தலைப்பு

வெள்ளி, 25 நவம்பர், 2022

இறைவனிடத்தில் எங்களுக்கு எப்படிப்பட்ட நம்பிக்கை இருக்க வேண்டும்?

பெரிதாக ஜபதவங்கள் செய்ய வேண்டியதே இல்லை! தாயாரை ஒரு குழந்தை நம்புவது போல் மிகவும் எளிமையாக , அதே சமயம் திடமாக தெய்வத்தின் மேல் நம்பிக்கையும் விசுவாசமும் வைத்துவிட்டாலே போதும்... அந்த சிரத்தையே தெய்வத்தை உங்களிடம் நேராக வரவழைத்து விடும்! தவ யோகியருக்கும் முனிவருக்கும் அவ்வளவு விரைவாக அடைய முடியாத கண்ணன் ஆயர்குல பாலகர்களுடனே ஆடிப்பாடிக் கொண்டிருந்தான்! 


ஸ்ரீ சைலத்தில் சிவராத்திரி விழா! ஆக அந்த ஊர்க்காரர்களின் உறவுக்காரர்கள் வந்திருந்த விழா காலம்! கல்யாணம் ஆன பெண்கள் தனது கணவரோடு சுவாமி தரிசனம் புரிய பிறந்த இல்லம் வந்திருந்தார்கள்! அந்த ஊரில் பாலராமன்னா என்கிற சிறுவன் விளையாட தன் சக நண்பர்களை அழைக்கிறான்...அவர்கள் யாரும் விளையாடுகிற நேரத்தில் வரவில்லை.. என்ன காரணமோ என அவர்கள் வீட்டிற்கே விசாரிக்கச் செல்கிறான்... அங்கே பேசி மகிழும் சிரிப்பொலி கேட்கிறது.. காரணம் விசாரிக்க.. எங்கள் வீட்டிற்கு தங்களது அக்காவும் மாமாவும் (அக்காவின் கணவர்) வந்திருக்கிறார்கள்.. ஆக இன்று வரமுடியாது என சொல்லி விடுகின்றனர்... ஏமாற்றம் அடைந்த பாலராமன்னா தனது வீட்டிற்கு வந்து... எனது அக்காவும் மாமாவும் எப்போது வருவார்கள்? எனக் கேட்கிறான்.. உனக்கு அக்கா இல்லையே! என தாய் தெரிவிக்க.. அதை நம்ப மறுக்கிறான்... உன் அக்காவும் மாமாவும் வெளியே வரமாட்டார்கள்‌... அவர்கள் கோவிலுக்குள் இருக்கிறார்கள்... அவர்கள் பெயர் என்ன என்று பாலராமன்னா விசாரிக்க! மல்லிகார்ஜுனர், பிரமராம்பா என தாயாரும் பெயர் சொல்லி.. நீ கோவிலுக்குள் சென்றால் பார்க்கலாம் என சமாதானம் சொல்கிறார் தாய்!

பிரமராம்பா என்பதில் பிரமரம் என்பது வண்டை குறிக்கிறது... வண்டு மலரில் தேன் எடுப்பது போல் சிவத்தேனை தன்னகத்தே தேக்கி அதில் திளைக்கும் தாய் என்பது பிரமராம்பா என்பதற்கான விளக்கம்!

உடனே அதனை முழுமையாக நம்பி, உளமாற ஏற்று கோவிலுக்குள் நுழைகிறான்... இங்கே மல்லிகார்ஜுனா பிரமராம்பா யார்? என பாலராமன்னா கேட்க.. அனைவரும் சிரிக்கிறார்.. நீ யார் ? என அங்குள்ள பக்தர்கள் கேட்க.. நான் பிரமராம்பாவின் தம்பி என மறுமொழியை பால ராமன்னா தெரிவிக்க.. இவனுக்கு ஏதோ பைத்தியம் என நினைக்கிறார்கள்!  அதோ என அவர்கள் அவனுக்கு சந்நிதானத்தை காட்ட... அனைவரையும் முட்டி மோதி ஓடிச் சென்று.. பலர் தடுத்தும் கருவறைக்குள் நுழைந்து... சிவலிங்கம் என்பதை கூட மறந்து.. மாமா என் கூடவா என இறுகிப் பிடித்துக் கொள்கிறான்... மல்லிகார்ஜுனர் மசியவில்லை.. சரி அக்காவை அழைத்தால் மாமாவும் சேர்ந்து வருவார் என நினைத்து.. தாயார் சந்நதிக்கு சென்று.. இறுகக் கட்டி அணைத்து... "அக்கா அக்கா.. என் கூட வா அக்கா" என கெஞ்சுகிறான்.. கோவில் நிர்வாகிகள் அவனை தூக்கி வெளியே வீசி எறிகிறார்கள்.. பிறகு மலை உச்சியிலிருந்து "நீங்கள் இருவரும் என் கூட வராவிட்டால்.. நான் இப்படியே குதித்துவிடுவேன்" என்று சொல்லி விழப்போக... "மச்சான்" என்று குரல் கேட்கிறது... சுவாமியும் தாயாரும் பிரசன்னமாக... இருவரையும் இரண்டு கைப்பிடித்து தனது வீட்டிற்கு மகிழ்ச்சியோடு அழைத்துப் போக.. தனது மகன் உண்மையாகவே மல்லிகார்ஜுனரையும், பிரமராம்பாவையும் அழைத்து வந்ததை நேருக்கு நேர் பார்த்து வியப்பும் ஆனந்தமும் அடைந்து அந்த இடத்திலேயே சிவஜோதியில் ஐக்கியமாகிறார்! பாலராமன்னாவும் தாயார் சிவஜோதியில் ஐக்கியமானது போலவே தன் பூதவுடலை விட்டு மல்லிகார்ஜுன பிரமராம்பா ஜோதியில் ஐக்கியமாகிறான்! அதனை ஊரார் கேள்விப்பட்டு... பரவசப்படுகின்றனர்...அன்றுமுதல் சைவ அடியார்களில் பாலராமன்னாவையும் அவனது திடமான பக்தியையும், உறுதியான  வைராக்கிய நம்பிக்கையையும் போற்றி துதித்து அவனை கொண்டாட ஆரம்பிக்கின்றனர்!


(ஆதாரம் : அறிவு அறுபது / பக்கம் : 184 / ஆசிரியர் : அமரர் ரா.கணபதி)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக