தலைப்பு

ஞாயிறு, 13 நவம்பர், 2022

இல்லங்களில் நடந்த அகண்ட பஜன் அகிலத்தின் அகண்ட பஜனாக பரவிய வரலாறு!

எழுபத்தேழாம் வயதில் எடுத்தடி வைக்கும் இளைமை மாறாத இனிமை.. அகண்ட பஜன்.சிறுவர் முதல் சீனியர் வரை பக்திச் சீரிசையை இசைக்கும் ஆரோஹணம். அகில உலகும் மேற்கொள்ளும் சங்கீத சன்மார்க்க வேள்வி. இரவும் பகலும், சூரியனும் சந்திரனும் பக்தியுடன் கேட்டு பகவான் திருப்பாதம் பணியும் அற்புத ஒருநாள் திருவிழா. அல்லாவும் ஏசுவும் ராம கிருஷ்ண தேவரும் புத்த மகாவீரும் ஒன்றாகக் கலந்த, எல்லை இல்லாத சாயி பரம்பொருளின் கீர்த்திதனை உளம் உருகிப் பாடும், உலகம் கொண்டாடும் ஒற்றுமைப் பெருவிழா.


🌹இறைவன் அருளிய இசைவேள்வி:

1.பெங்களூரில் இருந்த 6 பக்தர்கள் ஒவ்வொரு வியாழன்றும் தங்கள் இல்லங்களில் சாயி பஜன்கள் நடத்திய சமயத்தில், ஓராண்டு நிறைவாக அகண்ட பஜன் ஒன்றை நடத்த, பகவானிடம் அனுமதியுடன், 1946ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் முதல் அகண்ட பஜன் துவங்கப்பட்டது.

2. முதல் அகண்ட பஜனுக்கு பகவானை வரவேண்டாம் என்ற கோரிக்கை கடிதம் அனுப்பப்பட்டது ( பகவான் வந்தால் அதிக கூட்டம் கூடி, தங்களால் அதை நிர்வகிக்க இயலாது என நினைத்தனர்)

3. கடிதம் பர்த்தியை அடையுமுன் தாம் அங்கு நேரில் வருவதாக பகவானின் தந்தி வந்தது. எல்லாம் அவன் சித்தம்.

4.அகண்டபஜன் ஏற்பாடுகளில் பகவான் தாமும் உற்சாகமாகப் பங்கு கொண்டார்.

5. ஏற்பாட்டார்கள் பயந்தபடி, பக்தர்கள் குடும்ப சகிதம் கூட்டம் கூட்டமாக அங்கு விஜயம் செய்தனர்.இதில் மைசூர், சென்னை போன்ற இடங்களிலிருந்து வந்தவர்களும்அடங்குவர்.

6. தங்கள் கனவில் பகவான் வந்து பஜன் நடக்கும் செய்தியைக் கூறியதாக பக்தர்கள் கூறினர்.

7.விநியோகம் செய்ய தயாரித்த பிரசாதமோ சிறிது, பக்தர்கள் கூட்டமோ மிகப் பெரிது. பிரசாதத்தை பிசையாமல் கைகளைப் பிசைந்த ஏற்பாட்டாளர்கள் பகவானை உரிமையுடன் உதவிக்கு அழைத்தனர்

8. பகவான் தாம் பார்த்துக் கொள்வதாகக் கூறியும், சமாதானம் ஆகாமல். சமையல் அறைக்கு பகவானை அழைத்துச் சென்று அவர் கைகளில் ஒரு தேங்காயையும் கொடுத்தனர். அதை உடைத்த பகவான் அதன் தண்ணீரை அனைத்து பிரசாத பாத்திரத்திலும் தெளித்து அக்ஷய அக்ஷய அக்ஷய என்று கூறினார்.

 9.காலை மாலை இரவு என்று அங்குள்ள பக்தர்களுக்கும், அருகிலுள்ள ஊர் மக்களுக்கும் கொடுத்தும் பிரசாதம் அக்ஷயமாக குறையாமல் நிறைந்தே இருந்தது.

10. போதும் ஸ்வாமி, எங்களால் பிரசாதம் இனிமேலும் கொடுக்க உடலில் தெம்பில்லை. ஆகவே பிரசாதம் வளர்வதை நிறுத்திவிடுங்கள் என ஏற்பாட்டாளர்கள்கெஞ்சவே, ஸ்வாமி அதற்கு செவி சாய்த்து , பிரசாத உற்பத்தியை நிறுத்தினார். 


11. இவ்வாறு 25 ஆண்டுகள் தொடர்ந்து பெங்களூரில் பக்தர்கள் இல்லத்தில் நடைபெற்றஇதுவே பிறகு, அகில உலக அகண்ட பஜனாக( Global Akanta Bhajan) , பகவானின் பிறந்தநாள் சிறப்பு நிகழ்ச்சிகளின் ஒரு அங்கமாக 1974ம் ஆண்டுமுதல், பகவானின் அருளாசிகளுடன் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

 

🌻அகண்ட ஜோதி ஜலாவோ என்று நாம் பகவானைப் பிரார்த்தித்து பாடுகிறோம். அகண்ட பஜன்களின் நாமாவளி மூலம் இந்த பேரண்டத்தில் பரவும் நேர்மறை ஒலி அலைகள், உலக அமைதி மற்றும் ஒற்றுமையே அருளட்டும் என பகவானை வேண்டிப் பணிவோமாக. ஓம் ஸ்ரீ சாயிராம்.


ஆதாரம்: http://www.sathyasai.org/events/festival/akhanda-bhajan-2017

தமிழில் தொகுத்தளித்தவர்: திரு. குஞ்சிதபாதம், நங்கநல்லூர் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக