தலைப்பு

சனி, 2 செப்டம்பர், 2023

இரு அவதாரங்களும் வேற்றுலகத்திற்கு அழைத்துச் செல்லுதல்! : அமானுஷ்ய ஆச்சர்ய அனுபவங்கள்!

எவ்வாறு இரண்டு அவதாரங்களுமே ஒரே விதமான அனுபவங்களை யுகம் கடந்தும் வழங்கி வருகின்றன எனும் மெய் சிலிர்க்கும் அரிய அனுபவம் மிக சுவாரஸ்யமாக இதோ...


அது துவாபர யுகம்! ஒரு முறை துவாரகா அரண்மனையின் உள்ளே ஸ்ரீ கிருஷ்ணரும் அர்ஜுனனும்  ஏதோ பேசிக் கொண்டிருக்க... வெளியே ஒரு அந்தணர் தனக்கு புதிதாய்ப் பிறந்த குழந்தையின் சடலத்தை ஏந்திக் கொண்டு பரிதாபகரமாய் நிற்கிறார்! ஆம் அந்தக் குழந்தை இறந்து விட்டிருக்கிறது..‌ அந்தக் குழந்தை மட்டுமல்ல அவருக்குப் பிறந்த ஒவ்வொரு குழந்தையும் இப்படியே பிணமாகிக் கொண்டிருந்தது.. காரணம் அறியவில்லை...! என்ன சாபமோ புரியவில்லை! இதற்கு இடையே அந்த பிராமணரின் மனைவி கர்ப்பமாகவும் இருக்கிறார்! அது கூட என்ன ஆகுமோ? ஏதாகுமோ? பிராமணர் செய்வதறியாது நெடுமரமாய் இன்றி தண்டனைச் சிலுவையாய் நிற்கிறார்!


சப்தம் கேட்டு...அர்ஜுனர் யார் அது என வாசலில் வந்து விசாரிக்க... 

"ஓ பிராமணரே! நிச்சயம் கர்ப்பத்தில் இருக்கும்  உங்கள் அடுத்த வாரிசை நான் காப்பாற்றுவேன்! இல்லையேல் நெருப்பில் இறங்குவேன்!" என்கிறார்..

"யார் நாங்கள் ?" என்று அந்தணர் வினவ... காண்டீவ சேனைகளையே வீழ்த்திய வீர அர்ஜுனர் தன்நிலை விளக்கம் அளிக்கிறார்! ஆனாலும் அந்த கர்ப்ப தீபமோ அணைந்துவிட்டது... அடுத்த வாரிசும் பிறந்த உடனே காற்றில் கலந்துவிட்டது! இதை அறிந்து அதிர்ச்சியுடன் அர்ஜுனர் எமலோகம் செல்கிறார்! ஆனால் அங்கே அந்தக் குழந்தையை கண்டடைய முடியவில்லை! ஆகவே செய்வதறியாது திகைத்த அர்ஜுனர் தீயை மூட்டி அதில் இறங்கப் போகிறார்... ஸ்ரீ கிருஷ்ணரின் கை ஆயுதமான அர்ஜுனர் அக்னியில் இறங்குவதா? நொடிப் பொழுதில் ஸ்ரீ கிருஷ்ணர் தடுத்தாட் கொண்டு... அர்ஜுனரை வேற்றுலகம் அழைத்துச் செல்கிறார்! அது முனிவர்கள், மகரிஷிகள் வசிக்கிற இடம்.. இருவரும் ரதத்தில் பயணிக்கப் பயணிக்க ஒரே இருள் மயம்... இருட்டுக் கசம்... அங்கே ஆயிரம் தலை கொண்ட ஆதிசேஷனை பார்க்கிறார்கள்... இன்னும் கொஞ்சம் தூரம் நெருங்க... அங்கே மகாவிஷ்ணுவை தரிசனம் செய்கிறார்கள்! அப்போது மகாவிஷ்ணு "நரனும் நாராயணனுமாகிய நீங்கள் இருவருமே எனது அம்சமே! எனக்குள் அடக்கமே! ரிஷிகள் உங்களை காண வேண்டும் என்ற ஆர்வப்பட்டனர் ஆகவே தான் உங்களை இங்கே வரவழைத்தேன்!" என்று அருள் மொழி வழங்குகிறார்.. மகாவிஷ்ணுவின் சௌந்தர்ய (பேரழகு) இனிமையை விழிகள் எனும் கோப்பைகளால் இருவரும் அருந்துகிறார்கள்! பிறகு அங்கே இரு(ற)ந்த பிராமணரின் குழந்தைகளை அர்ஜுனர் உயிரோடு அழைத்துச் சென்று குசாஸ்தலி எனும் நகரம் அடைந்து அந்த பிராமணக் குடும்பத்திடம் அவர்களது வாரிசுகளை ஒப்படைக்க... விழிகளினால் நன்றியை அவர்கள் கசியக் கசிய பரிமாறுகிறார்கள்... வழிந்த நீரோ "ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்" என்று திரவ மொழியில் சொல்லிக் கொண்டிருந்தது!

(ஆதாரம் : ஸ்ரீமத் பாகவதம் : 10 - 1275)


இதே போல் கலியுகத்தில் ஸ்ரீ கிருஷ்ணர் ஸ்ரீ சத்ய சாயியாக அவதரித்த போது நிகழ்ந்த சம்பவங்கள் அநேகம்! அதில் குறிப்பாக வால்டர் கோவனுக்கு நிகழ்ந்த அற்புதம் அருமையானது!


Sri Sathya Sai with Walter Cowan and Elsie Cowan at Brindavan

அது 1971. கலிஃபோர்னிவுக்கு தந்தி... பாபா அழைக்கிறார்... வால்டர் மற்றும் அவரது மனைவி எல்ஸி கோவன் மதராஸ் (சென்னை) வருகிறார்கள்! ஏற்கனவே வால்டர் உடல் நிலை சரியில்லை இருந்தபோதும் பாபாவின் மேல் பாரத்தைப் போட்டு விட்டு வருகிறார்கள்! ஒரு கலை நிகழ்வு அரங்கேற காத்திருக்கிறது... பாபா அதன் மேற்பார்வையில் இருக்கிறார்... அந்த வெளிநாட்டு தம்பதிகள் ஒரு ஹோட்டல் அறையில் தங்குகிறார்கள்! அது கிறிஸ்துமஸ் அதிகாலை... ஹோட்டல் அறையில் ஓரிரு அடி நடக்கிறார்... அப்படியே சரிந்து போகிறார் வால்டர்.. அருகே அறையில் திரு/திருமதி ரதன்லால் துணையோடு படுக்கைக்கு கைத்தாங்கலாக அழைத்து வந்து அவர் படுக்க வைக்கப்படுகிறார்! பிறகு அவரை நர்ஸிங் ஹோம் அழைத்துச் செல்கிறார்கள்! ஒரு பிரபல மருத்துவரை வரவழைத்துக் காட்டுகிறார்கள்... வால்டர் இறந்துவிட்டார் என்று அறிவிக்கிறார் அந்த மருத்துவர்! வந்த இடத்தில் அருள் பாய்ந்தால் பரவாயில்லை இருள் பாய வேண்டுமா? அதிர்ச்சி எல்ஸி கோவனுக்கு... கணவரை கடல் கடந்து இழந்துவிடுகிறார் அவர்! அடுத்த நாள் காலை சரியாக 7 மணி.. ரதன்லாலோடு சேர்ந்து பாபாவுக்கு செய்தி அனுப்ப விரைகிறார்! "இல்லை இல்லை.. வால்டர் உயிரோடு தான் இருக்கிறார்! நான் 10 மணிக்கு வருகிறேன்!" என்கிறார் உறுதியாக பாபா!

மருத்துவரோ இறந்துவிட்டார் என்று இடியை வீசுகிறார்..

பாபாவே உயிரோடு தான் இருக்கிறார் என்று மழையை வீசுகிறார்...

இடியா? மழையா? மேலும் எது விழப் போகிறது!?


திருமதி கோவன் (எல்ஸி) நர்ஸிங் ஹோம் வருவதற்குள் பாபா அங்கே வந்து சேர்ந்துவிட... ஆச்சர்யமாய் சில செய்கைகள் காட்டியபடி இருக்கிறார் இறந்து போய்விட்டார் என்று மருத்துவர் சொன்ன வால்டர்!!!

ஆம் வால்டர் பாபா சொன்னது போல் உயிர் மீண்டார்!

அது டிசம்பர் 26.. தனது தெய்வீக ஞான உரையை பொழிந்து விட்டு பாபா காரில் ஏறி... ஹிஸ்லாப் உடன் வர... "நான் மேடையில் பேசிக் கொண்டிருந்த போதே... அவள் (எல்ஸி) தங்கி இருந்த அறையில் அழுதபடி என் உதவி வேண்டினாள்! நானும் விரைந்தேன்!" என்று பாபா பதிவு செய்கிறார்! அந்த கார் ஒரு பக்தர் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தது! பாபா ஹிஸ்லாப்பிடம் விபூதி கலந்த நீரை குடிக்கும் படி வால்டரிடம் சொல்லச் சொல்ல... எல்லாம் சரியாகிறது!

ஆனால் அந்த மரண நேரங்களில் வால்டர் சந்தித்த அனுபவம் ஆச்சரியமானது!

அவருடைய உடம்பு பிணமாய் கிடக்கிறது! பாபா அருகே இருக்கிறார்.. வால்டர் எனும் ஆன்மா அனைத்தையும் விழிப்புணர்வோடு பார்க்கிறது.. வேறொரு உலகத்திற்கு அது எடுத்துப் செல்ல.. அந்த வேற்று உலகில் வால்டர் எனும் எந்த ஆன்மா எடுத்த மனித உடம்புகளில் செய்த செயல்கள் அனைத்தும் பதிவாகி இருந்ததை அதுவே முதன்முதலாகப் பார்க்கிறது..! அந்த கர்ம கணக்கை குறிப்பெடுத்துப் பாதுகாக்க ஒரு கணக்கரும் இருக்கிறார்..

அந்த ஆன்மா எடுத்த பிறவிகள் அனைத்தும் திரைப்படம்  போல் காட்டப்படுகின்றன...


ஒரு பிறவியில் மகாராஜா, இன்னொரு பிறவியில் ஒரு மத தீர்க்கதரிசி , ஆச்சயப்படுகிறது கோவன் எனும் ஆன்மா!

பாபா அந்த உலகின் அந்த நீதிமன்ற அறையில் நீதிபதியிடம் சொல்கிறார்‌... "வால்டர் அவனது இலக்கை அடையப் போகிறான்.. ஆகவே அவனை என் காலடியில் வைத்திருக்கிறேன்! ஆகவே அவனை (ஆன்மா) அவன் உடம்புக்குள்ளே மீண்டும் புகுவதற்கான ஆவன செய்!" என்று உத்தரவிடுகிறார் பாபா! 

உடனே அந்த லோகத்து நீதிபதியோ "உங்கள் சங்கல்பப்படியே செய்கிறேன்!" என்கிறார்! 

உடனே வால்டர் சொன்னதை கேட்ட ஹிஸ்லாப் .. "இவர் சொல்வது எல்லாம்...?" என்று இருக்கிறார்... "ஆம் அனைத்தும் உண்மையே!" என்கிறார் பாபா! அந்தக் கர்மக் கணக்கும் உண்மையே என்று உறுதி மொழிகிறார் பாபா! 


அன்று பாபா கோவனின் பிணமான அந்த அறைக்கு வந்து "எழுந்திரு கோவன்!" என்று மூன்று முறை அழைக்கிறார்! மூன்றாவது முறை பாபா மொழிக்கு இணங்க உயிர்த்தெழுகிறார் வால்டர் கோவன் ! பிறகு கோவனின் 70 ஆவது பிறந்தநாளுக்கு சிருஷ்டி திருமண கணையாழியையும் (மோதிரம்) பரிசளிக்கிறார்!


ஒருமுறை "Man of miracles" புத்தக ஆசிரியர் மர்ஃபட் "சுவாமி! நீங்கள் எவ்வாறு ஆன்மாவை தேர்ந்தெடுத்து அருள் பாலிக்கிறார்கள்?" என்று கேட்க... "யார் என்னிடம் சரண் அடைகிறார்களோ... மற்றும் யார் பயனுள்ளவரோ அவரையே தேர்ந்தெடுத்து அருள் பொழிகிறேன்! வால்டருக்கு 3 முறை மதராஸில் இதய வலி கண்டது! அவர் மனைவி எல்ஸி அவரை சடலமாக அமெரிக்கா எடுத்துப் போக நான் விரும்பவில்லை... காரணம் என் அமெரிக்க பக்தர்கள் என் மேல் மிகுந்த பக்தியும் நம்பிக்கையும் வைத்திருந்து நான் வகுத்த நெறிகளை சரணாதியோடு பின்பற்றுகிறார்கள்!" என்று தெளிவு பதில் தருகிறார் பாபா!

     "சுவாமி இது போல் ஒட்டு மொத்த தேசத்திற்கும் நீங்கள் அருள் பொழிவீர்களா?" என்று ஒரு அமெரிக்க பக்தர் கேட்க... "என்னால் நிச்சயம் முடியும்! அப்படி நான் சங்கல்பிக்கிற போது அது நிகழ்ந்தே தீரும்!" என்று பாபா உறுதி மொழி தருகிறார்! 

(Source : Sri Krishna Sri Sathya Sai | Page : 88 - 94 | Author : Dr. J. Suman Babu )


உண்மையிலேயே ஒவ்வொரு ஆன்மாவுக்குமான கர்மக் கணக்குகள் குறிப்பெடுத்து பாதுகாக்கப் படுகின்றன... இது ஏதோ அம்புலி மாமா கதை இல்லை! ஆகவே தான் நாம் கடந்த ஜென்மங்களில் செய்த நல்ல/ தீய செயல்களால் காரணமே புரியாமல் இந்த ஜென்மத்தில் அதன் விளைவுகளை அனுபவிக்கிறோம்! ஆகவே தான் முட்டாள் பல மக்களால் அறிவாளி என்று துதிக்கப்படுவதும்... திருடன் அரசாள்வதும்... தற்குறிக்குப் புகழ் சேர்வதும்... உத்தமன் ஓரம் கட்டுப்படுவதும்... உண்மை பேசுபவனை மக்கள்  சந்தேகப்படுவதும்.. பொய் பேசுபவனை மக்கள்  நம்புவதும்... யாவும் நாம் முன்பே செய்த *கர்மாவின் சிலம்பாட்டங்களே!* ஆக *நாம் நமது கர்மாவை அனுபவித்தே தீர்க்க முடியும்! இறைவன் ஸ்ரீ சத்ய சாயி கிருஷ்ணர் அருள் இருந்தால் கடினமின்றி நமது கர்மக் கடலை நம்மால் பற்றின்றி தாண்ட முடியும்! அதற்கு முதலில் தேவை பாபாவிடம் பரிபூர்ண சரணாகதியே!*


  பக்தியுடன் 

வைரபாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக