தலைப்பு

வியாழன், 3 நவம்பர், 2022

கண்ணில் விழுந்த கல்லால் இழந்த பார்வையை மீட்டுத் தந்த விபூதி சுந்தர சுவாமி!

புறக்கண்களே உலகத்தின் சாவி... புறப்பார்வையே உலகத்தின் ஜன்னல்... அது பறிபோனால் உலகமே இருண்டு விடுகிறது... நுண்ணிய புலனாகிய கண்ணின் பார்வையை சுவாமி எவ்வாறு மீட்டளிக்கிறார் என்பதற்கான ஒரு நூதன மகிமை சுவாரஸ்யமாய் இதோ...! 


லீலாம்பாள் எனும் பெயருடைய பக்தை 70 வயது நிரம்பியவர். அவரிடம் நூலாசிரியர் உரையாடிக் கொண்டிருக்கிற போது... சுவாமியை நெகிழ்ந்தபடி "அவர் பிரத்யட்ச தெய்வம்" எனக் கூறி சிலிர்க்கிறார்... "பிரத்யட்சம்" என்பதற்கான சொற்பொருள் "எப்போதும் இயங்கிக் கொண்டிருப்பதே!" ஆம்... சுவாமி சதா சர்வ காலமும் இயங்கிக் கொண்டிருப்பவர்! உடல் அளவிலானவர் அல்ல...யுகயுகமாய் உடல் போர்வைகளை தாண்டியே செயல்படுபவர்! எப்படி ஒரே காற்று பலூன்களுக்கு உள்ளேயும் வெளியேயும் நிறைந்திருக்கிறதோ... அப்படி இப்போதும் எப்போதும் நிறைந்திருப்பவர் சுவாமி... ஆகவே தான் சுவாமி சதா தன் பக்தர்களையே கண்காணிப்பவர்... கவனிப்பவர்... காப்பாற்றிக் கரை சேர்ப்பவர்.. ஆகவே தான் சுவாமி பக்தர்களாகிய நாம் சர்வ ஜாக்கிரதையாக வாழ்க்கையில் நடந்து கொள்ள வேண்டும்...! கர்மா எனும் நிழல் இருட்டிலும் மனிதனைப் பின்தொடர்கிறது... அப்படி கண்காணிப்பவரான 'கண்' காணிப்பு சுவாமி கண் தராமல் போவாரா?! அப்படி ஒரு பிரச்சனை லீலாம்பாளின் மகனுக்கு ஏற்படுகிறது! முதலில் அவர் மகனின் வயிற்றில் கட்டி அவர்கள் மட்டபுரம் என்ற ஊரில் இருந்த போது... 'ஜிம்மி லிவர் க்யூர் ' வைத்தியம் செய்கிறார்கள்! கட்டி குணமாகியது... "என்ன குழந்தை வித்தியாசமாக பார்க்கிறானே... ?" எனக் கேட்கிறார் மருத்துவர்.. சென்னைக்கு சென்று வைத்தியம் பாருங்கள் என்கிறார்... வயிற்றில் நடந்து முடிந்த கர்மா படியேறி மெல்ல மடியேறி மகனின் கண்வழி நுழைகிறது!


சென்னை எக்மோர் கண் மருத்துவமனையில் காட்டுகிறார்கள்... 4 ஆபிரேஷன் செய்தபின் சரியாகிறது! 

பிறகு லீலாம்பாள் மகன் ஐந்தாவது படிக்கிற போது வகுப்பு தோழர்கள் பிடிக்கிற விளையாட்டுச் சண்டையில் கல் ஒன்று லீவாம்பாள் மகனின் கண்களில் பட்டு விடக் கலங்கிப் போகிறது... பார்வை மங்குகிறது... பிறகு இருள்கிறது...! அப்போது அறுவை சிகிச்சை செய்த அந்தக் கண்ணிலும் சுமாரான பார்வை தான்! கல்லால் அடிபட்ட கண்ணுக்கு இப்போது அறுவை சிகிச்சை .. அப்படியும் எந்த பயனும் இல்லை... மருத்துவமனையில் பக்கத்து படுக்கையிலிருந்து இஸ்லாமியர் ஒருவர் "நீங்கள் உடனே பையனை அழைத்துக் கொண்டு புட்டபர்த்திக்கு செல்லுங்கள்... பகவான் பாபாவை தரிசனம் செய்யுங்கள்...அவர் கண் கொடுக்கும் தெய்வம்!" என்கிறார்...

இஸ்லாமியருக்கும் சுவாமியே அல்லா...! ஒரு கிறிஸ்துவருக்கும் சுவாமியே பரமபிதா...! என்பதன் எடுத்துக்காட்டாக அந்த முகமதியர் உணர்ந்து சொன்னது பரவசம் ஏற்படுத்துகிறது... அவர்களும் புட்டபர்த்தி கிளம்புகிறார்கள்! 


லீலாம்பாள் தன் கண்ணிழந்த மகனோடும், கணவரோடும் சுவாமியை தரிசிக்கிறார்... தரிசன வரிசையில் அமர்ந்திருக்கிறார்... சுவாமி அவர்களுக்கு நேர்காணல் வழங்குகிறார்! லீலாம்பாள் சொல்வதற்கு முன்பே... சுவாமியே "கவலைப்படாதே! குழந்தைக்கு கண் சரியாகும்!" என்கிறார்... 

"எனக்கு உபதேசம் செய்ய வேண்டும் சுவாமி!" என லீலாம்பாள் கண்கலங்க... 

"என்னவகை உபதேசம் அம்மா! பகவான் நாமம் சொல்.. இராமா!கிருஷ்ணா! என எந்த நாமம் வேண்டுமானாலும் சொல்! ஆனால் ஒரே நாமத்தை உறுதியாகப் பிடித்து அதையே ஓயாமல் சொல்! அது தான் சிறந்த உபதேசம்!" என்கிறார் சுவாமி... "என் நாமத்தையே சொல்.. நான் மட்டுமே இறைவன்" என சுவாமி எப்போதும் சொன்னதே இல்லை... *"எல்லா இறை ரூபங்களும் சுவாமியே... எந்த ரூபம் பிடித்திருக்கிறதோ அதையே மனிதர்கள் வழிபடலாம்.. எல்லா வழிபாடுகளும் என்னிடமே வந்தே சேர்கிறது எனச் சொல்லும் ஒரே இறைவன் சுவாமியே!"* இறை ரூபத்தையும் இறை நாமத்தையும் மாற்றிக் கொண்டே வருவது என்பது தண்ணீர் வேண்டும் என ஒவ்வொரு இடத்திலும் கிணறுக்காக பத்து பத்து அடி தோண்டி தண்ணீரை எதிர்பார்ப்பதற்கு சமம்! எல்லாவற்றையும் ஒரே இடத்தில் தோண்டினால் தண்ணீர் வராமல் போகாது! ஆக... சர்வதேவதா அதீத ஸ்வரூபரான சுவாமியிடம் சரணாகதி அடைவதே முக்தி வழி அதுவே கீதை மொழி! லீலாம்பாளின் சுவாமி சொன்ன திருவுபதேசம் சுவாமியின் சர்வ வியாபகத்தை உணர்த்துகிறது! கலி விளிம்பில் தத்தளிக்கும் நமக்கு சுவாமி நாமமே பாதுகாப்பான கப்பல்...  சுற்றி வீசும் சூராவளிப் புயலிடம் இருந்து நம் கடல் பயணத்தை சுகப் பயணமாய் அதுவே மாற்றுகிறது!!

பின்னர் சுவாமி தனது திருக்கரத்தால் சிருஷ்டி விபூதி அளிக்க வேண்டும் என லீலாம்பாள் ஆர்வப்பட... சுவாமி உடனேயே தன் இடது கையால் வலது கையில் ஓம் என்று எழுதிவிட்டு.. கையை சுற்றுகிறார்.. அதிலிருந்து சிருஷ்டி விபூதி பெருகுகிறது... இதை தினமும் நீரில் கலந்து உன் மகனுக்கு கொடு! என்கிறார் சுவாமி! அவரும் அவ்வாறே செய்து... இருகண் பார்வையும் திரும்புகிறது! வளர்ந்து நல்லதொரு வேலையும் ஊதியமும் கிடைக்க தனது பெற்றோர்களை கண்போல் காப்பாற்றிய படி கண்கண்ட தெய்வமான சுவாமியை வழிபாடு செய்தபடி வாழ்ந்து வருகிறார் லீலாம்பாளின் மகன்! 

லீலாம்பாள் "பிரத்யட்ச தெய்வம்" என சுவாமியை பரவசப்பட்டுக் கூறியது இதனால் தான்...


(ஆதாரம் : அற்புதமும் ஆன்மீகமும் - 3 / பக்கம் : 22 / ஆசிரியர் : திருமதி சரோஜினி பழனிவேலு) 


அகக்கண்ணிலேயே ஞான ஒளி ஏற்றும் சுவாமி.. மூன்றாவது கண்ணும் ஆறாவது சக்கரமுமான ஆக்ஞாவை திறந்து மகான்களுக்கு திரிகாலத்தையும் காட்டும் சுவாமி... புறக்கண்களை குணப்படுத்துவது பெரிய விஷயமே இல்லை தான்... நோய்கள் பூர்வ கர்மாக்களின் விளைவே! சில தீய கர்மாவை அனுபவித்தே ஆக வேண்டும்.. சுவாமியிடம் நாம் பக்தியும் சரணாகதியும் அடைந்துவிட்டால் நம் கர்ம வீர்யத்தை  குறைத்து சுவாமி நலமளிக்கிறார்! அதற்கு சுவாமியே சொல்லியிருக்கிற "பொறுமையும் - நம்பிக்கையும்" நமக்கு மிகவும் அவசியம்! பொறுமையே இல்லாதவர் மனிதரே இல்லாத போது.. எங்கிருந்து பக்தராக முடியும்!?

"பொறுமையே தவம் - மனப்பக்குவமே வரம்!"


  பக்தியுடன் 

வைரபாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக