தலைப்பு

வியாழன், 10 அக்டோபர், 2019

பகவானை பிரார்த்தனை செய்து வேண்டுவதை பெறுங்கள்! - ஒரு அழகான சிறப்பான சம்பவம்


மும்பையில் சாயி நிறுவனத்தில் பணிபுரிந்த ஒரு தீவிர பக்தர் தன் மகன்,  மற்றும் பேரனுடன் ஆஷாட ஏகாதசி அன்று புட்டபா்த்திக்கு வந்திருந்தாா். தரிசனத்திற்காக, அவர்கள் சாயி குல்வந்த் ஹாலில் காத்துக் கொண்டிருந்தனர். அவருக்குப் பின்னால் எட்டு வயதான அவரது பேரன் உட்கார்ந்திருந்தான். தரிசனம் அளித்த பிறகு, சுவாமி தனது இருக்கையில் அமர்ந்து மகராஷ்டிரா பாலவிகாஸ் குழந்தைகளின் நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டிருந்தார். இந்த விழா முடிந்த பின் சுவாமி ஒரு பக்தரை அழைத்துக்கொண்டு நேர்காணல் அறைக்குச் சென்றார். அதற்குள்,  இந்த
பக்தரின் பேரன் சத்தமாக அழ ஆரம்பித்துவிட்டான். அந்த பக்தர் மிக தர்மசங்கடமாக உணர்ந்தார். ஏனென்றால், அப்போது சுவாமி நேர்காணல் அறையில்தான் இருந்தார். "என்னப்பா ஆச்சு"? என்று பேரனிடம் தாத்தா கேட்டார். அந்த எட்டு வயதுச் சிறுவன் "எனக்கு இப்போதே விபூதி வேண்டும்" என்றான். தன் பாக்கெட்டில் உள்ள சிறிய விபூதி பொட்டலத்தை எடுத்து பேரனிடம் அந்த பக்தர்(தாத்தா) கொடுத்தார்.  ஆனால்,  அந்த பேரன் அதை வாங்க மறுத்து விட்டு, "எனக்கு சுவாமி கைகளில் இருந்து விபூதி வர வேண்டும்" என்று வற்புறுத்தினான்.  அந்த பக்தர் தன் பேரனிடம் "கண்களை மூடி மனதார 'சாய்ராம்,  சாய்ராம்' என்று ஜெபித்துக் கொண்டே இரு, அப்போது உன் ஆசை நிறைவேறும்'  என்றார். அந்த பேரன் "இது கண்டிப்பாக உதவி செய்யுமா?" என்று தாத்தாவிடம் கேட்டான். பேரனின் அழுகையை நிறுத்த,  "இது கண்டிப்பாக உதவி செய்யும்" என்று தாத்தா கூறினார்.

உடனடியாக அந்த பேரன் கண்களை மூடி வேண்ட ஆரம்பித்தான். சிறிது நேரம் கழித்து சுவாமி நேர்காணல் அறையிலிருந்து வெளியே வந்தார். தாத்தா மற்றும் பேரன் அமர்ந்திருந்த இடத்திற்கு சுவாமி வேகமாக சென்றாா். அவர்களைப் பார்த்தவாறு பகவான் நின்றார். அந்த பக்தர் சுவாமியை பாத நமஸ்காரம் செய்தார். கண்களை மூடியபடி உள்ள அந்தப் பையனை (பேரனை) பார்த்து, சுவாமி "இவனுக்கு என்ன வேண்டும்? என்று தாத்தாவிடம் கேட்டார்". "தங்களிடம் இருந்து விபூதியைப் பெற்றுக் கொள்ள வேண்டுமென்று ஆசைப்படுகிறான் சுவாமி" என்றார் பக்தர் தாத்தா.  சுவாமி அந்தப் பையனின் தலையை தட்டினார். கண்களைத் திறந்த அந்தப் பையன் தன் முன்னே  சுவாமி நிற்பதை கண்டு பிரமித்தான். "உனக்கு விபூதி வேண்டுமா?" என்று சுவாமி அந்தப் பையனிடம் கேட்டு, தன் கைகளை சுழற்றி விபூதி வரவழைத்தார். அந்தப் பையனின் கையில் அதைக் கொடுத்து அவனை ஆசீர்வதித்தார். பின், அந்த பக்தர் தாத்தாவை நோக்கி "எவரொருவர் தீவிரமாக எதற்காக பிரார்த்திக்கிறார்களோ, அவர்களுக்கு அது வழங்கப்படும்", என்று அன்புடன் குறிப்பிட்டார். "முப்பது ஆண்டுகள் எனது சேவையில் இருந்த பின்னும் இதை நீ புரிந்து கொள்ளவில்லை என்று நினைக்கிறேன்" என்றார் ஸ்வாமி. இப்படிச் சொல்லி விட்டு கவர்ந்திழுக்கும் புன்னகையுடன் சுவாமி  நகர்ந்தார்.

பக்தர்களின் தீவிர பிரார்த்தனைகளால் சுவாமியின் தூய தெய்வீக இதயம் உருகுகிறது என்பது இந்த நிகழ்வு நம் அனைவருக்கும் ஓா் எடுத்துக்காட்டு.

ஆதாரம்: Sri Sathya Sai Digvijayam (1926-1985)

மொழிபெயர்ப்பு: D. காயத்ரி சாய்ராம், காஞ்சிபுரம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக