தலைப்பு

வியாழன், 10 ஆகஸ்ட், 2023

இயற்கைக்கே இரு பேரவதாரங்களின் பாதங்களால் எழுந்த பேரார்வமும்.. குதூகலமும்...!

எவ்வாறு இரு யுகத்திலும் தோன்றிய இரு அவதாரங்களின் பாதங்களை தீண்ட இந்த இயற்கையே எவ்வாறு ஆர்வப்பட்டது.. பாதம் அடைந்து எவ்வாறு குதூகலப்பட்டது எனும் ஆச்சர்ய சம்பவங்கள் சுவாரஸ்யமாக இதோ...


அக்ரூர் மதுராவில் இருந்து கோகுலத்திற்கு வந்து கொண்டிருக்கிறார்! அக்ரூர் ஸ்ரீ கிருஷ்ணருக்கு பௌதீக ரீதியாக சித்தப்பா முறை! கம்சனின் அரண்மனையில் அமைச்சராக இருக்கிறவர்! யாதவ குலத்தின் கிளையான விருஷ்ணி குலத்தவர்! அவரே ஸ்ரீ கிருஷ்ணரையும் பலராமரையும் மதுராவுக்கு அழைத்துச் செல்கிறார்!  அது பர பர எனும் பரபரப்பில்லா துவாபர யுகம்! ஸ்ரீ கிருஷ்ணரை தரிசித்து அழைப்பதற்கே அந்தப் புறப்பாடு! ஸ்ரீ கிருஷ்ணரை நினைக்கும் போதே அக்ரூரரின் இதயம் குதூகலம் அடைகிறது... முக தரிசனம் பெற குதிரையை விடவும்  வேகமாக அவரது மனம் ஓடுகிறது! ஸ்ரீ கிருஷ்ணரின் பாத தரிசனம் பெற அக்ரூரரின் ஆன்மா புழுதி பறக்கும் குதிரையோட்டமாய் மேல் நோக்கிப் பறக்கிறது! அக்ரூர் இதயத்திலோ குதிரைகளின் குளம்படிச் சப்தங்கள்! அப்போது துள்ளி குதிக்கும் யமுனை  நதியை அவரது துள்ளிக் குதிக்கும் இமைக் கண்மணிகள் தரிசிக்கின்றன... யமுனையின் குதூகலத் துள்ளாட்டம் காற்றோட்டத்தால் அல்ல அது ஸ்ரீ கிருஷ்ண நாட்டத்தால் என்பதை அக்ரூர் உணர்ந்து கொள்கிறார்! "ஓ... எத்தனை புண்ணியமும், ஆன்மீக உந்துதலும் இந்த பிருந்தாவனம் தான் கடந்து வந்த ஜென்மங்களில் பெற்றிருக்கிறது! பிருந்தாவன வாசிகள் எவ்வளவு பூர்வ புண்ணியத்தைக் கொடுத்து வைத்திருக்கின்றனர்! 

ஓ எவ்வளவு கொடுப்பினை...! எவ்வளவு கொடுப்பினை...! பிருந்தாவனத்தில் பரந்திருக்கும் மணல் திட்டுகள் எல்லாம் ஸ்ரீ கிருஷ்ணரின் பாதத் தீண்டுதல் பெற்று எத்தனை பூரித்திருக்கின்றன..." என்பதை அங்கிருந்து எழும் ஆன்மீக அதிர்வலைகளால் உணர்கிறார் அக்ரூர்!


அதே போலவே புட்டபர்த்தி பிரசாந்தி நிலையத்தில்... சுற்றி எழுந்து கொண்டிருக்கும் ஆன்மீக அதிர்வலைகள் என்பது பாபாவின் தீண்டுதலால் இயற்கையே பரவசப்பட்டு தனது பரவசத்தை அதுபோல் நம்மையும் அப்படி ஒரு அதீத நிலைக்கு  இட்டுச் செல்லும் அதிர்வலைகளால் வெளிப்படுத்துகின்றன...!

ஒருமுறை திரயி பிருந்தாவனத்தில் தரிசனம் தந்து விட்டு தனது இருப்பிடம் நோக்கி பாபா நகர்கிறார்! வழியில் ஒரு சிறு கல் பூமிக்குள் பொதிந்திருக்கிறது.. வெளியே தனது சிறுதலையை மட்டும் சற்று நீட்டிக் கொண்டிருக்கிறது! தலை வரை மூடப்பட்டிருந்த தெனாலிராமன் போல் அந்தக் கல் காட்சி அளிக்கிறது! 


பாபாவுக்கு பின்னால் வருகிற ஒரு பக்தர் கல் பாபாவுக்கு இடைஞ்சலாக இருக்குமே என்று நினைத்துக் கொண்டு அதை எடுக்க முயற்சி செய்கிறார்! எடுத்த பிறகு அதை எங்கேயாவது வீசிவிட முடிவு செய்கிறார்! இதனை அறிந்த பாபா அவரிடம் 

"வேண்டாம் பங்காரு! அப்படிச் செய்யாதே! அந்தக் கல் என்னுடைய பாதத் தீண்டுதலுக்காகத் தான் பல நாட்களாக காத்திருக்கிறது.. இன்று அதனுடைய வேண்டுதலை நான் நிறைவேற்றிவிடுவேன்!" என்கிறார்! அதைக் கேட்டுப் பேராச்சர்யப் படுகிறார் அந்த பக்தர்! 

பாபாவின் பாதம் தீண்டிய மணலை பலர் சேகரித்து வைத்திருக்கிறார்கள்... அப்படி பாபா பாதம் தீண்டிய மணலை ஆச்சர்யமாக அப்படியே வாயில் போட்டு உட்கொண்டவரும் உண்டு என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது! 


(Source : Sri Krishna - Sri Sathya Sai | Page No: 76 - 77 | Author : Dr J. Suman Babu ) 


அந்தக் கல் மட்டுமல்ல ஆரம்பக் கல்லே அகலிகையாக மாறியது.. அதற்குப் பிறகான கல் தலையணை ஆனது.. அதற்கும் பிறகான கல் ஸ்ரீ ஷிர்டி சாயி விக்ரஹமாக உருமாறியது! கல் பாபாவின் கைப்பட்டு புல்லரித்துப் போய் கற்கண்டாகவும் வடிவ மாற்றம் அடைந்திருக்கிறது! அத்தனை கற்களுக்கான ஒரே மகிமை பாபா ஸ்பரிசம் பெற்ற பாக்கியமே! அப்படியே நமது இதயக்கல்லும் கனியாகட்டும்! நெஞ்சக்கனகல்லும் நெகிழ்ந்து பாபாவின் பக்தியில் உருகட்டும்!  கனியில் ஜூஸ் எடுப்பவர்கள் சாதாரண மனிதர்கள்... கல்லிலேயே ஜூஸ் எடுப்பவர் ஸ்ரீ சத்யசாயி கிருஷ்ணர்!


  பக்தியுடன் 

வைரபாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக