தலைப்பு

செவ்வாய், 15 நவம்பர், 2022

சித்திரத்தில் விசித்திரம் காட்டிய ஸ்ரீ சத்ய சாயி சின்மயன்!

இறைவன் பாபா வேறு அவரின் திருவுருவப் படம் வேறு அல்ல என்பதை உணர்த்தும் உன்னதப் பதிவில் எங்கும் பாபா நிறைந்திருக்கிறார் எனும் பரம சத்தியத்தையும் பாடம் எடுக்கிறது இதோ... 


சுவாமி சென்னையிலிருக்கையில் ஒரு பக்தர் அவரிடம்  தம் குறை களைய வேண்டுமென பிராா்த்தித்தார். சுவாமி அவரிடம் "புட்டபர்த்தி சென்று நாம ஜபம் பண்ணு. பன்னிரண்டாம் நாள் திரும்பிவா. பிரச்சினை தீரும்" என்றார்.  "சுவாமி தாங்களே இங்கு இருக்கையில்" என்று பக்தர் சொல்லும்போது சுவாமி இடைமறித்து "நான் சொல்றதை கேளு பங்காரு" என்று தீா்மானமாக சொல்லிவிட்டார்.

பக்தர் மறுநாள் சென்னையிலிருந்து புறப்பட்டு அதற்கும் மறுநாள் புட்டபர்த்தி சோ்ந்தார். சுவாமி சொன்னபடி விடாமல் ஜபம் செய்தார். பன்னிரண்டாம் நாள் ஜபம் முடித்து மந்திரத்தில் பிரதானமாக உள்ள பாபா  படமொன்றுக்கு நெடுஞ்சாண் கிடையாக நமஸ்கரித்து எழுந்தார்.

அப்போது படத்தில்(சித்திரம்) கண்ட விநோதம்! சித்திரத்தில் திகழ்ந்த பாபா தமது வலக்கையின் இருவிரல்களை மேலே தூக்கிக் காட்டிக் கொண்டிருந்தார்!

மந்திரத்துக்கு வந்த அத்தனை பக்தர்களும் இவ்வதிசயத்தைக் கண்டனா். அத்வைத தத்துவத்தையே முடிந்த தத்துவமாக சொல்லும் பாபா ஏன் திடுமென மத்வாச்சாரியார் போல் இரட்டை விரல்களை தூக்கிக் காட்டுகிறாா் என்று புரியவில்லை. பலவித அனுமானங்கள் செய்தனர். ஒருவர் நம் பக்தரிடம், "உங்களை சுவாமி இன்னும் இரண்டு நாட்கள் இங்கேயே இருக்கச் சொல்கிறாரோ என்னவோ"என்றார். 

பக்தருக்கு புரிந்துவிட்டது! ஆம் "பன்னிரண்டாம் நாள் பாபா திரும்ப சொன்னதை இவர் பாபா கூறிய தினத்திலிருந்து பன்னிரண்டாம் நாள் என்று அா்த்தம் செய்து கொண்டுவிட்டார். அதன்பின் இவர் புட்டபர்த்தி அடையவே இரண்டு நாளாகிவிட்டது. அங்கே பத்து நாள் ஜபம் செய்துவிட்டு, இன்று புறப்பட எண்ணினார். ஆனால் பாபாவோ புட்டபர்த்தியிலேயே பன்னிரண்டு நாட்கள் தங்கி ஜபிக்க வேண்டும் என விதித்திருக்கிறார்.  அதனாலதான் இப்போது படத்தில் இருவிரலை தூக்கிக் காட்டுகிறார். 

இதை பக்தர் புரிந்துகொண்டு, "இன்னும் இருதினங்கள் இங்கேயே இருக்கிறேன் அப்பனே" என்று சொன்னதுதான் தாமதம்−அவ்வளவு பேரும் காண சித்திரக் கை கீழே இறங்கி அதன் வழக்கமான postureரில் அமைந்தது!


ஆதாரம் "ஸ்வாமி" ரா கணபதி | அத்தியாயம் 44

தமிழில் தொகுத்தளித்தவர்: திரு ஹரிஹரன் சாய்ராம், கேகே நகா் சமிதி


🌻தன் பக்தர்களை இமைப்பொழுதும் வழிகாட்ட பிரபஞ்ச இறைவன் பாபாவால் மட்டுமே முடிகிற திருச்செயல்! தான் சொல்வதை பக்தர் அப்படியே கடைபிடிக்கும் போதே மேலும் ஆழமாக வழிகாட்டுகிறார்... சந்தேகங்களை தெளிவுபடுத்துகிறார்... பாபா சொல்லிய எதையும் கடைபிடிக்காத பக்தர் எவ்வாறு பக்தராக இருக்க முடியும்? அப்படி கடைபிடிக்கிற போதே பாபாவின் திருவுருப்படமும் உயிர்ப்படைகிறது!கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக