தலைப்பு

புதன், 16 ஆகஸ்ட், 2023

ஸ்ரீ V.K நரசிம்மன் | புண்ணியாத்மாக்கள்

ஸ்ரீ V.K. நரசிம்மன் அவர்கள், சர்வதேச அளவில் பிரபலமான பத்திரிகையாளர். அவர் தி இந்து நாளிதழின் துணை ஆசிரியராகவும், இந்தியன் எக்ஸ்பிரஸ், பைனான்சியல் எக்ஸ்பிரஸ் மற்றும் டெக்கான் ஹெரால்ட் பத்திரிகையின் ஆசிரியராகவும் இருந்தவர். மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக இந்திய அரசியல் மற்றும் பொருளாதாரம் பற்றி ஆராய்ந்து எழுதும் முன்னணி எழுத்தாளர்களில் ஒருவராக இருந்தவர். தேசிய விடுதலை, சமூகநீதி மற்றும் தார்மீக விழுமியங்களில் ஆழ்ந்த அக்கறை கொண்டவர். 1980ம் ஆண்டு பிரசாந்தி நிலையத்திற்கு வந்துசேர்ந்த அவர், சேவைத் திலகம் பேராசிரியர் கஸ்தூரிக்குப் பின்னர் 1987 முதல் 2000 வரை... சுவாமியின் ஆன்மீக மாத இதழான சனாதன சாரதியின் ஆசிரியராக பணியாற்றும் பெரும்பாக்கியத்தைப் பெற்றவர் திரு. நரசிம்மன் அவர்கள்.

 🌷தனித்துவமான சத்யசாயி:
 
திரு. நரசிம்மன் அவர்களுக்கு 1977ம் ஆண்டு  டிசம்பர் மாதம் பாபாவுடனான முதல் சந்திப்பு நிகழ்ந்தது. அதிலிருந்து ஒரு புதிய ஆன்மீக உறவை அவர் வாழ்வில் முதன் முறையாக அனுபவிக்கத் தொடங்கினார். வேறு யாருடனும் அனுபவித்திராத ஆழமான ஒரு குரு-சிஷ்ய உறவை அவர் அனுபவித்தார். வால்மீகி மற்றும் பிளேட்டோ முதல் விவேகானந்தர், அரவிந்தர், மார்க்ஸ், காந்தி வரை பல சிறந்த தத்துவ ஞானிகளின் எழுத்துக்களை நன்கு அறிந்தவர் அவர். அவர்களனைவரின் தத்துவ சாராம்சத்தையும் ஒரு தனித்துவமான வழியில் பாபா செயல்படுத்துவதாக உணர்ந்தார்.  பாபாவின் ஆளுமை சக்தி மற்றும் அவரது தெய்வீக செய்தியின் உலகளாவிய தன்மையால்... மேற்கூறிய அனைத்து ஆசிரியர்களையும் பாபா விஞ்சி நிற்பதைத் தெளிவாக உணர்ந்தார்.


பாபா  செய்யும் பல அற்புதங்கள், அறிவியல் விதிகளின்படி விளக்க முடியாமல் இருந்ததைக் கண்ணுற்றார். மேலும் புகழ்பெற்ற விஞ்ஞானி டாக்டர்.பகவந்தம் சத்யசாயி பகவானை "விளக்க முடியாத பாபா" என்று ஒருமுறை விவரித்தையும் அறிந்தார். துவக்கத்தில்... பாபா என்பவர் தனக்கு யார்? அவருடனான தன்னுடைய பந்தம் எத்தகையது? என்பது அவருக்குப் புரியாத புதிராகவே இருந்தது. ஆனால், "பாபாவின் முக்கியத்துவம்... அமானுஷ்ய நிகழ்வுகளில் அல்ல! அவர் அளிக்கும் செய்தியில் உள்ளது!" என்ற முக்கிய உண்மையை நன்கு உணர்ந்தவராக இருந்தார் திரு நரசிம்மன். பாபா செய்யும் இயல்பான செயல்களின் (பொருள் ரீதியாக, ஒழுக்க ரீதியாக, ஆன்மீக ரீதியாக) மூலம் இந்த உலகம் தன்னுடைய ஞான வறுமையிலிருந்து மீட்டெடுக்ககப் படுவதை நன்கு உணர்ந்தார்.  பாபா எதைச் சொன்னாலும் செய்தாலும் அதற்கு ஒரு தெய்வீகக் காரணம் இருக்கும் என்றும், அவர் கைப்படும் ஒவ்வொன்றும் உயர்ந்ததாகவும் உன்னதமானதாகவும் மாற்றம் பெரும்! என்பதிலும்  பூரண நம்பிக்கை கொண்டார். 
 

🌷பெங்களூரில் இருந்து ரோமுக்கு மூக்குக்கண்ணாடி:
 
1983ம் ஆண்டு இத்தாலியின் ஸ்ரீ சத்யசாயி சேவா நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த சர்வதேச மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு ஸ்ரீ. VK நரசிம்மன் அவர்களை பாபா அறிவுறுத்தினார். அவருடைய பயணத்திற்குத் தேவையான ஆவணங்கள்  விமானம் புறப்படுவதற்கு மூன்று மணி நேரத்திற்கு முன்பே அவருக்கு வந்து சேர்ந்தது. எனவே அவசர அவசரமாக வைட்ஃபீல்டுக்குச் சென்று பயணத்திற்கான சாமான்களை  கட்டிக்கொண்டு ஏர்போர்ட்டை அடைந்தார். சரியான நேரத்தில் விமானம் ஏறி ரோமில் பத்திரமாகத் தரையிறங்கினார். மாநாட்டுக்குத் தேவையான தனது விவரக்குறிப்புகளைத் தேடும் போதுதான் அவருடைய மூக்குக் கண்ணாடியை ஒயிட்ஃபீல்டிலேயே  விட்டுவிட்டு வந்ததை உணர்ந்தார். மூக்குக் கண்ணாடியின்றி பெரும் சிரமம் தனக்கு ஏற்படும் என்பதால் அது அவருக்கு அதிர்ச்சியாக இருந்தது. அடுத்த நாள் மாநாடு, எனவே பாபாவின் உதவிக்காக முழு மனதுடன் பிரார்த்தனை செய்வதைத் தவிர வேறு வழியில்லை என்று எண்ணினார். ஒரு சோபாவில் அமர்ந்து தீவிரமாக பிரார்த்தனை செய்தார். அவர் பிரார்த்தனையை முடித்த கணத்தில், அவர் அமர்ந்திருந்த சோபாவின் மேல்.. அந்தரத்தில் இருந்து அவருடைய மூக்குக்கண்ணாடி விழுந்தது.

 ஒயிட்ஃபீல்டில் விட்டுச் சென்ற அதே கருப்பு ஃபிரேம் கண்ணாடி. அவரோ  பெரும் ஆச்சர்யம் கலந்த அதிர்ச்சியில் சிலவினாடிகள் உறைந்து போனார்; நன்றியுணர்வு பெருக்கெடுக்க கண்ணீர் வடித்தார். ரோமில் மாநாடு முடிந்து... பிரசாந்தி நிலையத்திற்குத் திரும்பிய பின்னர், ஸ்வாமி அவரிடம் “பெங்களூரில் இருந்து ரோமுக்கு உங்கள் கண்ணாடியை நானே அனுப்பி வைத்தேன்” என்று கூறி மகிழ்வித்தார். பாபா எங்கும் நிறைந்தவர், காலம் மற்றும் தேசங்களுக்கு அப்பாற்பட்ட சக்தி என்பதை அனுபவப் பூர்வமாக உணரும் பாக்கியத்தைப் பெற்றார் நரசிம்மன்.


 

🌷இந்தியாவை தம் இல்லமாக்கிய இறைவன்:

இந்திய தேசத்தின் முன்னேற்றம் குறித்த ஆழமான சிந்தனைகளைக் கொண்டவர். இந்தியாவின் புராதன மேன்மையை மீட்டெடுக்கும் அற்புத சக்தி... பகவான் ஸ்ரீ சத்யசாயி பாபா என்று ஆரம்பத்திலேயே உணர்ந்தார். அவர் சுவாமியிடம் ஈர்க்கப்பட்ட முதன்மையான காரணங்களுள் இதுவும் ஒன்று. சுவாமிக்கு இந்திய நாட்டின் மீதிருந்த தனிக்கவனம் குறித்து பின்வருமாறு குறிப்பிடுகிறார், "பாபா, தம்மைப் பின்பற்றும் பல வெளிநாட்டினர்க்குத் தேவைப்பட்ட போதிலும், வெளிநாடுகள் செல்வதில்லை என முடிவெடுத்திருந்தார். ஏனெனில் இந்தியாவை முன்மாதிரியாக ஆக்காத வரை, தனது தெய்வீகச் செய்தியைப் பரப்புவதற்கு வெளிநாடு செல்வதில் அர்த்தமில்லை என்று அவர் கருதுகிறார். பாபா தனது அனைத்து சொற்பொழிவுகளிலும், இந்தியாவில் ஒழுக்க நெறிகள் வீழ்ச்சியடைந்து வருவதையும், இந்திய ஆன்மீகம் மற்றும் கலாச்சாரத்தின் பெரும் உண்மைகள் குறித்து பரவலான அறியாமையைக் கண்டு கவலைப்பட்டுள்ளார். அவரது முக்கிய கவனம், அவரது கல்வி நிறுவனங்களின் நடத்தை குறித்தே இருந்தது. அவரது அனைத்து சொற்பொழிவுகளும், இந்திய ஞானிகள் மற்றும் அவதாரங்களால் பிரகடனப்படுத்தப்பட்ட மனித மேம்பாட்டுக் குணங்கள் குறித்தே இருந்தது.”

 
 
🌷எனது தோபி அறியமாட்டானே!


ஒருமுறை, திரு.நரசிம்மன் அணிந்திருந்த வேஷ்டி சற்று கிழிந்திருப்பதைக் கண்ட பாபா... அதைக் குறித்து அவரிடம் வினவினார். அதற்கு அவரோ, "சுவாமி அஷ்டோத்தர சதநாமாவளியில் சொல்லப்படுவது போல நீங்களோ அன்னவஸ்திரதாயர் ('அன்னவஸ்த்ரதாய நம' - உணவு மற்றும் ஆடை வழங்குபவருக்கு நமஸ்காரம்). அன்னம், வஸ்திரம் இரண்டையும் அபரிமிதமாகக் கொடுப்பதில் நீங்கள் தாராளமாகவே உள்ளீர்கள். ஆனால், எனது தோபியோ ( துணி துவைப்பவர்) சுவாமியின் பரிசுகளுக்கும் மற்ற ஆடைகளுக்கும் வித்தியாசம் காட்டுவதில்லை. இந்த வழக்கில் அவனே குற்றவாளி!" என்று சிரித்தபடி கூறினார். சுவாமியும் அந்த பதிலைக் கேட்டு சிரித்துக்கொண்டே உள்ளே சென்று இரண்டு புதிய வேட்டிகளைக் கொண்டுவந்து நரசிம்மனுக்குக் கொடுத்தார். அவருடைய புத்திசாலித்தனத்திற்கும் நகைச்சுவைக்கும் கிடைத்த பரிசு அது.
பிரிட்டிஷ் காலம் தொடங்கி,  திரு V K நரசிம்மன் அவர்களின் எழுத்துக்களில்... சுயாட்சி மற்றும் சுதந்திரத்தின் மீதான பற்று தொனித்தது. நேர்மை மற்றும் அச்சமின்மை அவரது அடையாளங்களாக விளங்கியது. பகவான் பாபா அவரை அடிக்கடி 'சிம்மம்' (சிங்கம்) என்று அன்புடன் அழைப்பார். தனது பத்திரிக்கைத் தொழிலின் தர்மத்தையும் மதிப்பினையும் பாதுகாக்க அவர் கொண்டிருந்த துணிச்சலுக்காக, சுவாமி அவருக்கு கொடுத்த பட்டம் எனலாம். அதே சமயத்தில், புத்திசாதுர்யத்துடன் கூடிய நகைச்சுவை உணர்வும் அவரிடம் மேலோங்கியே இருந்தது. சில சமயங்களில்... அவரின் பதில்களின் மூலம் சுவாமியையே ரசித்து சிரிக்கும்படி செய்துவிடுவார்.


🌷திருந்தாமல் தவறிழைத்தவன் கதை:


ஒருமுறை சுவாமி, திரு.நரசிம்மன் அவர்களை அழைத்து... "நரசிம்மன்!  இப்போது நான் சொல்வதை செய்வீர்களா?" என்று கேட்டார். நரசிம்மனோ, 'சுவாமி தாங்கள் சொல்லும் எதையும் செய்வேன்' என்றார் பணிவுடன். உடனே பாபா அவரிடம் "நான் நாளைக் காலை பிருந்தாவனம் செல்கிறேன். நீங்களும் என்னுடன் வாருங்கள். ஆனால், உங்கள் மனைவி என்ன செய்வாள்?" என்றார். 'சுவாமி! அவளது பயணத்துக்கு நான் ஏற்பாடு செய்கிறேன்' என்று பதிலளித்தார் நரசிம்மன். 

ஆனால் சுவாமியோ மின்னும் கண்களுடன் வேடிக்கையாக, "நரசிம்மன்! நான் ஒன்றைப் பரிந்துரைக்கட்டுமா? உங்களுக்கு  இன்னொரு மனைவி பிருந்தாவனத்தில் இருந்தால்  வசதியாய் இருக்கும் அல்லவா?" என்றார். நரசிம்மன் ஒரு குழந்தையைப் போல் சிரித்துவிட்டு "சுவாமி! நீங்கள் அனுமதித்தால் நான் உங்களுக்கு ஒரு கதை சொல்கிறேன்!" என்றார். சுவாமியும் உடனடியாக அவருடைய கதையைக் கேட்க ஒப்புக்கொள்ளவே... நரசிம்மன் ஆர்வத்துடன் பின்வரும் கதையைக் கூறினார்.


இரண்டு மனிதர்கள் ஒரே நேரத்தில் இறந்தனர்; இருவரும் வானலோகத்தை அடைய...  ‘சொர்க்கம்' என்றும் 'நரகம்' என்றும் பெயரிடப்பட்ட  இரண்டு மூடிய வாயில்களைக் கண்டனர்.  அங்கிருந்த கேட் கீப்பர் (வாயில் காப்பாளர்) அவர்களை தடுத்து நிறுத்தி அவர்களில் ஒருவனிடம் 'பூமியில் வாழும் போது திருமணம் செய்து கொண்டாயா?' என்று விசாரித்தார். அந்த மனிதன் 'ஆம்' என்றவுடன், ‘உனக்கு ஏற்கனவே திருமணமாகி, உன் மனைவியுடன் நரகத்தை அனுபவித்ததால், நீ நேராக சொர்க்கத்திற்குச் செல்லலாம்’ என்று கூறி, சொர்க்கத்தின் வாயிலைத் திறந்தார்.  இதை உன்னிப்பாகக் கவனித்த இரண்டாவது நபர், தான் ஒருமுறை அல்ல... இரண்டு முறை திருமணம் செய்துகொண்டதால், மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார்! வாயில் காப்பாளர், இவர் திருமணம் செய்து கொண்டாரா என்று கேட்கும் முன்பே, 'நான் பூமியில் வாழ்ந்தபோது இரண்டு முறை திருமணம் செய்துகொண்டேன்' என்று கூறினார். வாயில் காப்பாளர் அவரைக் கண்டித்து, 'நீ முதல் திருமணம் செய்துகொண்டபோதே  அது தவறு என்று உணராமல் மீண்டும் அதே தவரைச் செய்துள்ளாய்! எனவே உனக்கு சொர்க்கத்தில் இடமில்லை!' என்று கூறி நரகத்தின் வாயிலைத் திறந்து விட்டாராம்!
 
கதையைக் கேட்ட பாபா மனம் விட்டு சிரிக்க... பகவானை அவ்வாறு சிரிக்க வைத்ததை எண்ணி மனம் பூரித்தார் திரு நரசிம்மன்.


🌷கோணலான நாமம் நேரான பாதை:

நரசிம்மன் அவர்களின் நெற்றியில் எப்போதும் வைணவ முத்திரையான 'நாமம்'  இருக்கும்.  ஒரு சமயம், இவரின் நெற்றியில் உள்ள 'நாமம்' நேராக இல்லாததைக் கண்டு... பகவான் பாபா, "என்ன சிம்மம், உங்கள் 'நாமம்' வினோதமாக இருக்கிறது!" என்றார். தான் நாமம் போடுவதற்க்கென வைத்திருந்த அச்சு காணாமல் போனதாகவும், அதற்குப் பதிலாக ஒரு தீக்குச்சியை வைத்து நாமம் இட்டதாகக் கூறினார் நரசிம்மன். உடனே சுவாமி, தனது அங்கை அசைப்பில்... சங்கு, சக்கரம் ஆகிய வைணவ முத்திரைகள் பதித்த இரண்டரை அங்குல நீளமுள்ள வெள்ளி அச்சு ஒன்றினை வரவழைத்து, "எப்போதும் நேரான பாதையைத் தேர்ந்தெடுக்க வேண்டும்; கோணலான பாதையில் நடப்பது நல்லதல்ல" என்று கூறி அவரிடம் கொடுத்தார்.


🌷அத்வைத தர்ஷனம் ஞானம்:
 
திரு. நரசிம்மன் அவர்கள், பகவானுடனான நெருங்கிய வாழ்வின் மூலம்...உலகியல் முதல் உன்னதமான ஞானத்திரட்டு வரை! அவர் கற்றுக்கொண்ட பாடங்கள் எண்ணற்றவை. தனது இளம்பிராய  நாத்திக சிந்தனைகளுடன், பின்னாளின் வைஷ்ணவச் சார்புடன், பகவான் கற்பித்த தூய அத்வைத தத்துவத்தை ஏற்றுக்கொள்வது அவருக்குக் கடினமாக இருந்தது. எனவே இத்தகு தத்துவம் தொடர்பாக... தயக்கமின்றி சுவாமியுடன் உரையாடல் மேற்கொள்ளும் சுதந்திரத்தை சுவாமி அவருக்கு வழங்கியிருந்தார். 1981ம் ஆண்டு பிருந்தாவனில் நடந்த அத்தகைய ஒரு உரையாடலின் போது, பாபா அவரிடம் "அத்வைதத்தைப் பற்றிய உங்கள் சந்தேகம் தீர்ந்ததா?" என்றார். ஆனால் நரசிம்மன் அவர்களோ, தனது சந்தேக நிவர்த்தி குறித்து திருப்தி இல்லாமல் இருப்பதைத் தெரிவித்தார்! சுவாமி சிரித்துக்கொண்டே, "அனுபவம் எல்லா சந்தேகங்களையும் நீக்கும்" என்றார்.

 
இரண்டு நாட்களுக்குப் பிறகு, நரசிம்மன் தனக்கு மார்பில் கடுமையான வலி இருப்பதாக பாபாவிடம் தெரிவிக்க, பகவான் விபூதியை வரவழைத்துக் கொடுத்து, "எல்லாம் சரியாகிவிடும்; கவலைப்படாதே" என்று கூறி மார்பில் பூசியும் விட்டார். சில நாட்களில் வலி மறைந்தது. அந்த சம்பவத்தைத் தொடர்ந்து ஓர்நாள் இரவில், அவர் ஒரு விசித்திரமான கனவு கண்டார், அதில் அவர் இறந்துவிட்டார்! கனவில், அவர் தனது சொந்த உடலைக் கண்டார், ஆனால் எந்த வேதனையோ துக்கமோ இன்றி... விவரிக்க முடியாத பேரின்பத்தை அனுபவித்தார். பின்னர் கனவில் இருந்து விழித்து மீண்டும் உறங்கச் சென்றார். சிறிது நேரத்திற்குப் பிறகு, அதே கனவு ஒரு குறிப்பிடத்தக்க வித்தியாசத்துடன் மீண்டும் தோன்றியது, அதில் அவர் இறக்கும் அதே அனுபவம்; ஆனால் இந்தமுறை பயங்கரமான வேதனையை அனுபவித்தார்! விசித்திரமாக இருந்தாலும், மரணத்தின் முதல் அனுபவம் மிகவும் ஆனந்தமாகவும், இரண்டாவது அனுபவமோ மிகவும் வேதனையாகவும் இருந்தது!
 
அவர் விழித்தபின், பகவான் இந்தக் கனவுகளின் மூலம் 1) விழிப்பு மற்றும் கனவு நிலைகள்  2) இரண்டு நிலைகளின் உண்மையற்ற தன்மை - என்பதான அத்வைத உண்மைகளைப் போதிக்கிறார் என்று உணர்ந்து ஆச்சரியப்பட்டார். ஜகத்குருவான ஸ்ரீ சத்யசாயி இறைவன்... தனது அன்பான சீடருக்குக் கற்றுக் கொடுத்த நடைமுறை ஞானவிளக்கம் அது!


🌷சுவாமியின் ஆன்மீக தூதர்கள்:


உலகில் நிகழும் ஆன்மீக உயர் மனமாற்றங்களுக்கு, நேரடியாகவும் மறைமுகமாகவும்  ஸ்ரீ சத்யசாயி பாபாவே முழுமுதற் காரணம் என்பதில் எந்த ஐயப்பாடும் திரு. VK  நரசிம்மன் அவர்களுக்கு இருக்கவில்லை. இன்னும் சில ஆண்டுகளில், நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள  ஸ்ரீ சத்யசாயி கல்வி நிறுவனங்களில் இருந்து உலகின் பல பாகங்களுக்குச்  செல்லும் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் மற்றும் பெண்கள் ஒவ்வொரு துறையிலும் தார்மீக மற்றும் ஆன்மீக ஊக்கியாக செயல்படுவார்கள் என்பதை அவர் கண்கூடாகக் கண்டார். மேலும், சுவாமியின் தூதர்களாகிய இம்மாணவர்கள்... அவர்கள் வேலை செய்யும் இடங்களில், அர்ப்பணிப்பு மற்றும் தன்னலமற்ற சேவையின் ஒரு புதிய மனப்பான்மையைக் கொண்டு வருவார்கள். அந்தந்த சமூகங்களில் தார்மீக வாழ்க்கைத் தரத்தையும் உயர்த்துவார்கள் என நம்பினார். மேலும் திரு. நரசிம்மன்... சுவாமி, மாணவர்கள் மீது கொண்டிருக்கும் அன்பு மற்றும் கனவை அளவிடவோ வேறெதனுடனும் ஒப்பிடவோ முடியாது என்பதைக் கவனித்தார். சாயி மாணவர்களின் ஒழுக்கம், பக்தி மற்றும் மரியாதை மனப்பான்மை ஆகியவை...  ஊழல் மற்றும் ஒழுக்கக்கேட்டால்  தத்தளித்துக் கொண்டிருக்கும் இந்திய சமூகத்தில் மிகபெரும் சீர்திருத்த தாக்கங்களைக் கொண்டு வரும் எனக் கணித்தார்.
  

✍🏻 கவிஞர் சாய்புஷ்கர்

மூலம் : சாயி இலக்கியங்கள் மற்றும் இணையம்

2 கருத்துகள்: