தலைப்பு

சனி, 2 நவம்பர், 2019

உல்லாசமாக திரிந்த சீன நாட்டவரை சிங்கப்பூரில் திருத்தி பக்குவப்படுத்திய பாபா!


சுவாமி தன்னை உணர வைப்பார். தன்மை உணர வைப்பார். எப்போது பிடிவாத மனம் சரணாகதி மனமாகிறதோ.. அப்போது தன் திரை விலக்கி நிறைவு சேர்ப்பார் மறை மூர்த்தி ஸ்ரீ சத்ய சாயி எனும் பேருண்மையை கடல் கடந்து அனுபவித்த ஒரு சீனரை பற்றிய அனுபவ ஸ்கேனிங் ரிப்போர்ட் இதோ...

படத்தில் என்னுடன் இருக்கும் சீன பெரியவரை நான் தினம் போகும் முருகன் கோவிலில் கடந்த நான்கைந்து வருடங்களாக பார்த்து கொண்டிருக்கிறேன்.

தினம் இரவு எட்டரை மணி வாக்கில் அர்த்தஜாம பூஜை நேரத்துக்கு போவது வழக்கம். சனி, ஞாயிற்று கிழமைகளில் காலை நடை திறக்கும் நேரம் 7 மணிக்கும்போவேன். அந்த காலை நேரத்தில் தான் அவரை பார்க்க முடியும், தினமும் வருகிறாராம்.


ஒரு பணிப்பெண் அவரை வீல் சேரில் வைத்து தள்ளிக்கொண்டு வருவாள். கோவிலை பார்க்கும்படி வண்டியை நிறுத்திவிட்டு அந்த பெண் பின்னால் சென்று நின்றுகொள்வாள். அவர் கரங்கள் கூப்பியபடியே இருக்கும். ஒரு நாள் கூட கோவில் உள்ளே அவர் வந்து நானோ யாரோ பார்த்ததில்லை. வாசலோடு வருவார் வாசலோடு திரும்பிடுவார்.


கபாலீஸ்வரர், மீனாக்ஷியம்மன் போன்ற சில புராதன கோவில்களில் இந்துக்கள் அல்லாதோர் ஒரு எல்லைக்கு மேல் உள்ளே வர அனுமதி இல்லை. எல்லா மதங்களிலும் சில கட்டுப்பாடுகள் உள்ளன. மெக்காவுக்கு முப்பது கிலோ மீட்டர் முன்னரே முஸ்லீம் அல்லாதோர் வேறு பாதையில் செல்ல போர்ட் இருக்கும்.

இது புதிய கோவில் என்பதால் அப்படி எந்த தடையும் இல்லை, எல்லாரும் வரலாம். சீனர்களும் வருவார்கள். நம் காற்று அவர்களுக்கும் அடித்திருக்கிறது. மூலவரை விட்டுவிட்டு நவகிரஹங்களையே அதிகம் சுற்றுவார்கள். ராஜகோபுர வாசல் அல்லாமல் சைடு கேட் வழியாக வீல் சேரிலும் வரலாம். ஏனோ இவருக்கு வாசல் தரிசனமே போதுமானதாக இருந்திருக்கிறது.

சில வருடங்களுக்கு முன் நண்பர் ஒருவரிடம் அவரை பற்றி விசாரித்தேன். அவருக்கு யாரோ சொன்னதை என்னிடம் சொன்னார். அதாவது முருகன் இந்த பெரியவர் கனவில் வந்து என்னை தினம் தரிசனம் பண்ணு என்று சொன்னதாக சொன்னார். கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன் என்று பாடப்பட்டவனல்லவா..அவனே கனவில் சொன்னதாக உலவி வந்ததும் கற்பனை கதைதான் என்று பிறகு தெரிந்தது .



சமீபத்தில் ஏனோ அவரிடம் பேசவேண்டும் எதற்கு கோவிலுக்கு வருகிறார் என கேட்கவேண்டும் என ஆவல் ஏற்பட்டது. ஒரு சீனரை எது இந்திய கோவிலுக்கு இழுத்து வந்தது என அறிய ஆர்வம்.

விஜயதசமி முடிந்து ஒரு ஞாயிறு காலை கைகூப்பி கொண்டிருந்தவரிடம் சென்று உங்களுடன் கொஞ்சம் பேசலாமா என்று கேட்டேன். கொஞ்சம் குழப்பத்தோடு பார்த்தவரிடம் "நான் ஒரு அரைகுறை எழுத்தாளன், ஆனமீகம் கோவில் சம்பந்தமாக கூட அவ்வப்போது எழுதுபவன். உங்கள் அனுபவங்களை சொன்னால் எழுதி பகிர்வேன். என் நண்பர்களுக்கும் பயன்படும்" என்று விளக்கினேன்.

அதன் பிறகு கொஞ்சமும் தயக்கம் இல்லாமல் பேச ஆரம்பித்தார். சிங்கப்பூரில் பேசும் ஆங்கிலத்தை சிங்கிலீஷ் (Singapore English) என்று வேடிக்கையாக சொல்வோம். இவர் கொஞ்சம் தூக்கலாகவே சீன மொழி போட்டு பேசினார். இருந்தாலும் பெரும்பாலும் புரிந்தது.


அவர் பெயர் பென் (Ben) என்று குறிப்பிட்டார். மூச்சுக்கு மூச்சு ஸ்வாமி ஸ்வாமி என்று குறிப்பிட்டு பேசினார்..நான் நேரே சன்னிதானத்தில் இருக்கும் முருகரை சுட்டி இவரையா ஸ்வாமி என்கிறீர்கள் என்று கேட்டேன். இல்லை இல்லை எல்லா இடத்திலும் இருக்கும் ஒரே இறைவனை தான் ஸ்வாமி என்கிறேன் என்று அத்வைதத்துக்கு போய்விட்டார்.

தன்னை மிக கெட்டவன் (I was a very very naughty) என்று குறிப்பிட்டுக்கொண்டார். தனக்கு ஏற்பட்ட இந்த நிலைமைக்கு (முடமாகி வீல் சேரில் இருப்பது) தான் செய்த பாவங்கள் தான் காரணம் என்று அழுத்தமாக சொன்னவர்... அது தனக்கு தேவை எனவும் சொன்னார் (I deserved it). நல்ல வசதியானவராகத்தான் இருந்திருக்கிறார். டவுன் பஸ்ஸில் போவது போல லண்டன், ஹாங்காங் என்று சுற்றுவாராம். முக்கியமாக அவர் ஒரு பாடி பில்டராக வேறு இருந்திருக்கிறார்.

பொதுவாக நம்மை பற்றி அடுத்தவரிடம் பேசும்போது நம்மிடம் இருக்கும் நல்லதை மட்டுமே ஏற்றம் கொடுத்து சொல்லுவோம். ஆனால் இவரோ முதலில் சொன்னது கடந்தகாலத்தில் இவர் தவறான பாதையில் போனதை மட்டுமே. இவர் தெரிந்து சொன்னாரா இல்லை தெரியாமல் சொன்னாரா என்பது தெரியவில்லை, ஒருவர் செய்த பாவ செயல்களை அவரே வெளியிட்டு சொல்வது அவரது பாபத்தை குறைக்கும் என்பது  இந்து மத நம்பிக்கை.


கூண்டுக்குள் பாதிரியாரிடம் பாவத்தை வெளியிட்டு மன்னிப்பு கேட்பதும்... எல்லாரும் அறிய வெளிப்படையாக சொல்வதும் வேறு வேறு எனபதையும் இங்கேயே தெளிவுபடுத்திவிடுகிறேன்.

அவர் முன்னால் எப்படியோ இருந்துவிட்டு போகட்டும் இப்போது எப்படி இருக்கிறார் என்பதல்லவா முக்கியம். அவரா இவர் எண்ணுமளவுக்கு மாறியிருக்கிறார், கடவுளிடம் தன்னை அப்படியே ஒப்புக்கொடுத்துவிட்டார். என் செயலாவது யாதொன்றுமில்லை என்பதை பூரணமாக உணர்ந்திருக்கிறார். அவர் பேசும்போதே இந்த ஆத்ம சமர்ப்பணம் எட்டிப்பார்க்கிறது. அவர் சொன்ன விஷயங்கள்

- ஒருவன் என்னை விட பணக்காரன். அழகான பெண்டாட்டி அமையப் பெற்றவன். பங்களாவாசி. இப்படி அடுத்தவனை பார்த்து மறுகும் பலர் இருக்கிறார்கள். ஒரே கேள்வி கேள். So what?

- சிலர் நிம்மதிக்கும் பணத்துக்கும் முடிச்சு போட்டு விடுகிறார்கள். எத்தனை பணமிருந்தாலும் பிணமாகும்போது எல்லாவற்றையும் விட்டு செல்லத்தான் வேண்டும்.

- எங்கிருந்து வந்தோம் என்று தெரியாது. ஆனால் எங்கே போகவேண்டும் என்பதில் தெளிவு வேண்டும்.

அவர் சொன்னது பூராவும் அனுபவ வார்த்தைகள். இந்த பட்டினத்தார் விளக்கம் எல்லாம் நம்மிடம் பக்கம் பக்கமாக இருக்கும் சரக்குதான். நாம் தான் படிப்பதில்லை. படித்தாலும் புரியாதது போல நடித்துக்கொண்டு டிவியை பார்க்க போய்விடுவோம்.

ஆனால் இவருக்கு யார் சொல்லியிருப்பார்கள்? தன்னை கெட்டவர் என்று சொல்லிக்கொள்கிறாரே இவரை மாற்றியது யார் ? என்ற என் கேள்விக்கு விடை கிடைக்கவில்லை. முதலில் பிடி கொடுக்காமல் பேசியவரை நைசாக கொக்கி போட்டு பிடித்து விட்டேன். வேறு யாருமல்ல நம் ஸ்வாமியே தான், பர்த்திநாதன்.

ஏன் முதலிலேயே சொல்லவில்லை என்று கேட்டபோது சிலருக்கு அவரை தெரியாமல் இருக்கலாம்... இல்லை நம்பிக்கை இல்லாமல் இருக்கலாம் அதனால் பொதுப்படையாக ஸ்வாமி என்று சொன்னேன் என்று விளக்கினார்.


பரமம் பவித்ரம் பாபா விபூதிம்
பரமம் விசித்ரம் லீலா விபூதிம்
பரமார்த்த இஷ்டார்த்த மோக்ஷப்ரதானம்
பாபா விபூதிம் இதமாஷ்ரயாமி

இந்த சுலோகம் சொல்லி நானும் ஸ்வாமி பக்தன் தான் என்றதும் அவர் மேற்கொண்டு குஷியாக சொல்லலானார். மனைவி மூலம் ஸ்வாமியை அறிந்திருக்கிறார். புட்டபர்த்தி சென்று ஆசிரமத்தில் இரண்டு வாரங்கள் தங்கி சுவாமியிடம் பேட்டி வாங்கியிருக்கிறார். பாக்யசாலிதான். அப்போது நடக்க முடிந்திருக்கிறது வீல் சேர் எல்லாம் இல்லை.

புட்டபர்த்திக்கு அவர் போயிருந்த சமயம் நடந்த நிகழ்வு ஒன்றை சொன்னார். ஆசிரமத்தில் மது, புகை என எல்லா போதை வஸ்துகளுக்கும் தடை. ஆனாலும் வெளிநாட்டினர் மூவர் எப்படியோ ஒரு பாட்டிலை உள்ளே கொண்டு வந்து குடித்துள்ளனர். அடுத்த நாள் தரிசனத்தில் அவர்கள் மூவரையும் கண்டுபிடித்து கடுமையாக வெளியே துரத்தியிருக்கிறார் ஸ்வாமி.

இவர் மேலும் சொன்னது. இவர் போகும் இடங்களில் எல்லாம் இவருக்கு ஸ்வாமியின் சாந்நித்தியம் தெரிகிறதாம். எந்த செயல் நடந்தாலும் அது சிறியதோ பெரியதோ அது ஸ்வாமியின் சங்கல்பம் என்பதில் இவருக்கு அசைக்கமுடியாத நம்பிக்கை இருக்கிறது. நான் அவரிடம் பேசியதும் ஸ்வாமி சங்கல்பம் என்றே சொன்னார்.

நாங்கள் பேசிக்கொண்டிருந்த நேரம் கோவிலுக்கு ரெகுலராக வரும் பக்தர் அவரிடம் ஒரு துண்டு சீட்டில் சூரிய பகவானின் மந்திரத்தை எழுதி கொண்டு வந்து கொடுத்தார். இதை சொன்னால் உடல் கோளாறுகள் நீங்கும் என்று சொன்னார். பயபக்தியாக வாங்கிக்கொண்டு அவரை நன்றியோடு அனுப்பிவிட்டு, பார் இப்படித் தான் எனக்கு தேவையான எதையும் ஸ்வாமி அனுகிரஹிப்பார் என்றார்.


முருகன் கோவிலில் கும்பாபிஷேகம் விரைவில் நடைபெறவிருக்கிறது. சில மாறுதல்களை செய்து வருகிறார்கள். அதில் ஒன்று பிரதான வழியிலேயே வீல்சேர் மூலம் உள்ளே வர வழி செய்திருக்கிறார்கள். அதை சுட்டிக்காட்டி இதுவும் சுவாமி சித்தமே, தனக்காகவே ஸ்வாமி இதை செய்ய வைத்திருக்கிறார் என மனப்பூர்வமாக நம்புகிறார்.

நம்மில் எத்தனை பேருக்கு இது போல எல்லாவற்றிலும் இறைவன் செயலை பார்க்கும் மனம் வரும்?

தனது வீல்சேர் வாழ்க்கையை கொஞ்சமும் நொந்து கொள்ளாதவர் "சிலர் என்னையே கடவுளின் தூதன் என்று நினைத்து எனக்கு விபூதி இட்டு வேண்டிக்கொள்கின்றனர்" என்றவர் தொடர்ந்து "நான் வாங்கி ஸ்வாமி பாதத்தில் வைத்துவிட்டு அவர்கள் துன்பத்தை நான் ஏற்றுக்கொள்கிறேன் அவர்களுக்கு அனுக்கிரம் பண்ணு ஸ்வாமி என்று வேண்டிக்கொள்வேன்" என்றார்..

அசந்துவிட்டேன்..என்ன ஒரு சிந்தனை..அடுத்தவர் துயரத்தை தனதாக ஏற்கும் ரந்திதேவன் நினைவு வந்தது.

இது போல எத்தனையோ வெளிநாட்டினரை பற்றி, ஸ்வாமியின் அனுகிரஹத்தால் மனம் மாறியவர்கள் பற்றி எல்லாம் ரா.கணபதி எழுதிய நூல்களில் படித்திருக்கிறேன். அப்படி ஒருவரை சந்திப்பேன் என நினைக்கவில்லை.

'அப்பாலும் அடிசார்ந்தார்' என்று பெரிய புராணத்தில் வரும் அடியார் ஒருவரை சந்தித்த நிறைவு.

ஓம் சாய்ராம்

எழுத்து
V. வெங்கடேஷ்


🌻சக்கரங்களை தனது கால்களாக்கிய நிலையிலும் சுவாமி மேலான இவரது பக்தியும் சரணாகதியும் ஆகாயம் தாண்டிய உயர்வை அடைந்திருக்கிறது! வாழ்க்கை எந்த நிலையில் ஒருவரை வைத்திருந்தாலும் அதை அவ்வாறே அவர் ஏற்று சுவாமிக்கு நன்றி சொல்லிக் கொண்டிருக்கிற பக்குவ நிலை வரும் போது அதுவே அவருக்கு கர்ம நிவர்த்தியும்... ஞான விருத்தியும் ஏற்படுத்துகிறது! 🌻

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக