தலைப்பு

சனி, 26 அக்டோபர், 2019

கோவையை சேர்ந்த லாரி டிரைவர் சண்முகத்தின் அனுபவங்கள்


கோவையின் ஒரு பகுதியான குனியமுத்தூருக்கு பக்கத்தில் உள்ள ஒரு கிராமத்தில் வசித்து வந்தார் சண்முகம். அவர் ஒரு லாரி டிரைவர், ஒரு நாள் அவருக்கு நெஞ்சு வலித்தது. அதற்கு முன்னாலேயே சிறுது தூரம் நடந்தால் மூச்சு திணறியது. இதெல்லாம் பார்த்து ராமகிருஷ்ண மருத்துவமனைக்கு சென்றார். அங்கு பரிசோதனைகள் செய்து விட்டு ரத்த குழாய்களில் அடைப்பு இருக்கிறது என்றும், அவை சரி செய்யா விட்டால் உயிருக்கே
ஆபத்து. சீக்கிரம் ஏற்பாடு செய்யுங்கள் என்று டாக்டர் சொன்னார். எவ்வளவு செலவு ஆகும் என்று கேட்டதற்கு சுமார் 1 ½ லட்சம் செலவாகும் என்றார் டாக்டர். அன்றிருந்த நிலைமையில் சண்முகத்திடம் சில ஆயிரங்களுக்கு மேல் பணம் இல்லை. அப்போது அங்கே வந்த அவர் நண்பர் கவலைப்படதே சண்முகம்’ புட்டபர்த்தியில் உள்ள பாபா உயர் மருத்துவமனைக்கு சென்றால் பைசா செலவில்லாமல் சரிபடுத்திவிடுவார்கள்.’ ஆனால் டாக்டருக்கு அவரை வெளியே அனுப்ப விருப்பமில்லை. மருத்துவமனையை விட்டுப் போனால் இதயம் நின்றுவிட்டாலும் விடலாம் என்று பயமுறுத்தினார். அப்போது சண்முகம் “டாக்டர் வெளியே போனால் தான் பணம் புரட்ட முடியும் எனவே போக அனுமதியுங்கள்” என்றார். அப்படியா சரி போய் வாருங்கள் என்று அனுமதித்தார்.

நண்பரோடு அவர் உடனே புட்டபர்த்திக்கு பயணப் பட்டார். போய் சேரும் போது இரவாகிவிட்டது. அந்த லாட்ஜின் முதலாளி நீங்கள் முதலில் பாபாவின் பொது மருத்துவ மனையில் டோக்கன் வாங்கிக் கொள்ளுங்கள் அதற்கு பிறகு பெரிய மருத்துவமனைக்குசெல்லுங்கள். அதற்கும் முன்னால் விடியற்காலையிலேயே குல்வந்த் ஹாலில் அமர்ந்திருங்கள் பகவானின் தரிசனம் பெற்று பிறகு போகலாம் என்று சொல்லிவிட்டு, யார் கண்டார்கள் பகவானின் பார்வை பட்டவுடனே கூட உங்கள் வியாதி குணமடைந்து விடலாம் என்றார். பார்வை பட்டு குணமடைவதா, ஆப்ரேஷன் வேண்டாமா என்று கேலியாக சிரித்துக் கொண்டே ரூம் எடுத்து இரவில் தங்கினார்கள். காலையில் எழுந்து டோக்கன் வாங்கி கொண்டு குல்வந்த் ஹாலில் அமர்ந்து கொண்டார்கள். இரண்டு மணிகளுக்கு மேல் காத்திருந்தும் பகவான் வரவில்லை. சரி எழுந்து போவோம் என்று நினைத்தாலும் போக முடியவில்லை. ஏனென்றால் அந்த ஹால் முழுவதும் பக்தர்கள் நெருக்கி அடித்துக் கொண்டு வெளியே போக வழி இல்லாமல் செய்துவிட்டார்கள். சண்முகத்திற்கு தூக்கமாய் வந்தது. அப்படியே கண்னை மூடினார். அப்போது பகவான் வந்துவிட்டார். அவரை பார்த்தவுடன் சண்முகம் மனத்திற்குள்ளாக சாமி நீங்கள் என்னை குணப்படுத்துவீர்களோ இல்லையோ தெரியாது ஆனால் என்னை இங்கே சாக விடாதீர்கள் ஏனென்றால் இங்கிருந்து எங்கள் ஊருக்கு என் உடலை தூக்கி கொண்டு போகும் பெரிய பாரம் என் நண்பனுக்கு இருக்கக் கூடாது. நான் எங்கள் ஊருக்கு போய் இறந்தாலும் பரவாயில்லை என்று சொல்லிவிட்டு சற்று கண் அயர்ந்தார். அதற்கு சிறிது முன்னால் பகவான் அங்கே அருகில் இருக்கும் மேடையில் ஒரு சோபாவில் அமர்ந்து கொண்டிருந்தார். அவரைப் பார்த்துக் கொண்டிருந்த சண்முகம், திடீரென்று பாபாவின் கண்களில் இருந்து இரண்டு ஒளிக் கற்றைகள் தன்னுடைய மார்பில் பட்டு திரும்பிச் சென்றதை உணர்ந்தார். தரிசனம் முடிந்தது. கூட்டம் கலைந்தது. 

பிறகு பெரிய மருத்துவமனைக்கு சண்முகமும் நண்பரும் சென்றார்கள். சுமார் 6 மணி நேரம் பலவிதமான பரிசோதனைகள் செய்யப்பட்டன். பின்பு அவரை பெரிய டாக்டர் அழைத்தார். என்ன அய்யா வேடிக்கை செய்கிறீர்களா? எங்களுக்கு வேறு ஒன்றும் வேலை இல்லையா. உங்களுக்க இருதயத்தில் ஒரு கோளாறும் இல்லையே என்றார். அதற்கு சண்முகம் இவ்வளவு தூரம் உங்களிடம் வேடிக்கை காட்டவா வந்தேன் என்றார். கோவை மருத்துவமனையில் செய்த பரிசோதனைச் சீட்டுகளை காண்பித்தார். டாக்டருக்கு ஒன்றும் புரியவில்லை. கோவை பரிசோதனைகளின்படி இருதயத்தில் பிரச்சினை இருந்தது தெளிவாக தெரிந்தது. ஆனால் இப்போது ஒன்றுமே இல்லை. எப்படி? சாத்தியம் நீங்கள் என்ன செய்தீர்கள் என்று டாக்டர் கேட்டார். அதற்கு பதிலளித்த சண்முகம் அன்று காலையில் பகவானுடைய கண்களிலிருந்து ஒளிக் கற்றைகள் பாய்ந்து வந்து தன்னுடைய மார்பின் மேல் பட்டதை விவரித்தார். அப்போது டாக்டர் ஆ! அப்படியா. உங்களுக்கு ஆப்ரேசம் இல்லாமலேயே பகவான் குணப்படுத்திவிட்டார். நீங்கள் சந்தோசமாக ஊருக்கு செல்லலாம்.

 நம்பவே முடியவில்லை சண்முகத்திற்கும் அவர் நண்பருக்கும் எதற்கும் இருக்கட்டும்மென்று ஆஸ்பத்திரி கேட் வரையில் பேசிக் கொண்டே நடந்தார்கள். முதலில் எல்லாம் பேசினாலும் நடந்தாலும் சோர்வு ஆகிவிடும். ஆனால் இப்போதோ கலைப்போ சோர்வோ ஏற்படவில்லை! நிஜமாகவே குணப்படுத்திவிட்டார் பாபா! என்று புரிந்து கொண்டு மிகுந்த நன்றியுணர்ச்சியுடன் கோவைக்கு வந்து சேர்ந்தார்கள். யார் யாரையோ கேட்டுப் பார்த்தார்கள். பாபாவைப்பற்றிய ஏதாவது விபரம் தெரியுமா? இவர்கள் விசாரித்த எவரும் தெரியும் என்று சொல்லவில்லை. இதைப்பற்றி யோசித்துக் கொண்டே இருக்கும் பொழுது திடீரென்று ஒரு சத்தம் லாரியின் டயர் பஞ்சர் ஆகிவிட்டது. வண்டியிலுருந்து இறங்கி பார்த்துக் கொண்டிருந்தபோது எதிரே உள்ள ஒரு பங்களாவின் வாசலில் ஸ்ரீ சத்ய சாய் சேவா சமிதி குனியமுத்தூர் என்று எழுதப்பட்ட ஒரு பிளெக்சி போர்டு அங்கே காணப்பட்டது. பகவான் ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் படமும் அதில் தென்பட்டது! அங்கே நுழைந்து விவரங்கள் தெரிந்து கொண்டு பஜனை நடக்க நாள் அன்று சண்முகம் அங்கே சென்றார். சமிதியின் செயல்பாடுகளைப்பற்றி கேட்டு அறிந்து கொண்டார். அப்போது அங்கிருந்த அமைப்பாளர் “ஒரு முக்கியமான அறிவிப்பு புட்டப்பர்த்திக்கு சென்று சேவை செய்ய விருப்பமுள்ளவர்கள் இப்பொழுது பெயர்களை கொடுக்கலாம் என்றார். சண்முகம் தன்னடைய கையைத் தூக்கினார். அமைப்பாளர் எவ்வளவு நாள் நீங்கள் சேவை செய்யத் தயார் 10 நாட்களுக்கா, 20 நாட்களுக்கா, ஒரு மாதத்திற்கா என்று வினவினார். அதற்கு சண்முகம் ஒரு மாதம் வரை சேவை செய்ய ஆசைப்படுகிறேன் என்றார். அமைப்பாளருக்கு ஒரே ஆச்சிரியம் இப்போதுதான் வந்து சேர்ந்திருக்கிறார் ஆனால் ஒரு மாதம் சேவை செய்ய விரும்பிகிறாரே என்ற வியந்து அவரைபற்றி விவரங்களை கேட்டறிந்தார். தெய்வீக சக்தியால் அவருடைய இருதய பிரச்சினையை பாபா தீர்த்து வைத்ததை அறிந்து மகிழ்ந்து ஒரு மாதம் சேவை செய்ய முன் வந்தவர்களுடைய பெயர்களுடன் சேர்த்துவிட்டார். பிறகு புட்டப்பர்த்திக்கு செல்லவேண்டிய வழி மற்றும் அங்கே பின்பற்ற வேண்டிய முறைகளைப் பற்றி விளக்கமாக சொன்னார். 
வீட்டிற்கு சென்ற சண்முகத்திற்கு முதலில் ஒரே சந்தோசம் புட்டப்பர்த்திக்கு போகிறோம் என்று, ஆனால் கவலையும் கூடவே வந்துவிட்டது. ஒரு மாதம் அங்கே சேவை செய்தால் இங்கே குடும்பத்திற்கு வேண்டிய பணம் எப்படி கிடைக்கும். ரெயில் மூலமாக செல்ல டிக்கெட்டிற்கு பணம் எப்படி சம்பாதிப்பது என்றுதான் கவலை.

இவ்வளவு உதவி செய்த பாபா இதற்கும் வழி காட்டுவார் என்று நம்பிக்கையுடன் தூங்க சென்றார் சண்முகம். மறுநாள் காலையில் எழுந்து வந்த போது அவர் எதிரில் நின்றார் ஒருவர் பார்த்த முகமாக இருக்கிறதே என்று நினைத்து அவரை உற்றுப்பார்த்தார். என்னை நினைவில்லையா உங்களுக்கு நான் தான் வின்சென்ட் உங்களிடம் சில வருங்களுக்கு முன்பு ரூபாய் 5000 கடன் வாங்கினேனே இப்பொழுதுதான் கொடுக்க முடிந்தது. வட்டியை பிறகு கொடுக்கிறேன் மன்னிக்க வேண்டும் என்று சொல்லிவிட்டு போய்விட்டார். சண்முகத்திற்கு ஒரே ஆச்சிரியம் சற்றும் எதிர்பாராமல் கிடைத்த அந்த பணம் குடும்ப செலவிற்கும் ஆகும், ரெயில் கட்டணத்திற்கும் ஆகும் என்று சந்தோசப்பட்டு தெய்வாதீனமாக இப்படி நடந்ததைப் பற்றி தன்னுடைய நண்பர்களுக்கு சொல்ல வேண்டும் என்று டீ கடைக்கு சென்றார்.

 அங்குதான் அவரும் அவர் நண்பர்களும் டீ குடித்துக் கெண்டே பல விஷயங்களை பரிமாறிக் கொள்வது வழக்கம். இவர் சொன்னதை கேட்ட நண்பர்கள் சற்றும் நம்பாமல் கனவு கண்டாயா நீ, நிஜமாகவே வின்சென்ட் வந்து கொடுத்துவிட்டுப் போனாரா என்று திரும்ப திரும்ப கேட்டார்கள். ஏன் நம்பமாட்டேன் என்கிறீர்கள். நிஜமாகவே நடந்ததைத்தானே சொன்னேன் என்ற சண்முகத்திடம் நண்பர்கள் சொன்னார்கள் வின்சென்ட் இறந்து இரண்டு வருடம் ஆகிவிட்டது. உனக்கு ஞாபகம் இல்லையா என்றார்கள்!. 
இன்ப அதிர்ச்சி அடைந்த சண்முகம் பாபாவின் அருளை நினைத்து பரவசம் அடைந்து வீட்டிலுள்ளவர்களிடமும் விவரித்தார். மாதச் செலவுக்கு பணம் கொடுத்துவிட்டு ரெயில்வே டிக்கட்டுக்கு ரிசர்வ் செய்துவிட்டு மறுநாள் புட்டப்பர்த்திக்கு பயணப்பட்டார். அங்கே சென்றுகூட லாரி டிரைவர் வேலைதான் கிடைத்தது. அதை மிகவும் ஆர்வமுடன் செய்து வந்தபோது பகவானிடத்தில் ஒரு பிராத்தனை செய்தார். “நான் இப்பொழுது மிகவும் சந்தோசமாக இருக்கிறேன். எப்போதுமே உங்களிடத்திலே சேவை செய்ய சந்தர்பம் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்” என்று வேண்டினார். 
அன்று இரவு மாநிலத் தலைவர் தொண்டர்களிடம் இரவில் ஒரு கூட்டத்திற்கு வரச் சொன்னார். இங்கே யார் சண்முகம் என்று வினவினார். சண்முகம் கையை தூக்கிய போது நீங்கள் என்ன வெகுகாலமாக பகவான் உடைய பக்தரா என்று கேட்டார். சண்முகம் உண்மையை சொன்னவுடன் பகவான் உங்களைப் பற்றி விசேஷமாக ஒரு முக்கியமான வேலையையும் உங்களுக்கு கொடுத்திருக்கிறார் என்றார். என்ன வேலை என்று கேட்டதர்க்கு நீங்கள் உடனே சென்னைக்கு செல்லுங்கள் உங்களுக்கு வேண்டிய டிக்கெட் ரிசர்வேசன் வழிச்செலவு எல்லாம் ரெடியாக இருக்கிறது என்றார். பிரம்பித்து நின்ற சண்முகம் உடனே பஸ்ஸில் புறப்பட்டுவிட்டார். எங்கே இறங்க வேண்டும் என்றுகூட தெரியவில்லை. சென்னையை அடைந்தவுடன் ஒரு தொண்டர் வந்து நீங்கள்தானே சண்முகம், புட்டபர்த்தியில் இருந்து வருகிறீர்கள்? என்று கேட்டார். ஆம் என்று சொன்னவுடன் என்னுடன் வாருங்கள் என்று கூறி ஒரு அறைக்கு அழைத்துச் சென்றார். 

இது நீங்கள் இருக்க வேண்டிய இடம் குளித்துவிட்டு தயாராக இருங்கள். காலை உணவு வரும் சாப்பிட்டுவிட்டு ஒருவர் உங்களை சட்டசபைக்கு அழைத்து செல்வார். அதற்குமேல் என்ன செய்ய வேண்டும் என்று அங்கு போனால் தெரியும் என்றார். சட்டசபை வளாகத்தில் ஒரு பெரிய குடிநீர் நிரப்பிய லாரி ஒன்று நின்றிருந்தது. அதற்கு பக்கவாட்டில் ஏழு, ஏழு குழாய்கள் பதிக்கப்பட்டிருந்தன. ஒரே நேரத்தில் சுமார் 14, 15 பேர் குடிநீர் எடுத்துக் கொண்டு போக வசதியாக இருந்தது. அப்போது சென்னை நகரத்தில் தண்ணீர் பஞ்சம். அதை குறைக்க இப்படி ஒரு ஏற்பாட்டை பகவான் செய்திருந்தார். அதில் கருவியாக பணியாற்ற நம் சண்முகத்திற்கு அதிர்ஷ்டம் அடித்தது. எவ்வளவு புண்ணியம் செய்தாரோ சண்முகம் யார் அறிவார். இந்த குடிநீர் சேவையை துவக்கி வைக்க மாநில முதல்வரே வந்துவிட்டார். இந்த நிகழ்ச்சி தொலைக் காட்சியிலும் வந்துவிட்டது!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக