தலைப்பு

புதன், 23 ஆகஸ்ட், 2023

ஆதிவாசி மொழியில் உபநிஷதங்களை மொழி பெயர்க்க வைத்த ஆதிபுருஷ சாயி!

உபநிஷதங்கள் வேத ஆழம் மிகுந்தவை... அவற்றை அனைவருக்கும் தெரிந்த மொழியில் எழுதுவதே சற்று சிரமமான காரியம்.. அதிலும் சற்று கடினமான ஆதிவாசி மொழியில் இந்த ஆதி ஞானத்தை மொழி பெயர்ப்பது மனித சிந்தனையில் கூட விரைவில் எழாத விஷயம், இப்படி இருக்க எப்படி பாபாவால் இது யாருக்கு எவ்வாறு சாத்தியப்பட்டது? சுவாரஸ்யமாக இதோ... 


அவர் பெயர் ஸ்ரீ லக்ஷ் குமார்! மூன்று துறைகளில் முதுநிலை பட்டம் பெற்றவர்! மிகுந்த அறிவாளி! இவர் அருணாச்சல பிரதேசத்தின் கல்வித் துறை அதிகாரியாக செயல்பட்டு வருகிறார்! ஆனால் இயல்பாக தற்பெருமை கொண்டவராக இருக்கிறார் குமார்! பலமுறை தனக்கு கீழே பணியாற்றும் ஊழியர்களிடம் கோபப்பட்டு தண்டனைகள் பல தரும் நபர் இந்த குமார்! 

இப்படி இருக்கையில்... இவருக்கு ஒரு திடீர் திருப்புமுனை சம்பவம் ஏற்படுகிறது! பேரிறைவன் பாபாவை பற்றிய ஒரு கட்டுரைச்செய்தியை illustrated weekly of India பத்திரிகையில் வாசிக்கிறார்! அது ஒரு நல்ல அபிப்ராயத்தை பாபா மீது உருவாக்குகிறது!

ஒரு நாள் இன்னொரு நூதன சம்பவம், திடீரென அவருக்கு பாபா பற்றிய மூன்று புத்தகங்கள் தபால் பார்சலில் வருகிறது!

The life of Baba, A lecture Given by Sai Baba to Students 

Collection of Sai Baba's sayings ஆகிய புத்தகங்கள்! 

ஆனால் தூரதிர்ஷ்டவசமாக அதை அவர் தொடவும் இல்லை வாசிக்கவும் இல்லை!


பொதுவாக குமார் வடமொழி உபநிஷதங்களில் பேரார்வம் கொண்டவராகத் திகழ்கிறார்! அதனை அலுக்காமல் சலிக்காமல் இரவில் நான்கு மணிநேரம் கண்விழித்தும் வாசிக்கிறார்! ஒரு நாள் வடமொழிக்கு இலக்கணம் வகுத்த பாணினி மகரிஷியின் நூலான அஷ்டத்யாயியை வாசித்தபடி இருக்கிறார்! அவரது பங்களா அமைதியாக இருக்கிறது, அது அவரது வாசிப்பினை கலைக்கவே இல்லை! 

     இப்படி தொடர்கிற ஓர் நாள் இரவு, குமார் அந்தப் புத்தகத்தின் ஒரு வாசகத்தில் உறைகிறார், அப்படியே கண்களை மூடிக் கொள்கிறார்! பிறகு கண் திறக்கையில் பாபா அவர் அறையில் ஒரு நாற்காலியில் அமர்ந்திருக்கிறார்! அந்த அறையில் குமார் , பாபாவை தவிர யாருமே இல்லை!


குமாரோ தைரியம் வரவழைத்துக் கொண்டு "யார் நீங்கள்?" என்று மாறி மாறி கேட்கிறார்! அவரால் அதை நம்பவே முடியவில்லை! 

"நான் உங்களோடு இருப்பதற்காக பயப்பட வேண்டாம்!" என இருமுறை பாபா அருள்மொழி பேசுகிறார்! 

"நான் உங்களுக்கு சில புத்தகங்களை வழங்கினேன்!" என்கிறார் பாபா! 

தபாலில் அந்தப் புத்தகங்களை பாபாவே அனுப்பியது என்பதை உடனே உணர்ந்து கொண்டு "ஆம்! அந்தப் புத்தகங்கள் எனக்கு பயனற்றவை! அதில் எனக்கானது ஒன்றுமே இல்லை!" என்கிறார் குமார்! அதைக் கேட்ட பாபாவுக்கு கோபமே வரவில்லை! அவர் உணர்ச்சிவசமும் அடையவில்லை! மிக நிதானமாக "சில உன்னத விஷயங்கள் அந்தப் புத்தகங்களில் இருக்கின்றன.. ஒருமுறையாவது வாசியுங்கள்!" என்கிறார் பாபா கருணை ததும்பத் ததும்ப...! 

"சரி! நான் வாசிக்கிறேன்!" என வேறு அறையில் தபால் கவரோடு இருந்த அந்தப் புத்தகத்தை எடுத்து படுக்கை அறைக்கு வருவதற்குள் பாபா மறைந்து விடுகிறார்! 

பிறகு அதை குமார் வாசிக்க வாசிக்க பாபா சொன்னது சத்தியம் என உணர்கிறார்!

முழுமையான உபநிஷத் சாரமே அந்தப் புத்தகங்களில் ஊற்றப்பட்டிருக்கிறது! 


பத்து நாட்களுக்குப் பிறகு, மீண்டும் ஒரு இரவு! அதே பாணினி புத்தகம்! அதே போல் ஒரு வாசகத்தில் உறைகிறார் குமார், ஆழமாக அதை சிந்தித்து கண் திறக்கையில் பாபா அவரின் அருகே ஒரு நாற்காலியில் அமர்ந்திருக்கிறார்! 

"நீங்கள் அந்தப் புத்தகங்களை வாசித்துவிட்டீர்கள் அல்லவா!" என பாபா கேட்க.. "ஆம் வாசித்துவிட்டேன் !" என்கிறார் குமார்! 

"வாசிக்க வாசிக்க உங்களுக்கு பிடிக்கும் என்று எனக்கு தெரியும்!" என்கிறார் பாபா மிக மிருதுவாக.. *வார்த்தைக்குமே வலிக்காமல் பேசும் பாபாவின் பேச்சு குமாரின் ஆன்மா வரை சந்தோஷக் கூடாரம் இடுகிறது!

"ஏன் அதை நீக்கப் மொழி பெயர்க்கக் கூடாது?"* என்கிறார் பாபா! 

"அது மிகவும் கடினமான பணி!" என்கிறார் பதிலுக்கு குமார்!

"கடினம் தான்...! ஆனால் உங்களால் இயலும்!" என்று உத்தரவாத நம்பிக்கை தருகிறார்! 

உடனே வேறு அறைக்குச் சென்று அந்தப் புத்தகங்களை எடுத்து வருவதற்குள், பாபா மறைந்துவிடுகிறார்! 

பிறகு ஹிந்தியில் மொழி பெயர்க்கலாமா அல்லது ஆதி என்ற ஆதிவாசி மொழியில் மொழி பெயர்க்கலாமா? என்று யோசிக்கிறார்! ஆதி என்பது அருணாச்சல பிரதேசத்தின் மிகப் பழமையான ஆதிவாசி மொழி! அதிலேயே தனது மொழிபெயர்ப்பை ஆரம்பிக்கிறார்! மிகவும் கடினமாக இருக்கிறது! இப்படியே 2 வாரங்கள் கடந்து போக.. ஒரு உபநிஷத் பதத்திற்கு ஆதி மொழியில் சரியான சொல்லுக்காக அவர் யோசித்துக் கொண்டிருக்க.. பாபா மீண்டும் அவர் முன் தோன்றுகிறார், "மொழி பெயர்ப்பு பணியை ஆரம்பித்துவிட்டார்களே!" என்று பாபா மிக மகிழ்ச்சியோடு கேட்க...

"ஆம்! ஆனால் மிகவும் கடினமாக இருக்கிறது! இதுவரை நான் செய்த பணியில் திருப்தியே இல்லை" என்று குமார் பதில் அளிக்க...

"உங்களால் மிகச் சிறப்பாக மொழிபெயர்க்க முடியும்! எதற்காக உங்களையே நீங்கள் குறுக்கிக் கொள்கிறீர்கள்! மகத்துவமான பணிகள் யாவுமே கடினமான பணிகள் தான்! தயங்காமல் தொடருங்கள்!" என்று சொல்லி மறைந்து போய்விடுகிறார் பாபா! ஆச்சர்யங்களும் ஆச்சர்யப்பட 2 மாதங்களில் அந்த மொழிப் பெயர்ப்பை அனைவரும் வியக்கும் வண்ணம் முடித்துவிடுகிறார் பாபா! நண்பர்கள் வியந்து பாராட்டுகிறார்கள்!

"பாபா என் வாழ்க்கையில் வருவதற்கு முன் சின்ன சின்ன விஷயங்களுக்கும் எரிந்து விழுவேன்! கோபப்படுவேன்! ஆனால் பாபா என் வாழ்வில் வந்து நான் அவரை உணர்ந்த பின் என் கோபம் போய்விட்டது! கடினமான பணிகளை எனக்கு கீழே பணியாற்றுபவர்களைக் கூட இப்போது நான் உற்சாகப்படுத்துகிறேன்! பாராட்டுகிறேன்!" என்று மனம் திறந்து ஒப்புக்கொள்கிறார் குமார்! அது தான் அகமாற்றம் என்பது!


(Source : Miracles of Divine love - vol 1 | Page : 44 - 47 | compiled by P Gurumoorthy) 


எந்த ஒரு செயலையும் குறை சொல்வதற்கும், விமர்சனம் செய்வதற்கும் பெரிய அறிவு ஒன்றும் தேவை இல்லை! தன்னால் செய்ய முடியவில்லையே என்ற பொறாமை கலந்த ஆற்றாமையே பெரும்பான்மையான விமர்சனங்களுக்குக் காரணம்! ஆனால் பாராட்டுவதற்கு, எத்தனையோ சிரமங்களில் ஒரு செயலை செய்கையில் ஊக்கப்படுத்துவதற்கு மிகப்பெரிய பரந்த மனம் தேவை! அதற்கு ஞானம் வரவேண்டும்! ஞானம் வர வேண்டுமானால் பாபாவிடம் வர வேண்டும்! பாபாவிடம் வருவது என்பது அவர் உபதேசங்களை கடைபிடிப்பது! ஒரு கிளி கூட சொல்வதை மீண்டும் மீண்டும் சொல்லும்! ஆனால் சொல்வதைக் கடைபிடிக்க உண்மையான பக்தி தேவை! அந்த பக்தியே இப்படிப்பட்ட அக மாற்றம் தருகிறது!


  பக்தியுடன் 

வைரபாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக