தலைப்பு

புதன், 29 நவம்பர், 2023

திருமதி. கருணாம்பா ராமமூர்த்தி | புண்ணியாத்மாக்கள்

பகவான் ஸ்ரீ சத்யசாயி பாபா தனது 14வது வயதில், அதாவது 1940ம் ஆண்டு தன்னுடைய அவதாரத் தன்மையை பிரகடனம் செய்தார். அப்போதிருந்தே  படிப்படியாக  பல நூற்றுக்கணக்கான மனிதர்கள் சுவாமியைத்  தேடிவந்து… அவரை நெருங்கிப் பழகும் பாக்கியமும் பெற்றனர். அவர்கள் அனைவருமே... "பரமாத்மாவே மனிதவடிவெடுத்து வந்துள்ள இந்தத் தருணம் மனித குலத்துக்கே முக்கியமானதென்று உணர்ந்து ஒவ்வொரு கணத்தையும் ஆழ்ந்த ஆன்மீக விசாரணையில் செல்வழித்தனரா?" என்று கேட்டால்… பெரும்பாலும் இல்லை! எனலாம். ஏனென்றால் சுவாமியின் பால்ய மற்றும் இளமைக் காலங்களில் சுவாமியை நெருங்கிப் பழகும் அதிர்ஷ்டம் படைத்தவர்கள் பெரும்பாலும் பிருந்தாவனத்தின் பாலகிருஷ்ணனாகவே அவரைக் கருதி, அவரின் லீலைகளை அனுபவிப்பதிலேயே ஆர்வம் செலுத்தி மகிழ்ந்தனர். அதோடு பலருக்கு, சுவாமியும் கூட… தன்னுடைய முழுமையான இறைத் தன்மையை படிப்படியாகவே உணர்த்தி வந்தார் என்பதை நாமும் கூட அறிந்துணரலாம்.


 பாபாவின் கோடிக்கணக்கான பக்தர்களில் ஒரு சிலருக்கு மட்டுமே சுவாமியின் ஸ்தூல அருகாமை அமையப் பெற்றதோடு… தெய்வீக ரகசியங்கள் பலவும் வெளிப்படுத்தப் பட்டன. மைசூரைச் சேர்ந்த  திருமதி. கருணாம்பா ராமமூர்த்தி (கண்ணம்மா) அந்த அரிதான சில புண்ணியாத்மாக்களில் ஒருவர். உண்மையைச் சொல்வதானால் அவரது தாயார் திருமதி. நாமகிரியம்மா தான் இவ்விஷயத்தில் அந்தக் குடும்பத்தின் முன்னோடி; சர்வசத்தியமாக அவரும்  ஒரு மாபெரும் புண்ணியாத்மா என்பதில் ஐயமில்லை; 1946ம் ஆண்டு முதல் சுவாமியின் தெய்வீக அணுக்கத்தைப் பெற்றிருந்த அவருடைய அனுபவங்கள் எண்ணிலடங்காதது. எனினும் அவரது மகள் கண்ணம்மாவே தனது டைரிக் குறிப்புகள் மூலம், சுவாமியுடனான தங்கள் தெய்வீக அனுபவங்களை உலகறியச் செய்தார்.
 








🌷முதல்வனின் முதல் சந்திப்பு:
 
திருமதி கருணாம்பாவும் அவரது கணவர் திரு N ராமமூர்த்தியும், 1944ம் ஆண்டு ஒரு நாள் கர்நாடகாவின் ஹுப்லியில் இருந்து குண்டக்கல் வழியாக தங்கள் சொந்த ஊரான மைசூருக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர் . வழியில்  ஏதோ ஒரு ஸ்டேஷனில் ரயிலின் பின்பகுதியில் உள்ள ஒரு பெட்டியை நோக்கி மக்கள் கூட்டமாக விரைந்து செல்வதைக் கண்டார்கள். விசாரித்ததில், அதே ரயிலில் மகிமைகள் நிறைந்த... அதிசயங்களைச் செய்யக்கூடிய ஒரு சிறுவன் பயணிப்பதாக கூறினர். திருமதி. கருணாம்பாவும் தனது  கணவரிடம், "நீங்களும் போய் என்னவென்று  பார்த்து வாருங்கள்!" என்று கூறினார். அவர் திரும்பி வந்து, அந்த பெட்டியில் சாதாரணமாக சட்டை மற்றும் ஷார்ட்ஸ் அணிந்த ஒரு சிறு பையன் இருப்பதாக கூறினார். மேலும் அவருடைய பெயர் "புட்டபர்த்தியின் சத்யம்" என்று கேள்விப்பட்டதாக கூறினார்.  கருணாம்பாவுக்கும் அந்த அதிசயப் பிறவியைப்  பார்க்க வேண்டும் என்ற ஆவல் இருந்தாலும் அந்தப் பயணத்தில் அது நிறைவேறவில்லை. பின்னாளில் தங்கள் வாழ்க்கையின் மையப்புள்ளியாகவே ஆகப்போகும் பரமாத்மாவின் மனிதவடிவம் தான்  அவர் என்ற பேருண்மையை அப்போது அவர்கள் அறிந்திருக்கவில்லை.
 
 
அது நடந்து ஏறத்தாழ இரண்டு வருடங்கள் கழிந்து ஒருநாள், திருமதி. கருணாம்பாவிற்கு அவருடைய அத்தை மகன் திரு.பாலசுப்ரமண்யம் பின்வருமாறு ஒரு கடிதம் அனுப்பினார். "கண்ணம்மா நாம் சிறுவயதில் ராமகிருஷ்ண பரமஹம்சரின் சரிதத்தை படிக்கும்போது... அவர் வாழ்ந்த காலத்தில் நாம் இல்லையே என்று வருத்தப் பட்டோமே! நினைவிருக்கிறதா? அதே மஹாத்மா மறுபடியும் வந்திருக்கிறார்! அவரை தரிசனம் செய்யவேண்டுமானால் உடனே பெங்களூருக்கு கிளம்பி வாருங்கள்!". கடிதத்தை வாசித்து ஆனந்தமும் ஆச்சர்யமும் அடைந்த அவர்கள் உடனே பெங்களூருக்கு கிளம்பிச் சென்றார்கள். அங்கு ஒரு பக்தரின் வீட்டில் தங்கியிருந்த சுவாமி இவர்கள் சென்ற முதல் நாளே மொத்த குடும்பத்திற்குமான பிரத்யேக சந்திப்பை அனுக்ரஹித்தார். திருமதி நாமகிரியம்மா ஏற்கனவே ஒரு ஆன்மீக குருவிடம் மந்திரோபதேசம் பெற்று சரியாகப் பாராயணம் செய்துவரும் தனிப்பட்ட விஷயத்தை சுவாமி  வெளிப்படுத்தியதோடு அதைக் குறித்த தனது பாராட்டுக்களையும் ஆசிகளையும் தெரிவித்தார். மேலும் "உங்களுக்கு என்ன வேண்டும்?" என்ற சுவாமியின் வார்த்தைகளையே நல்வரமாக உணர்ந்து, "எங்களுக்கு உங்கள் கருணையே வேண்டும்... வேறெதுவும் தேவை இல்லை!" என்றனர். உண்மையான பக்தர்களிடம் இருந்து மட்டுமே வரக்கூடிய வார்த்தைகள் இவை... என்று பரமாத்மாவாகிய சாயி நன்கு அறிவார் அல்லவா! எனவே அவர்களை புட்டபர்த்திக்கு வருமாறு அழைப்பு விடுத்தார்.
 
 
🌷பர்த்திவாசருடன் பவித்ரவாசம்:
 
1946ம் ஆண்டு... புட்டபர்த்தியில் பழைய மந்திரம் முழுமை பெறாத கட்டிடமாக  இருந்த சமயம் அது. வசதி படைத்த மைசூர் நகரிலிருந்து குக்கிராமமான புட்டபர்த்திக்கு திருமதி.நாமகிரியம்மாவும் அவருடைய நாத்தனாரும் ( கணவரின் சகோதரி) சென்றனர். ஒரு மாநகரத்தின் அடிப்படை வசதிகள் என்னவெல்லாம் என்பது கூட அன்றைய புட்டபர்த்தி வாசிகளுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லாத சூழ்நிலை. திருமதி. நாமகிரியம்மா (கண்ணம்மாவின் தயார்) ஆச்சார அநுஷ்டானங்களில் அதீத நம்பிக்கை உடையவராதலால்... வேணுகோபால சுவாமி கோவிலின் அருகே இருந்த நிலத்தில் அடுப்பமைத்து சமையல் செய்து கொள்ள ஏற்பாடாகியது.  நாமகிரியம்மா சுவாமியிடம் சென்று, "நாங்கள் சமையல் செய்துள்ளோம். உங்களுக்கும் கொண்டு வந்தால் சாப்பிடுவீர்களா?"  என்று கேட்டார். "ஓ சாப்பிடுவேனே!" என்றார் சுவாமி.


மகிழ்ச்சியுடன் உணவை மந்திருக்குக் கொண்டு போய் சுவாமிக்குப் பரிமாறும் வேளையில்... சுவாமி, "நீ சென்ற ஆண்டு ஒரு புனித ஸ்தலத்திற்கு சென்று மந்திரோபதேசம் பெற்றுக் கொண்டாயே அதையே தொடர்ந்து செய்துவா! உனக்கு என்னிடமிருந்து உபதேசம் பெறவேண்டுமென்ற எண்ணமிருந்தால்... அதே மந்திரத்தில் ‘சாயி’ என்பதை சேர்த்துக்கொள்” என்றார். சத்யசாயி என்கிற இந்த ப்ரத்யக்ஷ தெய்வத்தை அறிந்துகொண்டதோடு நேரில் வந்து அனுபவிக்கும் பாக்கியமும் பெற்றுவிட்டோமே! இனியும் நாம் பெற்ற பழைய மந்திரோபதேசத்தைத் தொடர்வது சரியா? அல்லது இந்த சாயி தெய்வத்திடம் புதிய உபதேசத்தைப் பெற வேண்டுமா? என்று தனக்குள் நடந்துகொண்டிருந்த சம்பாஷணைகளுக்கு... கேட்காமலேயே சுவாமி விடையளித்த அந்த சம்பவம் நாமகிரியம்மாவை ஆனந்தத்தில் ஆழ்த்தியது. அதன் பின்னர் தனது மொத்த குடும்பத்தினரையும் புட்டபர்த்திக்கு அழைத்துச் சென்றார் நாமகிரியம்மா. அந்த வகையில் புட்டபர்த்திக்கு வந்து சேர்ந்தார் கருணாம்பா ராமமூர்த்தி (கண்ணம்மா).
 
ஒரு சாமான்யர், சொந்த பந்தகளுக்கு மத்தியில் அமர்ந்து பேசுவது போல சுவாமி...  பக்தர்கள் மத்தியில் அமர்ந்து பேசுவது, விளையாடுவது, பாடிக்கொண்டே பாதபூஜை செய்ய அனுமதிப்பது, சமையல்  செய்து சுவாமிக்கென கொண்டு வருபவர்களிடம் ஆசையாகப் பேசி அவர்களின் பண்டங்களை சுவீகரிப்பது, பிரதிதினமும் தவறாமல் மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை சித்ராவதி நதிக்கறைக்குச் சென்று மணலில் கூட்டமாக உட்கார்ந்து அளவளாவி மகிழ்வது, பட்டியலிட்டு மாளா மகிமைகளை நிகழ்த்திக் காட்டுவது…  என்று பின்னாட்களில் நினைத்துக் கூட பார்க்கமுடியாத அளவு அணுக்கத்தை அனுபவித்து மகிழ்ந்தார் கண்ணம்மா.
 
 
🌷பகவான் ரமணரின் பரமாத்மா:
 
பழைய மந்திரத்தில் கண்ணம்மாவின் தாயார் நாமகிரியம்மாவுக்கு ஒரு சிறிய அறை சமைப்பதற்கென ஒதுக்கிக் கொடுக்கப்பட்டது. ஒருமுறை திருவாண்ணாமலை ஸ்ரீ ரமணாஸ்ரமத்தைச் சேர்ந்த சிலர் மாலை 6 மணி அளவில் புட்டபர்த்திக்கு வந்து சேர்ந்தனர்.  மின்சாரத்தின் சுவடு கூட இல்லாத அன்றைய காலகட்டத்தில்... அங்கொன்றும் இன்கொன்றுமாக மண்ணெண்ணை விளக்குகள் மினுக்கும் கிராமம் தானே அன்றைய புட்டபர்த்தி. எனவே வந்து சேர்ந்த தமிழர்கள்... வெளிச்சமும் இல்லாமல்... அவர்களுக்கு அங்கிருப்போர்  விளக்கிச் சொல்லும் தெலுங்கும் புரியாமல்... தமிழ் தெரிந்தவர்கள் யாராவது இருக்கிறார்களா? என வினவினர். நாமகிரியம்மாவுக்குத் தமிழ் தெரியும் என்பதால் அவரை வந்து சந்தித்தனர்; அவர்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்த நாமகிரியம்மா... அவர்கள் எங்கிருந்து என்ன விஷயமாக வந்தார்கள் என்பது குறித்து கேட்டார். அப்போது அவர்கள் சொன்ன பதில் அன்றைக்கும் இன்றைக்கும் மட்டுமல்லாமல் என்றைக்குமே மனித இனம் மறக்கக் கூடாத பதிலாக இருந்தது.

அவர்கள் பகவான் ஸ்ரீ ரமணரின் சீடர்கள்; ஸ்ரீ ரமணரின் ஸ்தூல சரீரம் நோயுற்ற அந்த சமயத்தில்.... இந்த குறிப்பிட்ட சில சீடர்களிடம், "இங்கே எதற்கு வந்தீர்கள்? இங்கு எல்லாம் முடிந்து விட்டது! இறைவன் ஆந்திராவில் ஒரு சிறிய கிராமத்தில் அவதரித்துள்ளான்! அங்கு சென்று அவனுடைய தரிசனத்தைப் பெறுங்கள்" என்றார்.  அதைக்கேட்ட நாமகிரியம்மா, " ஓ அப்படியா? இங்கு வந்து என்ன செய்யச்சொன்னார் உங்கள் குரு? "என்று கேட்டார். அதற்கு ரமண பகவான் சொல்லி அனுப்பியிருந்த பதில், "அங்கே நீங்கள் எதுவும் செய்யத் தேவையில்லை. அவருடன் இருங்கள், அங்கு பஜனைகள் செய்யுங்கள் அதுவே போதும்!" என்றனர்.
 
 
🌷கோரிக்கை பக்தர்கள் அல்ல!
 
சுவாமியின் முன்னிலையில், ஒருமுறை கருணாம்பா அழுது கொண்டிருந்த தனது மகனுக்கு வாழைப்பழம் கொடுத்து சமாதானம் செய்தார்.  அதைப் பார்த்த சுவாமி, "இதைப் போலவே தான் நானும்... நீங்கள் அழும்போது உங்களை சமாதானம் செய்ய ஏதாவது கொடுத்து சமாளிக்கிறேன்!" என்று கூறி சிரித்தார்.  சுவாமியிடம் யாரோ ஒரு மூத்த பெண்மணி... கருணாம்பாவின் குடும்பத்தைக் குறித்து சுவாமியிடம், ‘சுவாமி இந்தக் குடும்பத்தினர் உங்கள் மீது இவ்வளவு பக்தியுடன் மைசூரிலிருந்த வருகிறார்களே! அவர்களுக்கு ஏதாவது கொடுக்கக் கூடாதா?’ என்று சிபாரிசு செய்தார். அதற்கு சுவாமி, "இல்லை அம்மா அவசியமில்லை! அவர்கள் மற்றவர்களைப் போல... 'கோரிக்கை பக்தர்கள்' அல்ல ! எதையும் எதிர்பார்காதவர்கள்!” என்றார். ஆனால் வரத்திலெல்லாம் பெருவரமாக... அன்று சாயங்காலமே கருணாம்பாவின் இல்லத்திற்கு செல்லப்போவதாக அறிவித்த சுவாமி, அதற்கான ஏற்பாடுகளைச் செய்யச் சொன்னார் .

 
அன்று மாலை ஏழுமணியளவில்... பெருமழை கொட்டித் தீர்த்துக் கொண்டிருந்தது. அந்தப் பெருமழையில் சுவாமி வருவது சிரமம் என்று எண்ணமிட்டு கருணாம்பாவின் சித்தப்பா மனம் தளர்ச்சியுற்று மெல்ல வெளியே நடந்து பக்கத்து வீட்டிற்குச் சென்று பேசிக்கொண்டிருந்தார். ஆனால், கொடுத்த வாக்கை தவறால் காக்கும் ஸ்ரீ சாயிராமர், தமது வாக்கின்படி சாகம்மாவின் காரில் இவர்களின் வீடு வந்து சேர்ந்தார். சொன்னபடி வந்துசேர்ந்ததோடு... நம்பிக்கை தளர்ச்சியுற்று வெளியே சென்ற ( கருணாம்பாவின்) சித்தப்பா திரும்பி வந்தவுடன், "என்ன? எங்கு சென்றாய்? உனக்காக நான் காத்துக் கொண்டிருக்கும்படி செய்துவிட்டாயே!" என்று செல்லமாகக் கூறி மகிழ்வித்தார்!.
 
கருணாம்பாவின் 90 வயது தாத்தா நாகேஸ்வரய்யா, பரம்பொருளே அவர்களின் வீட்டிற்கு நேரடியாக வருகை தந்ததை எண்ணி எண்ணி உளம் நெகிழ்ந்து போனார்.  ‘சுவாமி எனக்கு எதுவும் வேண்டாம். உங்கள் பாதங்களைக் கழுவி சிறிது நீரை எடுத்துக் கொள்கிறேன், நீங்கள் அனுமதிக்க வேண்டும்’ என்றார். பொருட்களோ, சக்தியோ, முக்தியோ கோரிப் பிரார்த்திக்காமல் அந்த முதிய பக்தர்... சுவாமியின் பாததூளிகளையே வரமாகக் கேட்டார்.  அப்படிப்பட்ட உதாரண பக்தராக இருந்ததினால் தான்... அவரின் வாரிசுகளும் பக்த சிரோன்மணிகளாகத் திகழ்நதனர் போலும். அவருடைய அன்பு வேண்டுதலுக்கு சுவாமியும் கருணையுடன் சம்மதித்தார்.
 
மேலும் அவர்கள் படைத்த போண்டா காபி முதலானவைகளை அன்போடு உண்டுமகிழ்ந்த சுவாமி, "ஹ்ம்ம்..  நீங்கள் சுவாமியின் வாக்கியங்களைப் பின்பற்றி இதேபோல் வாழுங்கள்! நானும் இப்படியே வந்துபோய்க் கொண்டு இருப்பேன்!” என்று தெய்வீக வரமருளினார். இந்த நிகழ்வின் மூலம்.... கோரிக்கைகளற்ற பக்தர்களின் இல்லத்திலும் இதயத்திலும் குடிகொள்ளும் பெருந்தெய்வம் ஸ்ரீ சத்யசாயி என்பதை உறுதிசெய்தார்.
 
ஒரு முறை பழைய மந்திரத்தின் வெளியே நின்றுகொண்டு.... கருணாம்பாவும் அவரது சகோதரியும் ஒரு ஜன்னல் வழியாக சுவாமியைப் பார்த்துக்கொண்டிருந்தனர். அவர்களைக் கவனித்த சுவாமி, "எங்கிருந்து வருகிறீர்கள்?" என்று புன்னகையுடன் வினவினார். இவர்களோ, ‘சுவாமி நாங்கள் மைசூரில் இருந்து வருகிறோம்’ என்றனர். "எங்கிருந்து?” என்றார் சுவாமி. இவர்களும் ‘சுவாமி, மைசூரிலிருந்து!’ என மீண்டும் சொல்ல... "எங்கிருந்து?" என்றார் மீண்டும் சுவாமி. ‘மைசூரிலிருந்து வருகிறோம் சுவாமி!’ என்று மறுபடியும் பதில்வர, சுவாமி, "மைசூரிலிருந்து வருகிறோம் என்று சொல்லாதீர்கள்! நாங்கள் புட்டபர்த்திக்காரர்கள்  என்று சொல்லுங்கள்! நீங்கள் மைசூர்காரர்கள் அல்ல... புட்டபர்த்திக்காரர்கள்!" இந்த வார்த்தைகளைக் கேட்டு ஆனந்தத்தில் பூரித்துப் போனார்கள் கருணாம்பாவின் குடும்பத்தினர்.
 

 

 




🌷பேரிறைவனின் பெரிய நாடகம்:
 
இறைவனென்றால் இப்படித்தான் இருக்கவேண்டும் என்று மனிதன் கட்டும் கற்பனை வட்டத்துள் அவதாரங்கள் செயல்படுவதில்லை. ஸ்ரீ சத்யசாயி என்கின்ற பூர்ணாவதாரம் தான் முன்பே வகுத்த இயற்கை நீதிகளுக்கு விரோதமாக அல்லாமல் தன்னைப் படிப்படியாகவே பிரகடனம் செய்தார்.  ஒரு எளிமையான கிராமத்தில் தொடங்கி தனது மகிமைகள் மூலமாக உலகுக்கு தனது பிரம்மாண்டத்தை உணர்த்தினார். உண்மையை சொல்வதானால்… பாபா தனது மகிமைகளை வெளிக்காட்டுவதற்கு எடுத்துக்கொண்ட முயற்சிகளைவிட தனது  பூரணத்துவ வெளிப்பாட்டைக் கட்டுப்படுத்தி மாயையினால் மறைக்க எடுத்துக்கொண்ட முயற்சிகளே அதிகம் என்பது ஞானிகளின் வாக்குமூலம்!
 

எளியமனங்களும்  அப்பாவித்தனமும் புனிதகுணங்களும் நிறைந்த 1940 -50 காலகட்டங்களிலும் கூட... சுவாமியைத் தேடி வருபவர்களில் பலர் தங்களுடைய தொழிலில் ஏற்பட்ட தடங்கல்கள், குடும்ப சிக்கல்கள், வியாதி வேதனைகள் போன்றவைகள் சுவாமியால் தீர்த்து வைக்கப்படுவதிலேயே குறியாக இருந்தனர். அப்படிப்பட்ட சமயங்களில் மட்டும் சுவாமியை ஒரு தெய்வம்போல ஆராதித்தும், மற்ற சமயங்களில் அவரை ஒரு ‘தெய்வ சக்தி உள்வரும்’ சாமான்யராகக் கருதவும் கூட செய்தனர்.
 
ஒருமுறை துவைத்து உலர்த்தி சுவாமிக்குக் கொடுக்கப்பட்ட உடைகளில் இருந்த கசங்கல்களைக் கண்ட யாரோ ஒருவர், "அடடா! இஸ்த்ரி செய்தால் நன்றாக இருக்குமே!" என்று சொல்ல... அங்கிருந்த ‘காபிபொடி’ சாகமம்மா.... "இந்த கிராமத்து சுவாமிக்கு இது போதாதா?" என்றார் சுவாமியை உரிமையுடன் கிண்டல் செய்யும் விதமாக! அதைக்கேட்ட சுவாமி... "ஹ்ம்ம்... பார்த்துக் கொண்டே இருங்கள்.. எதிர்காலத்தில் என்ன மாதிரியான உயர்மாற்றங்கள் நிகழப் போகிறதென!" என்று சொல்லியபோது அன்று அங்கிருந்து ஓரிருவருக்குக் கூட பிற்காலத்தில் நிகழவிருந்த பிரம்மாண்டங்கள் கற்பனைக்கு எட்டியிருக்குமா? என்பது சந்தேகமே!
 


🌷பிரேம சாயி அவதாரம்:
 

சத்ய, த்ரேதா, தாவபர, கலி யுகங்கள் கூடிய ஒரு சதுர்யுகத்தின் இறுதியில் சில சமயம் பிரளயம் ஏற்பட்டு மீண்டும் படைப்பு நிகழ்ந்து மற்றொரு சதுர்யுகம் தொடங்குவதாக ஞானிகள் கண்டுரைக்கின்றார். அவ்வண்ணம் நிகழும் இந்த சதுர்யுகத்தின் கலியுக இறுதியில் மனிதர்களின் அஞ்ஞானத்தினை மட்டும் நிர்மூலம் செய்து சத்திய யுகதத்தினை பிறப்பித்து நிர்மாணிக்கவே பரம்பொருள் மூன்று சாயி அவதாரங்களாக வந்துள்ளது. இதனை சுவாமி பொது மக்களின் முன்பு  சிலமுறை பிரகடனம் செய்துள்ளார். 1963ம் ஆண்டு தனது உடலில் பக்கவாதம் ஏற்படுத்திக்கொண்டு லீலை நடத்திய சுவாமி தனது சிவசக்தி ரூபத்தை பிரகடனம் செய்ததும் கூட அத்தகைய ஒரு பொது நிகழ்வே! அதேபோல தனிமையிலும் சில அத்யந்த பக்தர்களுக்கு மூன்று சாயி அவதாரங்களின் ரகசியங்கள் குறித்தும்.... மூன்று அவதாரங்களும் அடிநாதமாக விளங்கும் தெய்வீகத்தைக் குறித்தும் விளக்கியுள்ளார்.
 


திருமதி கருணாம்பா ராமமூர்த்தியிடம் திருமதி சாக்கம்மா, சுவாமி வெளிப்படுத்திய மாபெரும் தேவ இரகசியத்தைப் பகிர்ந்து கொண்டார்.  ஒருமுறை மைசூரில் இருந்து பெங்களூருக்குப் பயணம் செய்யும்போது, ​​ஸ்வாமி தன்னுடன் பயணித்த சாகம்மாவிடம் தான் மீண்டும் கர்நாடகாவில் பிறக்கப் போவதாகக் கூறினார்.  மேலும் சுவாமி கூறியதாவது, "எனது அடுத்த அவதாரத்தில் மைசூர் மற்றும் பெங்களூரு இடையே உள்ள ஒரு கிராமத்தில் பிறக்கப் போகிறேன். இந்த சத்யசாயி அவதாரத்தில் நான் செய்த போதனைகளின் சாராம்சம் எனது அடுத்த அவதாரமான பிரேம சாயி காலத்தில்... பக்தர்களால் முழுமையாக செரிக்கப்படும்.  வரிசையாக மூன்று அவதாரங்களாக அல்லாமல் ஒரே அவதாரமாக வந்திருந்தால், அதன் பிரம்மாண்ட சக்தியை மனிதகுலத்தால் தாங்க முடியாது!". மேலும் அந்தப் பயணத்தின்போது சுவாமி வீதியில் இறங்கி ஒரு குறிப்பிட்ட இடத்தை சுட்டிக் காட்டி, இந்த இடம்தான் நான் பிரேம சுவாமியாய் வரவிருக்கும் ஸ்தலம் என்று உடன் பயணித்தவர்களிடம் கூறினார். அதோடு தாம் ஒரு ஏழைக் குடும்பத்தில் தான் பிறப்பேன் என்றும் குறிப்பிட்டார்.
 

🌷சந்தேக நிவாரணி ஸ்ரீ சத்யசாயி:
 
பழைய மந்திர நாட்களில், அங்கு கூடியிருந்த பக்தர்கள் அனுபவித்த மகிமைகளெல்லாம் உயர்ந்த மகிமை என்னவென்றால்... அவ்வப்போது சுவாமி விளக்கிச் சொல்லும் படைப்பின் ரகசியங்கள் ஆகும்.  சுவாமியின் அங்கை அசைப்பில் வரும் பொருட்களை விட சுவாமியின் திருவாயிலிருந்து வெளிப்படும் ஞானமொழிகளே அதிக மகிமை வாய்ந்தது  என்று பலரும் உணர்ந்தனர். பல சந்தர்ப்பங்களில், சுவாமியின் தெய்வீக விளக்கங்களைக்  நேரில் கேட்ட பெரும்பாக்கியம் அமையப் பெற்றவர் திருமதி.கருணாம்பா. அவற்றுள் குறிப்பிடும் படியான விஷயங்களில் சுவாமி கொடுத்த விளக்கங்கள்...
 
1) திருமண செலவுகள்"நவீன கால மனிதர்களே... திருமணம் என்பதில் இத்தனை செலவுகளையும், கொடுக்கல் வாங்கல்களையும் ஏற்படுத்திக் கொண்டீர்கள். ஆதியில்... நிறைய நிலபுலன்கள் கால்நடைகள் இருப்போர் பெண்ணுக்கு ஒன்றோ இரண்டோ கால்நடைகளைக் கொடுத்தனுப்புவர். சாட்சிக்காகவும் ஆசிக்காகவும் பத்து மனிதர்கள் எதிரே... சந்தோஷத்துடன் கன்யாதானம் செய்துகொடுத்தால் அதுவே திருமணம் என்பதற்குப் போதுமானது. திருமணம் செய்துகொள்ளும் ஆணுக்கும் பெண்ணுக்கும் மனம் ஒத்திருக்க வேண்டும்.. அவ்வளவே !  நீங்கள் பார்த்துக் கற்றுக் கொள்ளவேண்டும் என்பதற்காகவே... சுவாமி செய்துவைக்கும் திருமணங்களை அந்த விதமாகவே தான் நடத்தி வைக்கிறேன்."
 
2) சிரார்த்தம்ஒருவா் இறந்த ஓராண்டுக்குப் பின்னரும் அதற்குப் பின் ஆண்டுதோறும் அதே திதியில் செய்யப்படும் ஒரு சடங்கு. இதனைக் குறித்து சுவாமியிடம் கேட்டபோது... சுவாமி, "ஒவ்வொருவருக்கும் தனது பெற்றோர் நிஜத்தில் கடவுளுக்கு சமமானவர்களே! அவர்கள் உடலை விடுத்த தினத்தில் அவர்களை நன்றியுடன் நினைத்து உணவு வைத்தல் சிறப்பானதே! மற்றபடி இவ்வளவு செலவு செய்யவேண்டும்... அவ்வளவு தானம் கொடுக்க வேண்டும் என்பதெல்லாம்... நீங்களே உங்களுக்கு கற்பித்துக் கொண்ட அனாவசிய செலவுகளே ஆகும்!"
 
3) தற்கொலைதற்கொலை குறித்து சுவாமிடம் கேட்டபோது... சுவாமி பின்வரும் ஆன்ம ரகசியங்களை விளக்கினார். "ஒருமுறை சரீரத்தை ஆன்மா இழந்துவிட்டால் அதனைத் திரும்பப் பெற இயலாது. இறைவனை, இறைத் தன்மையை உணர்வதற்காக ஆத்மாக்களுக்குக் கொடுக்கப்படும் வாடகை வீடே சரீரமாகும். அதனை உணராமல்  வாழ்வின் மேடு பள்ளங்களைத் தவிர்ப்பதற்காக   தற்கொலையின் மூலம் உடலை இழந்த ஆன்மா படும்பாடுகள் அளவில்லாதவை ! நீங்கள் கற்பனை செய்வது போல் ஆன்மா உடலை விடுத்து வெளியே சென்று ஆனந்தமாக வெற்றிடத்தில் திரிவதில்லை! மாறாக... பிரபஞ்சத்தில் நிரம்பியுள்ள பூதப் பிரேதங்கள் தரும் கஷ்டங்களாலும்  பயமுறுத்தல்களாலும்  அல்லலுற வேண்டிவரும். எனவே கஷ்டங்கள் வரும்போது இறைவனை அணுகி அதனைத் தீர்த்துக் கொள்ளவேண்டுமே தவிர தற்கொலை செய்யக் கூடாது!"
 
4) விக்ரஹம்/பூஜை"இறை அவதாரங்களின்  விக்ரஹங்கள் என்பது, நமது அகத்தினுள் குடியிருக்கும் இறைவனை வெளியே அடையாளப் படுத்துதலே ஆகும்.  மனிதர் தம் மனத்தை உருவமற்ற ஒரு விஷயத்தில் நிலையாக நிறுத்துதல் கடினம் என்பதால் இறைவனுக்கு ஒரு உருவம் கொடுத்து பூஜைகள் நடத்தப் படுகிறது. மற்றபடி விக்ரஹம் மட்டுமே இறைவன் என்றாகாது!. அதே சமயத்தில்... நம் வீட்டுக்  குழந்தைகளின் இதயத்தில்  பக்தியை ஊட்டுவதற்காக வீடுகளில் பூஜை நடத்தப்பட வேண்டும்; அவர்கள் பின்னாளில் வளர்ந்து, பூஜை புனஸ்காரங்களைத் தாண்டி இறைவனின் உண்மைத் தன்மையை புரிந்துகொள்வார்கள். இறைவன் அந்தர்யாமி என்றும் பிரார்த்தனையே  இறைவனிடம் பேசும் மொழி என்றும் உணர்ந்துகொள்வார்கள்."
 
5) தியானம்/ஜபம் : சுவாமி கொடுத்த முக்கிய விளக்கம், "எனக்குள் உள்ள இறைத்தன்மை/சைதன்யம் முழுவதுமாகப் பிரகாசிக்கிறது! உங்களுக்குள்ளும் அதே இறைத்தன்மை உள்ளது ஆனால் மிகவும் மங்கிப்போய் உள்ளது. தியானம், ஜபம், பிரார்த்தனை இவைகளின் மூலம் மட்டுமே உங்களுக்குள் இருக்கும் இறைத்தன்மை வெளிப்படும். அதன் பின்னர் எனது தெய்வீகத்தையும் நீங்கள் விளங்கிக் கொள்ளமுடியும். ஆனால்.. இடைவிடாத பயிற்சியின் மூலமே அது படிப்படியாகவே நிகழும்.”
 
6) கர்மா:  “ஆஹா.. இந்த மாணவன் மிகவும் நல்லவன் என்று ஒரு மாணவனைக் குறித்து  உணரும் ஆசிரியர்கள், அந்த மாணவனின் குறைகளைக் கூட கண்டுகொள்ளாமல் எப்படி பாஸ் செய்து அனுப்புவார்களோ அதேபோல பாவ மூட்டைகளைச் சேர்த்த ஒருவர் ... ஜெபம், தியானம்,பிராத்தனைகளைச் செய்யும்போது அவர்களின் பாவத்தில் ஒரு சதவிகிதத்தை இறைவன் குறைக்கிறார் என்பது நிஜமே! மனிதர்கள் தமது தீய கர்மங்களை/பாவங்களை அழித்து விடும்படி வேண்டாமல்... அவற்றின் பலன்களை அனுபவித்து தீர்த்து முடிக்கும் வைராக்கியம் கொள்ள வேண்டும். அப்படி பவித்ரமானவர்களாகி பின்னர் சிரத்தையுடன் செய்யும் நாமஸ்மரனை ஒரே பிறவியில் கூட முக்தியைப் பெற்றுத் தரும். அதோடு எனது தரிசனம் பெற்ற உங்கள் பாவகர்ம பலன்களில் மிகக் கொஞ்சத்தையே உங்களை அனுபவிக்க விடுகிறேன்; அவற்றை நீங்கள் அனுபவித்தே தீர்க்க வேண்டும்!”
 

புண்ணியாத்மா திருமதி. கருணாம்பா ராமமூர்த்தி அவர்கள் தனது நினைவில் நிற்கும் தெய்வீக அனுபவங்களில் மிகவும் முக்கியமானதாக பின்வரும் சுவாமியின் வார்த்தைகளை நினைவுகூருகிறார்.  “உங்கள் எல்லா பிரச்சனைகளையும் நீக்கி விடுகிறேன். அதற்காகத்தான் நான் பூமிக்கு வந்துள்ளேன். ஆனால் உங்களுக்கு மோசமான கர்மா இருந்தால், அதில் ஒரு பகுதியை நீங்கள் அனுபவித்துத் தீர்ப்பதற்கு விட்டுவிடுகிறேன். அது சில சிரமங்களை அளிக்கும்... அந்த சமயத்தில் என்னைக் குறை சொல்லாதீர்கள். உங்கள் கர்மவினைப் பலனை நீங்கள் ஏற்றுக்கொண்டு நிம்மதியாக கடக்க முடிந்தால், எனது  முழு அருளையும் பெறுவீர்கள்."
 
"ஒரு சிறு குழந்தை தனக்கு ஏதாவது தேவை என்றால் எப்படி கேட்கிறது? தனது தாய் கவனிக்கும்படி அழுகிறது; தாயும் உடனே வந்து சமாதானம் தருகிறாள். ஒரு சிறிய அப்பாவி குழந்தையைப் போல இருங்கள், சுவாமி உங்களை உடனடியாக கவனித்துக்கொள்வார். பெரிய செயல்கள் எதுவும் செய்ய வேண்டியதில்லை; கடவுளின் பெயரை இடைவிடாமல் உச்சரிப்பதே உங்களுக்கு சிறந்த மார்க்கம்!"

 

  ✍🏻 கவிஞர் சாய்புஷ்கர்

மூலம் : சாயி இலக்கியங்கள் மற்றும் இணையம்


  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக