தலைப்பு

திங்கள், 7 ஆகஸ்ட், 2023

நார்வே நபருக்கு வைத்த செய்வினையும், பாபாவிடம் அவர் சேர்ந்த ஜெயவினையும்!

பொறாமை கொண்டு நார்வே நபருக்கு வைக்கப்பட்ட மாந்த்ரீக செய்வினையும், அதிலிருந்து அவர் எவ்வாறு தப்பித்து ஸ்ரீ ஷிர்டி சாயி பாபா பிறகு ஸ்ரீ சத்ய சாயி பாபா என இரு அவதாரங்களோடும் இணைந்து மேன்மை அடைகிறார்? சுவாரஸ்யமாக இதோ...!


அவர் பெயர் டைடுமன் ஜோஹான்சன். ஒஸ்லோ என்கிற பகுதி, நார்வே'யை சேர்ந்தவர் அவர்! 1950'களில் இந்தியா வருகிறார்! 1962'களுக்குள் அவர் இந்தியாவில் மிகப்பெரிய கப்பல் கம்பெனி வைத்து தானியங்களை ஏற்றுமதி செய்து மிகப் பெரிய தொழில் நடத்தும் அளவுக்கு உயர்கிறார்! 

ஒவ்வொரு ஜோதி விளக்கின் அடியிலும் இருட்டு சேர்வதைப் போல், அவரது தொழில் வளர வளர சுற்றி வரை பொறாமையும் வயிற்றெரிச்சலும் வளர்கிறது! சொந்த ஊழியர்கள் அந்த நிர்வாகத்தை தனதாக்கிக் கொள்ள வலை விரிக்கிறார்கள், சூழ்ச்சி நிகழ்த்துகிறார்கள்! ஆகையால் அவர் பல இன்னல்களை சந்திக்கிறார்! வருமான வரிச் சோதனை, சுங்க அதிகாரிகள் விசாரணை என அவர் தேவையில்லாமல் அலைக்கழிக்கப்படுகிறார்! இந்த களேபரத்தில் அவருக்கு செய்வினை ஆகிய மாந்த்ரீகமும் வைக்கப்படுகிறது! அதை முதலில் நகைப்போடு  கடக்கிறார்... ஆனால் அவருக்கு ஒரு யூத மத போதகர் அறிமுகமாகி அதனை சரி செய்யும் முயற்சியில் ஈடுபடுகிறார்! கருவில் இருக்கும் குழந்தையைக் கூட மாந்த்ரீகத்தால் அழிக்க முடியும் என்ற தகவலை அவர் கேள்விப்படும் அதே நேரத்தில் வெளிநாட்டில் தனது மனைவியின் கரு ஏழாவது மாதத்தில் கலைந்து போவதில் அவரது மனம் கலவரப்படுகிறது!


அந்த யூத மதபோதகர் மிக நல்லவர்! ஷிர்டி பாபா பக்தர்! அவர் அந்த நார்வே நபரை ஷிர்டிக்கு அழைத்துச் செல்கிறார்! ஷிர்டி சாயி சமாதியில் மிகப்பெரிய நம்பிக்கையையும் ஆறுதலையும் அடைகிறார்! 

தனது மனைவியும் உடல் நலக்குறைவால் இந்தியா வரும் வாய்ப்பு இல்லாத காரணத்தினால் , தனது கப்பல் வர்த்தகத்தை வேறொருவருக்கு விற்று நார்வே'க்கே நகர்ந்து விடுவதான யோசனை... ஆனால் செய்வினை , சுற்றியும் காழ்ப்புணர்ச்சிப் பொறாமையால் அந்த யோசனைக்கான நகர்வுகள் இடியாப்பச் சிக்கலுக்கு உள்ளாகி தள்ளிப் போய்க் கொண்டே இருக்கிறது! 


அத்தகைய அவரது மன இறுக்கத்தை ஷிர்டி ஷேத்திரம் தளர்த்துகிறது! அந்த நேரத்தில் ஒரு இளைஞர் நீலநிறச் சட்டை அணிந்து "நீங்கள் சத்யசாயி பாபாவை தரிசித்திருக்கிறீர்களா?" அவர் 14'ன்கு மார்ச் மும்பைக்கு (அப்போது பம்பாய்) வருகிறார்! "கடவுள் என்று ஒருவரை நாம் அழைத்தால், அது அவர் தான்!" என்கிறார் அந்த இளைஞர்! இது 26 ஃபெப்ரவரி நிகழ... 

ஸ்ரீ சத்யசாயி பாபாவே ஸ்ரீ ஷிர்டி சாயி பாபா மறு அவதாரம் எனக் கேள்விப்படுகிறார் அந்த நார்வே நபரான டைடுமன் ஜோஹான்சன், பாபா ஏராளமான இறை சக்தி கொண்டவர் என்றும் அறிந்ததில் தனது தற்போதைய வியாபரத்தை விற்கும் பிரச்சனையை எப்படியாவது சொல்லி அதற்கொரு நல்ல வழிகாட்ட வேண்டுமாறு வேண்டிக் கொள்கிறார்! 


அது மும்பை. அதே நாள். குவாலியர் அரண்மனை. பாபா தரிசனம். ஏராளமான கூட்டம். பிறகு உணவுத் துறை அமைச்சர் சாவந்த் மான்ஷனுக்கு பாபா நகர்கிறார்! பாபா அனைவருக்கும் விபூதி தர... கூட்டத்தில் நுழைந்து டைடுமன் ஜோஹான்சன் கைநீட்ட பாபா புன்னகைத்துக் கொண்டே அவருக்கும் பாபா விபூதி தர... அவருக்கு உடனடித் தேவை பாபாவிடம் நேர்காணலே... இழுபறியாக இருக்கும் தன்னுடைய வியாபரத்திற்கான வழிகாட்டுதலே!


பாபாவின் நேர்காணலுக்கு என்ன செய்யலாம்? என டைடுமன் ஜோஹான்சன் யோசித்துக் கொண்டே இருக்க.. திடீரென ஒரு அழுக்கு முதியவர் அங்கே தோன்றி "பாபாவை சந்திக்க  வேண்டுமா?" என்று கேட்க... ஆச்சரியமாய் அவரும் சம்மதிக்க...அவர் அந்தப் பெரியவரால் அழைத்துக் கொண்டு செல்லப்படுகிறார்! பாபா டைடுமன்'க்கே காத்திருந்தவர் போல் "உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்!" என்று பாபா டைடுமன் ஜோஹான்சனை பார்த்த உடன் முகம் மலர்ந்து பேச... அது வரை யார் அணிய தரும் மலர் மாலையையும் கைகளில் மட்டும் வாங்கும் பாபா, அவர் அணிய தந்த மாலையை கழுத்தில் வாங்கிக் கொள்கிறார்! கொடுத்து வைத்த மாலை, அதற்கும் அமைந்தது நல்ல வேளை! பிறகு தான் மேடையில் உரையாற்றி வந்ததைத் தொடர்கிறார் பாபா! பிறகு குழந்தைகளின் பஜன் பாடல், அவர்களுக்கு பாபா வழங்கிய சிருஷ்டி நவரத்தின மோதிரம் என பரவச நிகழ்வுகள் தொடர்கின்றன... சுற்றி நூற்றுக்கணக்கான கூட்டம்... இதில் நேர்காணலை எப்படி பாபாவிடம் கேட்பது, அவருக்கோ குழப்பமும் தயக்கமும்!

அதே அழுக்குப் பெரியவர்  பாபாவின் நேர்காணலுக்கு அழைத்துச் செல்ல... 

"நான் எனது வியாபரத்தை விற்று எனது தேசம் செல்லலாம் என நினைக்கிறேன் பாபா" என்று பாபாவின் நேர்காணலில் டைடுமன் ஜோஹான்சன் பேச...

"அதையே தான் நானும் உங்களிடம் சொல்லலாம் என்று இருந்தேன்!" என்று பாபாவே மறுமொழி பேச.. டைடுமன் ஜோஹான்சன் ஆச்சர்யப்படுகிறார்!

     "அந்த கருப்பு மாந்த்ரீகர் உங்களுக்கு உதவியது போல் நான் உங்கள் வியாபாரத்தை நல்ல விலைக்கு விற்க உதவுகிறேன்!" என்று பாபா புன்னகையோடு பேச...

அந்த யூத மதபோதகரே பாபா விவரித்த கருப்பு மாந்த்ரீகர்!

"இனி குரு என்று நீங்கள் யாரை தேடியும் அலைய வேண்டாம், நானே உங்களுக்கு குருவாக இருந்தும் வழி காட்டுகிறேன்!" என்கிறார் பாபா!

பாபா சொல்லியது போலவே மும்பையிலிருந்து திடீரென ஒரு பெரிய வியாபாரக் கம்பெனி, அதுவாகவே டைடுமன் ஜோஹான்சன்'க்கு அழைத்து தொலைபேசி செய்து அவர் எதிர்பார்த்த தொகைக்கே அவரது கம்பெனியை வாங்கிக் கொள்கிறது! அவரும் மன நிறைவோடு அவரது இடமான நார்வே செல்கிறார்! அது நார்வே தான், ஆனால் பேரிறைவன் பாபா குருவாக இருந்து அவருக்கு வழிகாட்டிக் கொண்டிருப்பதால் அது நார்வே மட்டுமல்ல அவருக்கு அது நேர்-Way!


(Source : Miracles of Divine Love | Page : 9 - 17 | Compiled by P. Guru moorthy) 


செய்வினை வைத்தால் வைத்தவருக்கே அது திரும்பி வந்து தாக்கும், ஆஞ்சநேய சுவாமியின் வாலில் தீ வைத்த சம்பவம் போல் தான் செய்வினையின் எதிர்வினையும் நிகழும்! ஆகவே நாம் செய்ய வேண்டிய ஒரே வினை பேரிறைவன் பாபாவிடம் சரணாகதி வினை மட்டுமே, அதுவே ஜெய் வினை! அதுவே நம்மை ஆன்மீக முழுமையை நோக்கி அழைத்துச் செல்கிறது! அந்த நார்வே நபரை ஒரு அழுக்குப் பெரியவர் அழைத்துச் சென்றாரே , அது போல்... அந்தப் பெரியவர் ஸ்ரீ ஷிர்டி சுவாமியை தவிர வேறு யாராக இருக்க முடியும்? ஒரு சாயி அவதாரமே இன்னொரு சாயி அவதாரத்தை நோக்கி நம்மை ஆற்றுப்படுத்துகிறது! அது தான் ஆன்ம சத்தியமும் கூட...!


  பக்தியுடன் 

வைரபாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக