தலைப்பு

புதன், 16 அக்டோபர், 2019

கர்மா என்றால் என்ன? - சுவாமி கூறிய அற்புதமான கதை


ஒரு அரசன் தனது ராஜ்யத்தை, யானை மீது அமர்ந்த வண்ணம் சுற்றி வந்தான். சந்தையில் வந்து கொண்டிருக்கும் பொழுது, ஒரு கடையின் முன்பு நின்று தனது மந்திரியிடம், "ஏனோ தெரியவில்லை, இந்த கடையின் சொந்தக்காரனை தூக்கிலிட வேண்டுமென தோன்றுகிறது" என்றான். 'ஏன்' என்று மந்திரி  கேட்பதற்கு முன்பாக அரசன் கடையை விட்டு நகர்ந்து செல்ல ஆரம்பித்துவிட்டான்.

மறுநாள் மந்திரி ஒரு சாதாரண பிரஜை போல் உடையணிந்து அதே கடைக்காரனை போய் பார்த்தார். "வியாபாரம் எல்லாம் எப்படி போய்க்கொண்டிருக்கிறது?" என சாதாரணமாக வினவ, கடைக்காரன் மிகுந்த வருத்தத்துடன், நான் இந்த சந்தன மரக்கட்டைகளை விற்க முடிவதே இல்லை மக்கள் வந்து, இவற்றை எடுத்து முகர்ந்து பார்த்துவிட்டு நகர்ந்து சென்று விடுகிறார்கள். "மிக அற்புதமான மணம் என்று புகழ்வதோடு சரி" என்று கூறினான்.

வாடிக்கையாளர்களே இல்லை என்றும், அந்த ஊரின் அரசன் இறந்தால் மட்டுமே தனது சந்தனக் கட்டைகளை மக்கள் வாங்கிச் சென்று, அரசனது ஈமக்கிரியைகளுக்கு பயன்படுத்தக்கூடும் என்றும், அதற்காக, அரசன் சீக்கிரம் இறந்தால் தேவலாம், என்றான்.

இப்பொழுது மந்திரி, முதல்நாள் ஏன் அரசர் தன்னிடம், இவனை தூக்கிலிட வேண்டும் என கூறினார், என்பதை யூகித்து விட்டார்.  அந்த கடைக்காரனின் எதிர்மறை எண்ண ஓட்டங்கள், மிக நுண்ணிய முறையில் அரசனை பாதித்துவிட்டது. எனவே அதே  எதிர்மறை எண்ணம் கடைக்காரன் பால் அரசனுக்கு தோன்றிவிட்டது.!'

மந்திரி மிகவும் நல்லவர். அதனால் சற்றுநேரம் இவ்விஷயத்தை மனதிற்குள் அலசி ஆராய்ந்தார். பிறகு, தான் யாரென்று காட்டிக்கொள்ளாமல், தனக்கு கொஞ்சம் சந்தன கட்டைகள் வேண்டும் என்று விலை கொடுத்து வாங்கி, பரிசுப்பொருள் போல் அழகாக மேல் உறையுடன் சுற்றி வாங்கிக்கொண்டார். கடைக்காரனுக்கு வியாபாரம் நடந்ததில் மகிழ்ச்சி.

மந்திரி அரண்மனைக்குச் சென்று, அந்த சந்தனகட்டை வியாபாரி அரசனுக்கு பரிசாக சில சந்தன கட்டைகளை அனுப்பியுள்ளதாக கூறினார். அரசர் ஆச்சரியமுற்று அவற்றைப் பிரித்துப் பார்த்து, அதன் தங்க நிறம், மணம், இவற்றை மிகவும் ரசித்தார். அந்த வியாபாரிக்கு சில பொற்காசுகளை அனுப்பிவைத்தார். அரசன், தன் மனதில் எழுந்த, கடைக்காரனை தூக்கிலிட நினைத்த, அந்த எண்ணத்திற்கு வருந்தினான்.

கடைக்காரனும், அரசன் அனுப்பிய பொற்காசுகளை பெற்றுக் கொண்டதும் மகிழ்ந்தான். அவன் அரசனின் புகழை பாட ஆரம்பித்துவிட்டான். அந்தப் பொற்காசுகள் தன் குடும்ப நிலையை உயர்த்த போவதை எண்ணி மகிழ்ந்தான். தனக்கு வியாபாரம் ஆக வேண்டும் என்பதற்காக 'அரசன்' இறக்க வேண்டும் என்று நினைத்தோமே, என்று நினைத்து வருந்தினான்.

நாம் மற்றவர் நன்றாக இருக்க வேண்டும், என்று நினைத்தால் அந்த நேர்மறை எண்ணம் நமக்கு திரும்பி வரும். ஆனால் மற்றவருக்கு கெடுதல் நினைத்தால், நமக்கும் கெட்டதே திரும்பி வரும்.

"கர்மா என்றால் என்ன?" என ஸ்வாமி கேட்க, பலரும், " வார்த்தைகள், செயல்கள், உணர்வுகள் நமது செயல்பாடுகள்" என பலவாறாக பதில் கூறினர்.

சுவாமி, அவையெல்லாம் இல்லை எனக்கூறி " உங்களது எண்ணங்களே உங்களது கர்மா", என்றார்.

ஆதாரம்: https://www.theprasanthireporter.org/category/storytime-with-baba/

மொழிபெயர்ப்பு: திருமதி. ஜெயா பாலசுப்பிரமணியம், போரூர் சமிதி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக