தலைப்பு

சனி, 12 ஆகஸ்ட், 2023

மதுரா அமைச்சர் அக்ரூரரும் நிலா மனிதர் நீல் ஆம்ஸ்ட்ராங்கும் சொல்லிய வார்த்தை ஒன்றே!!

எவ்வாறு இரு யுகங்களிலும் இரு அவதாரங்களின் மகிமையை அனுபவித்தவர்கள் சொல்லிய வார்த்தைகள் துல்லியமாக பொருந்துகின்றன என்பதனை விறுவிறுப்பான நடையில் சுவாரஸ்யமாக இதோ...

அது துவாபர யுகம்! கம்சன் தனது அமைச்சரான அக்ரூரரை அனுப்புகிறார்! ஸ்ரீ கிருஷ்ணரை மதுராவுக்கு அழைத்து வரச் சொல்கிறான் கம்சன், அவனது திட்டம் அழைத்து வந்து அவரை பலி கொடுப்பதே! அசுரர்களை வரிசை கட்டி அனுப்பியும் பலன் இல்லை என்பதால் நேரடி அழைப்பு அது.. தனுர்யாகம் என்பது கம்சன் ஸ்ரீ கிருஷ்ணரை பலி கொடுக்க வைத்த பெயர்! அக்னியையே யாகத்தில் பலியிட முடியுமா? ஸ்ரீ கிருஷ்ணர் எனும் பிரபஞ்ச அக்னியை பற்றி இன்னமும் சரிவரப் புரியவில்லை கம்சனுக்கு... தூதாகச் செல்லும் அக்ரூருக்கு கம்சனின் திட்டம் தெரிந்தும் ஸ்ரீ கிருஷ்ணருக்கு ஏதும் அசம்பாவிதம் ஆகாது என்ற புரிதலில் ஆனந்தமாக ரதத்தில் புறப்பட்டு... வழி நெடுக ஆனந்தப் பட்டு வருகிறார்... ஸ்ரீ கிருஷ்ணரை ஆன்மா குளிர தரிசிக்கிறார்.. பலராமர் மற்றும் ஸ்ரீ கிருஷ்ணரை அழைத்துப் போகிறார்.. போகிற வழியில் கம்சனின் சூழ்ச்சியையும் மனம் திறக்கிறார்.. மிகவும் நல்லவர் அக்ரூரர்! சகதியிலும் சகதி ஒட்டா செந்தாமரை போல் அக்ரூரர் மிக தூய இதயத்தைக் கொண்டிந்தமையால் ஆன்மீக ஆனந்தத்தையும் அவர் வருகிற போது அனுபவிக்க முடிகிறது...!

மதுராவுக்கு செல்லும் வழியே... மாலை மசங்குகிறது..‌. மாலை வழிபாடு நிகழ்த்த அக்ரூரர் யமுனை நதிக்கரையில் ரதத்தை நிறுத்தி ஸ்ரீ கிருஷ்ணரிடம் கொஞ்சம் அவகாசம் கேட்டு... யமுனையில் கால் நனைக்கிறார்... பக்தியோடு அதை எடுத்து தீர்த்தமாக அருந்துகிறார்.. தலை மேல் தெளித்துக் கொள்கிறார்... எதிர்பாரா வண்ணம் அந்த யமுனை நதியில் ஆதிசேஷனில் மகாவிஷ்ணு பள்ளி கொண்டிருக்கும் அற்புதக் காட்சியைக் காண்கிறார்...! மெய் சிலிர்க்கிறார்.. அதே ஸ்ரீ கிருஷ்ணரே மகா விஷ்ணுவாக அமர்ந்திருக்கிறார் என்பதை உணர்ந்து கொண்டு... ரதத்தில் இன்னமும் காத்திருக்கிறாரா? என்று ஸ்ரீ கிருஷ்ணரை தேடி ரதத்தின் திசை நெருங்க... அங்கே ஸ்ரீ கிருஷ்ணர் இருப்பதை தூரத்தில் இருந்தே பார்த்துப் பரவசப்படுகிறார்... சரி.. இப்போது யமுனையில் இருக்கிறாரா பார்ப்போம் என்று மீண்டும் கரைக்கு விரைகிறார்... அங்கேயும் ஸ்ரீ கிருஷ்ணர் மகாவிஷ்ணு ரூபத்தில் பாம்பணையில் படுத்திருக்க... ஆன்மா குளிரக் குளிர மகாவிஷ்ணுவை துதிபாடி வழிபட்டு விட்டு ரதத்தை நெருங்க...


"என்ன அக்ரூரரே! நதி இதோ அருகே இருக்கிறது... ஆனால் ஏன் இவ்வளவு நேரம் எடுத்துக் கொண்டீர்கள்? அங்கே ஏதேனும் அற்புதம் கண்டீரா? ஆகாயத்திலும் பூமியிலும் காணாத அற்புதங்களையா அங்கே கண்டீர்கள்?" என்று வேடிக்கையாக எதுவும் அறியாதது போல் கேட்கிறார்! (இப்படித் தான் பாபாவும் ஏதும் அறியாதவர் போல் பக்தர்களிடம் விசாரிப்பார்!) 

அதற்கு அக்ரூரரோ "உன்னை தவிர இந்த உலகில் எதுவுமே அற்புதம் இல்லை ஸ்ரீ கிருஷ்ணா! இந்த நீரும் வானமும் பூமியும் உன்னில் இருந்து தானே உற்பத்தி ஆகிறது!!" என்று ஸ்ரீ கிருஷ்ணரை பணிந்துவிட்டு ரதத்தை எடுக்கிறார்.. குதிரை ஒரு கனை கனைக்கிறது... அக்ரூரரின் மனதில் ஸ்ரீ கிருஷ்ணரின் சதம் விரைந்தது போல்  மதுராவுக்கு ரதம் விரைகிறது!

(ஆதாரம் : பாகவதம் : 10 - 1238) 


இதே போல் ஸ்ரீ சத்ய சாயி அவதாரத்திலும் அவரது மகிமையை உணர்த்தும் பற்பல சம்பவம் நடந்து கொண்டே இருக்கிறது.. அதற்கு ஒரு முடிவே இல்லை! 

ஒருமுறை பாபா மச்லிபட்டினத்தின் கடற்கரைக்கு பக்தர்களோடு  விஜயம் புரிகிறார்! திடீரென பாபா மறைந்து போகிறார்... எங்கே பாபா? எங்கே பாபா? என அனைவரும் அங்கேயும் இங்கேயும் திரும்பிப் பார்க்க... ஒரு பக்தர் ஆ' என்று ஆச்சர்ய சப்தம் இட... கடலின் நடுவே ஆதிசேஷனின் பாம்பணையில் பாபா சயனித்திருப்பதன் அற்புதக் காட்சியைக் கண்டு பேராச்சர்யப் படுகின்றனர்!

    ஒரு சமயம் ஒரு பக்தர் "சுவாமி உங்களுடைய அவதார ரகசியத்தை விளக்குங்கள்!" என்று கேட்க... "உடனே நீ சென்று சித்ராவதி நதியில் உன் முகப் பிரதிபலிப்பை கண்டுவிட்டு வா!" என்கிறார் பாபா! அந்த பக்தரும் அங்கே சென்று பார்த்தால்.. தச அவதார பிரதிபலிப்பே அற்புதக் காட்சியாக தெரிந்து ஆச்சர்யப்படுத்துகின்றன...!


ஒருமுறை கிருஷ்ண ஜெயந்தியில் ஒரு அற்புதம் ! அது கமலாபுர கிராமம்! பாபாவின் பௌதீக இளம் வயது!வெங்கட ராமராஜு, சுசீலாம்மா, இறைத்தாய் ஈஸ்வராம்பா மட்டுமே இருக்கின்றனர்...

"இந்த மாலை பூஜை செய்யுங்கள்! நான் உங்களுக்கு எனது தசாவதார ரூபங்களையும் காட்டுகிறேன்!" என்கிறார் பாபா!

அது படியே பாபா தசா அவதார ரூபங்கள் காட்ட ஆரம்பிக்க... பாபாவே அங்கு இல்லை... தச வித ரூபங்களே தோன்றித் தோன்றி மறைகின்றன... நரசிம்ம அவதாரம் காட்டுகிற போது ... சிவந்த கண்ணும், உக்கிர கோபமுமான காட்சி வெங்கட ராம ராஜுவை மிரளச் செய்திட... "ஏன் நீ பயந்து போகிறாய்! நான் உன் கூடவே இல்லையா?" என்று குரல் வருகிறது... விழிகளை அகலத் திறக்கிறார்...அது பாபா திவ்யத் திருமுகமே!


நந்திகாமத்தில் சந்தபுரம் என்கிற கிராமம்! சத்ய சாயி ஜோதியை பஜனையில் ஏற்றி ஒவ்வொரு வீடாக எடுத்துச் செல்வதான வழிபாட்டு நிகழ்ச்சி நிரல்... ஆனால் அங்கே பக்தர் இல்லமோ குறைவு! நாத்திகக் கும்பல்களே அதிகம்! 60 நாட்களுக்கான 60 பக்தர் வீடுகள் கூட இல்லை... இதில் நாத்திகக் கூட்டத்திற்கு கொங்கர ராமராவ் என்கிற விவசாயியே தலைவர்! இந்த ஜோதி, பஜனை, பாபா என்பதை எல்லாம் எள்ளி நகையாடுகிறார்! 

ஆனால் அந்த கிராமத் தலைவரான பாபா பக்தர் ஒருவர்... விளை நிலத்தில் பாபா விபூதியையே விதைகளோடு தூவி "பாபா நீங்களே கவனித்துக் கொள்ளுங்கள்! எனக்கு பஜனைக்கு செல்ல வேண்டும்!"  என்று கிளம்பிவிடுகிறார்! பஜனையோ ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொரு நாளைக்கும் நடக்க ஆரம்பிக்கிறது! 

ஒரு நாள் மாலை இருட்டுகிறது... இருண்ட நாத்திகத்திற்கு வெளிச்சம் தர வேண்டியே அது இருண்டு போகிறது! தூரத்தில் சாயி பஜன் கேட்கும் சப்தம்!

அந்த கொங்கர ராம ராவ் காலாற வெளியே வயல்புரத்தில் நடக்கிற போது.. கிராமத் தலைவர் நிலத்தில் ஒருவர் அங்கும் இங்கும் நடக்கிறாரே! யார் அது? என நெருங்க..‌அது பாபா! 

பாபாவும் அவரை முன்னோக்கி நெருங்க... அருகே புன்னகைக்கிறார்... "மோசமாக மனிதராக ஒன்றும் இந்த பாபா பார்க்கத் தோன்றவில்லையே!" என்று நாத்திக ராவுக்கு தோன்றுகிறது!

"இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?" இது ராவ்!

"என் பக்தன் எனக்கான கடமையை (பஜனை) செய்து கொண்டிருக்கிறான் ... நான் அவனுக்கான கடமையை செய்து கொண்டிருக்கிறேன்!" என்கிறார்.. அடுத்த நாள்... அந்த நாத்திக ராவ் கிராமத் தலைவருக்கு நடந்ததைச் விவரிக்க... பாபா ஸ்தூலமாக நேற்று நடந்த பஜனைக்கு வரவில்லை என்றும்... பக்தர்களான எங்களுக்கே தரிசனம் தராத போது... நாத்திகருக்கு தந்திருப்பது ஆச்சர்யத்திலும் ஆச்சர்யம்... என்றும் தலைவர் தெளிவுபடுத்த.. தன்னைத் தேடி வந்த பாபாவிடம் அந்த நொடியே சரண் அடைகிறார் அந்த நாத்திக ராவ்! அவர் மட்டுமல்ல அந்த நாத்திகக் கூட்டமே பக்தப் பூந்தோட்டமாக மாறுகிறது! அப்படி 60 நாளும் அங்குள்ள அனைத்து 60 வீடுகளிலும் தங்கு தடையின்றி பொங்கி வருகிறது பஜனை... தங்கித் திகழ்கிறது ஸ்ரீ சத்ய சாயி ஜோதி! 


விஜயநகரத்தில் பஞ்சிபென்ட்டாவில் ஒரு இளம் பெண்ணுக்கு நடக்க வேண்டிய திருமணம் நிகழாமல் போய்விடுகிறது! மலர் மாலை விழ வேண்டிய கழுத்தில்... மாலை மாலையாக கண்ணீரே விழுந்து கொண்டிருக்கிறது! உடனே பாபாவுக்கு அந்தப் பெண் கடிதம் எனும்  கண்ணீர் எழுதுகிறார்! 

தரிசனத்தில் பாபா அந்தப் பெண்ணின் ஊர்க்காரர் இருவரை அழைத்து "அந்தப் பெண்ணின் திருமணம் நிற்கவில்லை.. அது நடக்கும்! நானே திருமணத்தில் கலந்து கொண்டு ஆசீர்வதிப்பேன்!" என்கிறார்!

அன்று திருமணநாள்! பாபா வரவில்லை.. "சொன்னாரே வரவில்லையே?!" என்று அங்கலாய்க்கின்றனர்... திருமண வீடியோ பதிவு வருகிறது.. பாபா அந்த வீடியோவில் அவர்கள் கல்யாணத்திற்கு வந்தது... அவர்களை அட்சதை தூவி ஆசீர்வதித்ததெல்லாம் பதிவானதில் ஆச்சர்யத்தில்  ஸ்தம்பித்தே (உறைந்து) போகிறார்கள் ஊர்மக்கள்!


ஒருமுறை "நிலா மனிதன் எங்கே?" என்று பாபா கேட்கிறார்! உடனே நீல் ஆம்ஸ்ட்ராங் பாபாவின் நேர்காணல் அறைக்கு வருகிறார்... "பங்காரு! நீ அந்த நிலாவில் என்ன பார்த்தாய்?" என்று கேட்க... "சுவாமி! அங்கே மணலையும் பாறைகளையும் தவிர என்ன இருக்கிறது?" என்கிறார் அந்த நிலா மனிதர்!

"இல்லை இல்லை நீ என்ன பார்த்தாய் என்று தான் உன்னைக் கேட்கிறேன்!"

அதற்கு உடனே "சுவாமி ! உங்கள் புட்டபர்த்தியில் நடப்பதை விடவா அந்த நிலாவில் அற்புதங்கள் இருக்கிறது? உங்களை விடவா ஒரு அற்புதம் இருக்கிறது! அப்படி அந்த நிலவில் பொருட் பொதிந்தாய் ஒன்றுமே இல்லை சுவாமி!" என்று இதயம் திறக்கிறார் நீல் ஆம்ஸ்ட்ராங்...

அப்போது அந்த நிலா மனிதர் முன் பிரபஞ்ச இறைவன் ஒரு அர்த்தப் புன்னகை உதிர்க்கிறார்!


(Source : Sri Krishna - Sri Sathya Sai | Page No: 77 - 82 | Author : Dr. J. Suman Babu ) 


வயல்வெளியில் கால் வைப்பவர் முதல் நிலாவில் கால் வைப்பவர் வரை பாபாவின் மகிமையை உணராதவர்களே இல்லை! பாபாவே இறைவன் என உணர்ந்தவர்கள் கொடுத்து வைத்தவர்கள்... அவர்கள் துயர உயரத்திலோ பழிபாவ பள்ளத்திலோ சிக்காமல் முக்தி எனும் சமநிலையில் கலந்து போகிறார்கள்! யுகமே மாறிக் கொண்டிருந்தாலும் இறைவனின் மகிமையை உணர்கிற போது வெளிப்படும் மொழி மாறலாம் ஆனால் உணர்வும் கருத்தும் என்றும் ஒன்றாகவே திகழ்கிறது!


  பக்தியுடன் 

வைரபாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக