தலைப்பு

புதன், 30 ஆகஸ்ட், 2023

நான்கு மாதங்கள் கடந்தும் அழுகாத கல்லறைப் பிணம் - பாபாவின் விசித்திர லீலை!

ஒரு மருத்துவர் அவர் பாபா பக்தர், ஒரு இக்கட்டான பிரச்சனையில் மாட்டிக் கொள்கிறார், அது போலீஸ் கேஸ் வரை நீள்கிறது! அது என்ன பிரச்சனை? எப்படி அவர் அதிலிருந்து மீள்கிறார்? விறு விறு சுவாரஸ்யமாக இதோ...


அவர் பாபா பக்தர்! பம்பாயில் (தற்போது மும்பை) வசிக்கிறார்! ஜஸ்லோக் மருத்துவமனையில் மெடிக்கல் ஆஃபீஸராக பணியாற்றுகிறார்! பேரிறைவன் பாபாவின் சொல் பேச்சை தவறாதவர் அவர்! மருத்துவமனையில் எந்த ஸ்டிரைக் நிகழ்ந்தாலும்... அதில் கலந்து கொள்ளாமல் மருத்துவத்தை பூரணமாக சேவையாக உணர்ந்து பணியாற்றுகிறவர் அந்த டாக்டர்! அப்படி ஸ்டிரைக் செய்பவர்கள் தங்களோடு கலந்து கொள்ளாத அந்த சாயி பக்தரான டாக்டரை மிரட்டுகிற போதும், அவர்கள் பேச்சை ஒருபோதும் கேளாமல் பாபாவின் பேச்சையே கேட்டு மருத்துவ சேவைக்கு ஒருநாள் கூட குந்தகமே விளையாமல் பார்த்துக் கொள்கிறார்!


ஒரு நாள் ஒருவர் இறந்து போகிறார்! கிணற்றுக்குள் மூழ்கி இறந்ததாக தகவல்! அவர் ஒரு கிறிஸ்துவர் ஆகிறபடியால் போஸ்ட்மார்ட்டம் செய்து தான் கல்லறையில் புதைக்க வேண்டும்! அந்த சமயம் பார்த்து மருத்துவ ஊழியர்கள் வேறு ஸ்டிரைக்! ஆகையால் கடமையே கண்ணாக பணிபுரிந்த அந்த சாயி பக்த டாக்டரையே காவல்துறையினர் அணுகுகின்றனர்! கிணற்றில் விழுந்ததால் அது தற்கொலை என்று பிரேதப் பரிசோதனை செய்து எழுதித் தர வேண்டும்! முழுக்க நீரில் மூழ்கி உடல் உப்பி இருக்கிறது! அவரும் அவ்வாறே எழுதித் தந்துவிடுகிறார்! இப்படியே 4 மாதங்கள் கடந்து போகிறது! அப்போது தான் அந்த திடுக்கிடும் செய்தி வருகிறது! அது அந்த சாயி பக்த மருத்துவரின் வாழ்வையே சில நேரங்களில் புரட்டிப் போடப் பார்க்கிறது! காவல்துறையினர் அதிர்ச்சி அடைகின்றனர்! பிரேத பரிசோதனை செய்த அந்த டாகடரின் மேல் மிகப்பெரிய சந்தேகம் எழுகிறது! காற்றைக் கூட சந்தேகப்படுவது தான் காவல்துறையினரின் தொழில் தர்மம்!

 

அது என்ன செய்தி எனில்...! கிணற்றில் விழுந்து இறந்த அந்த நபர் தற்கொலை செய்து கொள்ளவில்லை என்பதே! அவரை சிலர் கத்தியால் கொலை செய்துவிட்டு கிணற்றில் தூக்கி வீசி எறிந்ததாக வந்த அந்த அதிர்ச்சிகர தகவல்! ஆக அந்த மருத்துவர் லஞ்சம் வாங்கிக் கொண்டு தான் தங்களிடம் ரிப்போர்ட் கொடுத்திருக்கிறார்! கொலை செய்தவர்கள் யார் என்று கூட அவருக்கு தெரிந்திருக்கும் என்ற ஒரு விபரீத முடிவுக்கு வந்து விடுகின்றனர் காவல்துறையினர்! ஒரு போலீஸ் படையே அவரைப் பார்க்க வருகிறது! நடந்ததை கேள்விப்பட்டு திகைத்துப் போகிறார்! தான் எந்த தவறும் செய்யவில்லை என்று உண்மை பேசுகிறார்! பொய்யை நம்பும் அளவிற்கு உலகம் உண்மையை சந்தேகப்படுகிறது காவல்துறையினர் அவரின் இதயம் திறந்த வார்த்தையை இரண்டு செவியால் கூட கேட்கவில்லை! அவரை கல்லறைத் தோட்டத்திற்கு அழைத்துச் செல்கின்றனர்! அந்த டாக்டரோ "சாயிராம் சாயிராம்!" என்றே மனதிற்குள் உச்சரித்த படி அவர்களோடு செல்கிறார்! அந்த கிணற்றில் விழுந்தவரின் கல்லறை அது! அகலத் திறக்கின்றனர்... புதைக்கப்பட்ட கல்லறை மீண்டும் திறக்கப்படுகிறது! காரணம்-: புதைக்கப்பட்ட உண்மை வெளியே வரவேண்டும் என்பதற்காகவே! கல்லறையின் மூடி திறக்கப்படுகிறது... ஒரே மண்தூசி.. அப்படியே குனிந்து பார்க்கின்றனர்.. பிணம் அதே போல் உப்பலாக இருக்கிறது.. அப்போது, தான் ரிப்போர்ட் செய்த முறையை காவல் துறையினரிடம் விளக்குகிறார் அந்த டாக்டர்! இந்த இந்த காரணத்திற்காகத் தான் என பிரேத பரிசோதனையில் திகழும் அடையாளங்களை விவரிக்கிறார் அவர்! காவல்துறையினர் திருப்தி அடைகின்றனர்! அந்த சாயி பக்த டாக்டரின் குணத்தையும் உணர்ந்த மேல் அதிகாரி அவரிடம் மன்னிப்பும் கேட்டு, அவரை சரிவர நடத்தாத கீழ் அதிகாரியை லத்தியை வைத்து மிரட்டவும் செய்கிறார்! அனைவரும் அந்த இடம் விட்டு சென்றுவிடுகின்றனர்...! டாக்டரோ அப்படியே நடந்தபடி யோசிக்கிறார்! எப்படி ஒரு பிணம் நான்கு மாதங்கள் கடந்தும் அப்படியே அழுகாமல் இருக்க முடியும்? பௌதீக விஞ்ஞானத்தில் இது சாத்தியமே இல்லை! ஒரு இறந்த உடல் 10 நாட்களுக்குள் அழுகி எலும்புக் கூடாகிறது! இது தான் இயற்கை விதி! அவருக்கு ஒன்றுமே புரியவில்லை! 


"சுவாமி! நீங்கள் தான் என்னை இதில் இருந்து காப்பாற்றியது! இல்லை என்றால் , அந்த உடல் மட்டும் எலும்புக் கூடாக மாறி இருந்தால் , எப்படி என்னால் எனது ரிப்போர்ட்டை நிரூபித்திருக்க முடியும்?" என்று மனதிற்குள் பாபாவை நினைத்து உருகுகிறார்! வீட்டிற்கு வருகிற போது, அவரது மனைவி பாபா தனக்கு முன் ஒரு விஷன் வழி தோன்றியதாகவும் .. கையில் மீனையும் ,ஒரு லத்தியையும் வைத்திருந்ததாகவும் விவரிக்கிறார்! அவருக்கோ ஒரே பரவசம்! சமுத்திரத்தில் இருந்து சட்டியில் விழப் போன மீன் தான் அந்த டாக்டர், அந்த காவல்துறையினர் கையில் இருந்த அதே லத்தி தான் பாபாவின் கையில் இருந்தது என்பதையும் அவர் உணர்கிறார்! ஆக அந்த மீன் அகப்படவில்லை! காரணம் அது ஏற்கனவே பாபாவின் அருட்கரங்களில் தான் பத்திரமாக இருக்கிறதே!


பிறகு அடுத்த நாள், அதே கல்லறைத் தோட்டத்திற்கு வந்த டாக்டர், அதே கல்லறையை திறந்து பார்க்க திகைத்துப் போகிறார்! கண்ணில் கண்ணீரே வருகிறது! அந்த உடலோ அடையாளம் தெரியாமல் எலும்புக் கூடாக இருக்கிறது! திக் என்று இருக்கிறது டாக்டருக்கு! 

இவை நடந்த பிறகு ஒரு சமயம் புட்டபர்த்தி செல்கிற போது, பாபா அவரிடம் நிகழ்ந்த சம்பவம் அனைத்தையும் விவரித்து, 

"நான் தான் உன் மானத்தைக் காப்பாற்ற அந்தப் பிணத்தை ஃபிரஷ்ஷாக வைத்திருந்தேன்!" என்று பாபா தெரிவிக்க... கண்ணீரைத் தவிர என்ன ஒரு உன்னத பதிலை பாபாவிடம் அந்நேரம் அந்த டாக்டரால் பேசி இருக்க முடியும்?


பின்குறிப்பு: இது போலீஸ் கேஸ் வரை போனதால் யார் அந்த டாக்டர் என்பதை நூலாசிரியர் குறிப்பிடாமல் மற்ற அனைத்து விபரங்களையும் குறிப்பிட்டிருக்கிறார் என்பதை நம்மால் உணர முடிகிறது!

(ஆதாரம் : அற்புதம் அறுபது | பக்கம் : 36 - 39 | ஆசிரியர் : அமரர் ரா.கணபதி ) 


பேரிறைவன் பாபாவால் எதைத்தான் நிகழ்த்த முடியாது! விஞ்ஞானத்திற்கு அப்பாற்பட்டவர் பாபா! விஞ்ஞானமே மெய் ஞானத்திற்கு உட்பட்டது தான்! பாபாவே பக்தர்களுக்கு காவலும் சகலமும்! உடல் பிணமாகவும் அதே சமயம் Fresh'ஷாகவும் இருந்தது அல்லவா! இதைப் போல் தான் தியானம் ! ஆனால் ஒரே ஒரு வித்தியாசம் அங்கே உடல் அப்படிக் கிடந்தது! தியானத்தில் மனம் இறந்து போகும் ஆனாலும் ஃபிரஷ்ஷாக இருக்கும்! அத்தகைய தியானத்தை பாபாவால் மட்டுமே நமக்கு அருள இயலும்!


  பக்தியுடன் 

வைரபாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக