தலைப்பு

வெள்ளி, 18 அக்டோபர், 2019

பக்தர் கேட்டவை பாபா அருளியவை -5


ஹிஸ்லாப்: சுவாமியின் உபதேசங்களில், எது அவற்றின் சூட்சுமமான சூத்திரமாக கருதப்படலாம்? அந்த சூட்சுமமான சூத்திரத்தைப் சுற்றி அதை அடைவதற்கான வழிகளில் என்ன சாதனா செய்ய வேண்டும்?

பாபா: சுவாமியின் உபதேசங்களில் சூஷ்ம சூத்திரம் அன்பே ஆகும். இந்த குறிக்கோளை சுற்றிய வட்டமாக, அதை அடைவதற்கான வழிமுறைகளாக, ஆன்மீக சாதனைகளான, தியானம், இறைவனின் நாம ஜபம்,
சத்ஜனங்களுடன் உரையாடல், மனதை தீய வழிகளில் செல்லாமல் தடுத்து நிறுத்துவது என பலவற்றை அமைத்து கொள்ளலாம். இந்த ஆன்மீக சாதனைகள் மட்டுமே எந்த ஒரு உண்மையான மதிப்பும் உடையது அல்ல. உண்மையான மதிப்புள்ளது அன்பு ஒன்றே ஆகும். மக்களுடன் பழகும் பொழுது சுவாமி நல்ல அம்சங்களை பார்க்கிறார். தீய அம்சங்களை பொருட்படுத்துவதில்லை. இது, அந்த நல்ல அம்சங்களை பலப்படுத்துவதற்கான வழியாகும். ஒரு வழியில் சுவாமியின் உபதேசங்கள் ஒருவன் சர்க்கரை வாங்க ஒரு கடைக்குப் போனால், அங்கு உள்ள சர்க்கரையை மட்டுமே பார்த்து அதை வாங்குவது போல் ஆகும். அன்றி, அந்த கடையை பற்றியோ அதன் மற்ற விவரங்களையோ அறிந்து கொள்ளும் ஆவல் கொள்வது அல்ல. அந்த கடைக்காரரின் சரித்திரம், மற்றும் குணாதிசயங்கள், மற்ற மக்களுடன் அவன் கொண்டுள்ள தனித்த உறவுகள், அவனுடைய தேக அமைப்பு, அவன் உயரமானவனா,குள்ளமானவனா, வயதானவனா, யுவனா என்பது போன்ற விவரங்கள் அவசியமற்றவை. இந்த உலக வாழ்வை நடத்துவது பற்றிய சுவாமி உபதேசங்களில் முக்கிய அம்சம், மற்றவர்களில் இறைவன் என்ற அம்சத்தை காண்பதும், அந்த தெய்வத்துவத்தை நேசிப்பதும் ஆகும்;

அதல்லாமல், அவர்களின் செயல்கள், குணங்கள், முறையற்ற நடத்தை போன்ற கோளாறுகளை ஆராய்வதல்ல. நாம் உறவாடும் அந்த மனிதனிடம் பொதிந்துள்ள இறைமையை நாம் நேசிப்பதென்பது,பௌதிக நேயமல்ல; அது ஆன்மிக நேயம் ஆகும். மற்றவரில் நாம் பார்க்கும் இறைத்தன்மை, அதை நேசித்தல் என்பது, உலக விவகாரம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் குறைகளை மன்னித்தலோ, அல்லது அவரை விருப்புடன் நோக்குவதோ, அல்லது அந்த நபரின் சரியற்ற நடத்தையை கண்டிக்காதிருத்தலோ அல்ல. அம்மனிதனிடம் பொதிந்துள்ள இறைத்தன்மையை கண்டு, அதை நேசித்து, அந்த இறைத்தன்மையை உற்று கவனிப்பது ஒருபுறமிருக்க, அந்த நபரை கண்டித்தலும், அவரின் குறைகள், விரும்பத்தகாத நடவடிக்கைகள், அவரின் கவைக்குதவாத  செயல் முறைகள், முதலியவற்றை சுட்டிக்காட்டி இடித்துரைத்தலும் தேவை யே ஆகும். அப்படி செய்வது கருணையற்ற செயல் அல்ல. நல்லெண்ணெமே அச்செய்கையின் அடிப்படை ஆகும்.

கூலி வேலை செய்வோரின் தெருச் சண்டையில், ஒருவன் மற்றவனின் கையை ஒரு சிறு பேனா கத்தியினால் கீறினாலும், அதனால் காயம் எதுவும் பெரிதாக ஏற்காவிடினும் காவல்துறையினர் அந்த நபரை கைது செய்து சிறைக்கு அனுப்புவர். அதே சமயம் அருகில் உள்ள மருத்துவமனை ஒன்றில், ஒரு மருத்துவர் மிக கூரான ஒரு கத்தியை உபயோகித்து ஒரு நோயாளியின் உடலில் உள்ள குடல்வாலை அகற்றுவதற்காக 5 அங்குல ஆழத்திற்கு வெட்டினாலும், அச்செய்கைக்கு மிக சிறந்த பரிசு கிடைக்கும். ஆக இங்கு ஒரு பக்கம் மருத்துவர் ஒரு நபரை மிகவும் ஆழமாக காயப்படுத்தி அதனால் புகழ் பெறுகிறார். மற்றொருபுறம் ஒரு தொழிலாளி தன் சகாவை ஒரு சிறு கத்தியால் கீறினாலும் அதற்காக சிறைத் தண்டனை அனுபவிக்கிறான். இதில் முக்கியமானது, செய்கையின் காரணம், அதாவது எண்ணத்தின் அடிப்படையாகும். சுவாமி சில சமயம் ஒரு நபருக்கு அறுவை சிகிச்சை தேவை என அறிந்து, அதாவது அந்த நபரை காயப்படுத்துவதோ, சில சொற்களால் அவரை அச்சுறுத்துவதோ, அந்த நபரின் நல்ல அம்சங்களை மட்டும் நோக்காமல், அவரின் குறைகளை அம்பலப்படுத்தவோ செய்கிறார். ஆனால் சுவாமி அப்படி செய்வது, அவரின் உள் எண்ணம் அந்த நபருக்கு உதவி செய்வதற்கே அன்றி அவருக்கு தீங்கு செய்வதற்கோ அல்லது அவரை நோக செய்வதற்கோ அல்ல.

ஆதாரம்: பகவானுடன் உரையாடல்... என்ற புத்தகத்திலிருந்து...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக