தலைப்பு

ஞாயிறு, 8 செப்டம்பர், 2019

உங்களின் நன்மைக்காகவே நான் உங்களை கண்டிக்கிறேன்!


தனது குறைகளை சிறியவை என்று நினைப்பதும், மற்றவர்களது சிறிய தவறுகளை பெரிது படுத்துவதும் ஒரு பக்தனுக்கு அழகல்ல, சரியல்ல. அவன் மற்றவர்களிடம் உள்ள சிறுசிறு நல்ல இயல்புகளையும் வெளியே விரித்துரைக்கும் நற்பண்பு பெற்றிருக்க வேண்டும். நல்லியல்புகள், கெட்ட இயல்புகள் இவற்றுடன் கூடி மனிதர்கள் இவ்வுலகில் பிறக்கிறார்கள்.
முட்புதர்களின் விதைகளும், நற்கனிகளின் விதைகளும் ஒருங்கே விதைக்கப்படுகின்றன. முட்செடிகள் முளைவிடும் போதே, நிலத்தில் இருந்து அவற்றை களைய வேண்டும். இல்லாவிடில், முட் செடிகளை வெட்டும் போது, கனிதரும் மரங்களையும் வெட்டும் அவலநிலை ஏற்படும். ஆகவே ஒருவன் உள்ளே தற்சோதனை செய்து, தன்னிடமுள்ள கெட்ட இயல்புகளை விலக்கிக் கொள்ள வேண்டும்.

சுவாமியிடம் இருந்து உங்கள் பிழைகளை மறைக்காதீர்கள். துணிவுடன் இருந்து, ஏதாவது பிழை செய்தால் என்னிடம் கூறுங்கள். உங்களிடம் உங்கள் பெற்றோருக்கு இருக்கும் அன்பை விட சுவாமிக்கு இருக்கும் அன்பு அதிகமானது. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை சுவாமி அக்கறையுடன் கவனித்துக் கொள்வார் என்று அதிக நம்பிக்கையுடன் இருப்பதால் அவர்களை சுவாமியின் கல்லூரிக்கு அனுப்புகிறார்கள். உங்களைப்பற்றி பொறுப்பு எனக்கு மிக அதிகம். உங்கள் கவலை என் கவலையாகிறது. நீங்கள் துன்பமடைவதை நான் ஒருபோதும் விரும்புவதில்லை.உங்களை பாதுகாப்பது என்னுடைய கடமையாக ஏற்றுக் கொள்கிறேன். உங்கள் நலனில் தனிப்பட்ட கவனம் செலுத்துகிறேன். உங்கள் தேவைகளை கண்டறிவதற்கு vice-chancellor, ரெஜிஸ்டிரார், வார்டன் ஆகியோருக்கு வழிமுறைகளும், உத்தரவுகளும் பிறப்பித்திருக்கிறேன்.

சுவாமி உங்களை கண்டிக்காவிடில் நீங்கள் கெட்டு விடுகிறீர்கள். நீங்கள் செய்யும் தவறுகளுக்கு தகுந்தவாறு நான் தண்டனை அளிக்கிறேன். ஒரு வியாதியின் இயல்பையும் தீவிரத்தையும் பொறுத்து அதற்கான சிகிச்சை முறை மாறுபடுகிறது. வயிற்று வலிக்கு நிவாரணம் தேடி செல்லும் மூன்று நோயாளிகளுக்கு மருத்துவர் மூன்று விதமான சிகிச்சை முறைகளை அளித்தால் அதற்காக அவரை குறை கூறலாகாது. ஒருவருக்கு விலை குறைவான மாத்திரைகள் கொடுக்கப்படலாம். அடுத்தவருக்கு சற்று விலை அதிகமான காப்ஸூல்கள் கொடுக்கப்படலாம். மூன்றாமவருக்கு அறுவை சிகிச்சை தேவைப்படலாம். ஒரேவிதமான வயிற்றுவலிக்கு மூன்று விதமான சிகிச்சை அளிக்கிறார் என்பதற்காக, மருத்துவரை கூறலாமா? நோய்களுக்கு தகுந்தவாறு சிகிச்சை வேறுபடுகிறது. அதேபோல நீங்கள் செய்யும் பிழைகளுக்கு தகுந்தவாறு தண்டனை மாறுபடுகிறது.

உங்களது உடல் நலம், சேமநலம் இவற்றில் மிகுந்த அக்கறை கொண்டு உள்ளதால் நான் உங்களுக்கு அடிக்கடி அறிவுரை கூறுகிறேன். சுவாமி என்ன கூறினாலும், அது உங்கள் நன்மைக்கே என்பதை நீங்கள் எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டும்.

நான் உங்கள் உடல் ஆரோக்கியத்தில் மிகவும் அக்கறை கொண்டு இருக்கிறேன். எனது அறிவுரையின்படி நீங்கள் நடந்து கொள்வீர்கள் என்பதிலும் உங்களிடமும் நான் முழு நம்பிக்கை வைத்திருக்கிறேன்.

ஆதாரம்:
சாயி அருளமுதம் கொடை - 1994
( தொகுக்கப்பட்ட அருளுரைகள்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக