தலைப்பு

செவ்வாய், 8 நவம்பர், 2022

எங்கள் உடைமைகளைப் பற்றி நீங்கள் சொல்லும் போது "Less Luggage More Comfort" என்று சொல்கிறீர்கள்... விளக்க முடியுமா?

உடைமைகள் நம்மை உலகத்துடனேயே கட்டிப் போடுபவை. அவற்றின் கனம் நம்மை அழுத்திக் கொண்டிருந்தால் நாம் எப்படி விண்ணுலகத்திற்குப் பறக்க முடியும்? 

ஆயினும் கர்மா நீங்கும் வரையில் உலகத்தில் இருந்துதானாக வேண்டும்! அவசியமான சில உடைமைகள் இல்லாமல் உலக வாழ்வு நடக்க முடியாது! எனவே வாழ்க்கைக்கு எவ்வளவுதான் அத்தியாவசியமோ அவ்வளவு உடைமைகள் வைத்துக் கொண்டு ஜீவனம் நடத்துங்கள்! அப்போதும் கூட "இந்த உடைமைகள் நம்முடையவை" என்கிற மமகார பாசத்தை அவற்றிடம் வைத்து , அந்தப் பாசத்தால் கட்டுண்டு விடாதீர்கள்! பொதுச் சொத்தை ஒரு தர்மகர்த்தா தனது அல்ல என்ற உணர்வுடன் நிர்வாகம் செய்வது போலவே நீங்கள் எல்லா உடைமைகளையும் கையாளுங்கள்! 

உயர்ந்த துறவற எண்ணமும், இன்ப துன்பம் கருதா நிலையும் வருகிறவரை உடைமையை அத்தியாவசியத்துக்கும் குறைத்துக் கொண்டால் சகிக்க முடியாத கஷ்டமாகத்தான் இருக்கும், ஆயினும் அவசியத்தை விடவும் சற்று அதிகமாகச் சேர்த்துக் கொண்டாலும் அதிலிருந்து சபலமும் மேலும் மேலும் ஈட்டும் வேட்கையும் தோன்றிவிடும்! 

ஒரு செருப்பு சரியான அளவுக்குச் சற்று குறைந்தாலும் கடிக்கிறது... அளவு சற்று அதிகமானாலும் டப் டப் என அடித்து நடப்பதற்கு சிரமம் ஏற்படுகிறது! 

எப்படி சரியான 'சைஸ்' பார்த்துச் செருப்பு வாங்குகிறோமோ அப்படியே அவசியமான உடைமையைக் கறாராக உரிய அளவில் மட்டுமே கொள்ள வேண்டும்!

ஆசையினாலே தான் உடைமைகளைச் சேர்த்துக் கொண்டே போவது‌... ஆசைகளைக் குறைத்தாயானால் தேவையும் குறையும்; எனவே உடைமையும் குறையும்! "Less luggage , more comfort" என்றபடி ஜீவயாத்திரையை நடத்தலாம்!

உன்னுடைய அறையை மேஜையை பார்.. தேவையில்லாத பொருட்கள், நீ பல காலமாகப் பயன்படுத்தாத பொருட்கள்  எத்தனை இருக்கிறது ! இவை வேறு யாரோ உபயோகப்படுத்த.. தானும் உபயோகப்படுத்தாவிட்டால் கௌரவ குறைச்சல் என , மற்றவர்கள் மதிக்க மாட்டார்கள் என நீயும் வாங்கிக் கொண்டாய்... அவ்வளவே! பிறரை இமிடேட் செய்வது (போலச் செய்வது) ஃபாஷன் என்று அவ்வப்போது உலாவுகிறதை யோசனை செய்யாமல் பின்பற்றி அதன்படி பொருட்களை வாங்கிவிட்டு, புது பொருட்கள் வாங்கிய பிறகும் பழைய தேவையில்லாத பொருட்களில் "பழக்க அபிமானத்தால்" அதையும் பொத்திப் பொத்தி வைத்துக் கொண்டிருப்பது!

டம்பம் மற்றும் அப்- டூ- டேட்டாக (up-to-date) இருக்கிறோமென்று பெயர் வாங்க வேண்டும் என்ற அறிவற்ற அரிப்பு- என்றிப்படிப் பல காரணங்களால் பொருட்களை ஏகமாகச் சேர்த்துக் கொண்டிருக்கிறாய்! வாழ்க்கையையும் அநாவசியமாக சிக்கலாக்கிக் கொண்டிருக்கிறாய்!

இப்போது உங்களில் ஒவ்வொருவரிடமும் உள்ள உடைமைகளை விட மிகவும் குறைவாக வைத்துக் கொண்டே இருப்பது இப்போது நீங்கள் வாழ்வதை விடச் சுமையில்லாமல் சுகமாய் வாழ முடியும்! பொருள் சேரச் சேர அவற்றைப் பராமரிப்பது , ரிப்பேர் செய்வது என்று எத்தனை சுமையையும் சேர்த்துக் கொள்கிறீர்கள்! 

எங்கோ ஒரு ஹோட்டலுக்கு சென்று தங்கி அங்கு ஒரு சாதனத்தைப் பயன்படுத்திவிட்டு அது இல்லாமல் முடியவில்லை என்று தவிக்க ஆரம்பித்துவிடுகிறீர்கள்! இது ஆசாபாசத்தினால் தான்! ஆசை போக நீங்கள் வைத்திருக்கும் உடைமைகள் கையிலிருந்தும் உங்கள் மனதிலிருந்தும் விடுபட்டு இறை சிந்தனையில் நீங்கள் செலவழித்தால் அதில் கிடைக்கும் ஆனந்தத்திற்கு முன் இந்தப் பொருட்களின் சுகம் அணு அளவுக்கும் இல்லை என்பது உங்களுக்கே புரிய வரும்!


(ஆதாரம்: அறிவு அறுபது / பக்கம் : 97/ ஆசிரியர் : அமரர் ரா.கணபதி)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக