தலைப்பு

சனி, 19 ஆகஸ்ட், 2023

சம்பவங்களையே மாற்றி அமைத்திடும் இரு பெரும் சம்பூர்ண அவதாரங்கள்!

எவ்வாறு மனித இயலாமயை நீக்க பெரும் அவதாரங்களும் யுகம் விட்டு யுகம் தாண்டியும் தனது நீள் கருணைக் கரங்களை நீட்டுகிறது... ஆன்மாவை தேற்றுகிறது... கடைத்தேற்றுகிறது எனும் ஆச்சர்யம் சுவாரஸ்யமாக இதோ...


அது துவாபர யுகம்... பலராமரும் ஸ்ரீ கிருஷ்ணரும் மதுராவுக்குள் நுழைகின்றனர்... ரா ரா என மதுரா இரு கரம் நீட்டி கடல் அளவு அன்போடும் கம்ச வம்போடும் இருவரையும் வரவேற்கிறது! 

தெருவில் இரு பக்கமும் இருவரையும் ஆச்சர்யமாக வேடிக்கைப் பார்க்கின்றனர்... ஸ்ரீ கிருஷ்ணரின் கவர்ந்திழுக்கும் பேரழகு அப்பேர்ப்பட்டது! சலிக்காமல் விழி வலிக்காமல் ஸ்ரீ கிருஷ்ணரை நாள் முழுக்கப் பார்த்துக் கொண்டே இருக்கலாம்... அப்படிப்பட்ட ஒரு அழகு.. மனித அழகில்லை தேவ அழகில்லை.. அது பிரபஞ்சப் பேரழகு! நடந்து வருகிற சமயத்தில் அந்த வீதியில் ஒரு பணிப்பெண்ணை பார்க்கிறார் ஸ்ரீ கிருஷ்ணர்‌.. அந்தப் பெண்மணிக்கு கூனல்.. அவளது முதுகோ கம்சனுக்கு புரிகிற தினசரி சேவைக்கும் சேர்த்தே வளைந்து போயிருக்கிறது...! அந்தக் கூனல் பெண்மணிக்கு அனுகிரகம் புரியலாம் என சங்கல்பிக்கிறார்! தானே தனிப்பெருங் கருணையில் சென்று ஸ்ரீ கிருஷ்ணர் அந்தப் பெண்மணியோடு பேசுகிறார்!


 "ஏய்..உன் பெயர் என்ன? எந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவள் நீ? யாருக்காக இந்தச் சந்தனத் தைலத்தை எடுத்துக் கொண்டு செல்கிறாய்? எனக்கும் கொஞ்சம் அந்த தைலத்தைத் தரமாட்டாயா?" என்று கேட்கிறார்! 

தைலம் பூசாமலேயே உடம்பெங்கும் சுகந்த வாசனை வீசிடும் ஸ்ரீ கிருஷ்ணர் அதைப் பணிவோடு கேட்பதே அவரது கருணையைக் காட்டியபடியே இருக்க...

கூஜாவில் தைலத்தையும்... கண்களில் ஆச்சர்யத்தையும் தளும்பத் தளும்பச் சுமந்து கொண்டு அந்தப் பெண்மணி

"நீ உண்மையில் பேரழகோடு இருக்கிறாய்... அதில் சந்தேகம் இல்லை... ஆனால் நான் கம்ச மகாராஜாவின் பணிப்பெண்... என்னை திரிவக்ரா என்று மக்கள் அழைப்பர்! மகாராஜாவுக்கு சந்தனக் குழம்பை தினசரி பூசக் கொடுப்பது எனது தொழில்... இருந்தாலும் நீயும் கொஞ்சம் எடுத்துக் கொள்!" என்று அந்தப் பணிப்பெண் அன்போடு தெரிவிக்க..


மூன்று இடத்தின் உடம்புக் கூனலைத் தான் திரிவக்ரா என்று அழைக்கின்றனர் என்பது தெளிவாகிறது! உடனே அந்த சந்தனக் குழம்பை ஏற்றுக் கொண்டு தனது கையை அவள் மீது வைத்து... தனது விரல்களை அவள் கன்னத்தில் பதித்து சற்றே கருணையோடு உயர்த்திவிடுகிறார்...

அந்த கூனலும் அவளது அவலட்சணமும் உடனே விலகி அவள் தனது பழைய அழகு இளமை ரூபத்தைப் பெற்றுவிடுகிறாள் இதை ஏராளமான மதுராவாசிகள் பார்த்துப் பரவசம் அடைகின்றனர்...! அப்போது ஸ்ரீ கிருஷ்ணரின் கருணையில் பரவிய காருண்ய வாசனை கூஜாவில் இருந்த குழைவான அந்த சந்தன வாசனையையே தோற்கடித்து விடுகின்றன...! 


(பாகவதம் : 10: 1275)


அதே போல் ஸ்ரீ சத்ய சாயி அவதாரத்திலும் அதே ஸ்ரீ கிருஷ்ணர் கலியுகத்தில் அவதரித்து நெஞ்சம் நிறையும் நீண்டு நெடிய அற்புதங்களை இன்றளவும் புரிந்து கொண்டு வருகிறார்!


அது பாபாவின் 43 ஆவது ஜெயந்தித் திருவிழா! வழக்கம் போல் பாபாவின் கேச மிகுதியில் வாசனை எண்ணெய் வைக்கும் வைபவம் நிகழ்கிறது... சதா பாபா மேல் எண்ணம் வைத்தவர்கள் அவர் தலைமேல் ஒரு பூவை கோப்பையாகக் கொண்டு அதில் முக்கி எண்ணெய் வைக்கிறார்கள்! முதலில் சேவைத் திலகம் அந்த எண்ணெய்ப் பாத்திரத்தை நாரதர் போல் ஏந்த இறைத் தாய் அந்த எண்ணெய் கைங்கர்யத்தைப் (தெய்வீகச் செயல்) புரிகிறார்! 

பிறகு உருது கவிதாயினி திருமதி தேஹ்ரா சையது பேஹம் , ஜாம்நகர் ராஜ மாதா, சிரோஹி ராஜ மாதா, அமெரிக்க யோகினி இந்திரா தேவி, ஷிர்டி பாபாவின் நேரடி பக்தரான ஸ்ரீ தீட்சித் , பேராசிரியர் கோகாக் என வரிசை கட்டி அந்தப் புண்ணிய செயலைப் பூரிப்போடு புரிகின்றனர்... பேரழகு பாபாவின் சௌந்தர்யத்தைக் கண்டு எண்ணெய் போல் அவர்களது பக்தி இதயம் வழுக்கி பாபாவின் பாதங்களில் விழுந்த வண்ணமாய் இருக்கின்றன...


அந்த எண்ணெய் வைபவத்தை பரவசமோடு நாற்காலியில் அமர்ந்தபடியே பார்க்கிறார் அமெரிக்க பக்தை திருமதி ஆண்டர்சன்! அவரால் எழுந்து நடக்க இயலாத முடக்கு வாதம்... இப்படிப் பல ஆண்டுகள் அமர்ந்தபடியே தனது அமர பக்தியால் பாபாவை வழிபட்டு வருகிறவர் அவர்! அவர் நடக்க இயலாதவர் என அங்குள்ளவர் அனைவரும் நன்கு அறிந்ததே! 

வரிசை கட்டியவர்கள் எண்ணெய் வைத்த பின்னர் ஆச்சர்யங்கள் வரிசை கட்டி பாபா உடனே எழுந்து கொண்டு சேவைத் திலகம் கஸ்தூரியிடம் எண்ணெய் பாத்திரத்தை கொண்டு வரும்படி நடக்கிறார்... கஸ்தூரி எண்ணெய்க்கு பின் செல்லும் வழவழப்பாய் பின் தொடர்கிறார்... எண்ணெய்க்கு முன் செல்லும் வாசனையாய் பாபா முன் தொடர்கிறார்! நேரிடியாக திருமதி ஆண்டர்சன் நாற்காலிக்கு வந்து பாபா தலையைக் குனிகிறார்... பரவசமுடன் அந்த அம்மையார் பாபாவின் சிரசில் கை வைத்து ஆனந்தமாய் எண்ணெய் பூசி விடுகிறார்! அவரும், யாரும் எதிரே பார்க்காத சம்பவம் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன... உடனே பாபா "எழுந்திரு! எழுந்திரு! நில்!" என்று சொல்லி தனது திருக்கரங்களை அந்த அம்மையார் கையில் வைத்து தாங்கிப் பிடித்து உயர்த்துகிறார்... ஸ்ரீ கிருஷ்ணராய் அந்தப் பணிப் பெண்ணை உயர்த்தியது போல்... உடனே எழுந்து கொள்கிறார்... பாபா அழைத்துச் செல்ல அவரும நடக்கிறார்... நடக்கும் அந்த அம்மையாராலேயே அதனை நம்ப முடியவில்லை! பரவசம் மிகுந்த சேவைத் திலகம் உடனே மைக்கில் "பல ஆண்டுகளாக முடங்கிய இரு கால்களையும் பாபா இயங்க வைத்துவிட்டார்.. ஆண்டர்சன் நடக்கிறார்! ஆண்டர்சன் நடக்கிறார்! இது பகவான் அவருக்கு அளித்த தனது பிறந்த நாள் பரிசு!" என்று தன்னையும் மறந்து அந்த அற்புதச் செயலில் ஆனந்தம் கொப்பளிக்கக் கொப்பளிக்க பிற பக்தர்களுடனே பரவசமோடு பகிர்ந்து கொள்கிறார்! 


இதே போல் திருச்சியில் ஒரு ஆன்மீக முகாம்.. பொதுமக்கள் மத்தியில் பாபா உரையாற்றுகிறார்! அப்போது பொது மக்கள் மத்தியில் பல நூறு பேர் கேட்டுக் கொண்டிருக்கும் போது.. ஒரு சிறுவனை அழைத்து "உனது பெயர் என்ன?" என்று கேட்கிறார் பாபா! அந்தப் பொது மக்களுக்கு நன்கு தெரியும் அந்தச் சிறுவனுக்கு பல்லாண்டுகளாகவே காது கேட்பதோ வாய் பேசுவதோ இல்லை... அந்தச் சிறுவனது பெற்றோர் பாபாவிடம் முறையிடவே வந்திருக்கிறார்கள்.. ஆனால் அதற்குள் ஆன்மீக நிகழ்வு ஆரம்பித்துவிடுகிறது! 

பாபா அப்படி கேட்க.. அந்தச் சிறுவன் உடனே வாய் திறந்து பதில் சொல்ல... கூட்டமே ஹோ என்று பரவசப்படுகிறது! பாபா கேட்ட அதே நொடி அவனது காதுகளும் வாயும் மணிக்கதவே தாழ் திறவாய் என்பது போல் அடைத்த இரு புலனும் திறந்து கொள்கின்றன... அது மட்டுமின்றி அந்த அற்புதத்தைக் கண்ட பக்தர்களின் இதயமும் பக்தியில் திறந்து கொண்டு பாபாவை இறைவன் என உணர்கின்றன...!


(Source : Sri Krishna Sri Sathya Sai | Page No: 82 - 85 | Author : Dr. J. Suman Babu ) 


யமுனையில் தவழ்ந்தவரே சித்ராவதியில் தவழ்ந்தது! ஆகவே தான் சந்தனத் தைலங்கள் வந்தனம் புரிய கூனலை சரி பண்ணியதும் அதே போன்ற வாசனை எண்ணெயை சிரசில் வைத்தவரின் கால்களை இயக்கியதும் ஒருவரே! அவதாரங்களுக்கு மட்டுமல்ல அவதாரங்களின் ஒரே விதமான அற்புத மகிமைகளுக்கும் "சம்பவாமி யுகே யுகே!" என்பதே மிகவும் சத்தியம்!


  பக்தியுடன் 

வைரபாரதி

1 கருத்து: