தலைப்பு

திங்கள், 23 செப்டம்பர், 2019

✈️ அமெரிக்காவுக்குப் பறந்த மருந்து!


சுமார் ஏழெட்டு வருடங்களுக்கு முன்பு நிகழ்ந்த சம்பவம் இது.

எங்களின் மகளுக்கு வளைகாப்பு முடிந்த கையோடு, வாஷிங்டனுக்குச் செல்ல நேர்ந்தது. மருமகனுக்கு அங்குதான் உத்தியோகம். இந்தியாவில் மகப்பேறு மருத்துவரால் எழுதித் தரப்பட்ட மாத்திரைகளைச் சாப்பிட்டு வந்தாள் எங்கள் மகள். இந்த நிலையில், ''அந்த மாத்திரைகள் இங்கு கிடைக்கவில்லை. அந்த மாத்திரைகளை வாங்கி, உடனே
அனுப்பிவையுங்கள். அவசரம்!'' என்று தொலைபேசியில் அழைத்துச் சொன் னார் மருமகன். அன்றைக்கு ஞாயிற்றுக்கிழமை. தபாலில் அனுப்ப வும் முடியாது; அப்படியே அனுப்பி னாலும், போய்ச் சேர தாமதமாகி விடுமே என்று தவித்துப் போனோம். பகவான் ஸ்ரீசாயிபாபாவைப் பிரார்த்தித்தபடியே இருந்தோம்.

அப்போது, எங்களுக்குத் தெரிந்தவர் ஒருவர், அன்று இரவு விமானத்தில் அமெரிக்கா செல்கிறார் என்கிற விஷயம், நண்பர் ஒருவர் மூலமாகத் தெரிய வந்தது. முதல் கட்டமாக, நகரெங்கும் அலைந்து தேடி, பல கடைகளில் (ஞாயிற்றுக்கிழமை என்பதால் மருந்துக் கடைகள் பலவும் மூடியிருந்தன) ஏறி இறங்கி, ஒருவழி யாக மருந்து- மாத்திரைகளை வாங்கிவிட்டோம். அடுத்து, அமெரிக்கா செல்லும் அன்பரின் வீட்டைக் கண்டுபிடிப்ப தற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது. கதவைத் தட்டினால், சிறுமி ஒருத்தி மட்டுமே வீட்டில் இருந்தாள். விசாரித்ததில், அவர் தனது மாமா என்றும், அவரும் அத்தையும் பயணத்துக்குத் தேவையான பொருட்களை வாங்கச் சென்றிருப்பதாகவும் தெரிவித்தாள்.

பரிதவிப்புடன் காத்திருந்த வேளையில், உள்ளே ஹாலில் ஸ்ரீசத்யசாயி பகவானின் திருவுருவப் படம் மாட்டப் பட்டிருந்தது. அதில் அபய ஹஸ்தம் காட்டிப் புன்னகைத்துக் கொண்டிருந்தார் பாபா. சட்டென்று மலர்ச்சியானது எங்கள் முகம். அங்கே, சுமார் ஒரு மணி நேரம் வரை காத்திருந்தோம். ஆனால், வெளியே சென்றிருந்தவர்கள் அப்போதும் வரவில்லை. அந்தச் சிறுமி எங்களிடம் வந்து, ''மருந்து- மாத்திரை பற்றி எங்கள் அத்தையும் மாமாவும் பேசிக்கொண்டிருந்தார்கள். நீங்கள் என்னிடம் கொடுத்துவிட்டுப் போங்கள். அதை அவர்கள் வந்ததும் தருகிறேன். நிச்சய மாக, அதைக் கொண்டு போய் அமெரிக் காவில் உங்கள் மகள் வீட்டில் சேர்ப்பார் மாமா'' என்றாள் அந்தச் சிறுமி.

அதன்படி, மருந்துக் கவரையும் மருமகனின் முகவரியையும் கொடுத்துவிட்டு வந்தோம். பிறகு, எங்களுக்கு இந்த அன்பரைப் பற்றிய தகவலையும், முகவரியையும் தந்து உதவிய நண்பரைச் சந்தித்து நன்றி கூறலாம் என அவருடைய வீட்டுக்குச் சென்றோம். என்ன ஆச்சர்யம்... அங்கேயும் ஹாலில் பெரிய புகைப் படத்தில் அபயக் கரத்துடன் புன்னகைத்துக் கொண் டிருந்தார் பகவான் பாபா. இந்தச் சிலிர்ப்புடனேயே வீடு வந்து சேர்ந்தோம்.

செவ்வாய்க்கிழமை, மருமகன் போன் செய்து பேசினார். 'நேற்றைக்கே மருந்து- மாத்திரைகள் வந்துவிட்டன. விரைவுத் தபாலில் அனுப்பியிருந் தால்கூட, இந்நேரம் கிடைத்திருக்காது. உங்கள் மகள், மருந்தை உட்கொள்ளத் துவங்கிவிட்டாள்'' எனப் பூரிப்புடன் சொன்னபோது, சாயியின் கருணையும் அவருடைய பக்தர்களுக்கு சக மனிதர்கள் மீது இருக்கிற வாஞ்சையும் புரிந்து, வியந்தோம்!

- சுசீலா ஜெயராமன், சென்னை-26

ஆதாரம்: சக்தி விகடன் இதழ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக