தலைப்பு

புதன், 30 அக்டோபர், 2019

கடவுள் எல்லா எல்லைகளுக்கும் அப்பாற்பட்டவர் -நிஷாந்த் வர்மா

நாம் ஒவ்வொரு நாளையும், அன்பினால் தொடங்குவோம், 
அன்பினால் நிரப்புவோம், 
அன்பினால் செலவிடுவோம், 
அன்பினால் முடிப்போம்,
இதுவே, இறைவனை அடையும் வழி. -பாபா

அதாவது வாழ்வின் ஒவ்வொரு தருணமும் அன்பால் நிரப்பப்பட வேண்டும்.  இறைவனை அடைய அது ஒன்றே வழியாகும். சுவாமி கூறுகிறார், "என் வாழ்க்கையே எனது செய்தி" சுவாமியின் செய்தி அன்புதான்! சுவாமி தனது மாணவர்கள் அன்பால் நிரப்பப்பட வேண்டும் என விரும்புகிறார்.
எனவே "எனது மாணவர்களின் வாழ்வே எனது செய்தி" என்று சுவாமி கூறமுடியும். சுவாமி கூறுகிறார், "எல்லோரையும் நேசி; எல்லோருக்கும் தொண்டு செய்"; எப்பொழுதும் உதவு; ஒருபொழுதும் துன்புறுத்தாதே"!! இந்த ஒரு வாக்கியங்களிலேயே, வேத புராணங்களின் சாரம் அடங்கி விடுகிறது.

சுவாமி கூறுகிறார், "நீ  ராமரையோ, கிருஷ்ணரையோ, இயேசுவையோ,  அல்லாஹ்வையோ, யாரை வேண்டுமானாலும் கும்பிடு. ஆனால் அவர்களின் உபதேசங்களை கடைபிடி. அவர் கூறுகிறார், "கண்மூடித்தனமாக என்னை நம்ப வேண்டாம். என்னை சோதித்து பார்த்த பிறகு நம்பு".  இங்கே எனது சொந்த அனுபவம் ஒன்றை விவரித்து எப்படி எங்களது குடும்பம் முழுவதும் சுவாமியின் பக்தர்களாக ஆனோம் என்பதை விளக்குகிறேன்.


நான் மூன்றாம் வகுப்பு படிக்கும் பொழுது, நானும் எனது பெற்றோரும் தென்னிந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டோம். எங்களது அத்தைகளில் ஒருவர் என் அன்னையிடம், புட்டபர்த்தியில், சாய்பாபா இருக்கும் விவரம் கூறியிருந்தார். நாங்களும் அங்கு செல்ல தீர்மானித்தோம். தரிசன வரிசையில் முதல் டோக்கன் பெற்று அமர்ந்தோம். என் அருகில்  அமர்ந்திருந்தவர் சுவாமி அருகில் வந்ததும் பாத நமஸ்காரம் செய்யுமாறு கூறினார். நாங்களும் அப்படியே செய்தோம். பிறகு இரண்டு நாட்கள் தங்கிவிட்டு, பெங்களூர் சென்று அங்கிருந்து பயணத்தை தொடர்ந்தோம். மறுநாள் மைசூர் போக வேண்டி இருந்தது. திடீரென என் தாயாருக்கு மிகுந்த வயிற்றுவலி ஏற்பட்டது . அவரை, உடனே ஒரு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல ஒரு வாகனம் கூட கிடைக்கவில்லை. தாயாருக்கு வேதனை தாங்க முடியாத அளவு அதிகமாகி விட்டது. என் தகப்பனார், "சுவாமி, நீங்கள் உண்மையிலேயே தெய்வம் எனில், இப்பொழுது உதவி, இவளை குணமாக்குங்கள்", எனப் பிரார்த்தித்தார். உடனே எங்களை நோக்கி ஒரு ஆட்டோ ரிக்க்ஷா வந்தது. நாங்கள் ஊருக்கு புதிது என்பதையும், ஒரு மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய அவசியத்தையும் தெரிவித்தோம். 45 நிமிடம் சந்து பொந்தெல்லாம் கடந்து ஒரு கிளினிக்கை அடைந்தோம்.

ஆனால் அதுவும் பூட்டியிருந்தது! அதன் பிறகு வேறு ஒரு மருத்துவமனைக்கு, நெடுந்தூர பயணத்திற்கு பின் சென்றடைந்தோம். அங்கு ஒரு மருத்துவர், என் அன்னைக்கு வைத்தியம் செய்து, தகுந்த மருந்துகளை கொடுத்தார். வலியும் குறைந்தது! பிறகு நாலு ஐந்து மணி நேரம் பயணத்திற்குப் பின், நாங்கள் தங்கியிருந்த விடுதியை அடைந்தோம்.

"ஆட்டோ ரிக்ஷா குறைந்தது 500 ரூபாய் கேட்டு விடுவார். ஏனெனில் நெடுந்தூரம் பயணித்து இருக்கிறோம்." என என் தந்தை நினைத்தார். ஆனால் அதிசயத்தக்க வகையில், ஆட்டோ டிரைவர் தனக்கு பணமே வேண்டாம் என்றும், தன் சகோதரி போன்ற என் அன்னை குணமானது போதுமென்று, வெறும் இருபது ரூபாய் மட்டும் வாங்கிக்கொண்டு, என் தாயின் கையால் வாழைப்பழம் மட்டும் வாங்கிக்கொண்டு, தன் வண்டியை திருப்ப முயன்றவர், மறைந்து வேகமாக சென்று விட்டார். அவர் சுவாமி தான் என்பதை உணர்ந்து கொண்டோம்.

நாங்கள் வீட்டிற்கு திரும்பிய பிறகு நிறைய அதிசயங்கள் நடக்க ஆரம்பித்து விட்டன! விபூதியும், தேனும் சுவாமியின் போட்டோவில் இருந்து வரத் தொடங்கின. எங்கள் வீட்டில் பஜன்கள் தொடர்ந்து நடைபெறலாயின.
என் அன்னை பாலவிகாஸ் குரு ஆகிவிட்டார். நான் பாலவிகாஸ் வகுப்புகள் செல்லலானேன்.

எப்பொழுதெல்லாம் சுவாமி எங்கள் கனவுகளில் வந்து ஏதாவது கூறினாரோ, அதெல்லாம் உண்மையாக நடந்தன! இதை நான் நான்காம் வகுப்பு படித்து வந்த பொழுது உணர்ந்தேன்.

எனக்கு, தேர்வு முடிவுகள் வரும் நாளன்று, முந்தைய இரவு சுவாமி என் தாயாரின் கனவில் வந்தார். முதல் 3 இடத்திற்கான மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களையும் கண்டு இருக்கிறார். ஆனால் அவர்களில் நான் இல்லை. ஸ்வாமி என் தாயாரிடம், வருந்த வேண்டாம் என்றும், நான் நாலாவது மதிப்பெண் பெற்று இருப்பதாகவும் கூறியுள்ளார். அதேபோல் நான் நான்காவது இடத்தில் வந்திருப்பதை மறுநாள் கண்டறிந்தேன்! என் எட்டாவது வகுப்பிற்கான தேர்வுகள் முடிந்ததும் என் தந்தையின் கனவில் வந்து, நான் கணக்கு பரிட்சை மிக மோசமாக செய்திருப்பதாகவும், ஆனால் தான் பார்த்துக் கொள்வதாகவும் கூறினாராம்.  முடிவுகள் வந்ததும் பார்த்தால், நான் கணக்கில் தேர்ச்சி பெறத் தேவையான மதிப்பெண்கள், குறைந்தபட்சமாக வாங்கியிருப்பது தெரிந்தது.

2001 ஆம் ஆண்டு ஜனவரி 7-ம் தேதி சுவாமி எங்களுக்கு பிரத்யோக நேர்காணலுக்கு அனுக்கிரகம் செய்தார். (Personal Interview) அந்த அறையில் என் தந்தை தனது கனவைப் பற்றி கேட்டார். சுவாமி, தான் கருணையுடன் என்னை தேர்ச்சிபெற செய்ததை கூறினார். அதுதான் என் வாழ்வின் அதிமுக்கியமான நாள். ஆனால் நான் பயத்தில் சுவாமியிடம் இருந்து சற்று தள்ளியே நின்று கொண்டிருந்தேன். சுவாமியோ, தன்னிடம் என்னை இழுத்து, "ஏன் பயப்படுகிறாய்?" என்று கேட்டார். என் முகம் சுவாமியின் தலைமுடியில் பட்டது. அவர் தனது வலது கரத்தை என் தோளின் மீது வைத்தார். பிறகு என் தந்தை சுவாமியிடம், எனக்கு பிரசாந்தி பள்ளியில் 11வது வகுப்பிற்கு இடம் கிடைக்குமா என வேண்டினார். ஸ்வாமி, எனக்கு அங்கு  படிக்க இஷ்டமா என வினவ, நான் சரி என்றேன். என் தாயார் உடல் நலம் பற்றி விசாரித்து, விபூதி வரவழைத்து கொடுத்தார்.
நான் அதிக மதிப்பெண்கள் பெற்றிருக்காவடினும், சுவாமியின்  வார்த்தைகளின் ஆசியால், நுழைவுத் தேர்வில் நன்றாக எழுதி இடம் கிடைக்கப் பெற்றேன்.

சுவாமி, தன் மாணவர்களை, மற்ற எதையும் விட அதிகமாக நேசிக்கிறார். தனது கருணையை எப்பொழுதும் மாணவர்கள் மேல் பொழிந்து கொண்டே இருக்கிறார்.  அவருடைய கருவிகளாகிய நாம் அவரது உபதேசங்களை மேற்கொண்டு வாழ்ந்து காட்ட வேண்டும். 'மனிதன் தான் கடவுள்' என்பதை நிரூபிக்கவே சுவாமி இங்கு அவதரித்துள்ளார். இதை நாம் உணர்வதற்கு முயற்சிகள் எடுத்து, உண்மையை உணர்ந்து, நாமும் தெய்வீக நிலைக்கு உயர்வோம்!

-  நிஷாந்த் வர்மா- மாணவர் 
(2005-2010 மேனேஜ்மெண்ட் பிரிவு) 
ஸ்ரீ சத்ய சாய் உயர் கல்வி நிறுவனம்.

- தற்பொழுது நிஷாந்த் அவர்கள்,
மேல்நிலை பொருளாதார ஆய்வாளர். அக்சன்சர் (Accenture).


மொழிபெயர்ப்பு: திருமதி. ஜெயா பாலசுப்பிரமணியம், போரூர் சமிதி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக