தலைப்பு

செவ்வாய், 8 ஆகஸ்ட், 2023

"பாபா தான் என்னை சேவை செய்ய தூண்டியது!" -மனம் திறக்கிறார் திரு.ஹரி ரஞ்சன் ராவ், IAS

திரு. ஹரி ரஞ்சன் ராவ், ஐ.ஏ.எஸ்., அவர்கள் தற்போது, மத்தியப் பிரதேசம், போபால், முதல்வர் அலுவலகத்தின் செயலாளராக உள்ளார். இவர் பல்வேறுபட்ட நிர்வாகப் பதவிகளை வகித்துள்ளார். மத்தியப் பிரதேசத்தின் ரேவா மாவட்ட ஆட்சியராகவும் இருந்திருக்கிறார். அவருடைய அனுபவங்களில் சிலவற்றை நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார்...


நம் அன்பு ஸ்வாமி அவர்களின் அன்பு அரவணைப்பில் இருப்பதை நான் உண்மையிலேயே பெரும் பாக்கியமாக கருதுகிறேன். எனது குழந்தைப் பருவ நாட்களில் எனது பெற்றோர்கள் பங்குபெறும் சாய் பஜனைகளிலும்  மற்றும் பிற சேவை நிகழ்ச்சிகளிலும்  அவர்களுடன் கலந்துகொண்டு அந்தக் குழுக்களில் நானும் ஒருவனாக இருந்தது எனக்கு தெளிவாக நினைவிருக்கிறது. ஸ்ரீ சத்ய சாய் பால விகாஸ் வகுப்பிற்கு நான் போகத் தொடங்கியதும் தான் ஸ்வாமியின் தெய்வீகப்  பணி மற்றும் அவருடைய அவதாரத்தின் நோக்கம் பற்றிய உண்மையான புரிதல் எனக்குள் வளர்ந்தது. இந்த வகுப்புகள், அடிப்படையில் நற்பண்புகளை குழந்தைகளின் மனங்களில் புகுத்துகின்றன. அனைத்து மதங்களையும் மதிக்க வேண்டும் என கற்றுத் தருகின்றன. இந்திய கலாச்சாரம் மற்றும் ஆன்மீகத்தின் செழுமையை குழந்தைகளுக்கு தெரியப்படுத்துகின்றன. என் அம்மா பாலவிகாஸ் ஆசிரியையாக இருந்தவர்.  அவர், பல்வேறு புனித நூல்களையும், அவற்றில் பொதிந்துள்ள உலகளாவிய அன்பு மற்றும் சகோதரத்துவத்தின் சாரத்தையும் மிகவும் தெளிவாகவும் சுவாரஸ்யமாகவும் எங்களுக்கு கற்பிப்பார். நான் எண்ணற்ற நாடகங்களில் பங்கேற்றிருக்கிறேன். அவை பெரும்பாலும் என் அம்மா இயற்றியவை. இந்த நாடகங்கள் சுவாமியின் போதனைகளை அடிப்படையாகக் கொண்டதாகவும் பெரிய துறவிகளின் வாழ்க்கைக் கதைகளை சித்தரிக்கும் விதமாகவும்  இருக்கும். சிறுவயதில், கண்சிகிச்சை மருத்துவ முகாம்களில் வயதானவர்களுக்கு உதவியது, நாராயண சேவையில் பங்கேற்றது எல்லாம் எனக்கு பெருமையாகவும் நன்றி உணர்வைத் தூண்டுவதாகவும் இருக்கிறது. அதை நான் இன்றுவரையில் மிகவும் பெருமையாக மதிக்கிறேன்..


நாங்கள் மூன்று சகோதரர்கள். எங்கள் பெற்றோர் தங்கள் மூன்று மகன்களிடமும் நல்லொழுக்கங்களை வளர்ப்பதில் உறுதியாக இருந்தனர்.  பாபாவை தரிசனம் செய்யவும், ஆன்மீக புத்துணர்ச்சி பெறவும் பிரசாந்தி நிலையத்திற்கு நாங்கள் தவறாமல் செல்வோம். எனது பெற்றோரின் உறுதியான பக்தியும் பூரண சரணாகதியும் ஸ்வாமியின் சர்வ வல்லமையை அவர்கள் அனுபவித்து மகிழ  வைத்தது.. என் அம்மா தனது வாழ்க்கையில் ஸ்வாமியின் தெய்வீக அனுபவங்கள் பலவற்றை பெரும் பாக்கியத்தை கொண்டிருந்தார், அவற்றை ஒரு புத்தகமாக மாற்றுவதற்காக எழுதியும் வைத்திருக்கிறார்.

 

நான் இந்திய நிர்வாகப் பணியில் சேர்ந்தவுடன்,  "மனிதனுக்குச் செய்யும் சேவை கடவுளுக்குச் செய்யும் சேவை" என்ற சுவாமியின் மேற்கோளின் படி மனித குலத்திற்குச் சேவை செய்வதற்கான ஒரு பொன்னான வாய்ப்பாக இருக்கப் போகிறது என்பதை உணர்ந்தேன். அதிர்ஷ்டவசமாக எனது வேலை இதற்குரிய ஏராளமான வழிவகைகளை வழங்கியது, பெருவாரியான மக்களின் வாழ்க்கை முறையை மாற்றுவதற்கும் பல மில்லியன் அலுவலகங்களில் புன்னகையை கொண்டு வருவதற்கும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்க முடிந்தது.


நான் ஒரு முறை மத்தியப் பிரதேசத்தின் பிற்படுத்தப்பட்ட ரேவா மாவட்டத்தின் கலெக்டராக இருந்தேன். அங்கு சுகாதாரத் துறையில் கிடைத்த ஒரு அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். இந்த மாவட்டத்தில் திறந்தவெளியில் மலம் கழிக்கும் வழக்கம் அதிகம்.  ​​ சுவாமியின் அருளால், எனக்கு மிகவும் அர்ப்பணிப்புள்ள குழு கிடைத்திருந்தது. அவர்களுடன் சேர்ந்து இந்த சவாலை முழு ஈடுபாட்டுடன் சந்திக்க முடிவு செய்தோம். நாங்கள் கிராமப்புறங்களில் விரிவாகச் சுற்றுப்பயணம் செய்து, திறந்த வெளியில் மலம் கழிப்பதைத் தவிர்ப்பதன் அவசியத்தையும், மனித ஆரோக்கியம் மற்றும் கண்ணியத்திற்கு ஏற்படும் ஆபத்துகளையும் விளக்கி, சர்பஞ்ச் (கிராமத் தலைவர்), பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கு சாலை நிகழ்ச்சிகளை நடத்தினோம். போதுமான விழிப்புணர்வு இயற்கையாகவே ஒவ்வொருவரையும் சுகாதாரமாக வாழ வேண்டும் என்ற முடிவிற்கு  இட்டுச் செல்லும் என்பதால், கழிப்பறைகள் கட்டுவது  என்பது உறுதியான செய்தியாக இருந்தது. கிராமத் தலைவர்கள் மற்றும் பெண்களும் சுகாதாரப்  பிரச்சாரத்தில் ஈடுபட்டதன் மூலம் எங்கள் முயற்சிகள் அற்புதமான முடிவுகளைக் காட்டத் தொடங்கின. பிரச்சாரம் தொடங்கி 6 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று, 236 கிராம பஞ்சாயத்துகள் 'நிர்மல்' (திறந்தவெளி மலம் கழித்தல் இல்லாதவை) என அரசால் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் 200க்கும் மேற்பட்ட கிராம பஞ்சாயத்துக்கள் 'நிர்மல்' என அறிவிக்கப்படுவதற்கு தயாராக உள்ளன, மீதமுள்ள கிராம பஞ்சாயத்துக்களில் 50 சதவிகிதத்திற்கும் அதிகமான கழிவறைகள் உள்ளன. இந்தச் சாதனையை திரும்பிப் பார்க்கும் பொழுது, இவை ஸ்வாமியின் கருணையினால் மட்டுமே சாத்தியப்பட்டது என்பதால் அவரின் அருளிற்கு பெரிதும் கடமைப்பட்டிருக்கிறேன்.

இன்று நான் இரண்டு பெண் குழந்தைகளின் தந்தையாக இருக்கிறேன். ஸ்ரீ சத்ய சாய்பாபா அறிவித்தபடி, நற்குணங்களை குழந்தைகளுக்கு சிறு வயதிலிருந்தே கற்பிப்பது மனிதகுலத்தை ஒழுக்க சீர்கேட்டிலிருந்து பாதுகாக்கும் வலுவான தூண்களில் ஒன்றாகும் என்பதை நான் உறுதியாக நம்புகிறேன். உலகம் முழுவதிலும் நடக்கும் சமீபத்திய நிகழ்வுகள், மனித ஒழுக்கத்தின் வலுவான அடித்தளம் இல்லாமல் எந்த சமூகமும் வளர்ச்சி மற்றும் செழுமையின் பலனை அனுபவிக்க முடியாது என்பதை தெளிவாக உணர்த்துகிறது.


ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் போதனைகளும் அவரது பணிகளும் பல நூற்றாண்டுகளுக்கு சமூகத்தில் அதன் பங்கை தொடர்ந்து வகிக்கும்...

-Shri Hari Ranjan Rao, IAS


ஆதாரம்: India Today Magazine - Sathya Sai Baba Divine Grace

தமிழில் தொகுத்தளித்தவர்: *திருமதி சிந்துஜா,* நெமிலிச்சேரி சமிதி 

1 கருத்து: