தலைப்பு

வியாழன், 24 நவம்பர், 2022

ஸ்ரீ மகரிஷி பிருகு பாபா | ஸ்ரீ சத்யசாயி அவதாரம் பற்றி மகான்கள்

சித்த புருஷர் ஒருவர் பாபாவை எவ்வாறு உணர்கிறார்... அவர் பாபாவுக்கு அளிக்கும் முக்கியத்துவம் யாது? ஏன் சித்த புருஷர்களை பாபா தன் அருகே வரவிடுவதில்லை? பாபாவிடம் நாம் எதனை பிரார்த்தனை செய்ய வேண்டும்? போன்ற பல்வேறுவிதமான கேள்விகளுக்கு விடை தரவிருக்கும் சுவாரஸ்யமான பதிவு இதோ...


இமாலயத்தில் வாழும் சித்தபுருஷர்களில் ஒருவர் ஸ்ரீ மகரிஷி பிருகுபாபா.. பல சாதுக்களை பல யோகிகளை பல தபஸ்கிளை பாரத மக்கள் பாபா என அழைப்பது வழக்கம்! பாபா எனில் தெய்வீகத் தந்தை என்பது அர்த்தம்! பிருகுபாபாவின் பக்தர்கள் அனைவரும் திரண்டு ஒரு ஆன்மீக சேவா நிறுவனம் ஆரம்பிக்கிறார்கள்... அதற்குப் பெயர் "மானவ தர்ம சங்கம்!" 40 ஆண்டுகளுக்கும் மேலே இந்த நிறுவனம் இயங்கிக் கொண்டுவருகிறது! ஒருசமயம் அந்த நிறுவனத்தின் தலைவரான பிருகுபாபாவின் பக்தர் இமாலயம் சென்று பிருகுமகராஜை தரிசிக்கிறார்... அப்போது மகராஜோ "முதலில் புட்டபர்த்தி சென்று பாபாவை தரிசனம் செய்யுங்கள்... அவரே அவதார புருஷர்... அப்படி தரிசனம் செய்த பிறகு நிறுவனத்தின் சேவையை ஆரம்பியுங்கள்!" என்கிறார்!

ஆக சித்தபுருஷரான பிருகுமகராஜ் பாபாவை அவதார புருஷர் என உணர்கிறார்! 


பாபா ஸ்ரீ நரநாராயண குகைக்கு 11 யோகியரை அனுப்புகிறார்... அதில் 9 பேர் நேபாளம் ஜனக்புரியை சேர்ந்தவர்கள்... கல்வி அறிவு மிகுந்தவர்கள்...அதில் ஒருவர் ஆசிரமத்தின் மேலாளராகவும் இருந்தவர்... ஆனால் தங்களுடைய பெயரை அவர் வெளிப்படுத்தவில்லை.. பெயரற்று அடையாளமற்று பாபாவோடு மனித ஆன்மா ஐக்கியப்படுவதே ஆன்மீகம்! ஆகையால் யோகிகள் கூட தங்கள் பெயரை வெளிப்படுத்துவதில்லை பெரும்பாலும் வெறும் காரணப் பெயர்களாகவே அவை அமைந்திருக்கும்... அந்த 11 இமய யோகிகளில் தலைமை யோகி புட்டபர்த்திக்கு வந்து போவது உண்டு.. அப்படி வந்திருக்கையில் சுவாமி மகேஷ்வரானந்தாவை பாபா தங்கச் சொல்லியிருந்தபோது அந்த தலைமை யோகியை அவர் தரிசித்து குறிப்பெடுத்து பதிவு செய்த திவ்ய திருநூலே ஸ்ரீ நரநாராயண குகை ஆசிரமம்! சுவாமி மகேஷ்வரானந்தாவை சிலர் நேரடியாகவே தரிசித்திருக்கிறார்கள்... அவரை தரிசித்த அனுபவத்தையும் அடியேனோடு பகிர்ந்திருக்கிறார்கள்! 


ஏன் சித்த புருஷர்கள் பலர் பாபாவை புட்டபர்த்தியில் தரிசிக்க பாபா இதுவரை அனுமதிக்கவில்லை எனும் ஒரு அடிப்படை கேள்வி எழுந்தபோது அதற்கான விளக்கத்தை சுவாமி மகேஷ்வரானந்தா ஒரு சம்பவத்தின் வாயிலாக தருகிறார்! 

ஒரு சமயத்தில் பாபா காலைச் சிற்றுண்டியை தனது பக்தர்களோடு எடுத்துக் கொண்டிருக்கையில் "சுவாமி உங்களுடைய அற்புதங்களும் மகிமைகளும் ஒவ்வொரு பக்தர் வீடாக நிகழ்கிறது... அவை வளர்கிறது...ஆக நாம் ஒரு சர்வ தேச கூட்டம் நிகழ்த்தி ஆன்மீக சிந்தனையாளர்களைப் பேச வைத்து.. தாங்களே "சிருஷ்டி கர்த்த பரமேஸ்வரர்" இந்த மண்ணுலகில் ஸ்ரீ சத்ய சாயி பாபாவாக அவர் அவதரித்திருக்கிறார் என உலக மக்களுக்கு அறிவிப்புவிடுத்தால் அனைவருக்கும் பயனுள்ளதாக அமையுமே!" என்கிறார் பாபாவிடம் ஒரு பக்தர்!


அதற்கு பாபா புன்னகையோடு "உங்களுடைய நோக்கம் நல்லதே! ஆனால் அதற்கான நேரம் இன்னமும் கனியவில்லை... அப்படி அறிவிப்பதற்கு முன்.. சுவாமியை அணுகுவதற்கு முன்... யாரெல்லாம் அந்த ஆன்மீக சிந்தனையாளர்கள் என்பதை சுவாமியிடம் காட்ட வேண்டும்! காலம் கனியும்... அப்போது திறந்த அறிவிப்பு நிகழும்... வருங்காலத்தில் நீங்கள் சொன்ன திருச்சம்பவம் நிகழும்... அப்போது சுவாமியினுடைய அவதார பேருணர்வு தெள்ளத்தெளிவாக அறிவிக்கப்பட்டு உலகம் முழுக்க உணர்த்தப்படும்! நீங்கள் அதுவரை பொறுமையோடு காத்திருங்கள்! எனினும் உங்களின் நண்பர்களிடம் இதைப்பற்றி நீங்கள் தெரிவிக்கலாம்!" என்கிறார் தீர்க்கமாய் பாபா! ஆகவே தான் "சித்தபுருஷர்களை பாபா தன் தேகஉருவ அருகே நெருங்கவிடுவதில்லை!" என சுவாமி மகேஷ்வரானந்தா தெளிவுப்படுத்துகிறார்! அந்த பிரேம காலம் கனிந்து கொண்டே இருக்கிறது என்பதையும் அணுஅணுவாக நம்மால் உணரமுடிகிறது!

மேலும் சுவாமி மகேஷ்வரானந்தா "நம்முடைய அக விழிகளை அகலத்திறந்து சுவாமியை உணர முற்பட வேண்டும்! ஸ்ரீ சிவ அவதாரமான ஸ்ரீசத்யசாயி பாபாவை நாம் மனிதர் போல் அணுகுவது கூடவே கூடாது! அவர் தன் பேரருளை ,பேருணர்வை,  பேரிருப்பை பெருங்கருணையோடு நம்மேல் பொழிகிறார் தனது இந்த தெய்வீகத் திருவுடம்பால்... மற்றபடி அவர் சிவ அவதாரமே!" என்று தெளிவுபடுத்தி நம் அனைவருக்கும் ஒரு கோரிக்கை வைக்கிறார் சுவாமிகள்...

"சாயி பகவான் நம்மிடம் ஏதேனும் வரம் கேள் என்றால்.. இந்த உலக விஷயங்களை ஒன்றுகூடக் கேட்காமல் சுவாமியின் கருணையையே கேட்டு அதன் மூலம் அவரிடம் திடமான பக்தியையும் நிதானமான நமது இதயத்தால் சுவாமியின் பாதங்களை தியானிக்கும் பாக்கியத்தை மட்டுமே வரமாக கேட்க வேண்டும்!" என்கிறார்! அப்படி வரம் கேட்பது மிகவும் சுலபம்... அதற்கு பாபாவின் மேல் தீராகாதல் இருந்தால் போதுமானது!


(Source: Sri SathyaSai and Yogis / Page no: 107 - 109) / Author : Jantyala Suman babu / Eng Translation : Pidatala Gopi Krishna | Reference: Mahamahimanvithudu Sathya Sai Nara Narayana guha ashram-Pg. 40- By Swami Maheshwarananda) 


"அன்பு எண்ணமாகிற போது அதுவே சத்தியம்!

அன்பு செயலாகிற போது அதுவே நன்னடத்தை

அன்பு புரிந்துகொள்கிற போது அதுவே அமைதி

அன்பு உணர்வாகிற போது அதுவே அகிம்சை" என்கிறார் பாபா...! அந்த அன்பு அந்த தூய அன்பு நமக்கு பாபாவிடம் இருக்குமானால்... அதுவே காலாகாலத்திற்கும் போதுமானது! நமது ஆன்ம மேன்மைகளை அந்த அன்பே கவனித்துக் கொள்ளும்!


  பக்தியுடன் 

வைரபாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக