தலைப்பு

புதன், 2 ஆகஸ்ட், 2023

பாபா தனது மாணவர்களுடன் பார்த்த வீர அபிமன்யு திரைப்படம்!

நினைத்துப் பார்க்கவே முடியாதவாறு எவ்வாறு கொடைக்கானல் பசுமையானது என்றும், அதை பரவசமோடு தரிசித்த தாவரவியல் பேராசிரியர் வாழ்வில் நடந்த வேறுபல சுவாரஸ்யமான சாயி அனுபவங்களும் இதோ...

அது 1989. சென்னை ராணி மேரி கல்லூரியில் இருந்து வாலாஜாவிற்கு மாற்றலாகி தாய் தந்தையோடு வசித்து வருகிறார் தாவரவியல் பேராசிரியை கவிஞர் பாரதிப்ரியா! அப்போது பாபா கொடைக்கானல் வந்திருப்பதான தகவல் தனது அக்கா கணவர் வழி கேள்விப்பட்டு குடும்பமே பாபா தரிசனம் பெற கொடைக்கானல் பயணிக்கிறது! வழி நெடுக பசுமையே இல்லை! பாரதி கண்கள் பூத்துப் போயின...! இதயம் துக்கத்தால் காய்த்தது! எத்தனையோ முறை அவரது பணி நிமித்தமாக கொடைக்கானல் தாவரங்களை பார்க்க வந்தவர் தான்‌ பாரதி.. ஆனால் இந்த முறை கொடைக்கானல் உண்மையில் கோடை'க்கானலாய் காய்ந்திருக்கிறது! நீண்ட நாட்களுக்கு இப்படியே இருப்பதாகக் கேள்விப்படுகிறார்!


அப்படியே சாயி சுருதி வருகிறார்கள்! வெளியே நல்ல கூட்டம்! ஆயிரம் பேருக்கும் மேல் இருந்திருக்கிறார்கள்! ஆனாலும் அடத்தியான ஆழ்மௌனம்! ஒரு சருகு விழும் சப்தம் கூட கேட்கவில்லை! ஆச்சர்யப்படுகிறார் பாரதி! அப்போது தான் பாபா கொடைக்கானலுக்குள் பாதம் பதிக்கிறார்! பக்தர்களை உள்ளே அழைக்கிறார்கள்! அங்கு உள்ளறையில் 200 அல்லது 300 பேர் தான் அமர முடியும்.. ஆனால் வந்திருந்ததோ அதை விட நான்கு மடங்கு!ஆச்சர்யத்திற்கும் ஆச்சர்யமாக அனைவருமே அமர முடிந்தது! இது எப்படி சாத்தியம் என்று ஆச்சர்யப்பட்டே போகிறார் பாரதி! வெளியே ஒரே மழை வேறு! பாபா அளித்த பரவச தரிசனம் முடித்து தங்கும் அறைக்கு வருவதற்கும் மின்சாரம் துண்டிப்பதற்கும் சரியாக இருக்கிறது! வெளியே சென்ற  தந்தை வரவில்லை... என்ன நேர்ந்தது என தெரியவில்லை .. பிறகு வந்து சேர்கிறார்! என்ன நேர்ந்தது என்பதை பல ஆண்டுகள் கழித்து அவரின் மரணத்திற்கு முன் பாரதியின் தந்தையே பகிர்ந்து கொள்கிறார்! அதிக மழை பெய்ததால் குடும்பத்திற்கு எதையோ வாங்கப் போய் சேற்றில் அவர் தவறி விழ.. எழ முடியாதவாறு திணற... ஒரு கை நீட்டப்படுகிறது... பாரதியின் தந்தை வெளியேற்றப்படுகிறார்... பிறகு அந்த நபர் அவரை பத்திரமாக தங்கும் அறை வரை அழைத்து வந்து மறைந்து விடுகிறார்.. சொன்னால் குடும்ப மனங்கள் கலவரமாகுமே என்று சொல்லாமல் தவிர்த்து பிறகு பகிர்ந்து கொள்ள.. முன்பின் தெரியாத, தன் பெயரைக் கூட தெரிவிக்காத அந்த மர்ம நபர் பாபாவே என்பதை உணர்கிறார்கள்! அது மட்டுமல்ல அன்று பெய்த ஒரே ஒரு மழைக்கு கொடைக்கானலே தலைகீழாக மாறி, வாடிய நிலை ஓடிய நிலையாகி.. பசுமை தலைவிரித்து நீர்த் தேக்கத்தோடு தாண்டவமாடுகிறது! அங்கே பேரிறைவன் பாபா கால் பட்டதால் கொடைக்கானல் பூமியே குடமுழுக்கானது என்பதையும் உணர்கிறார்கள்!


கவிஞர் பாரதிப்ரியாவுக்கு கிண்டி ஷிர்டி கோவில் லீலாம்மாவோடு தொடர்பு ஏற்படுகிறது! அது பாபா கொடுத்த ஆன்ம பந்தம்! அந்தக் கல்லூரி விரிவுரையாளர்களில் சீனியர் அவர்.. ஜுனியர் இவர்! ஆக அவர்கள் வாயிலாக பாபாவை நிரம்ப உணர்கிறார்! லோகநாத சாயி படித்து மேலும் பரவசப்படுகிறார்! அவரோடு புட்டபர்த்தி செல்கிறார்! அந்த முறை பாபா  தனது மாணவர்களோடு வீர அபிமன்யு திரைப்படம் பார்த்ததையும் பாரதி பார்த்து, பாபாவோடு சேர்ந்து பார்த்தும் பரவசப்படுகிறார்!

பாபாவின் கிண்டி கோவில் விஜயத்தின் போதும் லீலாம்மா வாயிலாக பாபாவை அருகில் இருந்து தரிசிக்கும் பாக்கியம் பெறுகிறார் பாரதி! 

பாரதியின் கனவில் பாபா நரசிம்மராக தரிசனமும் தந்திருக்கிறார்! தனது கூரிய நக விரல்களில் தலையை தொட்டு ஆசி வழங்கி இருக்கிறார்! தனது ஒற்றை விரலால் பாபா இந்த பூமியை தாங்கிய அற்புதக் காட்சியையும் கனவில் கண்டு மிரண்டு போயிருக்கிறார் பாரதி! கனவுகளில் பாபா அப்படியே நரசிம்மராக நடமாடியதிலும், ஒற்றை விரலில் பாபா பூமியை தாங்கும் காட்சியிலும் பாரதி வியந்தும் பயந்தும் போக.. அதை அவர் பகிரப் போக, சிலர் முகம் திருப்பி இருக்கிறார்கள்... "பிரத்யேகமான கனவை யாரிடமும் சொல்லாதே, அது சுவாமி உனக்கு அளித்த பிரத்யேக அருளும் வரமும்!" என்று லீலாம்மா பிறகு பாரதியை ஆற்றுப்படுத்துகிறார்கள்! 

பாபா முதன்முறையாக பாரதியின் கனவில் வெண்ணுடை அணிந்து வர... ஏன் காவி உடை இன்றி வெண்ணுடை என்று யோசிக்கிற போது, பாபா தனது அவதாரத்திரு நாளிலும் , கிறிஸ்துமஸ் தினத்திலும் வெண்ணுடையே அணிவார் என்பதை கேள்விப்படுகிறார்! 

ஒரு முறை கனவில் பாபாவை வேலி வழியே தரிசிக்கிறார் பாரதி.. அது அவ்வாறே நிஜத்திலும் பலிக்கிறது! பாபாவை காரில் வேலி வழியே தரிசனம் செய்கிறார்! 


1994 ஆம் ஆண்டு பாரதியின் மாமாவுக்கு இதயவலி ஏற்படுகிறது! அந்த நிகழ்வில் பாரதியின் அக்கா அழ.. "அழாதே அழாதே!" என்று ஒரு வெண்ணுடை அணிந்த கை அவள் கன்னத்தை தடவிக் கொடுக்கிறது..! பிறகு பாரதியின் அக்கா ஆசுவாசப்படுகிறார்! அந்தக் கை தனது சித்தப்பா கை போல் இருந்ததாக நினைத்தும், சித்தப்பா தவறி ஒரு வருடம் ஆகிற போது யார் கை? என்று அவர் ஆலோசிக்க... பிறகு கிண்டி கோவிலுக்கு வருகையில் அவருக்கு பாரதி புட்டபர்த்தி பாபா படம் தர... அதைக் கண்டு பரவசப்பட்டு... "இதே கை தான் இதே கை தான்!" எனது கண்ணீரை அன்று துடைத்தது என்று பாரதியின் அக்கா மீண்டும் அழுகிறார்! 

ஒருமுறை பாரதிக்கு உணவின் அளவு குறைந்து சாப்பிட முடியாமல் கஷ்டப்பட...கனவில் பாபா தோன்ற... பாரதியும் அதைக் குறித்து கேட்க... "இந்த சமயத்தில் உனக்கான அரிசி என்னிடம் குறைவாகத் தான் இருக்கிறது!" என்று பாபா தெரிவிக்க... இது பூர்வ பாப கர்மாவின் விளைவே என்பதை உணர்கிறார்! ஒருமுறை பாரதி பூர்வ பிறவியில் என்னென்ன தவறுகள் செய்தார் என்பதை கனவிலேயே பாபா விளக்க... அதைக் கேட்டு... கர்மாவை அனுபவித்தே கரைப்போம்! என்கிற திண்மையும் ஆழமான ஏற்றுக் கொள்ளும் குணமும் பாரதிக்கு ஏற்படுகிறது! அது பாரதிக்கு மட்டுமல்ல பக்தர்கள் நம் அனைவருக்குமே ஏற்பட வேண்டும்!


(ஆதாரம் : பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபாவே எங்களின் தாயும் தந்தையும் | பக்கம் : 3 - 43 | ஆசிரியர் : கவிஞர் பாரதிப்ரியா) 


பேரிறைவன் பாபாவோடு ஆன்மத் தொடர்பை தவிர அவரது பௌதீகத் தொடர்பை பாபா பொது தரிசனம் வழங்கிய வரை அடியேன் நிரம்பப் பெற்றதில்லை... ஆயினும் பக்தர்களின் அனுபவங்களை வாசித்து, உள்வாங்கி, மனக்கண் முன் கொண்டு வந்து எழுதுகிற போது அது எனக்கே நிகழ்ந்ததைப் போன்ற ஆனந்தத்திலேயே எழுதுகிறேன்! "பிறர் என்று யாருமே இல்லை அனைவரும் நாமே!" என்கிற ஆன்மீகப் பேருணர்வை பாபா அடியேனுக்கு வழங்கிக் கொண்டே வருகிறார்! அதிலும் பாரதி என்று பெயர் தாங்கும் பக்தரின் சாயி அனுபவங்களை எழுதுகிற போது எனது சாயி பக்தி என்கிற பூரணம் பரிபூரணமாகிறது! எனது உள்ளத்தை உருப்பட வைக்கும் சுவாமிக்கு நன்றி!


 பக்தியுடன் 

வைரபாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக