தலைப்பு

ஞாயிறு, 20 அக்டோபர், 2019

சத்ய சாயிபாபாவின் கடல் கடந்த கருணை | Chapter 1 | உயிர் தந்த உத்தமன் (பாகம் - 1)


ஆஸ்திரேலியாவில் வாழும் திருமதி. வசந்திசிவநாதன் அவர்களின் அனுபவங்கள்:

காவலுக்கு வந்தவன் நான்
கருணையே எந்தன் பண்பு
சேவகம் செய்யத்தானே
ஜெகமீதில் வந்தேன் நானே
மேவிடும் புண்ணியத்தால்
மேதினியில் வாழும்
உங்கள்
பூவுலக வாழ்வோ
டென்வாழ்வு பொன்னாகச்
சேர்ந்ததிங்கே !

ஆஸ்திரேலியாவிற்கு வந்த பிறகு சத்யசாயி மையங்களிலும் பஜனைகளிலும் எனக்கு அறிமுகமான ஒரு சில சாயி குடும்பத்தினரில் வசந்தி சிவநாதன் தம்பதி முக்கியமானவர்கள். ஏறக்குறைய 15 ஆண்டுகளாக இங்கு வாழ்ந்து வரும் சாயி குடும்பத்தினர், தமிழ் குடும்பத்தினர்; பிரிஸ்பேனில் ' ட்யூரக்' பகுதியில் இருக்கும்
வண்ணவண்ணப் பூஞ் செடிகள் சூழ்ந்த அமைதியான இல்லம் அவர்களுடையது. இலங்கைத் தமிழ் குடும்பம். சாயி சென்டர்களில் சிற்சில பொறுப்புகளை ஏற்றுப் பணியாற்றி வருபவர்கள். இருவருமே  சாயி பஜனில் கலந்துகொண்டு பாடுபவர்கள். மகன், மகள் இருவருமே பாலவிகாஸ் செல்வங்கள். இப்போது சாயி இளைஞர் பிரிவில் செயல்படுகிறவர்கள். அவர்கள் வீட்டிற்குப் போயிருந்தபோது மகன்  கஜன் இளைஞர் வட்டத்தோடு இரண்டு வாரங்களுக்கு புட்டபர்த்திக்கு வர தயாராகிக் கொண்டிருந்தான்.
'கூப்பர்ஸ்பிளெய்ன்' போன்ற சுவாமி சென்டர்களுக்கு வரும்போது கை நிறைய பை நிறைய செம்பருத்திப் பூக்கள், ரோஜா பூக்களை அள்ளிக்கொண்டு வந்து சுவாமியை அலங்கரிக்கும் பக்தை வசந்தி.
அவர்கள் வீட்டு ஹாலில் பளபளவென்ற வெண்ணிறப்பட்டு அங்கியில் குங்கும சந்தன பொட்டோடு இளம்வயது சுவாமி சிரித்தபடி நிற்கும் ஆளுயரப்படம் மனதை கொள்ளை கொள்கிறது. வெவ்வேறு தோற்றங்களில் சுவாமி ஹாலில்... புத்தக அடுக்கு களில்... சமயலறையில் என்று எங்கும் நிறைந்து இருப்பதை பார்க்கும் போது இதமாக இருக்கிறது. சுவாமியைப் பற்றி அவர்கள் பேசத் தொடங்கியதும் பொறுக்க முடியாத ஜூலை மாதத்துக் குளிரைத் தாண்டி ஒரு தெய்வக் கணகணப்பு  பரவத் தொடங்கியது.

வசந்தி சிவநாதன் இருவருமே யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள். 1977 இல் இருந்து பஜனைகளில் கலந்து கொள்வதும் நாராயண சேவை செய்வதும் தொடர்ந்தது. செல்லையா தனலட்சுமியின் மகளான வசந்திக்கு வீட்டு வழிபாடு, முருக வழிபாடு. யாழ்ப்பாணத்தில் 'மணிப்பாய்' அவருடைய பிறந்த இடம். வசந்தி சொல்கிறார் அங்கு ஒரு பேங்க் மேனேஜர் வீட்டில் 'சாயி பஜன்' நடக்கும். அந்த வீட்டில் நடக்கும் பஜனைகளுக்கு தொடர்ந்து போனேன். வேறு அதிகமான கோயில்களோ ஆன்மீக அமைப்புகளோ அதிகம் கிடையாது என்பதனாலும் சாயி பஜனுக்கு போவது எங்களில் பலருக்கு இயல்பான ஒன்றாகிவிட்டது. கைட்ஸ் ஐலண்டை சேர்ந்த 'சுருவில்' கிராமத்தைச் சேர்ந்தவரான சிவநாத னுக்கும் வசந்திக்கும் திருமணமாகி குடும்பம் லண்டனில் 1977 லிருந்து 88 வரை தொழில் நிமித்தமாக தங்கி வாழ நேர்ந்தது.ரப்பர் தொழில்நுட்பம் கற்று பயிற்சி பெற்ற சிவநாதன் முன்பு யாழ்ப்பாணத்தில் தன் உறவினரின் தொழிற்சாலையில் வேலை பார்த்தார். இப்போது பயிற்சி பெற்ற தொழில் நுட்பத்தோடு குடும்பத்தோடு லண்டனில் இருந்து யாழ்ப்பாணம் திரும்பினார். அதே தொழிற்சாலையில் பணிபுரியும் எண்ணத்தோடு வந்தார். சிவநாதனுக்கு தொடக்கத்தில் சுவாமி பரிச்சயமில்லை. 'தக்ஷ்மி' என்ற மகளோடும் 'கஜன்' என்ற மகனோடும் யாழ்ப்பாணத்திற்கு வந்து வாழத் தொடங்கினர். வண்டி வாகன வசதிகளோடு போதுமான பொருளாதார வசதியோடு அமைதியும் ஆனந்தமும் நிறைந்த வாழ்க்கை. பள்ளிகளுக்கு பிள்ளைகள் போய் வந்து கொண்டிருந்தனர். வசந்தி சாயி பஜனுக்கு போய்வருவது மீண்டும் தொடர்ந்தது. சிவநாதனுக்கும் சுவாமியின் மேல் அன்பும் நம்பிக்கையும் பிறந்தது.

பெருமூச்சோடு தொடர்ந்தார் வசந்தி. லண்டனிலிருந்து நாங்கள் திரும்பி சில வருடங்கள் எல்லாம் நல்லபடியாக தான் இருந்தது. போர் தொடங்கிய பின்பு எது சரியாக இருக்க முடியும்? அரசு விமானங்கள் தங்கள் எதிரிகள் தங்கியிருப்பதாய் சந்தேகப்பட்ட இடங்களிலெல்லாம் குண்டுமாரி பொழிந்தன. எப்போது விமானம் மேலே பறக்கும் குண்டுகள் பம்பம்மென்று விழுந்து வீடுகளும் கட்டிடங்களும் அழியும் என்று சொல்லமுடியாத அதிர்ச்சியிலும் திகிலிலும் பீதியிலும் நாங்கள் இருந்தோம். வெளியில் எங்கும் சுதந்திரமாகப் போக முடியாது. கடைகள் அதிகம் கிடையாது. எல்லாப் பொருட்களும் கிடைக்காது. என்ன வசதி கொண்டவர்களாக இருந்தாலும் வீட்டில் கார் வண்டி இருந்தாலும் பெட்ரோல் கிடையாது. சைக்கிளில் தான் போகவேண்டும். கெரசின் 200 ரூபாய் 300 ரூபாய் கொடுத்து வாங்கினால் தான்... கோயில்களில் ஒட்டுமொத்தமாக ஒரே விளக்கு எரியும். பிள்ளைகள் போய் திரும்பி வரும் வரை ஒரே கவலையாயிருக்கும். ஒவ்வொரு வீட்டிலும் பதுங்கு குழி தோண்டி இருப்பர்... குண்டு வெடிக்கும் ஆபத்து காலத்தில் பதுங்குவதற்காக. அந்த கலவரத்தில் மனிதர்கள் அலை மோதும் போது மனிதர்களைப் போலவே விஷப் பாம்புகளும் அங்குமிங்கும் தாறுமாறாக திரியும். பதுங்கு குழிகளில் போய் பதுங்கி அங்கு பயந்து பதுங்கி இருக்கும் பலரை கடித்து அவர்கள் இறந்து போனதுண்டு. இதனாலேயே நாங்கள் பதுங்குகுழி வெட்டவில்லை.
இருட்டு ஒரே இருட்டு. மின்விளக்கு கிடையாது. பேப்பரை கனமாக சுருட்டி நுனியில் எரியவிட்டு, பெட்ரோமாக்ஸ் விளக்கில் செருகி வைத்திருப்போம். அது மெல்லியதாக  எரியும். வீட்டிற்கு அதுதான் வெளிச்சம். எத்தனை வசதியுள்ளவர்களாக இருந்தாலும் ஒரு பயனும் இல்லை. இருந்தும் இல்லாதவர்களும் எதுவுமே இல்லாதவர்களும் ஒன்று தான். நிலைமை அப்படியிருந்தது. வேலை யில்லை உணவு மருந்து எதுவும் போதிய அளவு கிடைக்காது.

ஒரே மருத்துவ மனை, வண்டி வாகனங்கள் இல்லை. எல்லோரும் சைக்கிளில் தான் போவோம். இருக்கும் சைக்கிள் திருட்டு போய் விடக்கூடாது என்று வீட்டின் பின்புறம் கொண்டுபோய் நிறுத்துவோம்.
அம்மன் கோயில் கொடியேற்றம் நடந்து மக்கள் கூடி இருந்த தெய்வீக திருவிழாக் கூட்டத்தில் ஆகாயத்திலிருந்து விமானம் சரமாரியாக குண்டு பொழிந்தது. அம்மன் கோயில் அர்ச்சகர் கொடி ஏற்றிய நிலையிலேயே இறந்து போனார். இன்னும் பலர் உயிரிழந்தனர். அந்த இடம் மயானமானது. அங்கங்கே பதுங்கு குழிகளில் மக்கள் பதுங்கினோம். திடீரென்று வசந்தி அழத்தொடங்கினார். பள்ளிக்குப் போன பிள்ளைகள் வீடு வந்து சேரவில்லை. பஸ்ஸிலிருந்து இறங்கி அவர்கள் வருகிற நேரம் அது. மற்றவர்கள் தடுத்ததையும் மீறி ஆளரவமில்லாத தெருவில் நடந்தேன் ஓடினேன். எதிரில் வந்து கொண்டிருந்த பால்காரர் மிரட்டாத குறையாக என்னை திரும்பிப் போகச் சொன்னார். பிள்ளைகள் எங்காவது பதுங்கி இருந்து வருவார்கள் முதலில் உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள் என்று மிரட்ட ஒரு வீட்டின் பதுங்கு குழியில் இன்னும் சிலரோடு தங்கினேன். அன்று பிரதோஷம். அழுகையும் பிரார்த்தனையுமாயிருந்தேன்.
கவலையின் உச்சத்திலிருந்தது மனம். சுவாமியின் வட்டத்தில் இருப்பவர்களை சுவாமி எப்போதும் கைவிடுவதில்லை. கலவரம் அடங்கி வெளியில் வந்ததும் வேறிடத்தில் பதுங்கி இருந்த பிள்ளைகள் அழுதபடி வர வசந்தி அழுதபடி ஓடி அணைத்துக்கொள்ள... அது சுவாமியின் பொங்கி வந்த கருணையல்லவா? 'லேட்'டாய் போனால் அம்மா திட்டுவார்களே என்று தான் பிள்ளைகள் அழுதார்களாம். கொஞ்ச நாட்களுக்கு ஏதாவது சைக்கிள் மணி சத்தம் கேட்டால் கூட, மகன் கஜன் பயந்து நடுங்கியிருக்கிறான்.
(தொடரும்)         

ஆதாரம் : சத்ய சாயிபாபாவின் கடல் கடந்த கருணை 
(ஆஸ்திரேலிய சாயி பக்தர்களின் அனுபவங்கள்)  

தொகுத்து அளித்தவர்: சாயி ஜெயலட்சுமி
ஆசிரியரின் அனுமதியுடன் வெளியிடப்படுகிறது.

புத்தகத்தை வாங்கிப் படிக்க அணுகவும் 'சென்னை சுந்தரம் கோவில்'
https://g.co/kgs/MrcEKk

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக