தலைப்பு

திங்கள், 30 அக்டோபர், 2023

கிண்டி கோவில் லீலாம்மாவின் பிளட் பாய்சனை பாபா குணப்படுத்துகிறார்!

திடீரென ஏற்பட்ட உடல் கோளாறு, பிளட் பாய்சன் என மருத்துவர்கள் சொல்ல அதிர்ச்சி, லோகநாத முதலியாரின் மகளான செல்வி லீலாவோ படித்துக் கொண்டிருக்கிற இளம் வயது, ஒட்டுமொத்தமாய் பாபாவிடம் சரணாகதி அடைந்த குடும்பம் லீலாவின் குடும்பம், பாபா எவ்வாறு காப்பாற்றுகிறார்? சுவாரஸ்யமாக இதோ...!


கிண்டி கோவில் லீலாம்மா என அனைவராலும் அறியப்படும் செல்வி லீலா , லோகநாத முதலியாரின் தவ மகள்! அவரே கிண்டி ஸ்ரீ ஷிர்டி சாயி கோவிலை ஸ்ரீ சத்ய சாயி பாபா அறிவுறுத்த கட்டியது! உலகின் முதல் பாபா கோவில் அது! அதற்கு அடிக்கல் நாட்டியதும் ஷிர்டி பாபா தனது அடுத்த அவதாரமான ஸ்ரீ சத்ய சாயி பாபாவாக அவதாரம் எடுத்த பிறகு தான் என்பது அனைவரும் அறிந்ததே!

அது 1948 ஆம் ஆண்டு! மகாத்மா காந்தி அவர்களின் உடல் துப்பாக்கிக் குண்டுகளால் துளைக்கப்பட்ட பாரதத்திற்கே களங்கமான தினம் அன்று! எதிரியை துன்புறுத்தாமல் தன்னையே துன்புறுத்திக் கொண்டு விடுதலைத் தீர்வு காணச் செய்த காந்தி மகான் மண்ணில் சாய்ந்த செய்தியால் செல்வி லீலாவின் கண்களில் இருந்து கண்ணீர் சாய்ந்து கொண்டே இருக்கிறது! நிற்கவே இல்லை! ஒரே அழுகை! லீலாவுக்கு துக்கம் தாங்கவே இல்லை! எத்தனை தேசியவாதியாக இருந்திருந்தால் செல்வி லீலா அத்தனை தூரம் அழுதிருப்பார்! ஆனால் அழுகை நின்றாலும் கண்களில் இருந்து நீர் நிற்கவில்லை... ஒரே வலி! ஸெப்டிக் வேறு ஆகி உடலே நீலம் பாய்ந்து இருந்தது! தந்தையான லோகநாதர் மிகவும் வருந்துகிறார்! மருத்துவரை கவலையோடு அணுகுகிறார்! மருத்துவர் ஜான் அவர்களோ பரிசோதனை செய்துவிட்டு "பிளட் பாய்ஸன்" (Blood Poison) என்கிறார்! பென்ஸிலின் ஊசி கூட செல்வி லீலாவுக்கு ஒத்துக் கொள்ளவில்லை! பார்வையும் நலிந்து கொண்டே வருகிறது! எதுவும் சரிவரத் தெரியவில்லை! குடும்பமே அதிர்ச்சி அடைகிறது!


அந்த சமயம் , திடீரென ஒரு கடிதம் வருகிறது! பிரித்துப் பார்த்தால்... பாபாவின் கையெழுத்து! பரவசப்படுகிறார் லோகநாதர்! "உங்கள் மகளுக்கு உடல்நிலை சரியாக இல்லை அல்லவா! நான் குப்பத்தில் ஒரு கல்யாணத்திற்கு வருகிறேன்! அங்கே உங்கள் மகளை அழைத்துக் கொண்டு என்னை சிந்தியுங்கள்!" என்று எழுதப்பட்டிருக்கிறது! அனைத்தும் அறிந்த பாபாவின் அந்தக் கருணை மொழியை வாசித்ததும் லோகநாதரும் கண்ணீர் சிந்துகிறார்! செல்வி லீலா அப்போது சிந்தியது நோயால் ஏற்பட்ட பரிதாபக் கண்ணீர்! ஆனால் லோகநாதர் சிந்தியதோ பாபாவால் ஏற்பட்ட பரவசக் கண்ணீர்!

     ஆக..குப்பத்திற்கு இரு கண்ணீர் தெப்பமும் செல்கிறது! தரிசித்த அடுத்த நொடியே இள சாயியின் திருப்பாதங்களில் விழுந்து செல்வி லீலா தனது கண்ணீரை கடவுள் சாயிக்கு முத்தாகச் சிந்துகிறார்! கண்ணீர் சிந்திய அடுத்த நொடியே கண் வலி சரியாகி விடுகிறது! நிமிர்கிறாள்... ஆனாலும் நோய் முழுமையாகத் தணியவில்லை! 


அடுத்த நாள்... கட்டியான சிருஷ்டி விபூதியை பாபா கொடுத்து கண்களின் இமைப் பரப்பில் தேய்க்கச் சொல்கிறார்! லீலாவும் அவ்வாறே தேய்க்க.. கண்களோ.. பனியில் முழுகிய இமய மலையாய் இமை இழை காட்சி அளிக்கிறது! பிறகு தனது தெய்வீகத் திருக்கரங்களால் பாபா மல்லிகை மலர்களை சிருஷ்டி செய்து, அதை கண்களின் மேல் வைத்து துணியால் கட்டிவிடச் சொல்கிறார்! 

"கட்டைப் பிரிக்காமல் , சென்ட்ரல் ஸ்டேஷன் வந்தபிறகு கட்டை அவிழ்த்து விடு! நேராக தேர்வு எழுதப் போ! எதற்கும் கவலைப்படாதே! நான் உன் கூடவே இருக்கிறேன்!" என்று பாபா திருவாய் மலர... அவ்வாறே செய்கிறாள் லீலா! 

சென்டரல் ரயில் நிலையம் வந்தபிறகு கட்டு அவிழ்க்கப்படுகிறது.. புகை விட்டு கிளம்பும் ரயில் போல் லீலாவின் நோயும் அவளை விட்டுக் கிளம்பிவிட கண் காலை சூரியனாய் பளிச்சிடுகிறது! அங்கிருந்து புறப்படும் ரயிலோசை குயிலோசையாய் பாபாவின் திருப்பெயரையே லீலாவின் இதயத்தில் கொடுத்துவிட்டு தண்டவாளத்தில் நோயின் வண்டவாளத்தை ஏற்றியபடிச் செல்கிறது!


(ஆதாரம் : அற்புதம் அறுபது | பக்கம் : 31 - 33 | ஆசிரியர் : அமரர் ரா.கணபதி )


புறக் கண்ணில் ஏற்படும் நோயை மட்டுமல்ல நமது அகக் கண்ணில் ஏற்பட்டிருக்கிற மாயை எனும் நோயைக் கூட பேரிறைவன் பாபாவே குணப்படுத்துகிறார்! அந்த அறியாமைக் கட்டை தனது பேரன்புக் கருணையால் விடுவித்து பாபாவே நமக்கு ஞான ஒளிப் பாய்ச்சுகிறார்! அதற்கு நாம் பாபாவிடம் சரணாகதி அடைய வேண்டும்! சரணாகதி என்பது நம் வாழ்வில் நிகழும் எந்த சம்பவங்களையும் "சாயி சங்கல்பமே!" என்று உணர்ந்து குறைபட்டுக் கொள்ளாமல் அப்படியே ஏற்றுக் கொள்வது!


  பக்தியுடன் 

வைரபாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக