தலைப்பு

புதன், 9 ஆகஸ்ட், 2023

சாயி சுப்ரமண்யராக தோன்றி தரிசனம் கொடுத்த ராஜ நாகம்!


எவ்வாறு சுப்ரமண்ய தரிசனம் நேர்ந்தது? என்ன சூழ்நிலையில்? எதனால்? யாருக்கு? அதற்கும் பேரிறைவன் பாபாவுக்கும் என்ன தொடர்பு? சுவாரஸ்யமாக இதோ...


கே.ஆர்.கே பட் என்பவரின் குடும்பத்தில் குலதெய்வம் சுப்ரமண்யரே! எல்.ஐ.சி பணியில் இருக்கும் திருமதி பட் தினசரி பூஜை புரிபவர்! பட் அவர்களோ ஸ்ரீகிருஷ்ண பக்தர்! நன்றாக நகர்ந்து கொண்டு இருக்கும் அவர்கள் வாழ்க்கையில்.. திடீரென ஒரு அதிர்ச்சிகர திருப்புமுனை சம்பவம் ஏற்படுகிறது! அது 1943 ஆம் ஆண்டு! திருமதி பட் அவர்களுக்கு புற்று நோய் ஏற்படுகிறது! அறுவை சிகிச்சையை செய்தாலும் , பூரணமாக குணமாவதை அறுதியிட்டு தெரிவிக்க முடியாது என்று கை விரிக்கிறார் டாக்டர்! ஆனால் திருமதி பட் அவர்களின் மாமியாரோ எந்தவிதமான அறுவை சிகிச்சை இன்றியும் தன்னை குல தெய்வமாக சுப்ரமண்யர் காப்பாற்றியதாக தெரிவித்து, அவருக்கு பூஜை செய்தால் அவரே குணப்படுத்துவார் எனும் நம்பிக்கை தருவார்!

திருமதி பட் படுத்துக் கொண்டு ஓய்வெடுப்பதால் மாமியாரே சுப்ரமண்யருக்கு இல்லத்திலேயே தினசரி சிறப்பு வழிபாடு புரிகிறார்! முன்பு நோய் குணமாக வேண்டும் எனும் தீவிரமான பிரார்த்தனை! ஆறு மாதம் கடந்து போகிறது! 
ஒரு நாள் இரவு! அரை குறை தூக்கத்தில் இருக்கிறார் திருமதி பட்! அது நடு ஜாமம்! ஜன்னல் வழியாக நிலவொளி அறைக்குள் எட்டிப் பார்க்கிறது! நிலவொளி மட்டும் எட்டிப் பார்த்திருந்தால் பரவாயில்லை, மிகப்பெரிய ராஜ நாகம் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட திருமதி பட் அவர்களின் படுக்கை மீது ஏறுகிறது.. மிரண்டு போன திருமதி பட் அருகில் படுத்திருந்த மாமியாரை எழுப்புகிறார், விளக்கை பொருத்திப் பார்த்த போது எந்த ஒரு அரவமும் கண்ணில் படவில்லை... மருமகளை சமாதானம் செய்துவிட்டு அந்த முருக பக்தையான மாமியார் மீண்டும் உறங்குகிறார்! விளக்கு அணைக்கப்படுகிறது! மீண்டும் அதே ராஜ நாகம் .. படுக்கையில் ஏற முயற்சிக்கிறது... உடனே அந்த ராஜ அரவம் சுப்ரமண்ய ரூபமாக மாறுகிறது! பரவசப்படுகிறார் திருமதி பட்! திடீரென இடம் மறைகிறது.. நீண்ட படிக்கட்டுகள் அதைத் தொடர்ந்து ஒரு மலை உச்சி போல ஒரு ஏற்றம், அங்கே சுப்ரமண்யரின் பாதத்தை திருமதி பட் (ஆன்மா) இறுகப் பிடித்து தனது தலையைப் பதிக்கிறார்! உடனே சுப்ரமண்யர் "நீ என்னோடு வந்து விடுகிறாயா அல்லது உனது கணவன்,குழந்தை குடும்பத்துடனேயே செல்கிறாயா" என்று சுப்ரமண்யர் கேட்கையில் குடும்பத்துடனேயே செல்கிறேன் என்று திருமதி பட் தெரிவிக்க.. "சரி! செல்! ஆனால் நான் உன் நோயை முழுவதுமாக குணப்படுத்தி விட்டேன்... நீ எப்போது பக்தி மயமாக அழைத்தாலும் உன் முன் இதைப் போலவே தோன்றுவேன்!" என்று சொல்லி மறைந்து விடுகிறார்! திருமதி பட் உடம்பும் குணமாகி விடுகிறது.. புதியதொரு தெம்பே அவருக்குள் வந்து சேர்கிறது!

20 ஆண்டுகளுக்குப் பிறகு திரு பட் மற்றும் திருமதி பட் புட்டபர்த்தி செல்கிறார்கள்! அவர்களை பார்த்து உடனேயே பாபா "நான் உங்களோடு பல ஆண்டுகளுக்கு முன்பே பேசி இருக்கிறேன்!" என்கிறார்! அதற்கு திருமதி பட் "இல்லை சுவாமி! இது தான் முதல் முறை, உங்களை தரிசனம் செய்கிறேன்!" என்கிறார்!
அதற்கு பாபாவோ "ஆம் ஆம்! ஆனால் நீங்கள் மைசூரில் இருக்கும் போது நான் உங்களை தேடி வந்தேன், 20 ஆண்டுகளுக்கு முன்பு!" என்று தெரிவித்து பாபா அவர்களது வீட்டு முகவரி முதல் 1943 ஆம் ஆண்டு அவர்கள் வசித்த தெரு முதற்கொண்டு அனைத்தும் பாபா விளக்க... அந்த ராஜ நாகம் சம்பவத்தையும் பாபா விவரிக்க... விவரிக்க... பிறகு திருமதி பட் அவர்களை தனது அறைக்கு அழைத்துச் சென்று , கீழே பார்க்கச் சொல்கிறார்.. அது படிக்கட்டுகள், 20 ஆண்டுகளுக்கு முன்பு மைசூரில் அந்த ராஜ நாக சம்பவத்தின் போது மலை போல் உயரமாக தெரிவதற்கு முன் தெரிந்த அதே படிக்கட்டுகள், அதை உணர்ந்த அடுத்த நொடி திருமதி பட் மற்றும் திரு பட் அவர்கள் பாபாவின் கால்களில் விழுந்து அவரது தாமரைத் திருப் பாதங்களில் தனது ஆனந்தத்தை திரவக் கண்ணீராய் வழிய விடுகிறார்கள்... தங்களது பக்தியை பாபாவின் பாதங்களில் பொழிய விடுகிறார்கள்! 

(Source : Miracles of Divine call - vol 1 | page : 36 - 38 | compiled by P. Gurumoorthy)

ஆகவே தான் பேரிறைவன் பாபாவை சர்வ தேவதா அதீத ஸ்வரூபன் என நெகிழ்ந்து துதிக்கிறோம்! அது சத்தியத் துதி! அத்தகைய இறை ரூபங்களின் சங்கமமான பாபாவை சரணாகதி அடைவது வாழ்வையே பேரானந்தமாக மாற்றி , அகத்தின் உள்ளே அசையாத நிலையை அடைந்து நாம் கிடைத்தற்கு அரிய பிறவாமையை பெறுவதற்கான ஒரே வழி!

  பக்தியுடன்
வைரபாரதி



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக