தலைப்பு

புதன், 1 நவம்பர், 2023

சுவை மிகு சமையல் பாத்திரத்தில் சாயி சிருஷ்டி கணையாழி!

எவ்வாறு அயல்நாட்டில் வசிக்கும் ஒரு பக்தைக்கு அங்கேயே தனது சிருஷ்டி மோதிரத்தை பரிசளித்தார்? பிறகு அது என்னானது ? சுவாரஸ்யமாக இதோ!

 

அவர் பெயர் திருமதி ராணா! கிழக்கு ஆப்ரிக்கா டர்பனில் வசித்து வருகிறார்! பேரிறைவன் பாபாவின் பரம பக்தை அவர்! பாபாவின் படங்களும் , இதர தெய்வங்களின் படங்களும் அவரது பூஜை அறையில் திகழ்கிறது! 

ஒரு நாள் திருமதி ராணா சமையல் செய்து கொண்டிருந்த போது திடீரென ஒரு கை வந்து அவரது கழுத்து அருகே வந்து, திருமதி ராணா சமையல் செய்து கொண்டிருக்கும் பாத்திரத்தில் எதையோ போட்டுவிட்டு அந்தக் கை மறைத்துவிடுகிறது! யார் கை? என்று திரும்பிப் பார்க்கிறார் திருப்தி ராணா , யாருமே இல்லை! சமையலில் அகப்பையை அசைக்கிற போது, அந்த மர்ம கரம் அந்தப் பாத்திரத்தில் எதையோ இட்டதை இரு கண் கொண்டு பார்க்கிறார், ஒரே ஆச்சர்யப் பரவசம்! அந்தப் பாத்திரத்தின் உள்ளே ஒரு மோதிரம்! பாபா உருவம் பதித்த மோதிரம்! திடீரென தோன்றி மறைந்த அந்த மர்மக் கை யாருடையது என்று திருமதி ராணா உணர்ந்து கொள்கிறார்! அதை  பயபக்தியோடு அணிந்து கொள்கிறார்! 


இந்த அற்புத நிகழ்வுக்குப் பிறகு திருமதி ராணா ஜோகன்ஸ்பெர்க் செல்கிறார்! அங்கு அவரது சகோதரி இல்லம்! சகோதரியை காண செல்கிறார், ஆனால் அவருக்கே அப்போது தெரியாது, அவர் சகோதரியை காண அல்ல சோதனையை காணவே செல்கிறார் என்று...!

தனது தங்கையிடம் நடந்தவற்றை யாவும் பகிர்ந்து கொள்கிறார்! "எங்கே அந்த மோதிரத்தைக் கொடு! எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்!" என்று வாங்கி தனது விரலில் அணிந்து பார்க்கிறார் தங்கை!

"அதை இங்கே கொடு!" என்று திருமதி ராணா திரும்ப கேட்ட போது அவரது தங்கை மறுக்கிறார்!

"இல்லை இல்லை தர மாட்டேன்! இதை உடனே நம்முடைய தாய் தந்தைக்கு காட்டப்படுகிறேன்!" என்று ஒரு குண்டைத் தூக்கி வீசி எறிகிறார்! பார்பர்டன் எனும் இடத்திலே இருக்கிறது அவர்களது தாய் தந்தை இல்லம்! திருமதி ராணாவோ "தனக்காக பாபா பிரத்யேகமாக தந்த மோதிரத்தை யாருக்கும் தர மாட்டேன், அதை வெளியேற விடமாட்டேன், ஆகவே திருப்பிக் கொடு!" என்று எவ்வளவோ சொல்லியும் தங்கை கேட்கவே இல்லை "நீயும் உன் பாபாவும்" என்று சிரித்துவிட்டு எடுத்துக் கொண்டு சென்றுவிடுகிறார்! 

விரலில் இருந்து பாபா மோதிரம் போனது விரலே போனது போல் ஒரு வெறுமை உணர்வு!

டர்பனில் இருந்து பார்பர்டன் 200 மைல்கள் தாண்டி இருக்கின்றன...!

இதை எப்போது திரும்பி வந்து தரப் போகிறாளோ தங்கை என்று அங்கலாய்க்கிறார் திருமதி ராணா! ஆற்றாமையில் வருந்துகிறார்! 

கண்ணீரைத் துடைத்துக் கொள்கிறார்!


அடுத்த நாள் காலை தனது இல்லமான டர்பனில் ஒரு மேஜையை திறக்கிறார்! ஒரே பரவச ஆச்சர்யம்... அந்த சிருஷ்டி கணையாழி அங்கே மர்மப் புன்னகையோடு கண் சிமிட்டுகிறது! பாபா அதை கொடுத்த போது ஏற்பட்ட பரவசத்தை விட அந்த அதே மோதிரம் மீண்டும் கிடைத்த போது அதிக அளவுக்கு ஏற்படுகிறது!

உடனே பார்பர்டன் எனும் இடத்தில் இருக்கும் தனது தங்கைக்கு தொலைபேசி செய்கிறார் திருமதி ராணா! 

"நீ என்னிடம் இருந்து எடுத்துக் சென்ற மோதிரத்தை எங்கே வைத்தாய்?" என்று கேட்கிறார்! 

தங்கையோ "அது என்னிடம் தான் இருக்கிறது , பார்பர்டனில் , அதை ஒரு மேஜைக்குள் வைத்திருக்கிறேன்!" என்கிறார்

"உடனே சென்று மோதிரம்  இருக்கிறதா என்று அதைப் பார்!" என திருப்தி ராணா தெரிவிக்க...

உடனே சென்று பார்த்த தங்கை திடுக்கிடுகிறார்! 

"அது இங்கே இல்லையே! காணாமல் போய்விட்டதே" என அதிர்ச்சியும் குழப்பமும் அடைகிறார்!

"எனக்கு தெரியும், அதை எனக்கே பாபா கொடுத்துவிட்டார்! நான் தான் முன்பே சொன்னேனே, அது பிரத்யேகமாக எனக்கே பாபா வழங்கிய மோதிரம், அதை எடுத்துச் செல்லாதே என்று... கேட்டாயா?" என்று திருமதி ராணா தெரிவிக்க...

அதை மட்டுமா தங்கை கேட்டார், பாபா தனது பக்தர்களுக்காக எதையும் செய்ய வல்லவர் என்பதையும் சேர்த்தே ராணா சொல்லாத மொழியையும் சேர்த்தே கீதை மொழி கேட்கிறார் தங்கை! என்றும் சொல்லாத சொல்லுக்கு விலையேதும் இல்லை! பாபா செய்து வருகிற வியப்புக்கு அளவேதும் இல்லை!


(Source : Miracles of Divine Love | Volume -1 | Page : 22 - 23 | Compiled by - p.gurumoorthi ) 


எல்லோரும் நாமே! எல்லாம் ஒரே ஆன்மாவே! சிருஷ்டி பொருள் அல்ல பாபாவின் கருணையே பிரதானம்! யாருக்கு பாபா அனுகிரகம் செய்தாலும் அதைப் பார்த்து நாம் மகிழ்ச்சியே அடைய வேண்டும்! நம் தெருவில் பொழியாமல் பக்கத்துத் தெருவில் பொழிந்தாலும் கூட மழையைப் பார்ப்பதே சுகம்! அந்த தூரத்து மழையில் இருந்து கூட நமக்கு குளிர் காற்று வீசவே செய்கிறது! அது போல் தான் பாபாவின் அற்புத மகிமைகளும்...!


  பக்தியுடன் 

வைரபாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக