தலைப்பு

ஞாயிறு, 29 செப்டம்பர், 2019

🏏 கிரிக்கெட்டும் பிரசாந்தி சேவையும்!


சுமார் 10 வயது சிறுவன் ஒருவன், தன் நண்பர்களுடன் வீதியில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருக்கிறான். தெருவில் நடமாட்டம் இருந்தபோதும், அவர்கள் அதைப் பொருட்படுத்தாமல் ஆர்வமாக விளையாடிக் கொண்டிருந்தனர். தன்னை நோக்கி வந்த பந்தை அவன் வேகமாக தனது மட்டையால் தட்ட, பந்து எதிர் வீட்டு ஜன்னலின் கண்ணாடியில் பட்டு கண்ணாடி உடைந்துவிடுகிறது. வீட்டின் சொந்தக்காரர் மற்றும் தெருவில் நடமாடிக் கொண்டிருப்பவர்களும் கிரிக்கெட் விளையாடுபவர்களை
திட்டுவார்களே தவிர எந்த விதத்திலும் பாராட்ட மாட்டார்கள். அவர்கள் ஆடும் கிரிக்கெட்டை ஒரு பொருட்டாகவே மதிக்கமாட்டார்கள். இவர்கள் தெருவில் வோலையாடுவதால் எல்லோருக்கும் தொல்லையாக இருக்கிறது என்பார்கள்.

ஆனால் அவன் பள்ளியில், School Cricket Team- ல் சேர்ந்து, ஒரு பயிற்சியாளர் மூலம் கற்றுக்கொண்டு, பின்னர் அதே பையன் ஒழுக்கம் மற்றும் கட்டுப்பாட்டுடன், விதிமுறைகளைக் கடைபிடித்துப் பள்ளியின் டீமிற்காக விளையாடுகிறான். போட்டிகளிலும் பங்கேற்று வெற்றி பெறுகிறான். அதே போல கல்லூரிக்குச் சென்றபின் அங்கும் பல்கலைக்கழகம் நடத்தும் போட்டிகளிலும், விளையாடுவதற்கான வாய்ப்பு அவனுக்கு கிடைக்கின்றது. பின்பு அதே பையன் மாநில அளவில் மிகத் திறமையுடன் விளையாடி, தன் குழுவிற்கு வெற்றியை தேடிக் கொடுக்கிறான். அதனால் அந்த பையன் இந்திய குழுவிற்காக விளையாட தேசிய அளவில் தேர்ந்தெடுக்கப் படுகிறான்.

அவன் ஒரு சமயம் சென்னை சித்பரம் ஸ்டேடியத்தில் டெஸ்ட் மேட்ச்சில் விளையாடும்போது அவன் விளையாடுவதை 60,000 பேர் பார்த்து அவனது விசிறியாக ஆகிவிடுகின்றனர். அவர்கள் எல்லோரும் அவனை மிகவும் பாராட்டுகின்றனர். ஆனால் அந்த பேட்ஸ்மேனின் கவனம் முழுவதும் பந்தின் மேலேயே உள்ளது. தெருவில் விளையாடும்போது எதிரில் வருபவர்கள்மேல் பட்டுவிடுமோ, ஜன்னலில் பட்டிவிடுமோ என்ற பயம் இருந்ததால் விளையாட்டில் கவனம் செலுத்த முடியவில்லை. ஆனால் இங்கு அவன் கவனம் முழுவதும் பந்தின் மேலும், வெற்றி பெறுவதிலுமே இருந்தது. இதே கிரிக்கெட்டை அவன் தெருவில் விளையாடியபோது திட்டிய மக்கள் அவன் ஸ்டேடியத்தில் விளையாடும்போது அவனை பாராட்டி உற்சாகமூட்டுகிறார்கள்.

இதன் காரணமென்ன? எதை எங்கே செய்ய வேண்டுமோ அதை அங்கே செய்ய வேண்டும். அதுவும் நல்ல பயிற்சியுடன் கட்டுப்பாட்டுடன் செய்தால் அதன் பலன் அதிகம். எனவே முதலில் சமிதிக்கு (மைதானம்) வந்து, சாயி நிறுவனத்தின் கட்டுப்பாடுகளை, கன்வீனரிடமிருந்து (coach) கற்றுக்கொண்டு, உள்ளூர் சேவைகளில் (கல்லூரிகளில் நடக்கும் போட்டி) முதலில் பங்கேற்க வேண்டும். பின்னர் பிரசாந்தி நிலையம் (சிதம்பரம் ஸ்டேடியம்) சென்று சேவை செய்தால் அதன் சிறப்பு அதிகமாகும்.

அந்த பையன் சிதம்பரம் ஸ்டேடியத்தில் மேட்ச் விளையாடும்போது அவன் சிந்தனை முழுவதும், பந்து வரும்போது எப்படி அடிப்பது, காலை எப்படி வைத்துக் கொள்வது, மட்டையை எப்படி சுழற்றி அடிப்பது என்று விளையாட்டிலேயே இருக்குமேயன்றி யார், யார் உட்கார்ந்திருக்கிறார்கள், அவர்கள் கைகளைத் தட்டுகிறார்களா என்றெல்லாம் அலைபாய்ந்து கொண்டிருக்காது. போட்டியில் வெற்றி பெறுவது ஒன்று மட்டுமே அவனது குறிக்கோளாக இருக்கும்.

அதே விதமாக நாமும், பிரசாந்தி நிலையத்திற்கு சேவை செய்வதற்காகச் செல்லும்போது, நமக்கு முன்பின் தெரியாதவர்கள் எல்லாம் நமக்கு நன்றி சொல்கிறார்கள். அப்படி அவர்கள் சொல்லும்போது, நாம் அதை ஏற்றுக்கொள்ளாமல், அதை அந்த ஆண்டவனுக்குச் சொல்லுங்கள் என்னும் விதமாக சாய்ராம்..சாய்ராம்.. என்கிறோம். அப்பொழுது அதன்பலன் யாவும் இறைவனுக்கே போய் சேருகிறது. இந்த தன்னலமற்ற சேவையால், நம் பாவங்கள் நீங்கி மோக்ஷம் செல்ல நல்வழி அமைக்கப்படுகிறது.

ஆதாரம்: திரு. T. G. கிருஷ்ணமூர்த்தி அவர்களின், 'ஸ்ரீ சத்ய சாயி பாதையில் ஞானத்தேடலும் திருவருளும்' எனும் நூலில் இருந்து

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக