1975ஆம் ஆண்டு புட்டபர்த்தி பிரசாந்தி நிலையத்தில் ஆறு மாதகாலம் தங்கியிருந்த கானடா எழுத்தாளர் திரு. பால் வில்லியம் ராபர்ட்ஸ், உலகின் முன்னணி பேஷன் பத்திரிகையான வோக்கில் எழுதிய நேரடி அனுபவக் கட்டுரை...!
🌹பால் வில்லியம் ராபர்ட்ஸ் கூறுகிறார்:
மேற்கத்தியர் ஒருவர் பெங்களூர் செல்ல விரும்பும் ஒரே ஒரு காரணம், இந்தியாவின் மிகவும் பிரபலமான ஆன்மீகத் தலைவர் ஸ்ரீ சத்திய சாயி பாபாவைக் காணத்தான். நானும் அவ்வாறே பயணப்பட்டு பெங்களுர் சென்றேன். என்னைக் கண்டதும் சூழ்ந்து கொண்ட டாக்ஸி ஓட்டுனர்கள், பாபா அப்போது அங்கு இல்லை எனவும், புட்டபர்த்தியில் இருப்பதாகவும், அங்கு என்னை அழைத்துச் செல்வதாகவும் போட்டியிட்டு வற்புறுத்தினர்.
பெங்களூரிலிருந்து 100 மைல்கள் தூரத்தில் உள்ள பர்த்திக்கு பயணப் பட்டோம். நான்கு மணிநேர, எலும்பை உலுக்கும் சவாரி,வளைந்து நெளிந்த சாலை, வரண்ட சமவெளி வழியாகப் பயணித்து ஆந்திர மாநிலத்தில் உள்ள அழகிய புட்டபர்த்தி கிராமத்தை அடைந்தோம். வளைந்த சாலையின் இறுதியில் மதில் சூழ்ந்த ஒரு கட்டிடம் காணப்பட்டது. உயர் அமைதி கோலோச்சும் இடம் என்று பொருள்படும் பிரசாந்தி நிலையம் அதுதான். ( ஜெரூசலம் என்ற புனிதத் தலத்திற்கும் அதுதான் பொருள்) உள்ளே நுழைந்து பூர்ணசந்திரா ஹாலின் பின்புறம்அமைந்திருந்த சிறிய வரவேற்பு அலுவலகம் சென்று நான் தங்கும் இடத்தின் சாவியைப் பெற்றுக் கொண்டேன். வாடகை .. "பாபா யாரிடமும் எதையும் பெறுவதில்லை. நன்கொடைகள் உட்பட.." என்று அங்கிருந்தவர் பதிலளித்தார்.
அறையில் எந்தவித பர்னீச்சரும் இல்லை. குளியல் அறையில் ஒரு குழாயும் வாளியும் இருந்தன.சிறிது நேர ஓய்வுக்குப்பின் நான் ஆசிரமத்தைச் சுற்றிப் பார்க்கலானேன். சுற்றிலும் பயணிகள் தங்க விடுதிகளுக்கு மத்தியில் , மந்திர் அமைந்திருந்தது. வெள்ளை நிற டூமுடன் கூடி , இரு தளங்களைக் கொண்ட அந்த கோயிலின் மேல் தளத்தில் விசாலமான இரண்டு வெள்ளிக் கதவுகள் இருந்தன. அதில் சர்வதர்ம இலச்சினைகள் பொறிக்கப்பட்டிருந்தன. "நீயே ஒளி, ஒளி உன்னுள்ளேயே உள்ளது!" என்று எழுதப்பட்டிருந்த நுழைவைத் தாண்டி,மணல்மீது அமர்ந்தேன். மந்திரின் வெளிப்புறத்தில் ஆண்களும் பெண்களும் தனத்தனியாக பாபாவின் தரிசனத்திற்காக அமர்ந்திருந்தனர். நான் ஒரு மேலைநாட்டு இளைஞன் அருகில் அமர, அவர் என்னை நோக்கி சாயிராம் எனக் கூறி முறுவலித்தார். இப்படியும் அப்படியும் அசைந்தும், வியர்வையில் நனைந்தும் அரைமணி நேரம் சென்றுவிட்டது.
மௌனமாக அமரந்திருந்த பக்தர்களிடயே, அந்த மௌனத்தினூடே ஒரு ஆழ்ந்த உன்னிப்பு காணப்பட்டது . ஆம்! அதோ மந்திரின் வாசலுக்கு பாபா வந்துவிட்டார். சிறிய உருவம். ஆரஞ்சு நிற நீண்ட கப்தான், ததும்பி வழியும் சுருண்ட முடிகள். பக்தர்கள் கைகூப்ப பாபா தமது விரல்களால் காற்றில் ஏதோ எழுதிக்கொண்டே பக்தர்களிடையே வந்தார். என்னவென்று சொல்ல இயலாத ஆனந்தமும், விம்மிடும் நெஞ்சமும் என்னுள் சங்கமித்தன! பாபாவின் நீண்ட கப்னி அவரது எழிலான நடைக்கு எந்த தடையும் விளைவிக்கவில்லை. தலை சாய்த்து சிலரிடம் பேசியும், கடிதங்களை வாங்கியபடியும் நடந்த பாபா, தமது கரங்களைச் சுழற்றி, ஒரு வெள்ளைநிற பொடியை ஒரு பெண்மணிக்கு வழங்கினார். இது பாபா சிருஷ்டித்த விபூதி. புனித நீறு. ஒருவேளை அவர் இதை எங்காவது மறைத்து வைத்திருந்து கரங்களில் வழியே கொடுக்கிறாரோ என்ற சந்தேகமும் எனக்கு ஏற்பட்டது. என் அருகிலேயே அமர்ந்திருந்த ஒருவருக்கும் பாபா இதே மாதிரி விபூதி வழங்கியபோதும் என் சந்தேகம் என்னைவிட்டு அகலவில்லை. பிறகு என் அருகில் வந்த அவர் புன்னகையுடன் என்னை உற்று நோக்க, இனம்புரியாத மன நிம்மதியுடன் கண்களில் நீர் பெருக அவரை தரிசித்தேன்! அவர் சென்றவுடன் ஒருவேளை இது மனோ வசியமோ என ஐயம் அடைந்தேன். அப்போது டாக்டர் பகவந்தம் அவர்களின் சொற்களை நினைவு கூர்ந்தேன். அவர் கூறுகிறார்". "பாபாவின் மேல் எனது ஆரம்பகால சந்தேகங்கள் நீங்க சில ஆண்டுகள் ஆயின. பிறகுதான் பாபாவின் ஆற்றல் விஞ்ஞான எல்லைகளுக்கு அப்பாற்பட்டது என்பதை அறிந்தேன்!"
மனிதனே தெய்வமாகலாம். இறைவனும் மனிதனாக அவதாரம் எடுக்கலாம். அந்த வகையில் பாபா ஒரு இறைவன் என்பதை அவருடன் இருந்த 6 மாதங்களில் அறிந்தேன். அவரது அற்புதங்களில் தலையாயது அவர் நமது மனதில் விதைக்கும் அன்புதான். இந்தக் கலியுகத்தில், சத்ய, தர்ம, சாந்தி, ப்ரேமை, அகிம்சை வழி நடந்து கர்ம வினைகளிலிருந்து விடுபட்டு, மோட்சமடைவதே அவர் காட்டும் நற்பாதையாகும். "முதலில் நீ கேட்பது அனைத்தையும் நான் தருகிறேன். பிறகு நான் தருவதை நீ கேட்கவேண்டும்" என்ற பாபாவின் கூற்றை நான் புரிந்து கொண்டேன்.
🌹தியானம்:
தியானம் என்பதைப் பற்றி பலவழிமுறைகள் பலரால் கூறப்பட்டுள்ளன. தியானம் என்பது படைத்தவனுடன் நாம் ஒன்றுவது. அதுவே அத்வைதமாகும். ஆயின் மனதை அடக்குவது கடினமாகும். இதற்கு மனிதன் நற்குணங்களைப் பழகவேண்டும். அதற்கு முன், காம, க்ரோத,லோப, மத,மாச்சர்யஙகளை விட்டொழிக்க வேண்டும் என பாபா உடதேசிக்கிறார்! இதுவே தியான மார்க்கம் செல்பவர்களுக்கு உற்ற உபதேசமாக நான் நினைக்கிறேன். பாபாவின் நடை உடை பாவனைகள், அவரது தரிசனம் இவற்றைக் கண்டவர்கள், அவரது தெய்வீகத்தை உணர்கிறார்கள். அமெரிக்காவின் இரண்டு பெரிய உளவியல் வல்லுனர்கள்(ஒஸிஸ்/ஹராடஸ்ஸன்) பாபாவின் அற்புதங்களைப் பற்றி ஆராய வந்து, அவை ஆராய்ச்சிக்கும் அளவீட்டுக்கும் அப்பாற்பட்டவை என பதிவிட்டுள்ளனர். பாபாவின் சந்நிதியில் படித்தவரும் பாமரரும் ஒன்றே!
🌹நேர்காணல்:
நான்கு மாதங்களுக்குப் பிறகு என்னை நேர் காணலுக்கு பாபா அழைத்தார். அப்போது நேர்காணல் அந்த அறையில் பாபா புன்னகையோடு நுழைந்து தம் கை அசைவில் ஒரு நவமணி மாலையைச் சிருஷ்டித்து ஒரு முதியபெண்மணிக்கு அணிவித்தார். அப்போது அந்த பெண்மணி வெளிப்படுத்திய உணர்வுகள் வர்ணிக்க இயலாதவை. இதன்பின் அடுத்திருந்த சிறு அறையில் ஒவ்வொருவராக அழைத்து பேசினார். என் முறை வந்தது. நானும் பாபாவும் மட்டும் தனிமையில்! என்னை அன்புடன் ஆரத் தழுவிய பாபா, என் வாழ்வில் பிறர் அறியாத சம்பவங்களைக் கூறி எனது கேள்விகளுக்கும் விடை அளித்தார்! அவர் பிறகு கூறிய அறிவுரைகளை இன்று வரை பொக்கிஷமாகப் போற்றி நடைமுறைப் படுத்த முயல்கிறேன். பிறகு பாபா தமது கையில் ஒரு வெள்ளைத் தைலத்தை சிருஷ்டித்து என் மார்பில் தானே தேய்த்துவிட்டார். அவரது தெய்வீக அன்பும், கருணையும் கிடைக்கப்பெற்றதால் ஆனந்தமும் அமைதியும் மனதில் குடிகொண்டன.
அதன்பின் , பிரசாந்தி நிலையத்தில் இரண்டுமாத காலம் (சிவராத்திரி வரை) தங்கி இருந்தேன். சிவராத்திரிஅன்று மாலை பாபா பூர்ணசந்திரா ஹாலில் திரளான பக்தர்களுக்கிடையே தமது அருளுரையை வழங்கினார். இடையே பிரசங்கம் தடைப்பட, தமது நாற்காலில் அமர்ந்தார். அவரது முகபாவனைகளின் மூலம் அவர் அனுபவித்த வலியும் வேதனையும் கண்டு பக்தர்கள் வருந்திய நிலையில், சிறிது நேரத்தில் தமது வாய் வழியே ஒளி பொருந்திய ஒரு லிங்கத்தை உத்பவித்து அதைத் தமது கையில் பிடித்து, மகிழ்வுடன் அதை அனைவருக்கும் காண்பித்தார். ஒரு பெரிய முட்டை வடிவிலான மரகத லிங்கம் அவர் கையில் ஒளிவிட்டு பிரகாசித்துக் கொண்டிருந்தது. பிரமிக்க வைத்த அந்த நிகழ்வுக்குப் பிறகு இரவு முழுவதும் பஜன்கள் தொடர்ந்தன.
பாபாவைப் பற்றி பேசியோ, எழுதியோ அறிந்துகொள்ள இயலாது. தனிப்பட்ட மன உணர்வுகளால் மட்டுமே அவரை அறிய இயலும்! எளிமை, நேர்மை பாசாங்கின்மை, விளம்பரமின்மை, தனித்துவம் இவைகளே அவரின் அடையாளங்கள். நன்கொடைகள் ஏதும் இல்லாமல், ஒரு சிறிய தொகையாக தங்குவதற்கும் உணவிற்கும் மட்டுமே செலவழித்து நான் ஆறுமாத காலம் ஆஸ்ரமத்தில் தங்கி இருந்தேன்!
பாபா ஒரு வாழும் உபதேசம். அவர் வாழ்வே நமக்கு நற்செய்தி. என் மதம் என்னவென்று கேட்டால், "சாய்பாபா" என நான் பதில் அளிப்பேன்! ஏன் என்று கேட்பவர்களுக்கு , பாபாவின் கீழ்க்கண்ட வார்த்தைகளையே விடையாக சமர்ப்பிக்கிறேன்.
ஆத்மா என்னும் சூரியனை சிலகாலம் ஓடும் மேகம் எனும் புலன் சுவைகள் மறைக்கலாம். புலன் இன்பமெனும் மேகத்தை திரட்டிய மனம் , மாற்றுத் திசையில் நல் வழிப்பட்டால், கருமேகங்கள் கரைந்தோட, ஆத்ம சூரியன் பிரகாசிக்கும். ஆகவே புலன் இன்பம் என்னும் மேகங்களை விலக்க மனதைப் பழக்கவேண்டும்! நாம் பிறவி எடுப்பது நம்முள் ஒளிரும் இறை ஒளியின் ஜ்வாலையை அறியவே. நமது உடலே விளக்கின் திரியாகும். இறைவனை தேடும் தீவிர நாட்டமே அந்தத் திரியை ஒளிர வைக்கும் எண்ணையாகும். பொறிக்குள் வைக்கப்படும் அற்ப உணவுக்காக, பொறியுள் சிக்கி தவித்திடும் எலிபோல, அறியாமையினால் மனிதன் தன் உண்மை ஸ்வரூபம் மறந்து , அற்ப உலக சுகங்களுக்காக தன்னை இழக்கிறான்!
பகவான் சாயி தனை விஞ்ஞான எல்லைக்குள் வைத்து பரிசோதிக்க பலர் முயன்றனர். ஆனால் இறுதியில் அவர்கள் மெய்ஞானம் பெற்று தெளிவடைந்தனர்! இந்த உண்மையின் விளக்கமாகத்தான் இப்பதிவு உள்ளது. இது நமக்கு பகவானின் பேரியக்கத்தையும், பிரம்மாண்ட வியாபகத்தையும் எடுத்துக் காட்டுகிறது! பாபா காட்டும் நல்வழி நடந்தோரின் நலமான வாழ்வுகண்டு நாமும் அவ்வழி நடந்து உய்வோமாக!
தமிழில் தொகுத்தளித்தவர்: திரு. குஞ்சிதபாதம், நங்கநல்லூர்
ஓம் சாயிராம்
பதிலளிநீக்கு