தலைப்பு

திங்கள், 21 அக்டோபர், 2019

சத்ய சாயிபாபாவின் கடல் கடந்த கருணை | Chapter 1 | உயிர் தந்த உத்தமன் (பாகம் - 2)


அன்று... 1990 நவம்பர் 19ஆம் தேதி, சுவாமியின் பிறந்தநாள் நெருக்கத்திலிருந்தது. எப்போதும் பிள்ளைகளை விட்டுவிட்டுப் பஜனுக்கு போகிறோமே இந்த முறை சுவாமி பிறந்தநாளுக்கு பஜன் சிறப்பு நிகழ்ச்சிகள் எல்லாம் இருப்பதால் பிள்ளைகளையும் அழைத்து போக வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். அந்த சமயத்தில் கண்வலி வந்திருந்ததால் கண்கள் திறக்க முடியாமல் வீங்கிப் போயிருந்தன. அது அந்திநேரம். வலியிலும் அசதியிலும் படுத்து தூங்கவேண்டும் போலிருந்தது.
மார்கழி சதுர்த்திக்கு கோவில் பூசாரியை பார்த்துவிட்டு திரும்பிய கணவர் சிவநாதன் வருவது தெரிந்து வீட்டின் பின்புறம் அவர் சைக்கிளை நிறுத்துவதற்கு வசதியாக அரிக்கேன் விளக்கை தூக்கிக் கொண்டு அவரை தொடர்ந்து போனேன். திடீரென்று காலில் ஏதோ தட்டுப்பட டயர் போல் இருக்க மிதித்துவிட்டு... ஏதோ கவ்வியது போலிருக்கவே கீழே விளக்கை தாழ்த்தி பிடித்து பார்த்ததும் 'பகீரெ'ன்றது. தடித்த விஷப்பாம்பு அந்த சிமெண்ட் தரையில் ஊர்ந்து கொண்டிருந்தது. அப்போது அந்த பகுதியில் விஷப் பாம்புகள் கடித்து மரணம் என்று செய்திகள் அன்றாடம் வருவதுண்டாம். அந்த விஷப் பாம்புகள் கடித்து மாண்டவர் உண்டே தவிர மீண்டவர் கிடையாது. இடது காலில் மூன்று புள்ளிகள் பதிந்திருந்தன. பார்த்ததும் பயத்தில் உறைந்து போனோம். பதட்டத்தில் கணவரும் பிள்ளைகளும் காலில் சணல் கயிறு  வொயர் கயிறு என்று போட்டு இறுகக் கட்டினர். ஆஸ்பத்திரிக்குப் போக ஒரு மெக்கானிக் மூலம் ஆட்டோவை வரவழைத்தனர். கெரசினில் ஓடும் ஆட்டோவில் விளக்கில்லை. இருக்கும் ஒரே ஆஸ்பத்திரியோ ஐந்து மைல் தொலைவில் இருந்தது.

ஆட்டோவில் விரைந்து ஆஸ்பத்திரியில் 'இன்டென்சிவ்' வார்டில் என்னை 'அட்மிட்' செய்தனர். பிரக்ஞையில்லை. கண் வலியால் சுற்றிலும் இருந்தவர்களை போல கவலைப்படக் கூட முடியவில்லை என்னால். வயர்களை போட்டு கட்டியதை பார்த்து டாக்டர் கோபித்துக் கொண்டார். இன்னும் தாமதித்து வந்திருந்தால் எப்போதோ எல்லாம் முடிந்திருக்கும். கொடுக்கவேண்டிய ஆண்டிபயாடிக் எல்லாம் கொடுத்தாகிவிட்டது. எங்களாலானதை செய்திருக்கிறோம் என்று சொல்லிவிட்டு போனார். அதன் பிறகு மருத்துவப் பரிசோதனையில் சிறுநீர் கறுப்பாக இருந்த விவரத்தை டாக்டரிடம் சொன்னதும் அவர் கூறினார் எங்கள் கடமையை நாங்கள் செய்தாகி விட்டது. இனி நீங்கள் பிழைப்பது கடவுளின் கைகளில் தானிருக்கிறது என்று சொல்லி விட்டு போய்விட்டார். துணைக்கு இன்னும் ஆள் வந்து சேரவில்லை. தனியே படுத்திருந்தேன்.

 அது 'இன்டென்சிவ்' யூனிட். ஆண்கள் வரமுடியாது. நவம்பர் 21 ஆம் தேதி பகலில் தனியே படுக்கையில் படுத்திருந்தேன். சின்னஞ்சிறு பிள்ளைகளை விட்டுவிட்டுப் போகிறோமே என்ற நினைப்பு மனதில் கனத்தது. எல்லாம் இறுக்கமாகி எந்த நம்பிக்கையுமற்று முடியப் போவதை போலிருந்தது. சுவாமியை நினைத்து கொண்டேன். தீவிரமாக பிரார்த்தனை செய்யக்கூட முடியவில்லை. கண்களை திறக்க முடியவில்லை. பிரக்ஞையில்லை. என்னை சுற்றிலும் என்ன நடக்கிறது என்று தெரியவில்லை. திடீரென்று சுவாமி பளபளவென்ற வெண்பட்டு உடையில் என் பக்கத்தில் வந்து நின்றார்! சுவாமி என் படுக்கையருகே வந்து நெற்றியில் விபூதி இட்டு 'பயப்படாதே எல்லாம் சரியாகப் போய்விடும்' என்று சொல்லி அபயஹஸ்தம் காட்டி மறைந்தார்! மின்னற் போதில் தெய்வம் நேரில் வந்து விட்டது!

எந்த உணர்வுமற்ற நிலையிலிருந்தாலும் சுவாமி வந்து தகதகவென்று நின்றதும் பேசியதும் விபூதி வைத்து அபயஹஸ்தம் காட்டியதும் நன்றாக தெரிந்தது. பிறந்தநாள் நெருக்கமாக இருந்ததால் சுவாமி வெண்பட்டு அங்கியில் தெரிந்திருக்கிறார். தன்னையே நம்பிய பக்தையை ஆபத்பாந்தவனாக வந்து காத்துவிட்டார் சுவாமி! அப்புறமென்ன அதன் பிறகு நடந்ததெல்லாம் சாயி லீலை தான். கொஞ்ச நேரத்தில் உள்ளிருக்கும் விஷமெல்லாம் புரண்டு வாயில் வந்தது. கறுப்பு கறுப்பாக வாந்தி எடுத்தேன். அந்த க்ஷணமே நான் பிழைத்தாகிவிட்டது. அடுத்த நாள் என்னை பார்க்க வந்த மருத்துவரும் மற்றவரும் இந்த அதிசயம் கடவுளின் அருளால் மட்டுமே நடந்திருக்கிறது என்று சொல்லி வியந்தனர். பாபா எனக்கு மறு ஜென்மம் கொடுத்தார் என்று சொல்லி அழுதார் வசந்தி. இந்த ஜென்மக் கடன் சுவாமிக்கு பணிசெய்தல்லவா தீர வேண்டும். உயிர் தந்த ஆண்டவனுக்கு உயிர் உள்ளவரை சேவை செய்யவேண்டும் என்று மனமுருகிச் சொன்னார். இரண்டு நாட்களில் வீட்டிற்கு போனதும் பாம்பு கடித்தும் பிழைத்து வந்த அதிசயத்தை எல்லோரும் வேடிக்கை பார்ப்பது போல் பார்த்து வியந்தனர். நம்பிக்கை உள்ளவர்களிடம் தவிர வேறு யாரிடமும் சுவாமி நேரில் வந்து என்னிடம் பேசி விபூதி இட்டதைச் சொல்லவில்லை என்றார் வசந்தி. காலகாலாய நம: என்று போற்றப்படும் பகவான் பாபா காலத்தின் அதிபதியல்லவா? காலமறிந்து வந்து காலனை விரட்டிவிட்டார். தன் பக்தையை காப்பாற்றிவிட்டார்! தன் கருணையினால் பக்தையின் ஆயுட் காலத்தை  நீட்டி விட்டார்.

அந்த சோதனைக்குப் பிறகு சாயி பக்தி இன்னும் தீவிரமானது குடும்பத்தில்... யாழ்ப்பாணத்திலிருந்து குடிபெயர்ந்து கொழும்புவில் கொஞ்சநாள் குடியிருந்தோம். அங்கிருக்கும் சாயி சென்டரில் ஞாயிறு தோறும் நடக்கும் பஜனைக்கு போய் வரத் தொடங்கினோம். 300 பேர்களுக்கு மேல் கலந்துகொள்ளும் பஜனில் கலந்து கொண்டு பாடுவதே ஆனந்த அனுபவம் என்கிறார் வசந்தி. பாலவிகாஸில் மகனும் மகளும் சேர்ந்தனர்.

நவம்பர் 19ம் பெண்கள் தினமும்:

கொழும்பிலிருந்த போது 1991 ஆம்  வருடம் பாலவிகாஸ் குழந்தைகளோடு புட்டபர்த்திக்கு  முதன் முதலில் போனதைச் சொல்லி நெகிழ்ந்தார் வசந்தி. சுவாமி தரிசனம் செய்தபோது உடம்பெல்லாம் நடுங்கியது. ஒருமுறை சுவாமி நடந்து வரும்போது சுவாமியின் பார்வை என் மேல் பட்டது. சூக்ஷ்மத்தில் தரிசித்த சுவாமியை நேரில் தரிசித்த போது ஏதோ ஒரு... பயம் நடுக்கம்... அந்த தெய்வீக அதிர்வலைகளில் மூழ்கி மெய்மறந்தேன் என்கிறார். சுவாமி படத்தோடு காத்திருந்த மகன்களை சுவாமி ஆசீர்வதித்தார். 1993 இல் ஆஸ்திரேலியாவில் மெல்பர்னுக்கு வந்த பிறகு பிரிஸ்பேனுக்கு வந்து வாழத் தொடங்கினேன். 1990 நவம்பர் 19ஆம் தேதி பாம்பு கடித்து சுவாமியால் காப்பாற்றப்பட்ட வசந்தி பிரிஸ்பேனில் வாழ வந்ததும் சென்ட்டர்களில் அவர் தொடங்கி வைத்த சாயி வைபவங்களில் ஒன்று  நவம்பர் 19ஆம் தேதி  'மகிளாஸ் டே' பெண்கள் தினக் கொண்டாட்டம்.  'சுவாமியின் அறிவிப்பின்படி 1993லிருந்து நவம்பர் 19 ஆம் தேதியை பெண்கள் தின விழாவாக கொண்டாடத் தொடங்கினோம். 19 தெய்வீக எண். ஒரு நவம்பர் 19ஆம் தேதி முடிய இருந்த என் ஆயுளை சுவாமி மீட்டு தந்ததே அடுத்த நவம்பர் 19 ஆம் தேதியிலிருந்து ஒவ்வொராண்டும் 'மகிளாஸ் டே'  கொண்டாடுவதற்காகத் தான் அதைவிழா நாள் ஆகிவிட்டார் சுவாமி' என்று சொல்லி மௌனமானார்.

' கோரின்டாவில்' இருக்கும் முதியோர் இல்லத்திற்குச் சென்று உணவு வழங்குதல் கலை நிகழ்ச்சிகளைக் காண வைத்தல் வெளியில் சுற்றுலாவிற்கு அழைத்துச் செல்லுதல் என்று  சாயி வட்டத்தினர் அவர்களை மகிழ்விக்கிறோம். சேவையின் தேவை  ஆஸ்திரேலியாவில் அதிகமில்லை என்றாலும் அங்கு எந்த ரீதியில் சேவை தேவைப்படுகிறதோ அங்கு சாயி குடும்பத்தினர் விரைந்து சென்று பணிபுரிகிறோம். 'கனோஷா'விலிருக்கும் மருத்துவமனையில் சென்று சேவை செய்கிறோம். ரத்ததான முகாம்களை தொடர்ந்து நடத்துகிறோம். அகதிகளாக வந்து வாழத் தொடங்கியிருப்பவர்களுக்கு ஆங்கிலக் கல்வி, கம்ப்யூட்டர் கற்றுத்தருதல் என்று உதவுகிறோம். மந்திரம் உச்சரிக்கும் உதடுகளை விடவும் சேவை செய்யும் கரங்கள் மேலானவை என்று சுவாமி சொல்வதை ஆன வரையில் செயல்படுத்தி ஆனந்தமடைகிறோம். முருவலம்பா'வில் பாலவிகாஸாகத் தொடங்கி 100 பிள்ளைகளோடு சீரும் சிறப்புமாக சுவாமியின் கோட்பாடுகளோடு (Human values) சுற்றி வாழும் மக்களும் அரசாங்கமும் வியக்கும்படி மேன்மையாக நடந்து வருகிறது 'சத்யசாயி பிரைமரி பள்ளி'. இந்த பள்ளியில் தேவைப்படும் போதெல்லாம் சாயி சென்ட்டர்களிலிருந்து வேண்டிய சேவை செய்யப் போகிறோம். பள்ளிக்குத் தேவைப்படும் பொருட்களை வாங்கித் தருவதோடு நிதியுதவியும் செய்கிறோம்.

2007ல் சத்யசாயி பாபாவின் கோட்பாடுகளை அட்டையில் எழுதிப் பிடித்தபடி 'peace walk ' ஒன்றை ஆஸ்திரேலியாவின் அனைத்து சென்ட்டர்களையும் சார்ந்த சாயி பக்தர்கள் வெள்ளைச் சீருடையில் அணிவகுத்துச் சென்று பொதுமக்களும் வியக்கும் படியாக வெகு அமைதியாக நடத்தினோம் என்கிறார் 'கூப்பர்ஸ்பிளெய்ன்'சாயி சென்டரில் கன்வீனராக (இப்போது) இருக்கும் இந்த பக்தை.

 பாபாவின் 75வது பிறந்த நாளின்போது புட்டபர்த்தி பள்ளியில் படிக்கும் பிள்ளைகளுக்காக 75 செட் உடுப்புகளைத் தைத்து அனுப்பினோம். அனைவரும் உறங்கிய பின் இரவில் இரண்டு மூன்று மணி வரை விழித்திருந்து தீவிரமாய் பல செட் உடைகளை தைத்ததாக சொன்னார். வெளிநாட்டைப் பொருத்தவரை எந்த ஒன்றையும் திட்டமிடுவதும் தீர்மானித்து செயல்படுத்தி இந்தியாவிற்கு அனுப்பி வைப்பது என்பதும் சரியாக நடக்கவேண்டும். 75 செட் உடைகள் தயார் செய்ய நினைத்தோம். சுவாமி சங்கல்பத்தால் 100 செட் உடைகள் சேர்ந்துவிட்டன. சந்தோஷமாக புட்டபர்த்திக்கு அனுப்பினோம்.

சிவநாதனின்  மாமா குடும்பம் ஆண்டு தோறும் சுவாமி தரிசனத்திற்குப் போவதும் ஒவ்வொரு முறையும் சுவாமி அவர்களுக்கு சேலை வேட்டிகள் தந்து ஆசீர்வதிப்பதும் உண்டாம். சிவநாதன் 'study circle'ல் கன்வீனராக சில வருடங்கள் தொடர்ந்து இருந்திருக்கிறார். ஹாலிலிருந்த சுவாமியின் மிகப்பெரிய வெண்பட்டு அங்கிஅணிந்த படம் பற்றிக் கேட்டேன்.'தூஊம்பா'(Toowoomba) சென்ட்டர் இடம் மாறிய போது அங்கிருந்த சுவாமி படங்கள் புத்தகங்கள் ஸ்கூல் 'டொனேஷனுக்காக' விற்பனைக்கு வர இந்த பெரிய படத்தை நான் வாங்கிக் கொண்டேன். என் உயிர் போகும் தருணத்தில் சுவாமி இதே தோற்றத்தில் உடையில் தான் என் முன் வந்து நின்றார் என்று சொல்லி உருகினார் வசந்தி. சுவாமி லீலைகளெல்லாம் சுவாமியின் சங்கல்பமே அல்லவா? நேரில் வந்த தெய்வம் அதே ரூபத்தில் வீட்டில் வந்து கோயில் கொண்டிருக்கும் ஆனந்தம்தான் எத்தகையது!

வசந்தியைப் பொருத்தவரை ஏதேனும் ஒன்றுக்காக ஏக்கத்தோடும் கவலையோடும் சுவாமியை நினைத்து கொண்டு படுத்தாலே சுவாமி கனவில் வந்து விடுகிறார். பதில் சொல்கிறார். வழிநடத்துகிறார். ஒருமுறை க்வின்ஸ்லாந்து சென்ட்டரிலிருந்து பலர் புட்டபர்த்திக்கு சென்று சுவாமியை தரிசனம் செய்து வந்து சுவாமி இப்படி வந்தார் அப்படி பேசினார் விபூதி பொழிந்தார் பாதங்களைத் தொட்டு வணங்கினோம். சுவாமியின் பாதங்கள் தான் பூப்போல் எத்தனை மிருதுவானவை என்று சொல்ல சொல்ல வசந்திக்கு ஏக்கம்... அழுகை... விடுமுறை கிடைக்காமல் போக முடியாமல் போன வருத்தம்.. இப்போது பார்த்து வந்தவர் சொல்லச் சொல்ல இன்னும் ஏக்கம் அதிகமாகியது. என்னால் சுவாமியைப் பார்க்கப் போக முடியவில்லையே சுவாமி பாதங்களைத் தொட்டு வணங்க முடியவில்லையே என்று அடிமனம் முழுதும் ஏக்கத்திலே பொங்கத் தூங்கி போனார். சுவாமிக்கு பக்தையின் ஏமாற்றமும் ஏக்கமும் பொறுக்கவில்லை. கனவில் வந்து நின்று பாத நமஸ்காரம் தந்துவிட்டார். பாதங்களைத் தொட்டு வணங்கி எழுந்த வசந்தி உண்மைதான் அவர்கள் சொன்னது, சுவாமி பாதங்கள் பூப்போல் எத்தனை மென்மையானவை என்று கனவிலேயே வியந்திருக்கிறார்.

மகேஸ்வரன் ஆசியோடு மகள் திருமணம்:

வசந்தி சிவநாதன் குடும்பத்தில் முதல் திருமணம் மகள் தக்ஷ்மியின் திருமணம். நாடு விட்டு நாடு வந்து குடும்பம் நடக்கிறது. பெரிய பொருள் சேமிப்போ வசதியோ இல்லை. இங்கு எப்படி திருமணத்தை  நினைத்தபடி நடத்தப் போகிறோமோ சுவாமி என்று கேட்டபடி உறங்கிப் போனார். அந்த க்ஷணம் சுவாமி கனவொன்று தந்திருக்கிறார். வசந்தியும்  சிவநாதனும் சேர்ந்து நிற்கிறார்கள். சுவாமி ஒரு முறை சுற்றி வந்து எதிரில் நின்று அவர்களை ஆசீர்வதிக்கிறார். மகன் கனவில் சுவாமி கோயிலில்  இவர்கள் கொண்டுபோய் திருமணப் பத்திரிகையைக் கொடுக்க 'எனக்கும் அழைப்பிதழா' என்று சொல்லிச் சிரித்தபடி இரு கைகளையும் தூக்கி ஆசீர்வதித்திருக்கிறார்.  க்வின்ஸ்லாந்தில் இந்த தம்பதி நடத்திய திருமணம் அமோகமாயிருந்ததென்று   இன்னமும் பேசிக்கொண்டிருக்கிறார்கள். மிகப் பெரிய கூட்டம் விருந்து வைபவம் முதல் நாள் பஜன் தொடங்கி முகூர்த்தம் முதல் வரவேற்பு வரை தமிழ்த் திருமணம் நல்ல சடங்கு சம்பிரதாயத்தோடு வாசலில் வாழை மரம் கட்டியதிலிருந்து திரும்புவோர்க்கு  பை நிறைய இனிப்பு சீடை முறுக்கு பழம் பரிசுப் பொருள் என்று பையில் நிறைத்துத் தருவதிலிருந்து அமர்க்களமாய் நடந்தேறியிருக்கிறது. சுவாமியின் பார்வை பட்டால் தொட்ட இடம் துலங்குவதும் அள்ளக் குறையாமல் வளர்வதும் நிகழ்ந்து வருவது இயல்பல்லவா? சுவாமி நேரே வந்து மங்கலநாண் மோதிரம் உருவாக்கித் தந்து அட்சதை பொழிந்து ஆசிர்வதித்தது போல் கல்யாணம் வைபோகமாக நடந்தேறியது.

எப்போது அழைப்பாரோ?

மூன்று முறை புட்டபர்த்திக்குப் போய் சுவாமியைக் கண்குளிர கண்டு வந்த வசந்திக்கு இன்னோர் இனிப்பான பயணம் 2007 செப்டம்பரில் கிடைத்தது. இரண்டு வாரங்கள் சுவாமி தரிசனங் கண்டு பிரசாந்தியின் 'வெஸ்டர்ன் கேன்டீனில்' சர்வீஸ் செய்வதாகவும் ஏற்பாடு. சாயி குடும்பத்தினராக 20 பெண்கள் சேர்ந்து புட்டபர்த்திக்குப் போய் ஆனந்த சாயி தரிசனம் கண்டு ஆத்மார்த்தமான சர்வீஸும்  செய்து திரும்பினர். இம்முறை எப்படி சுவாமியை உணர்ந்தீர்கள் என்ன அனுபவம் ஏற்பட்டதென்று கேட்டேன். வசந்தி அன்பு ததும்பும் குரலில் சொன்னார்.. 'சுவாமி நடந்து வந்து கொண்டிருந்த போது நேராக என்னை உற்றுப் பார்த்தார். வடிவாயிருந்தார் சுவாமி.. இனிமே எப்பொழுது சுவாமி கூப்பிடுவாரோ? வசந்தியின் குரலில் பொங்கிய ஏக்கம் நிஜம். சுவாமியிடம் போய்த் திரும்பும் பக்தர்களுக்கு ஏற்படும் ஏக்கம் இதுதான். திரும்பவும் எப்போது சுவாமி கூப்பிடுவார்?

ஜெய் சாய்ராம்!

ஆதாரம் : சத்ய சாயிபாபாவின் கடல் கடந்த கருணை (ஆஸ்திரேலிய சாயி பக்தர்களின் அனுபவங்கள்)
தொகுத்து அளித்தவர்: சாயி ஜெயலட்சுமி (கவிஞர் பொன்மணி) 
ஆசிரியரின் அனுமதியுடன் வெளியிடப்படுகிறது.

புத்தகத்தை வாங்கிப் படிக்க அணுகவும் சென்னை சுந்தரம் கோவில்'
https://g.co/kgs/MrcEKk

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக