தலைப்பு

ஞாயிறு, 27 ஆகஸ்ட், 2023

இறந்தவர்களை உயிர்ப்பித்த இறவா இரு பெரும் அவதாரங்கள்!

எவ்வாறு இரு யுகத்திலும் இறைவன் அவதரித்து  இறந்தவர்களை உயிர்ப்பித்து காத்தருள்கிறார் எனும் ஆச்சர்யப் பதிவு சான்றாதாரத்தோடு சுவாரஸ்யமாக இதோ...

அது துவாபர யுகம்! ஸ்ரீ கிருஷ்ணரும் பலராமரும் மகரிஷி சாந்தீபனியிடம் குருகுல பாடம் பயில்கின்றனர்! அது காசி! காசியில் தான் அந்த யமுனா தீர விஹாரி கங்கை வாசனையோடு தன் ஞானப் பங்கை துவாபர யுகத்தில் செலுத்தத் தயாராகிறார்! கலைகளில் சிறப்புடைய அந்த மகரிஷி அவந்தியிலிருந்து வந்தவர்! ஸ்ரீ கிருஷ்ணர் மகாவிஷ்ணுவின் அவதாரம்.. பலராமன் ஆதிசேஷனின் அம்சம்.. ஆகையால் ஞானத்தின் 64 கிளைகளை 60 தே நாளில் இருவரும் கற்றுக் கொள்கிறார்கள்! அந்த மகரிஷிக்கும் ஸ்ரீ கிருஷ்ணர் அவதாரம் என்று நன்கு தெரியும்! அவரிடமிருந்து பாடம் முடித்து விடைபெறுகிற நேரம் வருகிறது... இருவரும் குருவுக்கு தட்சணை தர விரும்புகிறார்கள்! மகரிஷி பற்றில்லாதவர்... அவதாரம் தன்னிடம் பயின்றதே பாக்கியமாக என்று  கருதுபவர்! ஆகவே என்ன தட்சணை வேண்டும் என்று கேட்டதற்கு என்ன பதில் சொல்ல வேண்டும் என்று தெரியவில்லை அவருக்கு... ஆகவே கலியுக மனிதர்கள் போல் அந்த மகரிஷி தனது தர்ம பத்தினியிடம் கலந்தாலோசிக்கச் செல்கிறார்! அப்போது தான் அவர்களது மகன் பிரபாசா எனும் புண்ணிய ஷேத்திரம் தழுவிடும் கடலில் குளிக்கச் சென்ற போது மூழ்கி இறந்துவிட்டதாகவும்..‌ தங்களது மகனை உயிரோடு மீட்டுத்தரும் படி தனது தர்மபத்தினியின் தாய்ப்பாச கோரிக்கையை ஸ்ரீ கிருஷ்ணர் முன் சமர்ப்பிக்கிறார் மகரிஷி! அதுவே குருதட்சணையாகக் கேட்கிறார்! கொஞ்சமும் யோசிக்காமல் தங்களது குருவுக்காக இருவரும் பிரபாசா செல்கிறார்கள்! கடல் அரசனிடம் பேசுகிறார்கள்! கடலில் இருந்த ஒரு பூதம் விழுங்கிவிட்டதென அந்தக் கடல் அரசன் உண்மை சொல்ல... பிறகு கடல் பூதத்தோடு சண்டை நடத்தி அதன் வயிற்றைக் கிழிக்க... பாஞ்சஜன்யம் என்ற சங்கே கிடைக்கிறது... குருவின் மகனை காணவில்லை... உடனே ஸ்ரீ கிருஷ்ணர் சோர்வடையவில்லை... இருவரும் எமலோகம் செல்கிறார்கள்! எமதர்மராஜாவுக்கு தன்னை அவதாரம் என்று ஸ்ரீ கிருஷ்ணர் உணர்த்த... "உங்கள் குருவின் மகன் இங்கே தான் இருக்கிறான்! அவனை தாராளமாகக் கூட்டிச் செல்லுங்கள்!" என்று எமனே பணிந்து கூற... இப்படி குருவின் மகனை மீட்டெடுத்து அவரது குருகுலம் சென்று ஒப்படைத்து தங்களது குருதட்சணையை செலுத்துகிறார்கள் இருவரும்...! இறந்து போறவன் உயிர்ப்போடு எழுந்து வந்ததைக் கண்டு ஸ்ரீ கிருஷ்ணரின் மகிமையை வானளாவ புகழ்கிறார்கள் குருவும், குருமாதாவும்!

(ஆதாரம் : பாகவதம் : 10 : 1407)


இதே போல ஸ்ரீ கிருஷ்ணர் ஸ்ரீ சத்ய சாயியாக அவதரிக்கையில் இறந்தவர்களுக்கான உயிர் மீட்பு மகிமைகள் நிறையவே புரிந்து வருகிறார்! கவனத்திற்கு பதிவானவையே பல... பலர் கவனித்திற்கே வராதது இன்னமும் ஏராளம்! அதில் ஓரிரண்டு சான்றாதாரங்கள் இதோ...!


ராதாகிருஷ்ணனய்யா என்பவர் குப்பத்தில் வசித்து வருகிறார்! அவர் ஒரு பழமையான தொழிற்சாலையாளர்! அது 1953. தீவிர அல்சரால் அவதிப்படுகிறார் அவர்! நீண்ட நாட்களாகவே அது தொடர்ந்து உடலுக்கு இம்சை தந்து கொண்டிருக்கிறது! அதுவும்  பாபாவின் பௌதீக நெருக்கத்திலேயே அப்போது அவர் குடும்பத்தோடு தங்கி இருக்கிறார்! அந்த அல்சர் உயிரையே வலிக்க வலிக்க அறுக்கிறது! அவரால் பாவம் தாங்கவே முடியவில்லை... இந்த வலிகளின் விஸ்வரூபத்தில் அவர் தனது சுயநினைவை இழக்கிறார்! மூச்சின் தாள லயம் நொண்டுகிறது! பாபா அதனை கவனித்துவிட்டு "கவலைப்பட வேண்டாம்!" என்று அவரது குடும்பத்தினரோடு சொல்லிவிட்டு நகர்கிறார்! கவனிக்க வந்த மருத்துவர்களோ "சொல்வதற்கு ஒன்றுமில்லை.. உயிர் பிழைக்க வாய்ப்பில்லை!" என்கிறார்கள்! அவர்கள் சொல்லியதற்கு ஏதுவாகவே ராதா கிருஷ்ணய்யா உடல் கம்சப் படை அரக்கர்கள் போல் கருப்பாகிவிடுகிறது... இதில் இமாலய சில்லிப்பாகி அந்த உடம்பு மரக்கட்டையாகவும் கிடக்கிறது! இப்படியே ஒவ்வொரு நாள் இருட்டாக விடிந்து துயரோடு முடிகிறது! உடம்பை எரிக்க வேண்டும் என்று பார்த்தவர்கள் சொல்கிறார்கள்! பாபா அனுமதி தருகிற வரை அந்த உடம்பை அசைக்கவே கூடாது என்கிறது அவரது குடும்பம்! அது 3ஆம் நாள்! ஒவ்வொரு நாளும் யுகமாக கடந்து விட்டிருந்தது... அப்படிக் கணக்குப் பார்க்கையில் கலி முடிந்து கிருத யுகம் முடிந்து திரேதா யுகமே வந்துவிட்டதைப் போன்ற உணர்வு அந்த உடம்பைச் சுற்றி அமர்ந்த குடும்பத்திற்கு.. திரேதாவே வந்தது போன்று இருந்தாலும் இன்னமும் ஸ்ரீ சத்ய சாயி ராமனை இன்னமும் காணவில்லை! சபரி போல் அவரது குடும்பமே சடலத்தோடு காத்திருக்கிறது! 

சில நிமிடங்களில் பாபா வருகிறார்! 

"இங்கே பார்! ஏதாவது பேசு!" என்று அந்த கருத்தக் குளிர் உடலோடு பேசுகிறார்! "அவர்கள் உன்னைப் பற்றிய கவலையில் இருக்கிறார்கள்!" என்கிறார் பாபா!

 உடனே கண்களைத் திறந்து "நீ என் அருகில் இருக்கும் போது நான் ஏன் பயப்பட வேண்டும் பாபா? முழுமையாக நான் குணமாகிவிட்டேன்!" என்கிறார் ராதா கிருஷ்ணய்யா! சுற்றி இருப்பவர்களால் ஒரு நொடி அந்தக் காட்சியையே நம்ப முடியவில்லை!

"உன் கணவனை உன்னிடமே நான் ஒப்படைத்து விட்டேன்! அவனுக்கு கொஞ்சம் காபி கொடு!" என்கிறார் பாபா!

அப்போது மரணத்தையே ஓரிரு நாள் ருசித்து விட்டு வந்த அவருக்கு சுடச் சுட காபி பரிமாறப்படுகிறது... காபியில் இருந்து எழுந்த மணம் பாபா இறைவனே! என்கிற பரம சத்தியத்தை காபி ராகம் போலவே இதயத்தில் பக்தி ராகமாய் இசைக்கிறது!


ஒருமுறை ஆந்திர பிரதேச ராஜ முந்திரிக்கு பாபா விஜயம் புரிவதற்கான ஆன்மீக ஏற்பாடு! சாயி செயல் வீரர்கள் , கோனா சீமா கன்வீனர்கள் பாபாவை வரவேற்கும் ஏற்பாட்டில் தங்களையே மறந்து சேவை செய்கிறார்கள்! மங்கினா பாலாஜி என்பவர் ராஜமுந்திரியை சேர்ந்தவர்... அவரும் ஒரு கன்வீனர்... அவரும் அந்த ஏற்பாட்டில் கலந்து கொள்கிறார்..

அந்த பரபரப்பு சமயத்தில்.. அவரது வீட்டிலோ அவரது வளர்ப்பு நாய் இறந்து போய்விடுகிறது! வெட்னரி மருத்துவர் பரிசோதித்து அந்த மரணத்தை உறுதி செய்கிறார்! பிறகு அந்த நாயின் சடலத்தை ஒரு கூடையில் வைக்கோல் பரப்பி மூடி போட்டு அவரது வீட்டு பின்புற தோட்டத்தில் வைத்தபடி இருக்க... பாபா வந்துவிட்டார் என்ற செய்தி கேட்டு... பிறகு புதைத்துக் கொள்ளலாம் என்று ... தனது வளர்ப்பு நாய் இறந்த துக்கத்தையும் மனதிற்குள்ளேயே மறைத்து விட்டு பாபா வரும் இடம் நோக்கி விரைகிறார்கள்... பாபாவும் ஒவ்வொரு இடமாக தரிசனம் தந்தபடி அந்த கன்வீனர் பாலாஜி வீட்டுக்கு வந்து .. வீட்டின் உள்ளே கூட நுழையாமல்.. நேராக தோட்டத்தின் பக்கம் எந்த இடத்தில் அந்த நாயின் சடலம் இருக்கிறதோ அங்கே சென்று... அந்த மூடியைத் திறந்து .. விபூதி சிருஷ்டித்து அந்த நாயின் தேகத்தில் தூவி "எழுந்திரு பங்காரு!" என்று அந்த நாயின் பெயர் சொல்லி அழைக்கிறார்! உடனே அது அந்தக் கூடையில் இருந்து ஒரு குதிகுதித்து ஓடுகிறது... அனைவருக்கும் ஒரே ஆச்சர்யம்! பிறகு அந்த வளர்ப்பு நாய் 5 ஆண்டு காலம் உயிர் வாழ்கிறது! 


(Source : Sri Krishna Sri Sathya Sai | Page No : 85 - 88 | Author : Dr.J. Suman Babu ) 


ஏன் எல்லோரையும் பாபா இறக்கவிடாமல் செய்யலாமே? எனும் நாத்திகக் கேள்விக்கு! 

பாபா அவரவர் செய்த கர்ம கணக்கை அனுசரிப்பது மட்டுமல்ல மிக முக்கியமான ஆன்மீகக் கடவுச்சொல் ஒன்று இருக்கிறது... அதைப் பதிவு செய்தால் மட்டுமே பாபா மகிமைகள் ஒவ்வொருவர் வாழ்விலும் நிகழும்.. அதுவே நாம் பாபாவை அடைகிற பரிபக்குவ சட்டசரணாகதி!

அதற்கு பக்தி முதலில் அவசியம்! அசைக்க முடியாத நம்பிக்கையே பக்தியைத் தருகிறது! மேலும் "வந்தவர் எல்லாம் தங்கிவிட்டால் இந்த மண்ணில் நமக்கே இடம் ஏது?" என்று கவியரசர் கண்ணதாசனை எழுத வைத்ததே ஸ்ரீ சத்ய சாயி கண்ணன் தான்!


  பக்தியுடன் 

வைரபாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக