இதற்கு மாறாக அனேக மஹான்கள் இருக்கிறார்கள். அவர்கள் குறிப்பிட்டதொரு மந்திர ஜபம் அல்லது இஷ்ட தெய்வ வழிபாடு, அல்லது யோகம், தியானம் என்று ஏதாவதொன்றைத்தான் விதிப்பார்கள். இவர்களில் சிலர் பிற மார்கக்கங்களை வன்மையாகக் கண்டிப்பதும் உண்டு. இப்படியாக ஒரு தனி மார்க்கம் என்று உருவாகிறபோது அதைச் சேர்ந்தவருக்கென்று பிரத்யேகமான சின்னங்கள், உடுப்புக்கள் போன்றவையும் நிர்ணயிக்கப்படுகின்றன. இதனால் ஒருவரைப் பார்த்த மாத்திரத்தில் இன்ன மார்க்கத்தைச் சேர்ந்தவர் என்று தெரிகிறது.
நம் ஸ்வாமியோ எந்தத் தனியொரு மார்க்கத்தையும் கூறவில்லை. தம் பக்தர்களுக்கெனத் தனி அடையாளம் எதுவும் விதிக்கவும் இல்லை. சாயி சமிதியினர் கண்களை உறுத்தும் வர்ணங்களில் சித்திர விசித்திர உடைகளை அணியாமல், அமைதியை உண்டாக்கும் தூய வெள்ளாடையையே உடுத்தவேண்டும் என்பதற்கு அதிகமாக எவ்விதக் கட்டுப்பாடும் செய்யவில்லை. சிலருக்கு ஞான விசாரம், சிலருக்கு யோகம், சிலருக்கு பக்தி, சிலருக்கு கர்மம் என்றும், பலருக்கு இவற்றைக் கலந்து கலந்தும் அவரவர் மனோபாவப்படி வழிகாட்டுகிறார். இவ்வாறு சகல சமய மார்க்கங்களையும் அவர் அங்கீகரித்தபோதிலும், இக் கலியுகத்தில் சகல புருஷோத்தங்களுக்கும் தனிப் பெரும் சாதனம் நாம சங்கீர்த்தனமே என்று சாஸ்திரங்கள் கூறுவதற்கிசைய, நம் ஸ்வாமியும் பரம சுலபமான, மதுரமான பஜனை மார்க்கத்தை மட்டும் ஒரு படி கூடுதலாக வற்புறுத்தத்தான் செய்கிறார்.
“எவரும், எச்சமயத்திலும், எவ்விடத்திலும், எவ்வித வெளிப் பொருளும் உபகரணமும் தேவைப்படாமல், எளிதே பயிலக்கூடியது நாம ஸ்மரணம்தான். இதையே இசையும் லயமும் கூட்டி பஜனையாகப் பாடிவிட்டால், நம் உயிரைப் பரிசுத்தம் செய்துகொள்ளும் அதே சமயத்தில், இந்த பஜனையைக் கேட்டு, உடன் கலந்துகொள்வோரையும் அகத்தூய்மை பெறச் செய்கிறோம். நம்மை துலக்கிக் கொள்ளும்போதே உலகையும் துலக்க பகவந்நாம பஜனையே ஒப்பற்ற சாதனம். இப்படியாக இந்த சாதனையில் தலைசிறந்த பரோபகாரமும் சேர்ந்திருக்கிறது” என்பார் ஸ்வாமி.
பிரசாந்தி நிலையத்திலும் சரி, ஸ்வாமி முகாமிடுகிற வேறெந்த இடமாயினும் சரி, அங்கு அனைவருகாகவும் தவறாமல் நடத்தப்பெறும் ஒரே ஆத்ம சாதனை நாம சங்கீர்த்தனம்தான்.
ஆதாரம் – திரு. ரா. கணபதி அவர்களின், ‘ஸ்வாமி’.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக