எவ்வாறு உயிர் போகிற இக்கட்டான சூழ்நிலையில் இருக்கும் ஒரு கர்ப்பிணியை பாபா காப்பாற்றுகிறார், ஆச்சர்யமான அதிசயம் விறு விறு என இதோ...
அவள் பெயர் நிர்மலா குமாரி! ஏழு முறை கரு கலைகிறது அவளுக்கு! அதற்கு அடுத்தாற் போலவே வலிப்பு நோயும் ஏற்படுகிறது! வேறு சில உடற்கோளாறுகள் வேறு! ஆகையால் அவள் உடல் நலமோ வலுவிழக்கிறது! ஆயுர்வேதம் மற்றும் அலோபதி என்று இரண்டுவகை மருத்துவம் பார்த்தும் பலனில்லை! குன்றாக இருந்த உடல் மேலும் மேலும் குன்றுகிறது! இறுதியாக ஒரு மருத்துவர் தலையில் இடியை இறக்குகிறார்! இனி எண்ணி மூன்று நாள் தான் நிர்மலா உயிரோடு இருப்பார் என எமனின் ஓலை வாசிக்கிறார்! அதிர்ந்தே போகிறார் நிர்மலாவின் தந்தை! காரணம் அப்போது நிர்மலா குமாரி மூன்று மாத கர்ப்பிணி! என்ன செய்வது பிணி'யான கர்ப்பிணி!
வீட்டிலேயே இருந்தால் தலையே வெடித்துவிடும் என்பதால் சிறு ஆறுதலுக்காக விடுப்பு எடுக்காமல் அலுவலகம் செல்கிறார் நிர்மலா தந்தை! அங்கே வேலை செய்யும் சக ஊழியரான ஒரு அந்தணர் , தானாக தேடி வந்து ஏன் முகம் வாட்டமாக இருக்கிறது என்று விசாரிக்கிறார்! அவரோ தனது மகள் நிலையை கண்ணீர் மல்க விவரிக்கிறார்! விபரம் அனைத்தும் அறிந்து கொண்ட அந்த சக ஊழியரான அந்தணர், புட்டபர்த்தி சென்று ஸ்ரீ சத்ய சாயி பாபாவை தரிசிக்கச் சொல்கிறார்! ஆனால் நிர்மலா குமாரியின் தந்தைக்கு துளியும் விருப்பமில்லை... "இந்த சாயி இந்த பாபா, இது போன்றவர்களின் மீது எல்லாம் எனக்கு சுத்தமாக நம்பிக்கையே இல்லை!" என்று முகத்தில் அறைந்தார் போல் சொல்லி விடுகிறார்! அந்த சக ஊழியரும் செய்வது அறியாது தன் இடம் திரும்புகிறார்!
அலுவலகம் முடிந்து, வீட்டிற்கு வந்த நிர்மலாவின் தந்தை படுத்தபடியே தனது சக ஊழியர் சொல்வதை யோசிக்கிறார்! மின்விசிறியோடு சேர்ந்து அவரது சிந்தனையும் சுற்றுகிறது! டாக்டரோ இன்னும் மூன்று நாளே என கெடு விதித்திருக்கிறார், "நாம் அந்த சத்ய சாயி பாபாவை பார்த்தால் தான் என்ன குறைந்துவிடப் போகிறது?!" என்ற ஒரு முடிவுக்கு வருகிறார்! அலோபதி தராத குணத்தை வெங்கடாஜல'பதி ஆகிய பாபா தருவார் என்பதைப் போல் கடைசிப் புகலிடமாக பாபாவிடம் வந்து சேர்கிறார்கள் தந்தையும், நோயுற்ற மகளும்!
"உனது மகளுக்கு வருகிற நான்காம் நாள் இறுதி காரியம் செய்யப் போகிறாயா? அவள் உடல் நலம் சரியில்லாமல் இருக்கிறாள்! எனக்கு எல்லாம் தெரியும்!" என்று சொல்லிக் கொண்டே தனது திருக்கரங்களால் விபூதி சிருஷ்டி செய்து அதைச் சாப்பிட வைக்கிறார், அவள் அதை விழுங்கி பாபாவை நன்றிப் பெருக்கோடு உற்றுப் பார்க்கிறாள்!
"இனி Gardinol மாத்திரைகளை எடுத்துக் கொள்ளாதே! உன்னுடைய வலிப்பு குணமடைந்து விட்டது! உனக்கு குழந்தை பிறக்கும் , நீ நீண்ட காலம் வாழ்வாய்!" என்று சொல்லி ஆசீர்வதிக்கிறார்! பிறகு நிர்மலா குமாரி நன்றாக உடல் நலத்தோடு திகழ்கிறார்! ஆரோக்கியமாக குழந்தையும் பிறக்கிறது! அவளது தந்தையாரும் தீவிர சாயி பக்தராகிவிடுகிறார்! வியாழன் தோறும் மௌனமும் இணைந்த ஆகார விரதமும் மேற்கொள்கிறார்! பக்தி எனும் வைராக்கிய பிரேம விரதம் மற்ற விரதங்களையும் கடைபிடிக்கத் தூண்டவே செய்கிறது!
(Source : Miracles of Divine Love - vol 1 | Page : 56 , 57 | compiled by p.gurumoorthy )
பேரிறைவன் பாபாவே அனைத்து ஜீவராசிகளுக்கும் கடைசிப் புகலிடம்! அந்த கடைசி என்பது வாழ்க்கையின் முதல் கட்டத்திலேயே வந்துவிடுமானால் அதைவிட இந்த பூமியில் பிறந்ததற்கான விசேஷ பலன் ஏதும் தனியாக இல்லை! வெறும் புற ஆரோக்கியத்தை சாதாரண மருத்துவர் கூட தர இயலும்! அதற்கானதல்ல மூன்று சாயி அவதாரங்கள்! அக ஆரோக்கியமே புற ஆரோக்கியத்திற்கு அடிப்படை! அதனை அருளிடவே பாபா மண்ணுலகில் மூன்று முறை அவதரித்திருக்கிறார்!
பக்தியுடன்
வைரபாரதி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக