தலைப்பு

செவ்வாய், 10 செப்டம்பர், 2019

பகவான் முன்கூட்டியே காட்டிய அடையாளம்!


கூடலூர் சமிதியைச் சேர்ந்த திரு. ஜோகையா லிங்கராஜ் அவர்களின் அனுபவம்.

 2011ஆம் ஆண்டு ஒருநாள் பகவானின் திருஉருவப் படத்திற்கு சாத்தியுள்ள மாலை சத்தத்துடன் வெடித்து, சிறு துண்டுகளாக சிதறி, அந்த துண்டுகள் கீழே விழாமல் மேலே மேலே போய், கடைசியில் ஒரு விநாயகர் படத்திற்கு மாலை ஆகிவிட்டது. பயந்து அதிர்ச்சி அடைந்துவிட்டேன். அந்த அதிர்ச்சியில்
பகவானை நினைத்து வணங்குகையில், பிறகு தான் தெரிந்தது அது கனவு என்று. பகவான் எவ்வளவோ முறை எனது கனவில் வந்துள்ளார். என்னிடம் நேரடியாக உரையாடுவது போல் தெள்ளத்தெளிவாக காட்சி தந்துள்ளார். ஆனால் இன்று ஏன் இந்த மாதிரி தோன்றியது என ஒன்றும் புரியாமல் வீட்டில் உள்ளவர்களிடம் இதைப் பற்றி தெரிவித்தேன். அதே ஆண்டு ஏப்ரல் மாதம் 27ஆம் தேதி புதன்கிழமை சரியாக காலை 10.40 மணிக்கு பிரசாந்தியில் பகவானின் தெய்வ உடலை சமாதிக்கு எடுத்தனர். எல்லோரும் பகவானை நினைத்து தங்களது கவலையை அடக்க முடியாமல் வாய் விட்டு சாய்ராம் சாய்ராம் என்று தங்களையும் அறியாமல் விக்கி அழுதனர். அதுவே சத்ய சாயி அவதாரத்தின் கடைசி காட்சியாகிவிட்டது.

அப்பொழுது நான் கல்லூரி மாணவர்களின் அருகில் ஒரு தூண் பக்கம் உட்கார்ந்திருந்தேன். அந்த தூணில் பெரிய அளவில் பகவானின் திரு உருவப்படம் மாட்டியுள்ளனர். அதுபோல குல்வந்த் ஹாலில் உள்ள எல்லாத் தூண்களிலும் பகவானின் படங்கள் மாட்டியுள்ளனர். அவை ஒவ்வொன்றிற்கும் பெரிய பெரிய மாலைகளை அணிவித்து இருந்தனர். பகவானின் உடலை எடுக்கும் அதே வேளையில், நான் உட்கார்ந்திருந்த தூணின் படத்தில் போட்டுள்ள பெரிய மாலை பெரிய சத்தத்துடன் வெடித்து சிறு சிறு துண்டுகளாக விழுந்தன. அதில் ஒரு துண்டு மாலை என் மடியில் விழுந்தது. பகவான் கடைசியாக தனது அவதாரத்தில் எனக்கு தனது அன்பை இந்த மாலையாக தந்துள்ளார், என்பதை அறிந்து, அந்த மாலையை எனது பூஜை அறையில் ஞாபக சின்னமாக வைத்து தினமும் பூஜை செய்து வருகிறோம். அந்த மாலை வெடிக்கும் போது குல்வந்த் ஹாலில் இருந்த  தூணின் அருகில் இருந்தவர்கள் அந்த மாலையை வணங்கி அந்த தூணில் தங்கள் தலையை மோத விட்டு அழுத காட்சி மிகவும் உருக்கமாக இருந்தது. ஒரு மாதத்திற்கு முன்பு எனது கனவில் தோன்றிய படியே நடந்து விட்டது. அதுவும் சுவாமியின் தெய்வ உடல்,  ப்ரசாந்தியில் முன்பு விநாயகர் இருந்த இடத்திலேயே சமாதியாக கலந்துள்ளார். பகவான் முன்கூட்டியே இந்த நிகழ்வை தெரியப்படுத்தவே கனவில் அந்த காட்சியை தந்துள்ளார்.

ஆதாரம்: இதயத்தோடு இதயம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக