தலைப்பு

திங்கள், 6 நவம்பர், 2023

செயல்படுவதற்கு முன்னமே இரு அவதாரங்களையும் தடுத்த இருவர்!

எவ்வாறு ஒரே விதமான அணுகுமுறை இரு வேறு யுகங்களில் இரு பெரும் அவதாரங்களுக்கும் நேர்ந்திருக்கிறது.. அதற்கு இரு அவதாரங்களும் ஒருமித்து சொன்ன ஒரே பதில் என்ன? சுவாரஸ்யமாக இதோ...!

அது துவாபர யுகம்! ஸ்ரீ கிருஷ்ணர் பாண்டவர்களின் நலனுக்காக அஸ்தினாபுரம் வருகிறார்! பெரிய பஞ்சாயத்து அது! கொடிய கௌரவர்கள் ஐந்து கிராமத்தை கூட பாண்டவர்களுக்கு தர மாட்டோம் என பிடிவாதமாக இருக்கிறார்கள்! நியாயமாக ஐந்து ராஜ்ஜியங்களாவது தர வேண்டும்... ஆனால் எதற்கும் அவர்கள் இடம் கொடுக்கவில்லை.. ஐந்து பிடி மண்ணை கூட அவர்கள் தரத் தயாராக இல்லை... பரிதாபத்திற்குரிய பங்காளிச் சண்டை அங்கிருந்து தான் துவங்குகிறது! நிலம் அல்லது போர் என்ற முடிவுக்குத் தான் வருமோ? என்ற எண்ணம் வலுக்கிறது! தூதாக வருகிறார் ஸ்ரீ கிருஷ்ணர்! நியாய தர்மம் எடுத்துரைக்க ஸ்ரீ கிருஷ்ணர் அங்கே விஜயம் புரியக் காரணமே அவர் நிகழ்த்த வேண்டிய சமாதானத் தூதே! ஆகவே ஸ்ரீ கிருஷ்ணர் அஸ்தினாபுரத்திற்கு வருகிறார்! விதுரரும் அவரது மனைவி சுலபாவும் அவரை வரவேற்கிறார்கள்! மகாவிஷ்ணுவே ஸ்ரீ கிருஷ்ணர் எனும் பேருண்மையை உணர்ந்த தம்பதிகள் அவர்கள்! நன்றாக அவரை உபசரித்து விட்டு 


"ஓ... யது குல சிங்கமே! தாங்கள் அந்த அரக்க மனம் கொண்ட துரியோதனனோடு  சமாதான பேச்சு வார்த்தை புரிவது அவசியமா? அகந்தைக்கு காதுகள் செவிடு அல்லவா! திமிரின் கண்களில் தெளிவு எவ்வாறு பிறக்கும்? பகவான் உங்களுக்கு தெரியாததா? நீங்கள் அங்கே சென்றால் அவமானம் நேராதா? அனைவர் நன்மைக்காகத் தான் உங்கள் விஜயம் என்பது எங்களுக்குப் புரிகிறது! ஆனால் அவர்கள் அதை உணர்ந்து கொள்வார்களா? ஆகவே தயை கூர்ந்து கேட்கிறேன் அந்த கௌரவர்களை சந்திப்பதை தாங்கள் கைவிட வேண்டும் பகவானே! இதுவே அடியேனது ஒரே கோரிக்கை!" என்கிறார் கை கூப்பியபடி விதுரர்! 

சுலபாவும் விதுரர் அருகில் அமர்ந்து முகத்தை உருக்கமாக வைத்துக் கொண்டிருக்கிறார்! 

அத்தனை ஸ்ரீ கிருஷ்ண பக்தி இருவருக்கும்! அவர்களுக்கு ஸ்ரீ கிருஷ்ணர் விஜயம் புரிந்தது ஆனந்தமாகவும் அதே சமயம் அவர் சமாதானம் பேசப் போகிறதை எண்ணி விழலுக்கு இறைத்த நீராய் வீணாகிவிடுமோ? என்கிற ஒருவகை தர்ம சங்கடமும்!  

     

அதற்கு ஸ்ரீ கிருஷ்ணர் மிகவும் முகம் மலர்ந்து வெகு குளிர்ச்சியாக "ஓ எனது புனிதமான விதுரரே! அந்த துரியோதனனுடைய அக்கிரம மனதை நான் அறியவில்லை என்று நீ நினைத்துக் கொண்டிருக்கிறாயா? அவன் அருகே துதிச் சாமரம் வீசிக் கொண்டிருப்பவர்கள் போருக்கான தூபம் போடுகிறார்கள் என்று எனக்கு தெரியாமலா இருக்கிறது?! திருதுராஷ்டிர புத்திரர்களுக்கு  இப்பேர்ப்பட்ட வன்ம அகந்தை இல்லாமல் போயிருந்தால் ஆயிரம் ஆயிரம் பேர்களை போரில் இறக்காமல் காப்பாற்றலாம்! ஆனால் அது சாத்தியமில்லை என்று எனக்கு நன்கு தெரியும்! என்னுடைய சமாதான தூது ஏற்கப்பட்டால் தேசத்திற்கு நன்மையே விளையும்! என் வார்த்தைகளை ஏற்கவில்லை எனில் அழியப் போகிறது அவர்களே! என்ன தான் அண்ணன் தம்பி சண்டையாக இருந்தாலும் ஸ்ரீ கிருஷ்ணர் அவர்களை சமாதானப்படுத்தாமல் ஏன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்? என்று யாரேனும் என் மேல் பழி சொல் சொல்லிவிட கூடாது... ஆகவே செல்கிறேன்! பற்றில்லாமல் என் நிலைப்பாட்டை சொல்வதற்காகச் செல்கிறேன்! அது என் கடமை அவ்வளவே! நீ பயப்படுவது போல் எனக்கு எதுவும் தீங்கு நேராது! நீ நினைக்கிறாயா அவர்கள் எனக்கு தீமை செய்வார்கள் என்று... ஒரு ஈ எறும்பு கூட எனக்கு எதிராக நிற்காது ! ஆகவே நீ கவலைப்படாதே!" என்று விதுரருக்கு சமாதானம் சொல்கிறார் ஸ்ரீ கிருஷ்ணர்!


(ஆதாரம் : ஸ்ரீ மகா பாரதம் | உத்யோக பர்வம்)


இதே போல் ஸ்ரீ கிருஷ்ணர் கலியுகத்தில் ஸ்ரீ சத்ய சாயியாக அவதரித்த போது இதே போன்ற தடுத்தலும் சமாதான விடுத்தலும் அரங்கேறி இருக்கிறது...!

     இளம் வயதில் கண்ணாமூச்சி விளையாடுவார் அதே கோகுலத்து கோமகனான ஸ்ரீ சத்ய சாயி கிருஷ்ணன்! சத்தியம் என்கிற பால பாபா கண்களை கட்டிக் கொண்டே சக பிள்ளைகளை தொடுவதற்குப் பதிலாக பசுமாடுகளின் கழுத்தை கட்டியாகப் பிடித்துவிடுவார்! கோகுலத்தின் அதே பால்ய லீலா விளையாடல்களே இதுவும்! அப்படி பாபா செய்வதை பார்த்து பயப்படுகிறார் இறைத்தாய் ஈஸ்வராம்பா! பசுமாடு ஏதேனும் முட்டி விடுமோ என்கிற பயம்! பாபா துவாபர யுகத்தில் மாடுகள் மேய்த்தவர் தானே! ஆயினும் தாய்ப்பாச அறியாமை தாயின் கண்களை மறைக்கிறது! அப்போது சமாதானப்படுத்தியது பாபாவுக்கு யசோதையாக கலியுகத்தில் திகழ்ந்த கர்ணம் சுப்பம்மா "அதோ பார்! எவ்வாறு பசுமாடுகள் சத்யத்தின் தீண்டுதலை உணர்ந்து ஆனந்தப்படுகிறது!!! பார் சத்யத்தை... பால கிருஷ்ணனை போலவே இருக்கிறார்!" என்கிறார் சுப்பம்மா! போல என்ன சாட்சாத் பால கிருஷ்ணரே ஸ்ரீ சத்ய சாயி என்பதை ஈஸ்வராம்பா தாயும் போகப் போக உணர்கிறார்!


போகப் போக பக்தர்கள் வளர ஆரம்பிக்கிறார்கள்! பாத மந்திரம் போன்ற சிறு இடம் எதற்கு? பெரிய மாளிகையே கட்டித் தருகிறோம் என்று சில பக்தர்கள் தங்களோடு பாபாவை வருமாறு அழைக்கிறார்கள்.. பல பல ஜமீன்கள்.. பல பல ராஜ வம்சத்தினர் அழைக்கிறார்கள்! இவற்றில் சிலவற்றை காதுகளில் கேட்டு ஈஸ்வராம்பா அதிர்ச்சி அடைகிறார்! எங்கும் நிறைந்த பாபா தனை விட்டு நீங்கிவிடுவாரோ? என்று வருத்தப்படுகிறார்! இறைத்தாய் ஈஸ்வராம்பாவுக்கு மட்டுமல்ல யசோதைக்குமே இத்தகைய அறியாமை பலமுறை எழுந்திருக்கிறது! ஆகவே உடனே பாபாவை அழைத்து சத்தியம் வாங்குகிறார்! சத்தியத்திடம் வாங்குகிற சத்தியம் அது! புட்டபர்த்தியே பாபாவின் நிரந்தர இருப்பிடமாக இருக்க வேண்டும் என்பதே பௌதீக அன்னையின் கோரிக்கை! அதை சரி என்று இறுதியே இன்றி இன்று வரை பிரசாந்தி நிலையத்திலேயே குடி இருக்கிறார் பாபா!


ஒருமுறை பாபா ஒரு இடத்திற்கு செல்வதான ஏற்பாடு! அது நாத்திகர்கள் நிறைந்த பகுதி.. ஆகவே விதுரர் போலவே இறைத் தாய் ஈஸ்வராம்பா வருத்தப்படுகிறார்! பயம் கலந்த வருத்தம் அது! பாபாவை அழைத்து தனது பயத்தையும் ஆதங்கத்தையும் தெரிவிக்கிறார்... அங்கே போக வேண்டுமா? என்று விதுரர் கேட்டது போலவே இறைத்தாயும் கேட்கிறார்!

அதற்கு பாபா சிரித்துக் கொண்டே அதே துவாபர யுகத்தில் சொன்னது போலவே "என்னை யார் என்ன செய்து விட முடியும்? ஏன் அங்கே போக வேண்டாம் என்று சொல்கிறாய்? அவர்கள் என்ன பேசுவார்கள் என்று எனக்கு முன்பே தெரியாது என்றா நினைத்துக் கொண்டிருக்கிறாய்? நோயாளிகளை தேடித்தான் மருத்துவர் செல்ல வேண்டும்! அப்படித் தான் நானும் செல்கிறேன்! செல்வேன்! நீ கவலைப்படாதே! எந்த சிறு துரும்பும் தீங்காக எனக்கு திரும்பாது! ஆகவே பயப்படாதே!" என்று விதுரரை சமாதானப்படுத்தியது போலவே ஈஸ்வராம்பாவையும் சமாதானப்படுத்துகிறார் பாபா!


(Source : Sri Krishna Sri Sathya Sai | Page No: 114 - 117 | Author : Dr J. Suman Babu ) 


ஒரே நிகழ்வு வேறு வேறு காரணங்கள்! ஒரே சம்பவம் வேறு வேறு யுகம்! ஒரே கேள்வி வேறு வேறு சூழ்நிலை... ஒரே பதில் அதிலே ஒரேவிதமான அருளே! ஸ்ரீசத்ய சாயியே ஸ்ரீ கிருஷ்ணர் என்பதை சத்யம் சிவம் சுந்தரம் மற்றும் ஸ்ரீ மத் பாகவதம் படித்தாலே தெள்ளத் தெளிவாக நம் கண்முன்னமே ஆதாரங்கள் விரிகின்றன...!

அந்த ஸ்ரீ கிருஷ்ணரையே பிரசாந்தி நிலையத்தில் நாம் பொது தரிசனத்தின் போது நேருக்கு நேராக நமது கண்முன்னமே தரிசித்திருக்கிறோம் என்பதை உணர்கிற போது இதயப் பிரதேசமே பூரிக்கும் படி இனியும் வேறு எதுவும் தேவையில்லை என்கிற திருப்தியில் ஸ்ரீ சத்ய சாயி கிருஷ்ணரின் காலடியிலேயே ஆன்மா அப்படியே உறைந்து விடுகிறது!


  பக்தியுடன் 

வைரபாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக