ஜோதிட சாஸ்திரப்படி கிரகங்கள் ஒரு ஜீவனின் வாழ்க்கையின் மேல் ஆதிக்கம் செலுத்துவதாகத் தோன்றினாலும்... உண்மையில் அந்த ஜீவனின் கர்மாப்படியே தான் அவனது வாழ்க்கை நடக்கிறது!
மனிதனாகவே சம்பாதித்துக் கொண்டிருக்கிற கர்மாப்படி அவன் எந்தெந்த காலத்தில் என்னென்ன சுகதுக்கங்கள் அனுபவிக்க வேண்டுமோ அவற்றை அவனுக்குக் கொடுக்கும் அதிகார புருஷர்களாகவே கிரக நாயகர்கள் உள்ளனர்!
வங்கி குமாஸ்தா பணம் தருகிறார் என்றால்... அது தனது பாக்கெட்டிலிருந்து அவர் தருவதா? உங்கள் சேமிப்பிலிருந்து தான் அவர் தருகிறார்... இப்படி கர்மாவின் சேமிப்புக் கணக்குப்படியே சுகம்-துக்கம் தரும் அதிகாரிகளாக கிரகங்களை நியமித்து தர்ம பரிபாலனம் செய்கிறான் சர்வ ஜீவ அதிகாரியான இறைவன்!
இறைவனே நியமித்த அதிகாரிகளான கிரகங்கள் இறைவனுடைய சட்டப்படி நடக்கின்றன.. இறைவன் தனது அனுகிரகத்தால் அந்த கிரக பாதிப்பை நிக்ரகம் (அழிக்க) செய்ய முடியும்... ஆயினும் இறைவன் தர்மவான் என்பதால் அவ்வாறு செய்வதில்லை! ஒருசில ஜீவனுக்கு கர்மாவிலிருந்து விமோச்சனம்(விடுதலை) தரும்போதும் கூட அந்தக் கர்மாவுக்கான பலனை தானே கிரகங்களிடம் இருந்து பெற்று அதை அனுபவித்துத் தீர்ப்பான்!
ஒருமுறை சிவனும் சக்தியும் தாங்கள் ஒன்றிணைந்து நடம் புரிய ஒரு அரங்கை ஏற்படுத்துகிறாள் சக்தி! ஆனால் அவர்கள் ஆடுகிற வேளை சனீஸ்வரர் தனது கோரப்பார்வையால் அரங்கை எரித்துவிடும்படியான கோர வேளை நெருங்குவதால் சிவன் எச்சரிக்கிறார்! சக்தியோ சனீஷ்வரன் நம் அரங்கை எரிப்பது நம் சர்வ வல்லமைக்கு இழுக்கு... அவனிடம் கேளுங்கள்... அவன் அந்த அரங்கத்தை நாம் தந்த சட்டப்பட்ட அந்த கோர நேரத்தில் எரிக்கத்தான் வேண்டுமெனில் தங்களின் உடுக்கையால் ஒரு சமிக்ஞை கொடுங்கள்... தானே எரித்துவிடுகிறேன் என்கிறாள் சக்தி!
சிவன் சனியிடம் செல்கிறார்... விபரத்தைச் சொல்கிறார்... எம்பெருமானே உங்கள் சட்டப்பட்ட தான் அரங்கை எரிக்காமல் இருப்பதற்கு நீங்கள் ஒரு உபகாரம் செய்ய வேண்டும் என சனி கோரிக்கை விடுக்க...
என்னவென சிவன் வினவ... "அரங்கில் ஆடப்போவதை இங்கே தனக்காக ஒருமுறை ஆட வேண்டும்!" என சனி வேண்டுகோள் விடுக்க... சிவனும் தனை மறந்து ஆட... உடுக்கையிலிருந்து ஒலி எழுப்பியே ஆட்டத்தைத் தொடர... அந்த உடுக்கை ஒலியைக் கேட்டு.. சிவனின் சமிக்ஞை என தாமே அரங்கை எரித்துவிடுகிறாள் சக்தி!
சிவன் வந்து பார்க்க.. அரங்கம் சாம்பலாகி இருக்க... நடந்ததை எண்ணி விசனப்படுகிறாள் சக்தி! இதனை ஆலோசனை செய்கையில் தெளிவும் பெறுகிறாள்!
"நல்லதும் தீயதும் விளைவிப்பது நவகிரகமல்ல... பரமாத்மாவே தான்! மனிதரின் கர்மாவை ஒட்டியே ஒவ்வொரு காலம், வேளை, பொழுதுகளில் இன்ன இன்ன விளைய வேண்டும் எனச் சட்டம் உருவாக்கி , அதை நிறைவேற்றும் ஒரு கருவியாக நவகிரகங்களை நியமித்திருப்பது பரமாத்மாவே தான்! கிரகங்களே சட்டப்படி செயலாற்றாமல் போனாலும் பரமாத்மாவின் தர்ம சங்கல்பப்படி விதித்த சட்டம் எவ்விதத்திலும் மனிதருக்கு நடக்க வேண்டிம அந்த சுக துக்கங்களை சாதித்துவிடும் என்பதை சக்தி உணர்கிறாள்!"
(ஆதாரம்- அறிவு அறுபது/ பக்கம்: 84-87/ ஆசிரியர் : அமரர் ரா.கணபதி)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக