாயிபாபாவின் கடல் கடந்த கருணை | Chapter 2 | வாழ்வெனும் வழக்கில் ஆண்டவன் தீர்ப்பு!


ஆஸ்திரேலியாவில் வாழும் பிரியா சிவராஜா அவர்களின் அனுபவங்கள்.

உலவிடும் காற்றில் வெளியில் உலகங்கள் எங்கும் எங்கும் நிலவினில் வானில் நீரில் நீணிலம் எங்கும் எங்கும் அலகிலா விளையாட்டுடைய சாயியின் காட்சி தோன்றும்
நிலையிலா வாழ்வு தன்னில்
நிலையான தெய்வம் தோன்றும்!

சுவாமி நட்சத்திரம் திருவாதிரையன்று மாலை சாயி  பக்தை பிரியாவிடம் பேசுகின்ற நல்வாய்ப்பு சாயி சங்கல்பத்தால் கிடைத்தது. கனடாவிலிருந்து
வந்து இரு வாரங்கள் சகோதரி குடும்பத்தோடு தங்கி விட்டு, இரண்டு நாட்களில் மீண்டும் அவர் கனடா புறப்பட இருந்த நெருக்கடி நேரத்தில், மூன்று மணி நேரத்திற்கும் மேலாக அவரிடம் பேசி சுவாமி அவருக்கு தந்த அனுபவங்களைக் கேட்ட போது... மனம் ஆனந்தத்தில் மூழ்கியது. சுவாமியின் பழைய பக்தர்களின் அனுபவங்களையெல்லாம் படிக்கும் போது அவர்களை நேரில் பார்த்து பேச முடியாது போனதை எண்ணி ஏங்கியதுண்டு. இன்று அந்த ஏக்கத்தைப் பிரியா பேரளவு போக்கி விட்டார். பிரியா சுவாமியைப் பற்றிப் பேசும்போது சுவாமியின் அற்புதங்களை உள்ளடக்கிக் கொண்டிருந்த பொக்கிஷம் அனுபவங்களாகப் பொழிந்து கொண்டிருப்பது போன்ற ஆனந்தத்தையும் சிலிர்ப்பையும் மனம் அனுபவித்தபடி இருந்தது. 9 கேள்விகளைக் கேட்டு அதற்குள் எல்லாம் குறித்துக் கொள்ளலாம் என்று போனவள் செயல் மறந்து போயிருந்தேன்.

கேள்வியாவது ஒன்றாவது பேச்சோ பாட்டோ செய்தியோ உபதேசமோ என்ன பேச வேண்டும் எதை எதைச் சொல்லவேண்டும் என்ற சுவாமி பேசிக்கொண்டிருக்கிறார் பேச வைத்துக் கொண்டிருக்கிறார் என்பது சத்யமாய் புரிந்தது .தங்கு தடையில்லாத பொங்குமாங்கடலாய் சத்ய சாயியின் கருணையை.. அருளை பல்லாண்டுகளாய் அனுபவித்து பரமானந்தமும் பரிபக்குவமும் கொண்ட பக்தையின் அனுபவங்கள்.. வாழ்வின் திகில் போக்கி சுவாமி அவரை ஆட்கொண்ட தெய்வம் சம்பவங்கள்.. அதுபாட்டுக்கு மடை திறந்த வெள்ளமாய் சாயியின் கருணை பொழிந்தபடி இருக்கிறது அவர் வாழ்வில்!


காமாட்சி தந்த வரம்:

பலமானதொரு ஆன்மீகப் பின்னணி பிரியாவுக்குண்டு. பிரியாவின் அப்பா சண்முகராஜா ஸ்ரீலங்கா வைச் சேர்ந்தவர். பிரியாவின் தாத்தா அப்பா எல்லாரும் பர்மாவில் தேக்கு வியாபாரம் செய்தவர்கள். அம்மாவின் அப்பா துரைப்பிள்ளை காஞ்சி மகா பெரியவரின் தீவிர பக்தர். பர்மாவில் போர் நடந்தபோது தப்பி வந்த அகதிகளில் தனிக் கப்பலில் குடும்பத்தோடும் சுற்றத்தோடும் காஞ்சிக்கு வந்து சேர்ந்தார் துரைப் பிள்ளை. பெரியவரைச் சந்தித்து ஆசீர்வாதம் பெற்று காஞ்சி காமாட்சியை வழிபட்டு தங்கள் பரம்பரை வியாபாரமான தேக்கு வியாபாரத்தைத் தொடங்கி விட்டார். காமாட்சியின் காவலோடும் கருணையோடும் குடும்பம் காஞ்சியில் அமைதியாகக் காலூன்றியது. 1946இல் மகாபெரியவர் அருளால், காஞ்சி கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றபோது, பெருங்கூட்டத்தில் ஏ.என். பிள்ளையும் கர்ப்பிணியாக இருந்த அவர் மகளும் அங்கு கலந்துகொண்டு காமாட்சியை வழிபட்டனர். அப்போது மகா பெரியவர் கும்ப மாலையை வீசினார் .அது யார் கழுத்தில் விழுகிறதோ அவர்கள் என்னிடம் வரலாம் என்று சொல்லி வீச அது ஏ. என். பிள்ளையின் கழுத்தில் விழுந்தது. அவர் தன் மகளோடு பெரியவரிடம் செல்ல அவர் அன்போடு ஆசீர்வதித்தார். உன் மகளுக்கு அம்மன் சக்தியோடு பெண் பிறக்கும். அந்தக் குழந்தையை நன்கு பராமரிக்க வேண்டும் என்று தெளிவாகக் கூறினார். தாய்மையடைந்திருந்த மகள் தினமும் காமாட்சி அம்மனுக்கு மாலை கட்டிப் போடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அம்பாளின் அருளோடு பிறந்த அந்த பெண்குழந்தையே பிரியா. காஞ்சி காமாட்சி பிரியதர்ஷினி என்பது முழுப்பெயர்.

சிவசக்தி லீலையும் அழைப்பும்:

சக்தியின் அருளால் பிறந்த பிரியாவிற்கு சிவ சக்தியின் அருள் சேர்ந்தது எப்படி? சத்ய சாயியின் மீதான நம்பிக்கை எப்படி தொடங்கியது? அம்மன் வழிபாட்டில் தீவிரமாயிருந்தார் பிரியா. 16 வயதிருக்கும்போது அவருக்கொரு கனவு வந்தது. வானுக்கும் மண்ணுக்குமாய் ஆரஞ்சு அங்கியில் பெரிய ஆப்பிரிக்கத் தலைமுடியோடு விசுவ விராட் ஸவரூபமாய் சுவாமி வந்து காட்சி யளித்திருக்கிறார். யார் இப்படித் தோற்றமளிப்பது அவருக்குத் தெரியவில்லை. விசித்திரமான கனவாக இருந்தது அவருக்கு. இன்னொரு முறை பிரியாவின் தம்பி ரவி பிரகாஷ் ஒரு படம் தந்து சொன்னார். இவர் பெரிய ஆன்மீக வாதி. பெரிய பெரிய அற்புதங்களையெல்லாம் நிகழ்த்துகிறாராம். சாய்பாபா என்று இந்த மகானை அழைக்கிறார்கள்.இந்தா இந்த படத்தை வைத்துக் கொள் என்று தர அதில் சுவாமியைப் பார்த்தேன்'.ஓ இவர்தான் கனவில் பார்த்தேன் இவர் கடவுள் கடவுள்' என்று முணுமுணுத்துக் கொண்டேன் என்று சொல்லத் தொடங்கினாள் பிரியா.

என் அம்மா பெரிதாய் எடுத்துக் கொள்ளவில்லை. நம்பவுமில்லை. பத்தோடு பதினைந்து அவற்றோடு இது ஒன்று என்ற ரீதியில் சாமி அறையில் வை என்று சொல்லி என்னிடம் தர சாமியறையில் வைத்தேன். ஏதோ ஒரு வியப்பு வந்ததே தவிர பெரிய நம்பிக்கை வரவில்லை என்றார் பிரியா.

திருமணமாகி கணவர் சிவராஜாவோடு ஸ்ரீலங்காவின் ஜாஃப்னா விற்குப் போனார் பிரியா. புகுந்த வீட்டிற்குக் கணவரோடு சென்றார். அங்கு உண்டு அனைவரிடமும் உரையாடி மகிழ்ந்து பேசிக்கொண்டிருக்கும்போது கணவரின் சகோதரி ஆவலும் ஆச்சரியமும் ததும்பும் குரலில் பிரியாவிடம் ஒரு செய்தியைச் சொன்னார்.இங்குள்ள டாக்டர் சோமசுந்தரம் என்பவர் வீட்டில் சத்திய சாய் பாபா வழிபாடு பெரிய அளவில் நடக்கிறது. அங்கிருக்கும் அத்தனை சாயி படங்களிலிருந்து விபூதி கொட்டுகிறதாம்.நாளை வியாழக்கிழமை அவருக்கு பூஜை நடக்கும் நாளாக இருப்பதால் நாளை காலை நாங்கள் அந்த விசித்திரத்தைப் பார்க்கக் காலையில் போகப்போகிறோம். நீயும் கட்டாயம் வரவேண்டும் என்றார் .பிரியாவிற்குள் ஆவல் அலைமோதியது, அவர் கணவருக்கு அதிலெல்லாம் நம்பிக்கை இல்லாததால் போகவேண்டாம் என்று தடுத்தார். அழைப்பது அவர் சகோதரியாய் இருந்ததால் கணவரின் அனுமதியைப் பெறுவது கடினமாயிருக்கவில்லை. காலை 5 மணிக்கு பலர், சோமசுந்தரம் வீட்டில் நடக்கும் சாயி லீலையைப் பார்க்க கூட்டமாய் வந்தனர். பிரியா விவரிக்கிறார்... அதிகாலையில் புறப்பட்டதால் குளிக்காமலேயே  கிளம்பி விட்டேன். பக்தர்கள் கூட்டம் ஒரு பெரிய க்யூவாய் வளர்ந்து கொண்டிருந்தது. அந்த வேடிக்கைகளைப் பார்க்க இனிய நறுமணம் சூழ்ந்திருந்த அந்த பூஜை யறையில் சத்ய சாய்பாபாவின் இருபத்தைந்து பெரிய படங்களிலிருந்தும் விபூதியும் குங்குமமும் கொட்டியபடி இருந்தன.

பிரியா நினைத்தார் யாராவது எடுத்து படங்களின் மீது அள்ளி வீசியிருப்பார்கள் அது தான் இப்படி கொட்டுகிறது என்று... தன் பகுத்தறிவை தனக்குள் அழுத்தமாய் மெச்சிக்கொண்டார். ஒரு வேடிக்கை பார்க்கும் மனநிலையை தவிர வேறில்லை அப்போது... பார்த்தபடி கூட்டம் நகரும்போது ப்ரியாவும் நகர அவர் முழங்கை ஸ்வாமி படத்தில் இடித்துவிட' ஐயோ' என்று பதறினார். ஒருவேளை இவர் சுவாமியானால்...! குளிக்காமல் தொட்டு விட்டேனே என்று நினைத்து மேலே பார்த்து சுவாமியிடம்' ஐ ஆம் சாரி' என்று மன்னிப்புக் கேட்டுக் கொண்டார். அந்த ஷணத்தில் அந்த படத்திலிருந்து அமிர்தம் பொழிய தொடங்கியது! அதைப் பார்த்து இவர் படத்திலிருந்து ஏதோ கொட்டுகிறது என்று சத்தம் போட்டார். பக்தர் கூட்டம் சுவாமி படத்தின் முன் திரண்டது. அமிர்தம் அமிர்தமல்லவா பொழிகிறார் சுவாமி 'சாய்ராம்' 'சாய்ராம்' என்று ஆனந்தத்தில் திணறியது கூட்டம்.

அந்த சாயி பக்தர்கள் பிரியாவிடம் உனக்கு சுவாமியின் அருள் கிட்டியிருக்கிறது என்று சொல்லி வியந்தார்கள். இவருக்கு ஒன்றும் புரியவில்லை. சுவாமி மேல் அன்பொன்றும் பிறந்ததாகத் தெரியவில்லை. என்னவோ புதிராக இருந்தது எல்லாம்.

புட்டபர்த்தியிலிருந்து ஜாஃப்னாவில் சத்ய சாயியின் பக்தர்கள் 6 பேர் சுவாமியைப் பற்றி மறுநாள் நைனாதீவில் நாகபூஷணி அம்மன் ஆலயத்திற்கருகே பேசப் போவதாகவும் அங்கு வர வேண்டுமென்றும் அன்போடு அழைத்தார்கள். இவருக்குள் உள்ளூர  சாயியைப் பற்றிக் கேட்க வேண்டும் என்ற ஆவல் உந்தியது. அம்பாள் கோவிலுக்குப் போகவேண்டும் என்று சொல்லி புறப்பட்டார். சொற்பொழிவாற்றியவர் சாய்பாபாவின் வரலாறு லீலைகள் உபதேசங்களை பற்றி எல்லாம் மிக விளக்கமாகவும் விரிவாகவும் பேசினார். மனதில் ஒரு பகுதியில் சாயியின் நினைப்பு இடம் பிடிக்கத் தொடங்கியது. ப்ரியா சொல்கிறார்.

நாகபூஷணியம்மன் குடியிருக்கும் நைனா தீவிற்கு கணவரோடு சென்றேன். அது சுவாமியின் விசேஷமான அழைப்பு என்று அப்போது புரியவில்லை. ஒரு நதியைக் கடந்து அங்கு போக வேண்டிஇருந்தது. அதற்காக படகில் போகும்போது, இந்தியாவிலிருந்து வந்த அந்தப் பெண்மணி களில் ஒருவர் அணிந்திருந்த மோதிரம் தற்செயலாய் என் கண்களில் பட்டது. அதில் ஒருவர் அசைந்து கொண்டி ருந்தாற் போல் எனக்குத் தெரிந்தது .படகு அசைவதில் படமும் அப்படி அசைந்தது என்றே முதலில் நினைத்தேன். மறுபடியும் அந்த படத்தை பார்த்தபோது அது இன்னொரு கோணத்திலிருந்தது. அது என்ன என்று என்னால் பார்க்க முடியவில்லை. ஒரு வழியாக அந்த தீவை அனைவரும் அடைந்தோம். நான் அந்தப் பெண்மணியிடம் ஓடிச் சென்று அந்த மோதிரத்தை நான் பார்க்கலாமா என்று கேட்டேன். அந்தப் பெண்மணி ஆச்சரியமடைந்தார். நீங்கள் சாயி பக்தையா என்று கேட்டார் .இல்லை. மன்னிக்க வேண்டும் என்றேன். சரி சாய் பாபாவிடம் பிரார்த்தனை செய்வதுண்டா என்று கேட்டார். இல்லை. இல்லை என்று பலமாகத் தலையாட்டினேன். அந்தப் பெண்மணி அந்த மோதிரத்தை என்னிடம் காட்டிய போது பகவான் பாபா சில நேரங்களில் நிற்பது போலவும் பிறகு பல்வேறு கோணங்களிலும் தெரிந்தார்.வியப்பிலாழ்ந்தேன். இது நிஜம்தானா? என் கண்களை என்னால் நம்ப முடியவில்லை. என்னை நானே கிள்ளிப் பார்த்துக் கொண்டேன். அந்தப் பெண்மணி சொன்னார். இது பகவான் பாபாவால் எனக்குக் கொடுக்கப்பட்ட மோதிரம். எப்போதெல்லாம் சுவாமியை நான் பார்க்க விரும்புகிறானோ அப்போதெல்லாம் அவரை பார்க்க முடியும். இது சுவாமியின் அருள்.உங்களால் சுவாமியை அப்படிப் பார்க்க முடிவதைப் பார்த்து அதிர்ந்தேன். உண்மையிலேயே நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர். ஆவலோடு ஓடிவந்து பார்த்த எவருக்கும் சுவாமி தெரியவில்லை.

வெறும் மோதிரக்கல் மட்டுமே புலப்பட்டிருக்கிறது. அந்த பெண்மணி தான் முதன்முதலில் சாய்பாபாவின் சரிதத்தையும் அவரைப் பற்றிய செய்திகளையும் எனக்கு அறிமுகம் செய்தார்.

 ஜாஃப்னாவிலிருந்து மூன்று வாரங்களுக்குப் பிறகு ஸ்ரீலங்காவிற்குப் புறப்பட்டேன். ஜாஃப்னாவிலிருந்த போது என் கணவரின் மாமா சபாரத்தினம், சாய்பாபாவின் மிகச் சிறிய படம் ஒன்றை எனக்கு தந்தார் .அதை என் பூஜை அறையில் வைத்துக் கொண்டேன். மூத்த மகனை நான் கருக் கொண்டிருந்த போது, இரவு இரண்டு மணிக்கு சமையலறையில் தண்ணீர் குடிக்கப் போன கணவரின் மேல் பாம்பு விழுந்தது. அவர் சத்தம் போட்டதும் அது க்ஷணத்தில் ஓடி மறைந்தது. என் மூத்த மகனுக்கு நாக தெய்வத்தின் ஆசீர்வாதமாய் நாகேஸ்வர பிரிதிவிராஜ் என்று பெயரிட்டேன்.

சாயி பக்தியும் சரணாகதியும் 1971ல் டிசம்பரில் விசித்திரமானதொரு கனவு கண்டேன். பகவான் பாபா என் கையைப் பிடித்து ஒரு மரத்தில் துளை வழியாக என்னை அழைத்துப் போகிறார். நாங்கள் சென்று கொண்டிருந்த இடங்களிலெல்லாம் எறும்பு புற்றுகளும் தரையில் ஊர்ந்து கொண்டிருந்த பாம்புகளாகவும் நிறைந்திருந்தன. பின்னாளில் தான் அது 'புட்டபர்த்தி' என்று உணர்ந்தேன். அந்த நாளிலிருந்து பாபாவை சதா நினைத்தபடி இருந்தேன்.

இரண்டாம் முறையாக கருக் கொண்டபோதும் மூன்று மாதங்களில் வயிற்று வலி வந்தது. மருத்துவமனையில் என்னைப் பரிசோதித்த மருத்துவர் அந்த கருவை கலைத்துவிட வேண்டும் என்று சொல்ல பதைத்துப் போனேன். உறவினர் வீட்டுத் திருமணத்திற்கு அனைவரும் கிளம்பிப் போய்விட்டார்கள். தனியே படுத்து அழுதபடி பிரார்த்தித்தபடி இருந்தேன். 'பாபா என் குழந்தையை காப்பாற்றுங்கள்' என்று பாபாவிடம் மனம் உருகி அழுது பிரார்த்தித்தேன். க்ஷணத்தில் மின்னலடித்தாற் போல் என் முன் ஓர் ஒளி வண்ணம் எழுந்தது. ஆஹா !என்ன அற்புதமான காட்சி !பாபா சிரித்தபடி கையை அசைத்தபடி காட்சி அளிக்கிறார். காலை 10 மணிக்கு பாபாவின் காட்சி எனக்குத் தெரிந்தது. மருத்துவர் அதன்பிறகு வந்து பரிசோதித்து பார்த்து விட்டு எல்லாம் சரியாகிவிட்டது. நீங்கள் வீட்டிற்குப் போகலாம் என்றார். மகிழ்ச்சியில் திணறிப் போனேன். பிரசாந்தி வாசியின் அருளால் பிறந்ததால் இரண்டாவது மகனுக்கு பிரசாந்த் என்று பெயர் சூட்டி மகிழ்ந்தேன்.

மறுபடியும் சோதனை:

பிரசாந்திற்கு 8 மாதமிருக்கும் போது கடுமையான ஜுரம் கண்டது. மருத்துவமனையில் சேர்த்து மூன்று நாட்கள் ஆகியும் ஜூரம் அதிகரித்தபடி இருந்தது.எட்டு நாட்கள் ஆயின. ஒரு மாறுதலும் இல்லை. 8 நாட்களாக நான் சரியாக உண்ணவோ உறங்கவோ இல்லை. குழந்தை பிழைப்பது கடினம் என்று டாக்டர். ஹண்ட் சொல்லி விட்டு போனதும் ஓவென்று அழுதேன். பாபாவிடம் முறையிட்டேன். 'ஆரஞ்ச் ரோப் காரனே நீ உண்மையில் கடவுளாக இருந்தால் என் குழந்தையை காப்பாற்றித் தரவேண்டும் என்று முறையிட்டேன். அந்தச் சமயம் தெரிந்த ஒரு பெண்மணியின் மகளுக்கு திருமணம். அந்த பெண்ணிற்கு சேலை கட்டி அலங்காரம் செய்வதாக முன்பு வாக்களித்தபடி, அம்மாவைக் குழந்தைக்குக் காவலாக வைத்து விட்டுப் போனேன். திரும்பி வந்ததும் குழந்தை வாந்தி எடுத்தான். ரத்தம் வந்தது. அது தீவிரமான வைரஸ் என்றும் குழந்தை பிழைக்காது என்றும் டாக்டர் ஹன்ட் கையை விரித்து விட்டார். ஆயிரம் கத்திகளால் என் இதயத்தை குத்தி விட்டது போல் அலறினேன்.பகவானே தயவு செய்து என் குழந்தையைக் காப்பாற்று என்று கத்தினேன்.

'நீ சரியான கடவுளா இருந்தால் சரியாக்கு சரியாக்கிட்டியின்னா  நீதான்  என்னோட தெய்வம். உன்னோடேயே இருப்பேன்' என்று பிரார்த்தித்த பிரியாவின் பக்திக்கு அன்பு தெய்வம் சாயி கட்டுப்பட்டார். பகவானே என் குழந்தையைக் காப்பாற்று என்று கதறினேன். என்ன ஆச்சரியம் சற்றுமுன் திருமண அழைப்பிதழ் தர வந்துபோன திருமதி கார்த்திகேசு மறுபடியும் வந்தார். விபூதிப் பொட்டலம் தந்து பேபி இந்த விபூதி பொட்டலம் நேற்று மாலை புட்டபர்த்தியில் இருந்து வந்தது என் தோழியின் மூலம்... விபூதியை குழந்தையின் உடம்பில் பூசு கொஞ்சம் விபூதியை வாயில் இடு. அழுகையை துக்கத்தைக் கிழித்துக் கொண்டு மகிழ்ச்சி பிறந்தது. நம்பிக்கை பிறந்தது. இது சாயியின் அருள்! சாயியின் கருணை! கண்ணீர் பெருகி வழியத் தொடங்கியது.. கன்னங்களில். சுவாமி விபூதியை குழந்தையின் உடம்பு முழுவதும் பூசினேன். கொஞ்சம் வாயிலிட்டேன். கொஞ்சம் குழந்தை பிழைத்துக் கொண்டான். மாற்றம் உடனே தெரிந்தது.

மாலை நான்கு மணி இருக்கும் டாக்டர் ஹன்ட் வந்தார். குணமடைந்த குழந்தையைப் பார்த்து மலைத்துப் போனார்.ஜுரம் அடியோடு இறங்கிவிட்டது. இரவு 8 மணி வரை தங்கி பார்த்து விட்டு குழந்தையை அழைத்துக் கொண்டு வீட்டிற்குப் போகலாம் மருந்து தொடர்ந்து கொடுக்கலாம் என்று சொல்லிவிட்டுப் போனார். எனக்குள் சிரித்துக் கொண்டேன். என்ன மருந்து... தெய்வம் பாபா அல்லவா அவனை காப்பாற்றினார். வைத்தீஸ்வரன் சாயிபாபா குழந்தையை குணப்படுத்தி விட்டார். ப்ரியாவின் முகம் எங்கும் அவர் அனுபவித்த சுவாமியின் கருணை நிறைந்திருந்தது் அன்றுதான் அம்மாவிடம் சொன்னார் பிரியா. சாயிபாபாவின் பாத கமலங்களைப் பற்றி விட வேண்டும் என்பது என் வாழ்க்கையின் ஒரே குறிக்கோள்.அம்மா பரிவோடும் அன்போடும் சொன்னார். முழு நம்பிக்கையோடும் பக்தியோடும் அவரை சரணடைந்தால் அது உன்னால் முடியும். காயத்ரி மந்திரத்தோடு சாயிராம் சாயிராம் என்று சுவாமியின் நாமஸ்மரணையைத் தீவிரமாக தொடங்கினேன். சாதகத்தின் முதல் படியே நம்பிக்கைதான். நம்பிக்கையோடு தொடர்ந்து படிகளில் ஏற வேண்டும்.

தொடங்கியது பிரார்த்தனை:

புட்டபர்த்திக்கு போக வேண்டும் என்று பிரியா தீவிரமாய் பிரார்த்தனை செய்தபடி இருந்தார். அம்மா சம்மதித்தாலும் கணவர் கூடாது என்று தடுத்தார். பிரார்த்தனை தீவிரமாய்ப் பிரார்த்தனை. சுவாமியிடம் கெஞ்சி அழுது இரவெல்லாம் பிரார்த்தனை செய்தபடி இருந்தார் ப்ரியா. பூஜை அறையில் வைத்திருந்த சுவாமி படத்தில் குங்குமம் வந்திருந்தது. புட்டபர்த்தி பயணத்தை சுவாமி அங்கீகரித்து விட்டார். அழைக்கிறார் என்பது புரிந்துவிட்டது. தக்க துணையுடன் போவதானால் போகலாம் என்று கணவரும் அனுமதி தந்துவிட்டார். அம்மாவின் தோழியருடன் புட்டப்பர்த்தி சென்றார் பிரியா. பெனு கொண்டாவில் 'கார் பிரேக் டவுன்' ஆகி ஆகவும் உடன் வந்தவர்கள் உன்னை நம்பி உன்னுடன் வந்தது தப்பாகப் போனது என்று கோபித்தனர். ஒரே குழப்பமும் கலவரமுமாய்ப் போனது. சுவாமியிடம் மன்றாடி இறைஞ்சினார் பிரியா. ஒரே தவிப்பாயிருந்தது.

இரவு அப்போது 1.30 இருக்கும். ஒரு கார் அவர்களை நோக்கி வந்தது. கணவன் மனைவி இருவருமாக அமர்ந்திருந்தார்கள். இவர்கள் தம் பிரச்சனையை அவர்களிடம் சொல்ல உள்ளே உட்காருங்கள் நாங்கள் புட்டபர்த்திக்குத் தான் போகிறோம் என்று சொல்லி ஏற்றிக்கொண்டு சுவாமியின் தலத்தில் கொண்டு வந்து விட்டு போயினர். அந்த நள்ளிரவு நேரத்தில் மிகச் சரியாக தங்களை நோக்கி வந்து இதற்காகவே வந்ததுபோல் புட்டபர்த்திக்கு அழைத்துப் போய் விட்டார்கள். சராசரியான தம்பதி இல்லை சிவசக்தி ஸ்வரூபத்தின் லீலையே அது என்பது பூரணமாக புரிந்தது! தவிப்பிலாழ்த்துவதும் பக்தரின் தவிப்பு தாளாமல் தானே ஓடிவந்து காப்பதும் சத்ய சாயி நாதனின் கருணையே யல்லவா?

பிரசாந்தி பிறந்தது:

1972ல்  சுவாமி தரிசனத்திற்காக விடியலில் குளித்துவிட்டு தயாராகி ஆவலோடு 'ஷெட்டில்' காத்திருந்தோம். ஊசி விழும் சப்தமும் கேட்கும் அமைதி. இரண்டாயிரம் மூவாயிரம் பக்தர்களுக்கு மேல் அங்கே கூடியிருந்தார்கள். சாய்பாபா அழகிய வடிவத்தோடும் பொன் னிறத்தோடும் தாமரைப் பாதங்கள் வரை தழைந்த நீண்ட ஆரஞ்சு அங்கியோடும் புன்னகையோடும் வந்தார். உலகிலுள்ள ஒட்டுமொத்தமான பிரேமையை எவர் ஒருவராலும் அவர் முகத்தில் காண முடியும். காற்றில் மிதந்து வருவது போல் வந்தவர் பக்தர்களுக் கிடையே வந்து அவர்கள் நீட்டிய கடிதங்களைப் பெற்றுக் கொண்டார். சிலருக்கு விபூதியை வரவழைத்துத் தந்தார். பக்தர்கள் ஓடிவந்து பாத நமஸ்காரம் எடுத்துக்கொண்டிருந்னர். சில பக்தர்களிடம் பேசினார்.

தரிசனத்தில் சுவாமியைக் கண்டதும் மனம் உருகிக் குழைந்தது. சுவாமி என்னருகில் வந்தார். என்னை நேராகப் பார்த்துச் சொன்னார். 'கோ இன்...' என்று... நான் யாரைச் சொல்கிறார் என்று பக்கத்தில் திரும்பிப் பார்த்தேன். 'பிரியா' என்று சுவாமி அழைத்ததும் தூக்கிவாரிப் போட்டது. ஊர் பேர் பரம்பரை பூர்வஜென்மம் எல்லாம் தெரிந்த சுவாமிக்கு பேர் தானா தெரியாது. அப்போதும் தனியாக பேட்டியறைக்கு போக பயந்தேன். சுவாமிக்குத் தான் மனதில் ஓடுவது தெரியுமே கூட வந்தவர்களுடன் வரச்சொல்லி சுவாமி அழைத்தார். அப்போது 15 பேர்களுக்கு சுவாமி பேட்டி கொடுத்தபடி இருந்தார். நான் சுவாமியின் பாதத்திற்கருகிலேயே அமர்ந்திருந்தேன். சுவாமி பல மொழிகளில் அனாயாசமாகப் பேசிக் கொண்டிருந்தார். அவ்வப்போது திரும்பி என்னிடம் 'புரியுதா அம்மா' என்று கேட்டார். தமிழ் சிங்களம் ஆங்கிலம் என்று இரண்டு மூன்று மொழிகளுக்கும் மேல் தெரியாத பிரியாவிற்கு சுவாமி பேசிய அத்தனை மொழிகளுமே புரிந்தன.

ஒரு பெண்ணிடம் அவருடைய கணவரைப் பற்றி சிரித்தபடி கேட்டார். ஒரு இளைஞன் இறுக்கமான பேன்ட் போட்டிருந்ததை அன்போடு கண்டித்தார்.Discipline,devotion, and duty...work is worship... Be good See good Do good that is the way to God... என்று இளைஞர்களிடம் சொல்லிக்கொண்டிருந்தார். திரும்பி என்னைப்பார்த்துச் சொன்னார். 'அம்மா புட்டபர்த்தி தண்ணீர் தூய்மையானது நல்லதே' என்றார். அதிர்ச்சியடைந்தேன்.  அன்று காலைவரை குளிக்கும்போது அந்தத் தண்ணீரின் சுத்தத்தைப் பற்றி சந்தேகப்பட்டது உண்மை! எங்கள் மூன்று பேருக்கும் பேட்டியளித்தார். அடுத்த பெண்மணியைப் பார்த்து உனக்கு இதயக்கோளாறு பெரிதாக இருக்கிறது என்று கவலைப்படுகிறாய். நன்றாக ஓய்வெடு சரியாகப் போய்விடும் என்று சொல்லி விபூதி தந்தார். என்னை பார்த்து 'உனக்கு என்ன வேண்டும் அம்மா' என்று பரிவோடு தமிழில் கேட்டார். என்னால் பேச முடியவில்லை. கண்ணீர் பெருகி வழியத் தொடங்கியது. 'சுவாமிக்கு யாரும் அழுவது பிடிக்காது. கண்ணீரை துடைத்துக் கொள் எல்லாவற்றையும் என்னிடம் விட்டு விடு உன்னை நான் பார்த்துக்கொள்கிறேன்' என்று அன்பு ததும்பச் சொன்னார்.

பிள்ளைகள் அடிக்கடி நோய்வாய்ப் படுவதைக் கவலையோடு சொல்ல, விபூதி தந்து அதுபோன்ற சமயங்களில் சுவாமியை நினைத்து விபூதியை கொடு என்றார். என் கணவர் சுவாமியை வழிபடாததைப்பற்றி வேதனைப்பட்டேன். உடனே சுவாமி சொன்னார். 'கவலைப்படாதே அதை என்னிடம் விடு' திரும்பவும் கேட்டார் 'உனக்கு என்ன வேண்டும் அம்மா?' அழத் தொடங்கினேன்.

ஏன் உன் 'பைல்ஸ்' பற்றி கேட்கவில்லை என்றார். டாக்டர்கள் ஆபரேஷன் செய்யச் சொல்வார்கள். ஆனால் அதற்கு அவசியமில்லை என்று கையை அசைத்து விபூதி வரவழைத்து என் கைக்குட்டையில் கொட்டினார். இதை நீ சாப்பிட வேண்டும். உன் குடும்பத்தினருக்கும் நிறையத் தருகிறேன். நீ தியானம் செய்ய வேண்டும் என்றார். சுவாமியிடம் முறையிட்டேன்.' சுவாமி எனக்கு தியானம் செய்யத் தெரியாதே' என்று சொல்ல, 'என் முன் அமர்ந்து என்னையே நினைத்தபடி இரு நான் உனக்கு வழி காட்டுகிவேன்' என்றார்.சத் சங்கங்களுக்கு போவது மிகவும் அவசியம். பஜனைப் பாடல்களை கேட்பதும்பாடுவதும் மிக நல்ல ஆன்மீக பயிற்சி. நீ செல்ல வேண்டிய இடத்தை நான் காட்டுகிறேன் என்று சொல்லி 'சேஸுக்கோ' என்று பாத நமஸ்காரம் எடுத்துக் கொள்ள சொன்னார்.

சுவாமியின் பாதங்களில் விழுந்து வணங்கி ஸ்பரிசித்த போது எல்லாம் ஆனந்த மயமானது. என் தலையைத் தொட்டு ஆசிர்வதித்தார் .பைல்ஸ் அடியோடு மறைந்தது. சொர்க்கத்திலிருப்பதான உணர்வில் மிதந்தேன். அந்த ஆனந்தத்தில் இருந்து சற்றே வெளியே வரவும் 6 மாதங்களானது. ஸ்ரீலங்கா திரும்பினேன். முதல் வேலையாக அசைவ உணவு சாப்பிடுவதை அன்றிலிருந்து நிறுத்தினேன். ஒவ்வொரு வியாழக்கிழமையும் வீட்டில் சாயி பஜன் நடக்கத் தொடங்கினோம் என்றார் பிரியா.

பிரசாந்தி வாசனின் பேரருள்:   

14 முறை சுவாமியின் பேட்டி என்ற பேரின்பம் கிடைத்திருக்கிறது பிரியாவிற்கு! விசித்திரமான அனுபவங்கள்... வழிகாட்டுதல்கள்... ஆனந்தப் பெரு நிலைகள்! அதை அடையும் ஒவ்வொரு படியிலும் பிரியா சந்தித்த சோதனைகள் எத்தனை? பொன்னை புடம் போடுவது போலும் சுவாமி சோதனை நெருப்பில் உன்னைப் புடம் போட்டு எடுத்துக் கொள்வார். சுவாமி யின் கருணைக்குப் பாத்திரமாவது என்பது அத்தனை சாதாரணமானதில்லை. அதற்குப்  பெரு விலை கொடுத்தாக வேண்டும்' என்று பிரியா சொன்னபோது, அவர் முகத்தில் சன்யாச வைராக்கியம் ஒளிர்ந்தது. பிரியாவின் ரூபத்தில் சுவாமி உட்கார்ந்து பேசுவதான லயிப்பில் ஆழ்ந்து போயிருந்தேன். நிலையாக சாயிபாபாவை தெய்வமாக வழிபடத் தொடங்கினார் பிரியா. சுவாமியின் மிகப் பெரிய படங்கள் அத்தனையிலிருந்தும் பஜனையின் போது விபூதியும் குங்குமமும் பொழிந்தபடி  இருக்கும் .1977 இல் ஆப்பிரிக்காவில் இருந்தவரை 'எண்டோலா'வில் இருந்த 'பாலவிகாஸ்' வகுப்பெடுக்கவும் பஜனைகளில்பாடவும் தொடர்ந்து சென்றேன்.

ஆசிரமங்கள் அனுபவங்கள்:

ஆரம்ப காலத்தில் சுவாமியிடம் வருவதற்கு முன் சன்னியாசிகள் மகான்களின் ஆசிரமங்களில் தங்கி அவர்களுடைய தெய்வ சாந்நித்தியத்தை நுகர்ந்து வழிபட்டு வந்த அனுபூதி பிரியாவிற்கு இருக்கிறது. ராமகிருஷ்ண மடம், ராமதாசின் ஆனந்தாஸ்ரமம் , கிருஷ்ணா பாய் காஞ்சி மடம், சிந்தி சுவாமி, யோகா சுவாமி, சாரதாமணி தேவி, விவேகானந்தர் போன்ற மகான்களின் ஆசிரமங்களில் தங்கி அருளையும் ஆசிர்வாதத்தையும் கொண்டு பகவான் பாபாவை நோக்கிய தன் தவத்தை பலப்படுத்தி வந்திருக்கிறார். ராமதாசரின் சீடரான மாதாஜி கிருஷ்ணா பாயின் வாழ்க்கையும் பக்தியும் இவரை அயர வைத்து விட்டதாம். இது போன்ற பல்வேறு விதமான மகான்களின் ஆசிரமங்கள் பல்வேறு விதமான ஆன்மீகப் பள்ளிகள் ஒரு சாதகருக்கான பல்வேறு சாதகப்படிகள்.

அந்தப் படிகளை கடந்து வரும்போது சத்யசாயி தெய்வீகம் எனும் பல்கலைக்கழகத்தில் பயில்வது எளிதாகி விடுகிறது என்பார் சுவாமி. அப்படித்தான் தன்னை பக்குவப்படுத்திக் கொண்டு உரமேறிய சாதகராக பிரியா தெரிகிறார். அவருடைய நோக்கும் போக்கும் வெகு தெளிவாக இருக்கிறது. தன்னம்பிக்கை தைரியம் பலம் கொண்ட பக்தை ப்ரியாவின் சாயி பணிகள் பல பரிமாணங் கொண்டவை. ப்ரியாவின் குடும்பத்தினரை சுவாமி தனித்தனியாக ஆசீர்வதித்திருக்கிறார். குழந்தைகளுக்கு அக்ஷரப்யாசம் செய்து வைத்திருக்கிறார்.

கனவும் வழிகாட்டுதலும்:         

பிரியா பெண் குழந்தையை கருக் கொண்டிருந்தபோது அவருக்கு அற்புதமான கனவொன்று வந்தது. அவர் சொல்கிறார். கோட்டயம்மன் கோயிலில் நான் வழிபட்ட படி இருக்கிறேன். கோயிலுக்குள் இருக்கும் தேவி பராசக்தி தன் ஆசனத்திலிருந்து எழுந்து வருகிறார். தாமரை போன்ற மிகப் பெரிய ரோஜாப் பூவை கைகளில் ஏந்தியபடி என் அருகில் நின்றிருந்த என் தாயையும் சகோதரியையும் தாண்டி வந்து என்னிடம் அந்த அழகிய பெரிய ரோஜாப் பூவை தருகிறார். நான் கருக் கொண்டிருப்பதை ஐயமற உணர்ந்தேன். ஆனால் அது ஒரு எளிதான பிரசவமாக இருக்கவில்லை. தலைச்சுற்றலும் வாந்தியும் மிக அதிகமாக இருந்தது. மிகவும் பலவீனமாகப் போனேன். டாக்டரின் அறிவுரைப்படி படுக்கையிலேயே ஓய் வெடுத்தபடி இருந்தேன். படுக்கப் போகும் முன்பு சுவாமியின் காட்சி ஒன்று தெரிந்தது. சுவாமி என்னருகில் வந்து தெய்வீக விபூதியை என்முன் நெற்றியில் பூசி ' Go ahead' போய் வா என்றார்.குழம்பிப் போனேன். சுவாமி என்ன பொருளில் அப்படிச் சொல்கிறார். திகைத்தேன்.

அப்போது என் அறைக் கதவை யாரோ பலமாக தட்டும் சத்தம் கேட்டது. கதவைத் திறந்தால் கண்ணீரோடு நண்பர் 'டோன்' நின்று கொண்டிருந்தார். நம் நண்பர் ராஜா தற்கொலை செய்து கொண்டார். திருமதி. ராஜா யாருடைய உதவியுமில்லாமல் தனியே தவிக்கிறார். இது தற்கொலை என்பதால் உறவினர் யாரும் அங்கு வரவில்லை. எந்த உதவிகளும் கிடைக்கவில்லை. தயவு செய்து நீங்கள் வரவேண்டும் என்றார். சுவாமி எதற்கு என்னை போகச் சொன்னார் என்பது புரிந்துவிட்டது. எங்கிருந்து சக்தி வந்ததோ சுவாமியின் அருள் தான்.பல் தேய்க்கவில்லை. தலைவாரவில்லை. கோட்டை மாட்டிக் கொண்டு கிளம்பிப் போனேன். திருமதி. ராஜா வியாழக்கிழமை தோறும் சாயி பஜனுக்கு தவறாமல் வருபவர். அவர்களுடைய ஆறு வயதுப் பெண்குழந்தை' டே கேரில்' என்னிடமிருந்திருக்கிறாள். ஆறு மாதங்களுக்கு முன் வேலை போன  வேதனையிலும்  மனமுறிவிலுமே ராஜா தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். செய்தியைக் கேட்டதும் என் கணவரும் அங்கு வந்து சேர்ந்துவிட்டார் .என்னை பார்த்ததும் திருமதி. ராஜா ஓவென்று கதறி அழுதபடி என்னை இறுகப் பிடித்துக் கொண்டார். இரண்டு போலீஸ்காரர்கள் வந்தனர். விசாரணைக்காக திருமதி. ராஜா பேசும் நிலையில் இல்லாததால் சொல்ல வேண்டியதெல்லாம் விளக்கமாய் எடுத்துச் சொன்னேன். பிறகு திருமதி. ராஜாவோடு காவல் நிலையத்திற்குச் சென்று மார்ச்சுவரியிலிருந்து அனுப்புவதற்கான கையெழுத்தைப் போட்டு, யாரும் அவரோடு தங்க மறுத்துவிட்டதால் வீட்டிற்கு அழைத்துப் போய் விட்டேன்.

உடல் எரியூட்டப்பட்ட பிறகு பாபா பஜன் நடத்தினோம். பஜனையில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவரும் திருமதி ராஜாவும் அவர் மகளும் ஸ்ரீலங்கா போவதற்கான பயணத்தொகைக்கான செலவிற்கு தத்தம் பங்கினை அளித்தனர். திருமதி .ராஜா பயணப்பட்டுப் போனதுமே எனக்கு தாங்க முடியாத உடல் உபாதையினாலும் மனவேதனை யினாலும் ரத்த போக்கு ஏற்பட்டது. மருத்துவமனையில் என்னை பரிசோதித்த ஆப்ரிக்கன் டாக்டர் கருவைக் கலைத்துவிட வேண்டும் வேறு வழியில்லை என்று சொல்லிவிட்டுப் போனார். ஓவென்று அழுது பாபாவிடம் முறையிட்டேன்.' ஓ பாபா என் குழந்தையைக் காப்பாற்று' என்று அழுது பிரார்த்தித்தபடியிருந்தேன்.

மூன்று மணிநேரப் பிரார்த்தனைக்குப் பின் சுவாமி விபூதி வாசனை மெல்ல மெல்லப் பரவி எங்கும் நிறைந்தது. அடுத்த நாள் என்னை பரிசோதித்த டாக்டர் மிகவும் ஆச்சரியப்பட்டார். இனி ஒன்றுமில்லை. குழந்தைக்கு அபாயம் இல்லை. நீ வீட்டிற்கு போகலாம் என்று சொல்லிவிட்டார். சுவாமியின் அன்பும் கருணையும் எத்தனை அளப்பரியது! தம் பக்தர்களிடம் அவர் காட்டும் கருணையை நினைந்து நினைந்து நெகிழ்ந்து கொண்டிருந்தேன். அழுதுக் கொண்டிருந்தேன்.

தாயம்மாவின் கருணை:

ஏழு மாதங்களானதும் பிரசவத்திற்கு என் பிள்ளைகளோடு ஸ்ரீலங்காவிற்கு போய்விட்டேன். ஜனவரி இறுதியில் என் கணவரிடமிருந்து கவலையை ஏற்படுத்துவதான ஒரு செய்தி வந்தது. ஜாம்பியாவில் வியாழக்கிழமை பஜனில் ஆரத்தி எடுக்கும்போது சுடர் அணைந்தது. நீ உடனே மருத்துவப் பரிசோதனைக்குப் போவது நல்லது என்ற கவலையோடு பேசினார். எனக்கும் எச்சரிக்கையைத் தரும் காட்சிகள் ஏற்பட்டதால் பரிசோதனைக்குப் போனேன். இன்னும் மூன்று வாரங்களிருந்தன பிரசவத்திற்கு. டாக்டருக்கு என் நம்பிக்கை தெரியும். உன் பாஸ் பாபா  என்னைப் பார்க்க விரும்புகிறாரா என்று சிரித்தார். ஏதோ சிக்கல் இருப்பதாக நான் உணர்ந்தேன். குழந்தை அசைவில்லாமல் இருந்தது. பிரசவ வலியை ஏற்படுத்தப் போவதாக டாக்டர் சொன்னார்.

'சிமைன் கார்டன் ஸ்' நர்சிங்ஹோமில் அட்மிட் ஆனேன். தீவிரமான பிரசவ வலி ஏற்பட்டுக்கூட  குழந்தை வெளியேறவில்லை. மாலை 6 மணி வரை பிரசவமாக வில்லை யென்றால் சிசேரியன் செய்து விடலாம் என்று டாக்டர் சொல்லி விட்டுப் போக அதுவரை பொறுமையாக இருந்த என் அம்மா கோபத்தில் வெடித்தார். என்ன செய்கிறார் உன் பாபா? முதல் இரண்டு குழந்தைகளும் சுகப்பிரசவத்தில் பிறந்திருக்கும் போது மூன்றாவது குழந்தை அறுவைச் சிகிச்சை செய்ய என்ன அவசியம் என்று புலம்பினார்.அம்மா கவலைப்படாதீர்கள். சுவாமி 6 மணிக்கு வந்து பிரசவம் பார்ப்பார். குழந்தை நல்லபடி  பிறக்கும் என்று சொன்னேன். சொல்லிவிட்டு பிரார்த்தனையைத் தொடங்கினேன். சுவாமி க்கு பஜனையைப்பாடத்தொடங்கினேன்.ஆரத்தி எடுக்கும் நலையிலிருக்கும் போது ஊதுவத்தியின் மணம் அடர்த்தியாக அறையெங்கும் பரவியதை உணர்ந்தேன். அதன் பிறகு மயங்கிப் போனேன். அப்போது நடந்ததை என் தாய் பிறகு சொன்னார். யாரோ என்னைத் தாண்டிக் கொண்டு கனவேகமாய் உள்ளே போவதை உணர்ந்தேன். காற்றில் மிக வேகமாய் அந்த இழுப்பை நான் நன்றாக உணர்ந்தேன்.  யாரோ என்னை கடந்து போவது தெரிந்தது.

அறைக்கு வெளியே அம்மாவை போகச் சொன்னதால் அவர் போய் விட்டாராம். மயக்கத்திலிருந்து நான் மீண்டதும் பக்கத்தில் பார்த்தேன். பெண் குழந்தை பிறந்திருந்தது. மருத்துவமனையின் டாக்டர் அந்த குழந்தையைப் பார்த்து அயர்ந்து போனார். மூன்று வளையங்களாய் கழுத்தைச் சுற்றிக் கொடி சுற்றிக் கொண்டு குழந்தை பிறந்திருந்தது. இதே போன்ற சிக்கல் அவர் மகளின் பிரசவத்தில் ஏற்பட்ட போது அந்த குழந்தை இறந்து போன தாம். உங்கள் குழந்தை இப்படிப் பிறந்து பிழைத்தது உங்கள் பாபாவின் கருணையால் தான் என்றார். என் கண்களில் நீர் நிறைந்தது. சுவாமி தான் இந்த சிக்கலான பிரசவத்தை தானே பார்த்திருக்கிறார். எப்பேர்ப்பட்ட அற்புதம். சாயி மாதாவின் கருணை.பகவானே பாபா உனக்கு நன்றி. உன் கருணையோடு  வொயிட் பீல்டில் சுவாமி உன்னை வந்து பார்க்க வேண்டும். என் தாயோடும் பிரித்வி பிரசாந்தோடும் பிரவீனாவோடும் உன்னை வந்து பார்க்க வேண்டும். தயவு செய்து வொய்ட் பீல்ட் ல் இருங்கள்.  ஒரு மின்விசிறி குக்கர் வெந்நீர் வரக்கூடிய அறையைக் கொடுக்கவேண்டும். எப்போது வருவதென்று சொல்லுங்கள் என்று கேட்டபடியிருந்தேன்.

ஏப்ரல் முதல் வாரத்தில் பாபா ' வொயிட் ்பீல்டு க்கு அழைப்பதாக கனவு வந்தது. புறப்பட்டோம். சுவாமியின் அருளால் திரு. திருமதி. அன்னிலா அவர்களுடைய வீட்டில் தங்கச் சொல்லினர். கேட்டபடியே எல்லாம் வீட்டிலிருந்த்து.ஓ பாபா என் ஒவ்வொரு பிரார்த்தனையையும் நிறைவேற்றுகிறாய் என்று நன்றி சொன்னேன். எல்லாம் கிடைத்தது. பகவானோ ஊட்டியில் இருப்பதாக செய்தி வந்தது .அம்மா ஊட்டிக்குப் போகலாம் என்றார். காலை சுவாமி இங்கு வருவதாகச் சொல்லி இருக்கிறார் கட்டாயம் வருவார் என்று சொல்லி காத்திருந்தேன். ஒரு வாரம் இங்கிருந்து விட்டுப் போவதாக திட்டம். பாபாவின் சங்கல்ப்படி என்ன நடக்கிறதோ நடக்கட்டும் என்றேன். அடுத்தநாள் மாலை நான்கு முப்பது மணிக்கு கிருஷ்ணன் சிலைக்கு முன் நாங்கள் அனைவரும் அமர்ந்திருந்தபோது புட்டபர்த்தி சக்கரவர்த்தி பெரியதொரு காரில் வந்து கொண்டிருந்தார். வண்டியை நிறுத்திவிட்டு அமர்ந்திருந்த கூட்டத்தை நோக்கி வந்தார். காற்றில் மிதந்து வருவது போல் என் முன் வந்து நின்றார். என்னையும் பிரவீனா வையும் புன்னகைத்தபடி ஆசீர்வதித்தார்.' இப்போது சந்தோஷமா அம்மா' என்று என்னைக் கேட்டு பாத நமஸ்காரம் செய்து கொள்ளச் சொன்னார்.

அங்கியைச் சற்று மேலே தூக்கி பிடிக்க குழந்தை பிரவீனாவை அவர் பாதங்களில் வைத்தேன். சுவாமி சொன்னார் நீ சந்தோசமாயிருந்தால் நான் சந்தோஷமாயிருக்கிறேன் .குழந்தை கிருஷ்ணரைப் போல வெகு அழகாகச் சிரித்தார் சுவாமி. பக்கத்தில் இருந்த என் அம்மாவும் அங்கு தங்கியிருந்த இரண்டு பெண்களும் ஆச்சரியத்தில் வாயடைத்துப் போயினர். ஏப்ரல் 16-ஆம் தேதி என் அம்மாவையும் பிள்ளைகளையும் கேட் அருகே போய் நிற்கச் சொன்னேன். அன்று மூத்த மகன் பிருதிவியின் பிறந்தநாள் .சுவாமி காரில் வந்தவர் இவர்களை நோக்கிக் கையசைத்து விட்டு ஊட்டிக்கு சென்று விட்டார். இதற்கிடையில் என் தோழியிடம் இருந்து செய்தி வந்தது. என் தோழியின் கணவருக்கு ஹார்ட் அட்டாக். பாபா வால் குணமானதென்றும் அவர்கள் வீட்டில் பாபா படத்திலிருந்து விபூதி கொட்டுகிறதென்றும் சொல்ல மனம் ஆனந்தத்தோடு பாபாவிற்கு நன்றி கூறியது. எப்படிக் குழந்தைகளோடு இனிவகுப்புகள் நடன வகுப்புகளெல்லாம் எடுக்க போகிறோமோ என்று நினைத்தபடி சென்றேன். ஒவ்வொரு முறையும் எனக்கு காவலிருந்து வழிகாட்டும் சுவாமி இப்போதும் வழி காட்டுவார் என்று அமைதியானேன்.

விசேஷ அழைப்பும் விசித்திர லீலையும்:

ஜூலை 1975 ல் குழு தோழருடன் சுவாமியை பார்க்க ஒயிட்பீல்டு சென்றேன். அழைக்கப்படக்கூடிய வர்களோடு நாங்கள் அங்கே அமர்ந்து இருந்தோம். அனேகமாக உள்ளே அனைவரும் போகத் தொடங்கிய போது நானும் என்னுடன் இருந்த ஐரோப்பியப் பெண்மணியும் உள்ளே போவதற்கு முன் சுவாமி கதவை மூடிவிட்டார். சுவாமி கன்னத்திலறைந்தாற் போலிருந்தது எனக்கு. இதற்காகவா இவ்வளவு தொலைவிலிருந்து சுவாமியை பார்க்க வந்தேன். எனக்குள் இதயம் வெடிக்கும் படியாக அழுதேன். சில நிமிடங்களில் சுவாமி வெளியில் வந்து உள்ளே இருப்பவர்கள் உடல் நலமில்லாதவர்கள். உங்கள் முறை இன்னும் கொஞ்ச நேரத்தில் வரும் என்று சொல்லிவிட்டு போனாரே பார்க்கலாம். மௌனமானேன். உள்ளிருந்தவர்கள் போனதும் எங்கள் இருவரையும் அழைத்தார்.

அந்தப் பேட்டியில் சுவாமி அந்த ஐரோப்பியப் பெண்மணியை பார்த்து பெரும்பாலும் பேசிக்கொண்டிருந்தார். இடையிடையே என்னை பார்த்தார். வேடிக்கை பார்த்தபடி இருந்தேன்.சுவாமி யின் ஐம்பதாவது பிறந்த நாளுக்கு வருகிறாய் இல்லையா?  என்று அந்தப் பெண்மணியை கேட்டார். குறும்பாக என்னைப் பார்த்தபடி 'உனக்கு ஸ்பெஷல் இன்விடேஷன் அனுப்புகிறேன்' என்றார். என்னை பார்த்தபடியே அந்தப் பெண்மணிக்குச் சொன்னார். பேட்டி முழுவதும் சுவாமியின் முகத்தில் புன்னகை பொங்கிக் கொண்டே இருந்தது. இடையில் சுவாமி வெற்றிலை போட்டு சிவந்த இதழ்களிலிருந்து வெற்றிலைச்சாற்றை ஒரு கைக்குட்டையில் துடைத்ததும் நான் நினைத்தேன், இந்த கைக்குட்டையை எனக்கு கொடுத்தால் என் பூஜை யறையில் வைத்துக் கொள்வேனில்லையா... சடாரென்று என்னைக் கூர்மையாக பார்த்தார். பிறகு புன்னகைத்துக் கொண்டார். வெளியே வரும்போது என் மீது தன் கரத்தை வைத்தபடி வெளியில் இருந்தவர்களிடம் சுவாமி சொன்னார். 'இவள் மிகவும் நல்ல பெண்' ஆனந்த வெள்ளத்தில் மிதந்தேன். மெய்மறந்தேன். சுவாமியின் இந்த நல் அறிக்கைதான் அநியாயமான முறையில் வெளிநாட்டில் 'டே கேர்' அசிஸ்டன்ட்களால் குற்றவாளி ஆக்கப்பட்டு ஓராண்டுக்கும் மேலாக மனவேதனையை பெரும் துன்பத்தை அனுபவித்த போதெல்லாம் என்னுடன் எனக்குத் துணையாக பலமாக காவலாக இருந்திருக்கிறது என்று சொல்லிக் கண்கள் பனித்தார் பிரியா.

அதன் பிறகு சென்னை வந்ததும் என், 'Grant Aunt' உனக்குத் தருவதற்கு அற்புதமான பொருளை வைத்திருக்கிறேன் என்று சொல்லி ஒரு பெட்டியை தந்தார். அதில் சுவாமியின் கைக்குட்டையில் சந்தனத்தில் பதிக்கப்பட்ட சுவாமியின் பாதங்கள் ஒளிர்ந்தன. ஆனந்தத்தில் திணறினேன். சுவாமி தன் வீட்டிற்கு வந்த போது இவர்கள் ஆசையாய் கேட்டு பதித்துக் கொண்ட தெய்வீக அடையாளமல்லவா? அந்த பாதங்களை பக்தியோடு தரிசித்தேன். அதில் சுவாமி புன்னகைத்தபடி தெரிந்தார். என்னை மறந்து நின்றேன். இருந்தாலும் அன்பாக சுவாமியின் தெய்வீக பொக்கிஷமாக அவர் வைத்திருந்த பொருளை எனக்குக் கொடுப்பதென்றால்... ஆன்ட்டி சொன்னார் 'இல்லை அது உனக்குரியது என்று' இது சுவாமியின் கருணைப் பரிசல்லாமல் வேறென்ன?

பாபாவின் 50 ஆவது பிறந்த நாள் விழா நெருங்கிக்கொண்டிருந்தது. சுவாமி பிரத்தியேகமான அழைப்பிதழை அனுப்புவேன் என்று சொல்லி இருந்ததை மறக்கவில்லை. ஆனால் சமிதியின் தலைவர், துணைத்தலைவர் மட்டுமே அழைக்கப்படுவார் என்று சொன்னபோது புலம்பினேன். பாபா எனக்கு தனிப்பட்ட அழைப்பிதழ் அனுப்புவதாகச் சொன்னாரே ஏன் இப்போது இப்படி? என் உறவினர்களும் நண்பர்களும் என்னை கேலி செய்யத் தொடங்கினார்கள். பாபா உனக்கு ஸ்பெஷல் அழைப்பிதழ் அனுப்பினாரா இன்னுமா அது உனக்கு வந்து சேரவில்லை என்று கேட்டுச் சிரித்தனர்.

என் நாட்கள் கண்ணீரோடு கரைந்தன. தலைவராக இருந்த என் தோழி 'வான்சா' (wansa) இந்தியாவிற்கு புறப்படத் தயாரானார். சுவாமிக்கு பூஜை செய்தபடி அழுதேன்.பாபா எல்லோரும் என்னை பார்த்துச் சிரிக்கிறார்களே.. எனக்கு ஸ்பெஷல் இன்விடேஷன் அனுப்புவதாய்ச் சொன்னாய். இங்கிருக்கும் பிரதிநிதிகளெல்லாம் நாளைக்கு கிளம்பப் போகிறார்கள். எப்பாடுபட்டாவது உன் பிறந்தநாளுக்கு வந்துவிட வேண்டுமென்று தவிக்கிறேன். என்னால் முடியவில்லையே. இப்போது சுவாமியின் படத்தில் சூட்டப்பட்ட சிவப்புச் செம்பருத்தி கீழே விழுந்தது. எனக்கு பதில் வந்துவிட்டது. ஆனால் எப்படி எப்போது நான் புறப்படுவேன்? அன்று இரவு நான் உறங்கும்போது சுவாமியின் பிரத்யட்சத்தை எங்கள் படுக்கும் அறையிலிருந்து பூஜையறை வரை செல்வதாக உணர்ந்தேன். இரவு ஒரு மணியிருக்கும்.தொலைபேசி மணியின் உரத்த சத்தம் என்னை எழுப்பியது. என் தோழி வான்சா தான்.

பிரியா, சங்கத்தின் துணைத் தலைவருக்கு திடீரென்று உடல்நலமில்லாமல் போயிருக்கிறது. அவளால் போக முடியாது. அவளுடைய இடத்தில் நீ புறப்படுகிறாயா? எப்படி இருந்திருக்கும் எனக்கு. ஆனந்தம் வெள்ளமாய்ப் பொங்கி என்னை மூழ்கடித்தது. எப்படி உறுப்பினராகக் கூட இல்லாதவர் எப்படி போக முடியும்? தவிர்க்கமுடியாத சூழலால் துணைத் தலைவருக்கு பதிலாக இன்னொருவர் பிரதிநிதியாக வர அனுமதி கேட்டு புட்டபர்த்திக்கு 'வான்சா' செய்தியனுப்பி, அவர்கள் வரச்சொல்ல அனுமதியும் வாங்கி விட்டார். பயணச்சீட்டு, விசா மற்றவையெல்லாம் தயாராக மாலை பிரயாணத்திற்கு கிளம்புவதற்குத் தயாராய் வந்துவிட்டன. எல்லாம் சில மணி நேரங்களில் தயாராகிவிட்டது .கையில் பணமில்லை. 'வான்சா' சொன்னார், என்னிடம் இருவருக்கும் போதுமான பணமிருக்கிறது கவலைப்படாதே. என் அன்பான சுவாமி என் பிரச்சனைகளைத் தீர்த்துக் கொண்டிருந்தார். ஓ பாபா உன்னிடம் வருகிறேன் உன்னிடம் வருகிறேன் என்று மகிழ்ச்சியில் பொங்கியது மனம்.

விமான நிலையத்தில் என் தந்தையின் பழைய நண்பரும் சாயி பக்தருமான சீனிவாசனை பார்த்தேன். நீ சண்முகராஜாவின் மகளில்லையா... ஹோட்டலில் தங்க வேண்டாம். என் வீட்டில் வந்து தங்க வேண்டும். எங்களுடைய அடுத்த நாள் ரயில் பயணத்திற்க்குரிய சீட்டுக்களையும் வாங்கிவிட்டார். அங்கு வெளியிடப்பட்ட சுவாமியின் ஐம்பதாவது பிறந்த நாள் விழா மலரை வாங்க முடியவில்லை என்று ஏங்கினேன். சீனிவாசனின் வீட்டிற்கு போனபோது உனக்கு ஒரு பரிசு வைத்திருக்கிறேன் என்று சொல்லி அந்த புத்தகத்தை அவர் தந்த போது சுவாமியின் கருணையை எப்படி என்னால் வியக்காமலிருக்க முடியும்? சுவாமியின் பிறந்தநாளன்று எதிர்பாராதவிதமாக கடுமையான காய்ச்சல் வந்துவிட்டது எனக்கு. பூரண சந்திர ஹால் பொது மக்களுக்காகவும் பிரதிநிதிகளுக்காகவும் முழுவதுமாக திறந்து வைக்கப்பட்டது. மிகுந்த பலவீனமாக இருந்ததால் என்னால் எழுந்து நிற்கக் கூட முடியவில்லை.

இரண்டு மணியிலிருந்து ஹால் கதவுகள் திறந்து வைக்கப்படுவதாக இருந்தது. வான்சாவும் பாமதி என்ற இன்னொரு தோழியும் சீக்கிரமே செல்ல பிரயத்தனப்பட்டுப் புறப்பட்டவர்கள் தயாரானார்கள். என் உடல்நிலை குறித்த கவலையோடு தயங்கித் திகைத்தனர். நீங்கள் முதலில் போங்கள் நான் எப்படியாவது வந்து விடுகிறேன் என்று அவர்களை அனுப்பி விட்டேன். மாலை 5 மணிக்கு காய்ச்சலால் உடல் நடுங்கி குளிர் தாங்காமல் சிவப்புநிற சால்வையைப் போர்த்திக்கொண்டு தள்ளாடியபடி பூரண சந்திர ஹாலை நோக்கி நடந்தேன். எனக்குத் தெரிந்தவரை பூரணச்சந்திர ஹாலின் நுழைவு வாயில்கள் எல்லாம் சாத்தப்பட்டு விட்டன. பின் வழியாக மேடைக்குச் செல்லும் ஒரு வழி மட்டும் திறந்திருந்தது. அது செக்யூரிட்டிகளின் பலத்த காவலோடு இருந்தது.அது சுவாமி பிரத்யேகமாகச் செல்வதற்கான வழி. தாமதமாக வந்தவர்கள் டி.வி. காமிராவால் மட்டுமே பார்க்க முடியும். என் பார்வையில் ஒருவரும் தென்படவில்லை. தனியாக நான் மட்டுமே இருந்தேன். காய்ச்சலோடு பிடிப்பதற்காக ஒரு டிவி கேமராவை பிடித்துக்கொண்டு தாளமுடியாத ஏக்கத்தோடு தேம்பினேன். இருதயம் வெடிக்கும்படியாக தேம்பினேன். பாபா இப்படி கதவிற்கு வெளியே வந்து கிடப்பதற்காகவா  இவ்வளவு தொலைவு வந்தேன். இதற்காகவா ஸ்பெஷல் இன்விடேஷன் கொடுத்தாய் என்று தேம்பியழத் தொடங்கினேன்.

அந்த விநாடியில் என் முதுகில் யாரோ தட்டியது போல் இருந்தது. திரும்பிச் சுற்றிப் பார்த்தேன். என் பின்னால் அழுக்கடைந்த சேலையோடு அருவருப்பான தோற்றத்தோடு ஒரு பிச்சைக்காரி நின்றாள். அவளைப் பார்த்ததும் பாராதது போல் திரும்பி மீண்டும் துன்பத்திலாழ்ந்தேன். மறுபடியும் என் முதுகின் மேல் ஒரு தட்டு விழுந்தது. சற்று எச்சரிக்கை உணர்வோடு திரும்பினேன். அவள்தான். ஏன் அழுது கொண்டிருக்கிறாய் என்று தமிழில் கேட்டாள். பூரணச்சந்திர ஹாலுக்குள் போக முடியவில்லையே என்று அழுகிறேன் என்றேன். வா உன்னை அழைத்துப் போகிறேன் என்று அவள் சொல்ல கண்களை மூடிக்கொண்டு அவளை பின்தொடர்ந்தேன். அவள் நேராக என்னை அழைத்துக்கொண்டு சுவாமி செல்லும் தனி வழியை நோக்கிச் சென்று கொண்டிருந்தாள். அந்த வாசலில் வந்து நின்றதை உணர்ந்தேன். பயந்து போய்ச் சொன்னேன். இல்லை இல்லை இந்த வழியில் நான் போகக்கூடாது என்றேன். சேவாதளத் தொண்டர்கள் என்னை வெளியே தள்ளிவிடுவார்கள் என்றேன். இல்லை இந்த வழியில் தான் நீ போகவேண்டும். இப்பொழுது நீ  உள்ளே போக வேண்டும் என்று அழுத்தமான ஆணையிடும் குரலில் அதிகாரத் தோரணையில் உத்தரவிட்டாள். ஜுரத்தினாலும் குளிரினாலும் நடுங்கியபடி ஏற்கனவே பலவீனமாக இருந்தவள்_மீற முடியாமல் அவள் உத்தரவின்படியே வேகமாக உள்ளே போய்விட்டேன். யாரும் தடுக்கவில்லை. உறைந்து போயிருந்த மூளை சுயமாய் சிந்திக்கும் திறனை இழந்து போயிருந்தது. அங்கிருந்து பின்னால் திரும்பி பார்த்தேன். அந்தப் பிச்சைக்காரி மறைந்து போயிருந்தாள்.

ஒ பாபா என் பிரார்த்தனையைக் கேட்டு நீ தான் அந்த பெண்மணியாக வந்திருக்க வேண்டும். நீ தான் அந்த பெண்ணாக வந்திருக்கிறாயென்றால் இப்போது உள்ளே போய் உட்காருவதற்கான வழியையும் எப்படியாவது ஏற்படுத்து என்று பிரார்த்தித்தேன். திடீரென்று பார்த்தால் நான் மேடைமீது இருந்தேன். யாரும் என்னை தடுக்கவில்லை. என் கீழே அலையலையாய் உட்கார்ந்திருந்த மக்களை, பக்தர்களை பார்த்தேன். வான்சாவும் பாமதியும் என்னை பார்த்து மகிழ்ச்சியாக கையசைத்தார்கள். இப்போது எங்கே உட்கார்வது? அந்த ஹால் முழுவதும் துழாவின என் கண்கள். மேடைக்கு நேரெதிராக கீழே தனியான முதல் வரிசை மிகச்சரியாக இருவர் மட்டுமே உட்காருவதற்கு வசதியாக இருந்தது. நன்றி நன்றி என்று சுவாமியின் கருணைக்கு நன்றி சொல்லிக் கொண்டே அங்கே அமர்ந்து கொண்டேன். பளீரென்று ஜொலிக்கும் வெண்ணிற வஸ்திரத்தோடு சுவாமி மேடைக்கு வந்தார். அழகிய நீல வண்ணத்திலும் வெள்ளை வண்ணத்திலும் குஷன் செய்யப்பட்ட வெள்ளி ஜூலாவில் அமர்ந்து ஊஞ்சலாடினார். ஒரு பக்தர் ஓடிவந்து மாலையிடவும் சுவாமி என்னைப் புன்னகைத்தபடியே பார்த்தார். ஆனந்தத்தில் மெய்ம் மறந்து போனேன். பிறந்தநாள் வைபவம் தொடர்ந்து சிறப்பாக விமரிசையாக நடந்தது. வைபவமானதும் சுவாமி தான் அணிந்திருந்த ரோஜா மாலையை ஜூலாவில் போட்டு விட்டு சென்று விட்டார். எனக்கு பக்கத்தில் உட்கார்ந்திருந்த மிக விலை உயர்ந்த ஆடை ஆபரணங்கள் அணிந்து பகட்டான தோற்றத்திலிருந்த பெண்மணி எழுந்து ஊஞ்சல் அலங்காரங்களை ஒழுங்குபடுத்த தொடங்கினார்.

அவருக்கு உதவ நான் உடன் சென்றேன். திடீரென்று ஒரு பெண் சேவாதளத் தொண்டர் என் தோளில் தட்டி நீங்கள் யார் என்று கேட்டார். நான் உதவிக் கொண்டிருந்த பணக்காரப் பெண்மணியிடம் நீங்கள் யார் என்று நான் கேட்க, 'நான் ஜெய்ப்பூர் மகாராணி' என்று பதில் வந்தது. தொடர்ந்து சொன்னார் 'இந்த வெள்ளி ஜூலாவை கொண்டு வந்து கொடுத்தவள் என்று சொல்லிவிட்டு, சேவாதளத் தொண்டரிடம் அவளை விட்டு விடு எனக்கு அவர் உதவி செய்து கொண்டிருக்கிறார் என்றார். அதிர்ந்து போயிருந்தேன். இருந்தும் வேலையை வேகமாகச் செய்து முடித்தவளின் கண்களில் அந்த ரோஜா மாலை பட்டது. எடுத்துக்கொள்ளலாமா? எடுத்துக் கொண்டேன். அப்போதும் யாரும் என்னைத் தடுக்கவில்லை. வெற்றிகரமாக அந்த வழியில் முன்னதாக வெளியில் வந்துவிட்டேன். வான்சாவும் பாமதியும் பெரிய புன்னகையோடு எனக்காக்க் காத்திருந்தார்கள். கணத்தில் என் கையிலிருந்த மாலையை அவர்களிடம் தந்துவிட்டு தரையில் விழுந்து மயக்கமடைந்தேன். என்னைப் பெரிதும் அதிர்ச்சிக்குள்ளாக்கியதால் எனக்குள் அப்போது உருவான தெய்வீகப் பரவசநிலை ஒரு வருடத்திற்கு மேல் எனக்குள் நிறைந்திருந்தது என்று சொல்லி கண்களை மூடினார் பிரியா.

எப்பேர்ப்பட்ட மகாபாக்கியம். ஆண்டவனின் தனியான அன்பழைப்பு. தானே அழைத்துப்போய் சந்தோஷந் தந்து தனிப்பட்ட கவனிப்பு பிரத்தியேக சலுகை.. அனுக்கிரகம்... தெய்வீகப் பார்வை... புன்னகை.. மாலை என்று எல்லாவற்றையும் ஒருசேர அடைந்த இந்த பக்தையின் மனநிலை எப்பேர்ப்பட்ட ஆனந்த சாகரத்தில் மூழ்கிப் போயிருக்கும். இன்னொரு சம்பவத்தை குறிப்பிட்டார் பிரியா. கனடாவில் டொரோண்டோவிலிருந்து போது ஹேமில்டனில்  இருக்கும் மாக் மாஸ்டர்  பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருந்த மகன் பிருதிவியை பார்ப்பதற்குப் புறப்பட்டோம். எதிர்பாராமல் கார், பனிப்பாதையில் சிக்கிக் கொண்டது. என் கணவர் காரை மீட்கப் போராடினார். பின்னால் வரும் கார்களுக்கு நேரப்போகும் அழிவு பீதி யடையும் காட்சிகளாக எனக்கு வரவும் 'சாய்ராம்' என்று பயந்து அலறினேன். 'கிளிக்' என்ற சத்தத்துடன் கார் இயல்பான நிலைக்கு வந்து நின்றது. ஒரு கட்டுப்பாட்டுக்கு வந்து வண்டி நின்றது. அண்ட வெளியையும் தூரத்தையும் கடந்து என் குரல் சுவாமியை எட்டியிருக்கிறது. பாபாவின் பிரத்யட்சத்தை அருகாமையை மிக அதிகமாகவே உணர்ந்தேன். அன்று நாங்கள் பிழைத்து மீண்டது பெரிய அற்புதம் என்று சொல்லும் ப்ரியா தன் அனுபவத்தைச் சொன்ன போது மனம் அதிர்ந்து போனது.

வினோத வழக்கும் சோதனையும்:

16 வயதாயிருக்கும் போது  EHV வகுப்புகளை எடுத்திருக்கிறேன். இதன்பிறகு ஆப்பிரிக்காவில் இருந்தபோது 10 ஆண்டுகளாகத் தொடர்ந்தேன். கனடாவில் வசிக்க வந்த பிறகும் சுவாமியின் அருளால் இந்தப் பணியை தொடர்ந்தேன். ஸ்ரீலங்கா, ஜாம்பியா, கனடா என்று இப்பணி தொடர்ந்து வந்தது. பகவானின் அருளால் ஆறு வருடம் "Early Childhood Education, ECE" படித்தேன். டொரோண்டோ வில் சென்டரில் போய் இறங்கியதும், உடனடியாக பாலவிகாஸ் வகுப்பெடுக்கும் வாய்ப்பு அங்கு ஒய்எம்சிஏ யில் பேச்சுப் பயிற்சிக்கு அழைத்துச் செல்லப்பட இருந்த ஒரு குழந்தையை சுவாமி மூன்று மாதங்களில் பேசவைத்தார் என்கிறார். Day Careல் பிரியாவின் பணி அனைவரையும் ஈர்த்தது. பெற்றோர் அனைவரும் பிரியாவிடமே குழந்தைகளை விட விரும்பினர். நடனம், பாட்டு, ஆழ்ந்த தெய்வ நம்பிக்கை, ஆன்மிகப் பக்குவம், நேர்மை, கடுமையான உழைப்பு எல்லாவற்றுக்கும் மேலாக கடவுள் பாபாவின் துணை பிரியாவிற்கு எங்கும் வெற்றியைக் கொடுத்தது. அங்கிருந்த ஆசிரியர்களும் அனைத்துப் பெற்றோர்களும் ப்ரியாவின் மேல் மிகுந்த மரியாதை கொண்டிருந்தனர்.

25 ஆண்டுகளில் ஒரு முறை யான நல்லதொரு பயிற்சியும் பக்குவமும் கிடைத்தது. 'எக்ஸிகியூட்டிவ்  ஆப் டே கேர்' ல்  ஏப்ரல் 1991 லிருந்து மூன்று முறை போர்டு உறுப்பினர்கள் மாற்றியமைக்கப்பட்டார்கள். அதற்குள் அரசியல் புகுந்து விளையாடத் தொடங்கியது. 'சைல்ட் கேரில்' மேலாளரின் பாராட்டுதல்களைத் தன் பணிக்காகப் பலமுறை பெற்றிருந்த பிரியாவிற்கு சோதனை தொடங்கியது. மிகவும் நெகிழ்ந்துருகும் குரலில் விவரிக்கத் தொடங்கினார் பிரியா. 1991 அக்டோபர் 3 ஆம் தேதி வேலையை விடும்படி கேட்டுக் கொள்ளப்பட்டேன். என் உதவியாளர்களாக இருந்த ரீனா, மாயா, 'treasurer' மூவரும் என்மேல் பொறாமையின் பேரில் தவறான குற்றச்சாட்டுகளை உருவாக்கினர்.' டே கேரைச்' சேர்ந்த மூன்று குழந்தைகளை தவறான நெறியில் செலுத்தியதாக குற்றம்சாட்டப்பட்டேன். குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பகத்தில் நான் விசாரணைக்கு அழைக்கப்பட்ட போது ,85 சதவீதத்திற்கு 'டே கேர்' குழந்தைகளின் பெற்றோர்கள் வெளியில் எனக்கு ஆதரவாகக் கூடி நின்றனர்.

அக்டோபர் எட்டாம் தேதி மீண்டும் அங்கு நான் அழைக்கப்பட்டேன். இரண்டு காவல் அதிகாரிகள் குழப்பியடித்தபடி குறுக்கு விசாரணை செய்தனர். 40 நிமிட கடுமையான விசாரணைக்கு பிறகு போலீஸ் அதிகாரி என்னைக் கைது செய்தார். அதிர்ச்சியில் உறைந்து போனேன். பகவானே என்று சத்தமில்லாமல் அழைத்தேன். காலிலிருந்து தலை வரை ரத்தம் வேகமாக பரவியது. அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் பரிந்து பேசிக் கெஞ்சினர். இவர் ஒரு நல்லாசிரியர் இப்படிக் கட்டாயம் தவறு செய்திருக்க மாட்டார் என்று கெஞ்சினர். அது எடுபடவில்லை. சாய்ராம் சாய்ராம் சாய்ராம் என்று கண்களை மூடி தியானித்த படியே இருந்தேன். சந்தோஷி மாதாவிற்கு விரதம் இருந்த நாள் அன்று. 15 ஆண்டுகளாக உனக்கு விரதம் இருந்ததற்கு இதுதான் நீ செய்யும் பலனா ?  ஏன் சாய்ராம் ஏன்? போலீசாரால் கைது செய்யப்பட்டு அழைத்து செல்லப்பட்டேன். ஒரு சிறிய அறையில் அடைத்தனர். ரத்தக் கண்ணீர் பொழிந்தது என் கண்களிலிருந்து. ஆபத் பாந்தவா இதென்ன விபரீத சோதனை நீ நினைத்தால் இதெல்லாம் நேராமல் என்னைக் காப்பாற்றி யிருக்க முடியும். வீட்டை விட்டு வெளியே வருவதிலிருந்து பயணம் போனாலும், எங்கு போனாலும் உன் நாமத்தைத்தானே சதா சொல்லிக் கொண்டிருந்தேன். உன் தாமரைப் பாதங்களை தானே நினைத்துக்கொண்டிருந்தேன். ஏன் இப்படி ஆனது? சுவாமியின் பளுவான பணிச்சுமையால் என்னை மறந்து போனாயா?

4 மணிநேரம் சிறையில் வைக்கப்பட்டிருந்தேன். மனதில் சாயி பஜன்களை பாடியபடி இருந்தேன். மூன்று பஜன்களை மனதில் நடத்தினேன். கிருஷ்ணா, கேசவா, மாதவா, அம்மா லலிதா உனக்கு பூஜையும் அபிஷேகமும் செய்த கைகளில் விலங்கு பூட்டியிருக்கிறாயா என்று அழுதேன். என் கணவர் விரைந்து வந்தார். குற்றத்தை ஒப்புக் கொண்டால் தண்டனை குறையுமென்றார்கள். என் கணவரும் பிள்ளைகளும் என்னிடம் மன்றாடிக் பார்த்தார்கள். நான் கண்மூடி பிரார்த்தித்தேன். சுவாமி கூடாது என்று மறுதலித்தார். நான் செய்யாத குற்றத்தை ஒப்புக்கொள்ள முடியாது என்று சொல்லிவிட்டேன். பெயிலில் வெளியே வந்தேன். ஒரு வாரமாக வீட்டில் அழுதபடி இருந்தேன். அடுத்த வியாழனில் இரண்டு கடிதங்களை எழுதினேன். ஒன்று பகவான் பாபாவிற்கு. இன்னொன்று என் அம்மாவிற்கு. பூஜை அறையில் ஏதோ சத்தம் கேட்டது. பார்த்தால் இயேசு சிலுவையில் இருந்து நீங்கி படுத்திருக்கும் நிலையில் மேஜையில் இருந்தார். இயேசுவையும் பாபாவையும் மாறி மாறிப் பார்த்தேன். மிகப்பெரிய துன்பங்களுக்கும் பிறகு ஆபத்திலிருந்து நீ வெளியே வந்து விடுவாய். இன்னும் கொஞ்ச காலம் போக வேண்டும் என்பதான செய்தி கிடைத்தது. மனம் கோபத்திலிருந்தும் கொந்தளிப்பிலிருந்தும் விடுபட்டு அமைதியானது.

வெளியே வந்து நடக்கத் தொடங்கினேன். திடீரென்று ஒரு கருப்பு நிறக் கார் வந்து நின்றது. வெள்ளை பயணியோடு, வெள்ளை உடையணிந்திருந்த கருப்பு நிற டிரைவர், ஏறிக்கொள் நான் உன்னை இறக்கி விடுகிறேன் என்று சொல்லி தன் பாக்கெட்டிலிருந்து சிறு புத்தகத்தை எடுத்து தந்து கவலைப்படாதே உனக்கு கடவுளிடமிருந்து வந்த பரிசு இது என்று சொல்லி இறக்கி விட்டுப் போக மிதப்பது போன்ற மயக்கநிலையில் மெய்மறந்த நிலையில் நடந்து வந்தேன். இந்த கருப்பு டிரைவர் யார்? கடவுளா? தட்டி வெட்டி உருக்கி உருக்கி புடம் போடத் தான் தங்கம் ஒளிர்கிறது. ஒவ்வொரு முறை நெருப்பிலிடப்பட்டு வெளிவரும் போதும் அது மேலும் மேலும் தூயதாகிறது. கவலையும் வேதனையும் எப்போதும் எக்காலத்திலும் வெவ்வேறு விதமாக இருந்து கொண்டேதான் இருக்கிறது. தெய்வத்திடம் நம்பிக்கை வைத்து சரணாகதி அடைந்து விடும் போது எல்லாம் மறைந்து போகிறது. பகவானின் அனுமதியோடு கிரிமினல் லாயரிடம் சென்று வழக்கு தொடர்பான முன் பின் விவரங்களையெல்லாம் புத்தக வடிவில் எடுத்துக் தந்திருக்கிறார் பிரியா. மனநோய் மருத்துவரிடம் செல்லும்படி அறிவுரைக்கப்பட என்னை நானே நொந்து கொண்டேன். இது என்ன கர்மவினை என்று வருந்தினாலும் 'போ' என்று சுவாமி சொன்னது போல் இருந்தது.

அவ்வண்ணமே இரண்டு வாரங்களுக்கு மனநோய் மருத்துவரிடம் சென்றிருந்தேன். அது வீட்டுச் சூழ்நிலையாய் இருந்தது. அந்த மருத்துவரின் அறிவிப்பும் வழக்கிற்கு சாதகமாக இருந்தது. கோர்ட் அழைப்பு அடுத்தடுத்து வரத்தொடங்கவும் மனம் அலைக்கழிக்கப்பட்டது. உலகமே தனக்கெதிராகத் திரும்பியது போல் மனம் உடைந்துப் போனார் பிரியா. ஒரு வியாழக்கிழமை 11 மணிக்கு பாகவதத்தை கையில் வைத்தபடியே மன அயர்வில் தூங்கிப் போக பூஜை அறையில் இருந்து குழந்தை கிருஷ்ணன் ஓடி வந்து தன்னை இறுகப் பிடித்துக் கொண்டாற் போன்ற உணர்வு ஏற்பட்டது. பூஜையறையில் மிகப் பிரகாசமாக விளக்கு எரிந்தது. எழுந்ததும் விவரிக்க முடியாத ஆனந்த தெய்வீக உணர்வு ஏற்பட்டிருந்தது. வழக்கை தைரியமாக எதிர்கொள்ளும் மனோதிடம் வந்தது. வழக்கு ஓராண்டுக்கும் மேலாக இழுத்தடிக்கப்பட்டது. வழக்கும் தொடர்ந்த செலவுகளும் மிகுந்த பணச் செலவையும் இழப்பையும் ஏற்படுத்திவிட்டன. புட்டபர்த்திக்குப் போய் சுவாமியை பார்க்கும் எண்ணம் தீவிரமாக வந்தது. 1992 பிப்ரவரியில் ஒருநாள் இரவு உறங்கிக் கொண்டிருந்தபோது கனவில் பாபா முருகனாய் வள்ளி தெய்வானையுடன் வெள்ளித் தேரில் வேகமான சப்தத்துடன் வருவதைக் கண்டேன். தேரின் பின்னால் பிரியா இருக்கிறார். ரதம் வேகமாகச் செல்கிறது. இருபுறமும் மக்கள் வேடிக்கை பார்க்கிறார்கள். வேகமாக பாபா ரதத்தை ஓட்டுவதால் சக்கரங்கள் உருளும் ஓசையும்  குதிரைகளின் குளம்படியும் பலமாக கேட்டுக்கொண்டே இருந்தது. தெய்வீக சாரதி என்னை ஏற்றிச்செல்ல வந்து விட்டதை உணர்ந்தேன்.

ஏப்ரல் மாதத்தில் சிவனும் பார்வதியும் தரிசனம் தர காமதேனு பிரியாவை பார்த்துச் சிரிப்பது போல காட்சி வந்தது. மே மாதம் இன்னொரு கனவில் அம்மாவுடன் கோவிலுக்குப் போக கருவறையில் திரை மூடி இருப்பதை பார்த்து அம்மா திரும்ப பிரியா ஆவலுடன் சென்று திரையை விலக்க... போரில் அசுரர்களை அழித்து ஆனந்த நடமிடும் நர்த்தன கணேசரைப் பார்த்து ஆனந்தமடைந்திருக்கிறார். அடுத்த நாள் இரண்டு யானைகள் வந்து தமக்கு  மாலையிடுவதாக கனவு கண்டிருக்கிறார். பாபாவின் படத்திலிருந்து ஒவ்வொரு பிரார்த்தனைக்கும் பூ விழுந்துகொண்டே இருந்தது. அர்த்தநாரீஸ்வரரின் காட்சி வந்தது. பாபாவிடம் போக வேண்டும் என்ற உந்துதல் ஏற்பட்டபடி இருந்தது. சுவாமி, மூன்றுவித கிரிமினல் வழக்குகள் இருக்கும்போது எப்படி நாட்டை விட்டுக் கிளம்புவது என்று கேட்டுக் கொண்டேன். இடையறாது சுவாமியிடம் என்னை அழைக்கும்படி பிரார்த்தித்தபடியிருந்தேன். என் தந்தை உடல் நலமில்லாமல் இருப்பதாக என் தாயிடமிருந்து தந்தி வந்திருந்தது. என் வழக்கறிஞரிடம் சொல்லி விட்டுப் புறப்பட்டு விட்டேன். அப்போது வொயிட் ஃபீல்டிலிருந்தார் சுவாமி. மகள் பிரவீணாவோடு அங்கு போனேன்.

ஜன நேரத்தில் ஹால் நிறைந்து வழிந்தாலும் முதல் வரிசையில் இடம் கிடைத்தது. பாபா தரிசனத்திற்கு வந்ததும் கொண்டு வந்திருந்த பக்தர்களின் அத்தனை கடிதங்களையும் நீட்டினேன். பாபா வாங்கிக்கொண்டார். பாத நமஸ்காரம் செய்து கொண்டேன். புன்னகைத்து விட்டுப் போனார். அடுத்தநாள் பிரவீணாவும் நானுமாய்ச் சென்று பாத நமஸ்காரம் எடுத்துக்கொண்டோம். பிரியா.. லஷ்மி இருவரும் இன்னும் நிறைய சர்வீஸ் செய்யவேண்டும் என்றார் சுவாமி. புறப்படும் நாளன்று சுவாமியிடம் பாத நமஸ்காரம் எடுத்துக்கொண்டு சுவாமி 'கோர்ட் கேஸ்' என்று  கேட்கத் தொடங்க' ஆம் ஆம் ஆம் அதை என்னிடம் விட்டுவிடு(yes yes yes leave it to me ) என்றார். சுவாமி என்னைப் பார்த்தார். ஒரு விதமான சுடர் எனக்குள் பாய்ந்ததை உணர்ந்தேன். சுவாமிக்கு எல்லாவற்றுக்குமாக நன்றி சொல்லியபடி புறப்பட்டேன். சுவாமி புறப்படுகிறோம் என்று சொல்ல, 'ரொம்ப சந்தோஷம் அம்மா' என்றார். நீதிமன்றத்தில் வழக்கு வரும் நாள் நெருங்கிக்கொண்டிருந்தது. ஒரு சிறுமியை அடித்து காயப்படுத்தியது, எடுத்த வாந்தியை உண்ணும்படி ஒரு சிறுமியை வற்புறுத்தியது, ஒரு சிறுவனை நாற்காலியின் மேல் தள்ளி காயப்படுத்தியது என்று ரீனா மாயா என்ற என் உதவியாளர்களால் உருவாக்கப்பட்ட குற்றச்சாட்டுகளால் நேர்ந்த வழக்கு இது.

அடிக்கடி தவறுகள் செய்து என்னால் கண்டிக்கப்பட்டு வந்த அந்த உதவியாளர்கள் செய்த சூழ்ச்சி இது. ஆனால் பெற்றோர்களின் ஆதரவான சாட்சிக் கடிதங்கள் தனக்கு பெரிதும் வலுச் சேர்த்தன என்கிறார் ப்ரியா. என் பணியை ஐந்து முறை வருகை தந்த போதும் பாராட்டிய எக்ஸ்க்யூடிவ் ஆபீசரின் அங்கீகாரம் வழக்கிற்குப் பெரிதும் துணையாயிருந்தது. பாபாவின் நாமத்தை உச்சரித்தபடியே மானசீகமாய் பாபாவின் பாதங்களுக்குப் பூஜை செய்தபடி இருந்தேன். ஒரு நாள் காலை தியானத்திலிருக்கும்போது சுவாமி நீ என்னுடன் இருக்கிறாயா என்று கேட்டேன். செப்புச் சீரடி பாபா சிலை, கிருஷ்ணன் சிலை, இயேசுவின் சிலை சப்தத்துடன் விழுந்தன. அடுத்தநாள் சீரடி பாபா கனவில் வந்து என் கைகள் நிறைய மல்லிகைப் பூக்களைத் தந்து கையை அழுத்திவிட்டார். நீதிமன்ற தீர்ப்பு வருமன்று விடியலுக்குள் பூஜை அபிஷேகம் செய்து ஆரத்தி எடுத்து சமையல் முடித்து மகளுக்கு மிக நிதானமாய் அறிவுரை செய்தேன். இன்று நீ நீதிமன்றத்திற்கு வரவேண்டும். புல்லாங்குழல் கச்சேரியில் நீ வாசிக்கப் போக வேண்டுமில்லையா? இன்று தீர்ப்பு. என்ன பகவானின் சங்கல்பமோ? உணவு சமைத்து பிரீசரில் வைத்து இருக்கிறேன். உனக்கு சமைக்கக் கற்று தந்திருக்கிறேன். ஒன்று சொல்கிறேன் பகவானின் பக்தர்கள் என்று சொல்லிக்கொண்டு உட்கார்ந்திருக்கக்கூடாது. எதையெல்லாம் சுவாமி சொல்லியிருக்கிறாரோ அதன்படியெல்லாம் நடந்து நிறைய சர்வீஸ் செய்ய வேண்டும்.

கரும்பை ஆலையிலிட்டு பிழிவது போல்  நம்மைப் பிழிவதே இனிமையான சாறை நம்மிடமிருந்து பெறத்தான். எனக்கு இப்படி நேர்ந்ததற்காக நான் கவலைப்படவில்லை. வாழ்க்கையை தைரியமாக அணுகு. சொல்லிக்கொடுத்த ஸ்லோகங்களைச் சொல்லி வா. தியானம் வழிபாடு எல்லாவற்றையும் சோதனைக் காலத்தில் தான் இன்னும் சரியாகச் செய்ய வேண்டும். சிறு போதிருந்து ஆன்மீகப் பாடங்களை படித்து வந்திருக்கிறேன். 16 வயதிலிருந்து (human values) நடத்தி வந்திருக்கிறேன். மகான்களுடைய தரிசனம் ஸ்பர்சம் சம்பாஷணமே எனக்கு இந்த சோதனையைத் தாங்கும் சக்தியை தந்திருக்கிறது. பகவான் பாபா வந்து உண்மையை உலகிற்கு வெளிப்படுத்துவார். பாபாவிடம் நம்பிக்கையோடிரு என்று மகளை உட்கார வைத்து வெகு நிதானமாய்த் தெளிவாய் பேசினேன். காலையில் Richard hill கோவிலுக்குப் போனேன். லக்ஷ்மியை வழிபடும்போது தொலைபேசி மணி கேட்டதுபோல் இடைவிடாமல் மணியோசை கேட்டுக் கொண்டேயிருந்தது. ஓம்கார நாதம் ஓயாமல் கேட்டபடி யிருந்தது. அனேகமாக எனக்கு நெருங்கிய சாயி குடும்பத்தினர் அனைவரும் நீதிமன்றத்தில் இருந்தார்கள். உதவி வழக்கறிஞரோடு உட்கார்ந்திருந்தேன். என் அம்மா எனக்கு தந்த பாபாவின் மோதிரத்தை முத்தமிட கைகளை உயர்த்தினேன். பாபாவின் படம் அதிலிருந்து காணாமல் போயிருந்தது. 'ட'  என்ற எழுத்து மட்டும் காணப்பட்டது. பாபா  எங்கே எங்கே எங்கே என்னை விட்டு போய் விட்டீர்கள் என்று அதிர்ச்சியில் புலம்பினேன்.

சர்வேஸ்வர சாயி வந்தார்:

11.45 க்கு நீதிபதியின் இருக்கைக்கு முன்னிருந்த சீட்டில் அமர்ந்தேன். கண்களை மூடி பாபாவை தியானிக்க ஆரம்பித்தேன். சாய்ராம் சிறைக்கு நான் போகவேண்டுமென்பது உன் சங்கல்பமானால் புன்னகையுடன் போவேன். சுவாமி என் குடும்பத்தையும் குழந்தைகளையும் பார்த்துக் கொள்ள வேண்டும். இங்கிருக்கும் சாயி குடும்பத்தினர் அனைவருக்கும் இந்தத் துன்பத்தைத் தாங்கும் சக்தியைக் கொடுக்க வேண்டும். உன்னை முழுவதுமாக நான் சரணடைந்து விட்டேன். இப்பிறவியிலோ, முற் பிறவியிலோ என்ன தவறு செய்திருந்தாலும் என்னை மன்னித்துவிடு. உலகத்திற்கு உண்மையை நீ உணர்த்த வேண்டும். எந்தத் தவறையும் நான் செய்யவில்லை என்பது உனக்கு மட்டுமே தெரியும். எதற்காக பூமியில் அவதரித்தாயோ அந்த உண்மையை பூமிக்கு உணர்த்த வேண்டும்.

நல்லவரைக் காத்து தீயதை அழிக்க விரைந்து வா திரௌபதியின் மானங் காத்தாய் 

பக்தனுக்காக நரசிம்ம மூர்த்தியாய்த் தோன்றினாய்

ஹிரண்யகசிபுவை அழித்தாய்

 முதலையின் பிடியில் சிக்கி ஆதிமூலமே என்று அலறிய கஜேந்திரனைக் காத்தாய்

பிரியா உன் அடிமை ஓ சாயி கிருஷ்ணா

 உண்மையினை வெளிப்படுத்த உன்னை அழைக்கின்றேன்

உண்மையே பேசி உண்மையோடு செயல்படும் ஜீவனுக்கு தெய்வமே  காவலாகிறது.

ஓ  ஹரி வா வந்து என்னைக் காப்பாற்றுவாய் என்று பிரார்த்தித்தபடியே மணியோசையின் சப்தமும், ஓங்கார சப்தமும் எழ அந்த சப்தத்திலேயே ஆழ்ந்து போனேன். அவ்வளவுதான்... என் மோதிரத்திலிருந்து சுவாமி வெளியே வந்தார். என் கடவுள் வந்து விட்டார். இளம் நீல நிறத்தில் சோர்ந்து தெரிந்தார். திடீரென்று அடர்ந்த நீல நிறத்தில் விகாரமான நீல நிறத்தில் தோன்றினார். அப்படியே கிளம்பி நீதிபதியின் தலைக்கு மேலே இப்புறமும், அப்புறமுமாய்   சென்றார். அவரிடமிருந்து தெறித்த பொறிகள் நீதிபதியின் மேல் விழுந்து கொண்டிருந்தன.இந்தக் காட்சி ஆழ்ந்த மயக்க நிலையிலும் எனக்குத் தெளிவாகத் தெரிந்த படியிருந்தது. அதன் பிறகு ஒன்றுமில்லை. ஒன்றும் தெரியவில்லை .

பிரியா எழுந்திரு போகலாம் என்று யாரோ என்னை எழுப்பவும் கைகளை நீட்டினேன். விலங்கு மாட்டுவதற்குத் தயாராய்... எழுந்ததும் சாயித்தோழி பிரீத்தி ஓடி வந்து என்னை அணைத்துக்கொண்டாள். 'பாபா வந்துவிட்டார்,பாபா வந்துவிட்டார், பாபா  வந்து உன்னைக் காத்து விட்டார்'. நான் அவள் கைகளில் விழுந்தேன். ஒருவரை ஒருவர் அணைத்துக்கொண்டு ஆனந்தம் தாங்காமல் அழுதோம். வந்திருந்தவர்களெல்லோரும் அழுது விட்டனர்.

நடந்ததை விவரித்தார்கள்…  நடந்தது இதுதான்;

அதுவரை பிரியாவை குற்றவாளியாகவே பேசிக்கொண்டிருந்த நீதிபதி, சுவாமி அவர் தலைக்கு மேல் பறந்து, பொறிகள் விழுந்த பின்பு அமைதி இழந்திருக்கிறார்.  நாற்காலியைமுன்னும் பின்னுமாகத் தள்ளியிருக்கிறார். அதன் பிறகு 30 செகண்டுகளுக்குப் பிறகு இப்படிப் பேசியிருக்கிறார்.

இந்த நல்ல பெண்மணி, உயர்ந்த பெண்மணி, நீண்ட நெடுங்காலமாய் நல்ல பணிகளையே செய்து வந்த பெண்மணி ஒன்றரை வருடங்களுக்கு மேல் பெரும் துன்பத்தை அனுபவித்து விட்டாள். அது போதும் போதும் என்றால் போதும். அவளுடைய முழுச் சமூகமும், அவளுடைய ஒட்டுமொத்த சமூகமும் அவளுக்கு பின்னால் இருப்பதைப் பார்க்கிறேன்.  இந்த நல்ல பெண்மணி குற்றமற்றவள்.  இன்றிலிருந்து எந்த 'டே கேரி'லும் பணிபுரியலாம்.

(This fine  Women a great women who Has Done service for such a long time had suffered for 1.6 years. That is enough enough is enough.Her whole community knows about it. I Can see the whole community is behind her.  This good woman can work in any Day care from Today)

நீதிபதிக்குள்ளிருந்து சுவாமி சத்யமாய் வெளிப்பட்டு விட்டார். என் மானங்   காத்துவிட்டார். சாயி கிருஷ்ணா நன்றி. உண்மையைக் காத்து விட்டாய். உலகிற்கு உண்மையை உணர்த்தி விட்டாய். காற்றின் தெய்வம் நீ, நீரின் தெய்வம் நீ, என்னுடைய ஆயிரக்கணக்கான நன்றி மலர்களை உனக்குக் காணிக்கையாக்குகிறேன். தெய்வம் பாபாவை தலைகுனிந்தபடி வணங்கினேன். அவரே என் கடவுள்- உலகின் கடவுள்.

மிகப்பெரிய ஆபத்திலிருந்து சாயி பிரியாவை மீட்டெடுத்திருக்கிறார். ஆபத்பாந்தவன் அநாத ரட்சகனாய் வந்து தன் பக்தையைக் காத்துவிட்டார். வெளிநாட்டில் அநியாயமாகக்குற்றம் சாட்டப்பட்டு சொல்லொணாத துன்பத்தை அனுபவித்த தன் பக்தையின் மானங்காத்து சத்யத்தை நிரூபித்து குற்றஞ்சாட்டிய நீதிபதியையே புகழ வைத்து விடுதலை தந்து வெற்றி மாலை சூட்டி விட்டார் சுவாமி. திரௌபதியின் மானங்காத்த நீலமேக சியாமளனாய் அல்லவா நீதிமன்றத்தில் நீலவண்ண சாயியாக வந்து பிரியாவின் மானங்காத்து விட்டார். பாபாவின் தெய்வீகத்தை உலகறிந்து கொள்ள இந்த பக்தையின் எல்லையற்ற பக்தி... எல்லையற்ற கருணையை ஆனந்தமாய் அடைந்திருக்கிறது. பிரேமையின் கடவுள் பாபா என்று கனிந்துருகிய பிரியாவின் அனுபவம் திகைப்பில் உறைய வைத்துவிட்டது.

பிரியாவின் அனுபவங்களைப் பொருத்தவரை எல்லாமே பிரமிப்பானவை. எல்லாமே அதி அற்புதமான தெய்வீக லீலைகள். 'The Ruby Garland' என்ற புத்தகத்தை சுவாமி சங்கல்பத்தில் எழுதி இருக்கிறார் பிரியா. அது ஒரு சுவராஸ்யமான அனுபவம் என்கிறார்.'write  a book ,write a book ' என்று சுவாமி எனக்குள்ளிருந்து சொல்லிக்கொண்டேயிருந்தார். நான் எழுத்தாளரல்ல எப்படி எழுதுவது? எழுதத் தொடங்கு உன் அனுபவங்களையெல்லாம், நீ உணர்ந்ததையெல்லாம், உனக்குள்ளிருந்து நான் எழுதுகிறேன் என்றார் சுவாமி. இப்படித்தான் நடந்தது. 'இப்படி எழுது', 'இதை அடி', 'அதை மாற்று' என்று சொல்லிக்கொண்டேயிருந்தார்.' The Ruby Garland of sri Bhagwan sathya Sai Rathna Malika'    என்ற  புத்தகம் தயாரானது. மொத்தம் பதினெட்டு அத்தியாயங்கள். பதினெட்டாம் அத்தியாயம் மட்டும் நீதிமன்ற வழக்கு முடிந்ததும் எழுதுவதற்காக இடைவெளி கொடுத்தார். பக்திரசம் சொட்டச்சொட்ட சுவாமி இவருக்குள்ளிருந்து அற்புதமாய் எழுதியிருக்கிறார்.

ஜெகம் முழுவதும் என் செய்தியைப் பரப்பு:

ஐந்து மாதங்களில் புத்தகம் தயாரானது. சுவாமியிடம் ஆசீர்வாதம் பெற புட்டபர்த்திக்குக் கிளம்பிப் போனார். தரிசனத்தின்போது வந்து இவரைப் பார்த்தார் சுவாமி. 'யூ வெயிட்' என்றார் வாயை ஒரு மாதிரி வைத்தபடி... சுவாமியின் முகம் உக்ரமாக காளியின் முகமாகத் தெரிந்தது. அடுத்த நாள் காலை குளித்துவிட்டு தயாராக சுவாமி தரிசனத்திற்கு ஸ்கிரிப்ட் எடுத்துச் செல்ல எனக்குப் பிடித்தமான சுவாமி வெண்ணிற அங்கியணிந்து  அமர்ந்திருக்கும் கவரை எடுத்துக் கொண்டேன். அட்டைப் படமாக அது வரவேண்டும் என்று நினைத்துக்கொண்டு. காலை 10 மணிக்கு தரிசனம் கிடைத்தது. சுவாமி, ஸ்கிரிப்டைத் தொட்டு ஆசீர்வதித்துவிட்டு, 'send the message to the whole world... Go' என்றார். சுவாமியின் ஆசீர்வாதத்தோடு புறப்பட்டேன். எங்கே போவது என்ன செய்வது என்று புரியவில்லை. எங்கே அச்சிடக் கொடுப்பது என்றும் தெரியவில்லை. பிள்ளையார் சிலைக்கருகே நின்றிருந்த போது சிவப்பு உடையணிந்த வெள்ளைக்காரப் பெண்மணி என்னிடம் வந்து ஒரு கவரைக் கொடுத்தாள். 'இதில் 15,000 இருக்கிறது. புத்தகம் போடப் போகிறாயல்லவா அதற்காகத்தான் இந்தா பிடி என்றார். நான் மறுத்தேன். வங்கியில் பணம் எடுக்கவே போகிறேன் வேண்டாம் என்று மறுக்க, சுவாமி தருவதாக வாங்கிக்கொள் என்று ஆணையிடுவதுபோலக் கையில் திணித்து விட்டுப் போய்விட்டாள். திகைத்துப் போயிருந்தேன். அவளுக்கு நான் புத்தகம் போடப் போவது எப்படித் தெரியும்? அவள் உத்தரவு சுவாமியின் அதிரடி உத்தரவாயிருந்தது. ஆட்டோவில் ஏறி அந்த டிரைவரின் மூலம் அச்சகத்திற்கு சென்றேன்.

புத்தகம் அச்சிட்டானதும், முன்னுரை வாங்க வேண்டியிருந்தது. சுவாமி கனவில் வந்தார். 'இவர் புட்டபர்த்தியில் தங்கி இருக்கிறார். இன்னாரிடம் சென்று முன்னுரை வாங்கிக்கொள்' என்று விவரமாய்ச் சொன்னார். நான் அதன்படியே பிரசாந்தி நிலையம் சென்று ஸ்ரீ சத்யசாயி இன்ஸ்ட்டியூட் டின் முன்னாள் இணை வேந்தரான பேராசிரியர் திரு. சம்பத் என்பவரைச் சென்று பார்த்தேன்.(Former vice chancellor sri  sathya Sai Institute of Higher Learning) புத்தகத்திற்கான முன்னுரையை எழுதித் தரும்படி  கேட்டதும் முதலில் மறுத்தார்.' who are you' என்று கேட்டார். சுவாமி அனுப்பினார் என்று சொன்னதும் புத்தகத்தை வாங்கிக் கொண்டு 'காலையில் வா' என்று சொன்னார். காலையில் பிரியா செல்லும்போதே,' திரௌபதி அம்மா வா' என்று வரவேற்றார். இரவு முழுவதும் தூங்காமல் படித்து ஆனந்தப்பட்டு ஆச்சரியப்பட்டு எழுதியதாகச் சொல்லி முன்னுரையைத் தந்தார். தன்னிடம் பரிபூரண நம்பிக்கை யோடு சரணாகதி யடைந்த பக்தையின் மேல் சுவாமி பொழிந்த அன்பையும் சொல்லி இது சாயியின் எல்லையற்ற சக்தியையும் கரைகடந்த கருணையையும் இந்த நூல் வெளிப்படுத்தி நிற்கிறது என்ற அற்புதமானதொரு முன்னுரையைத் தந்திருந்தார்.

(It is doubly precious because of its contents come from the pure hearted true devotee)

You go and print it என்றார் சுவாமி. ஸ்ரீலங்கா சென்றதும் புத்தகத்தை அச்சிட்டு வெளியிட்டேன். சுவாமியிடம் ஆசீர்வாதம் பெற்றுக் கிளம்பியதும் அதே நாளில் பழனி சென்று ஆறடிக்கும் நீளமாக அசைந்து கொண்டிருந்த என் கூந்தலை வெட்டியதோடு மொட்டை யடித்துக் கொண்டேன் என்று அமைதியாகச் சொன்னார் பிரியா. எனக்கு நேர்ந்த அவமானங்கள், பட்ட துன்பங்கள் எல்லாவற்றுக்கும் கர்மவினை மட்டுமல்லாது என் அகங்காரமுமல்லவா காரணமாக இருந்திருக்கிறது. என் அகங்காரம் அழிய வேண்டும் என்று நினைத்தே அப்படிச் செய்தேன். நீளமான அழகிய கூந்தலை இப்படி வெட்டச் சொல்கிறேனே, மொட்டை யடிக்கச் சொல்கிறேனே, என்று முடிவெட்டுபவன் மிரண்டான். ஏறக்குறைய அவனை அதட்டி  மொட்டை யடித்துக்கொண்டு தலையில் துணியைக் கூடக் கட்டாமல் எல்லோரும் வேடிக்கை பார்க்க விமானத்தில் போனேன். வீட்டிற்குப் போனதும் என்னைப் பார்த்துவிட்டு அம்மா  'ஓ'வென்று அழுதார். இரண்டு சேலைகள் மட்டுமே மாற்றி மாற்றி உடுத்துவது என்று முடிவுசெய்து உடுத்தத் தொடங்கினேன் .அதற்கு பலத்த எதிர்ப்பு வந்தது. கணவர் கோபித்தார். அம்மா சுவாமியிடம் முறையிட்டிருக்கிறார். புட்டபர்த்தியில் சுவாமி தரிசனத்திற்கு அடுத்த முறை சென்ற போது சுவாமி என்னைப் பார்த்து சொன்னார். 'கோபிகாகிருஷ்ணா, ராதே கிருஷ்ணா உன்னை ராதா வாக பாவித்து அழகு செய்துகொள். உன் மனதளவில் பற்றற்ற நிலையிலிருந்தாலும் வெளியுலகத்திற்காக ஒரு தோற்றம்  தேவையாயிருக்கிறது.

ராதையாக பாவித்துக் கொள்' என்றார். அதன்பிறகு என் தோற்றத்தை ஓரளவிற்கு அழகுபடுத்திக் கொண்டேன் என்று சொல்லிப் புன்னகைத்தார் பிரியா.பாப் செய்யப்பட்ட தலைமுடி, புன்னகை நிறைந்து ததும்பும் தெய்வீக முகம், கம்பீரமும் அமைதியும் நிறைந்த தோற்றம்... பிரியாவோடிருக்கும்போது சுவாமியோடு தான் பேசிக் கொண்டிருக்கிறோம் என்பதான அன்பும் பக்தியும் உருவாகிறது. இவருக்கு வயது இப்போது 60க்கும் மேலாகிறது. இப்போது இன்னும் அதிகமாக இவர் பணி வளர்ந்திருக்கிறது. EHV வகுப்புகள், கிராம சேவை, பஜன்கள், சுவாமியின் விசேஷ வைபவங்களின் போது நடனங்கள், நடன நாடகங்களைத் தயாரித்தல், முதியோர் இல்லப்பணி, மருத்துவ மனைப்பணி என்று பல்வேறு பரிமாணங்களில் பிரியாவின் பணி தொடர்கிறது.அருமந்த செல்வமாய் சுவாமி உகந்து கொண்டாடிவரும் இந்த பக்தையிடம் பேசிய அனுபவம் இமயமலையில் ஒரு குகையில் தவம் செய்து கொண்டிருக்கும் யோகினியிடம் பேசிவிட்டு வந்ததான தெய்வீக அனுபவம். பிரவீணா யோக சாயிமா என்று மகளுக்குப் பெயர் வைத்திருக்கும் பிரியா சாயி யோகினியாய் சுவாமிக்கான பணிகளில் சதா மூழ்கித் திளைத்திருக்கிறார். சுவாமி உலகம் முழுவதும் இந்தச் செய்தியை எடுத்துச் செல் என்று அன்பு உத்தரவு இட்டார். வாசிப்பவர்களையெல்லாம் சத்யசாயி வாசத்தில் மூழ்கடித்து தெய்வீக மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது அந்த உன்னதப் புத்தகம். சுவாமி இவருக்குத் தந்த பேரானந்தப் பெரு நிலைகள் அனுபவங்களையெல்லாம் கேட்கும்போது பெருவியப்பு விளைகிறது. என்ன புண்ணியம் பிரியா செய்தது. புண்ணிய மூர்த்தி சாயியின் இந்தப் பேரன்பை அடைவதற்கு. பக்தரது நம்பிக்கையின் பிரதிபலனாக என்னிடம் எழும் எல்லை யில்லா அன்பே அவர் விரும்பிய பலனை அருளியிருக்கிறது என்ற சத்யசாயி வாக்கு பலித்திருக்கிறது இந்த பக்தையின் வாழ்வில்.         

ஜெய் சாய்ராம் !

தொகுத்து அளித்தவர்: சாயி ஜெயலட்சுமி (கவிஞர் பொன்மணி)

வெளியீடு:
ஶ்ரீசத்யசாயி புக்ஸ் அண்ட்
பப்ளிகேஷன் டிரஸ்ட்,
தமிழ்நாடு,
சென்னைகேந்திரம்,”சுந்தரம்”
சென்னை-600028.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக