தலைப்பு

செவ்வாய், 14 நவம்பர், 2023

எவர் கட்டுப்பாட்டுக்குள்ளும் அடங்காத இரு பேராற்றலின் அவதாரங்கள்!

எவ்வாறு இரு யுகங்களிலும் இரு அவதாரங்களுமே சந்திக்க விளைந்த முட்டுக்கட்டைகள்... அதனுள் சிக்காமல் எவ்வாறு சுலபமாக வெளி வந்தார்கள்? எனும் சுவாரஸ்யமான அனுபவங்கள் விறுவிறுவென இதோ...!


அது துவாபர யுகம்! ஹஸ்தினாபுரம் வந்த ஸ்ரீ கிருஷ்ணர் விதுரர் தம்பதிகளின் பக்திப்பூர்வ உபசரிப்பை ஏற்றுக் கொண்டு.. பாண்டவரின் நியாயம் காக்க..‌அதன் மூலம் பாண்டவர் கௌரவர் இருவருக்கும் சமாதான வளமே சேர்க்க திருதிராஷ்டிரன் அரசவைக்கு கருடக் கொடி பொருத்திய ரதத்தில் வருகிறார்! அவரை கிருத வர்மனும் சத்யகியும் பின்தொடர்கிறார்கள்! மிகவும் நிதானமாக தெளிவாக அவர் மகன்கள் பாண்டவர்கள் மேல் கொப்பளித்த அராஜகத்தையும் வன்மத்தையும் எடுத்துக் கூறி புரிய வைக்க முயற்சிக்கிறார் ஸ்ரீ கிருஷ்ணர்... பதில் ஏதும் பேசாமல் கேட்டுக் கொண்டிருக்கிறார் அவர்! தன் மகன்கள் செய்த பாவத்தை நியாயம் செய்யவும் இல்லை.. பாவம் என்று தர்மத்தின் பக்கம் ஆதரிக்கவும் இல்லை... கண் மட்டும் அல்ல அவருக்கு காது கூட வேலை செய்யவில்லை என்ற அளவுக்கு விளைவு ஒன்றும் ஏற்படவில்லை... போரின்றி ராஜ்ஜிய பிரச்சனையை சுமூகமாக தீர்க்க ஸ்ரீ கிருஷ்ண தூது பெரிதாக பலன் அளிப்பதாக தெரியவில்லை!

போர்- போர்- போர் இதுவே துரியோதனனின் இதயத் துடிப்பாக வெளியே கேட்கிறது! சரி காந்திரி தானே  எடுத்துச் சொல்வதற்காகச் சென்றும்... குரோதக் கண்களுக்கு தாயும் தூசாகவே தெரிகிறாள்! ஆக துரியோதனன் மசியவே இல்லை! "விநாச காலே விபரீத புத்தி (போதாத காலத்தில் பிறழ்கிறது புத்தி)"

என்பதன் ஒட்டு மொத்த அடையாளமாக கொக்கரிக்கிறான் துரியோதனன்!


அந்த சமயத்தில் ஸ்ரீ கிருஷ்ணரை நான்கு பேர் ரகசியமாக சந்தித்து இரவோடு இரவாக அவரை குண்டுகட்டாக தூக்கி.. அவரை கட்டி , கடத்தி மறைத்து வைத்துவிட முடிவு செய்கிறார்கள்! அப்போது தான் அந்தச் செயல் பாண்டவர்களையே நிலை குலையச் செய்திடும் என்கிற ஒரு கற்பனை! அந்த 4 கூமுட்டைகள் கோவர்த்தன கிரியையே சுண்டுவிரலில் தூக்கியவரையே தூக்க தலையில் முக்காடு போட்டு வருகின்றன! இதற்கிடையே இந்த ரகசிய திட்டத்தை சத்யகி அறிந்து கிருதவர்மனிடம் தெரிவிக்க.. விதுரர் அதை அறிந்து திருதராஷ்டிரனிடம் தெரிவிக்க... பலன் ஏதும் இல்லை.. அந்த ரகசிய நால்வர் வருகிறார்கள்..

ஸ்ரீ கிருஷ்ணர் கௌரவ அரண்மனை உள்ளறையில் ஓய்வெடுக்கிறார்! 

இரண்டு கைகளுக்கும் இருவர்.. இரண்டு கால்களுக்கும் இருவர்.. மொத்தம் நால்வர்.. என தூக்க முற்படுகையில்... வந்திருப்பது யார் யார்? என ஸ்ரீ கிருஷ்ணர் அறிய... 

"நீங்கள் என்ன பதவி போதையில் இவ்வளவு தூரம் கிறங்கி விட்டீர்களா? நான் என்ன தன்னந்தனியாக இருக்கிறவன் என்று நினைத்துக் கொண்டீர்களா?" என்று ஸ்ரீ கிருஷ்ணர் உடனே எழுந்து கொண்டு ஒளி ரூபமாகிறார்! அந்த நால்வருக்கு வெறும் கண்கள் கூசுகின்றன... கண்ணனை அங்கே காணவில்லை... ஸ்ரீ கிருஷ்ணரின் உடம்பிலோ ஒவ்வொருவராக தோன்றுகின்றனர்...  இதயத்தில் சிவனும்.. வயிற்றில் பிரம்மனும்... முகத்தில் அக்னியும்... இந்திரன், யமன், வருணன், குபேரன் என உடல் சுற்றி அதனை ஸ்ரீ கிருஷ்ணர் வெளிப்படுத்த ... அதில் ரிஷிகள் , சூரிய சந்திரர் என ஒவ்வொருவரும் ஸ்ரீகிருஷ்ணர் உள்ளே இருப்பது மட்டுமின்றி பாண்டவர்களும் அவர் உள்ளே இருப்பதும் தெள்ளத் தெளிவாக தெரிகிறது.. யாருக்கு? அந்த நால்வருக்கும் அல்ல... நால்வரின் அந்த விபரீத செயலை தடுக்க விரைந்த திருதிராஷ்டிரன் , பீஷ்மர், துரோணர் , அங்கே வந்திருந்த கன்வ மகரிஷி மற்றும் திரிலோக சஞ்சாரி நாரதருக்கு! பிறகு அவர்களுக்கு தர்மத்தின் விடை கொடுக்க வந்த ஸ்ரீ கிருஷ்ணர் கௌரவ சபையிலிருந்து விடை பெறுகிறார்! என்ன நடந்தது? ஏது நடந்தது? கிருஷ்ணன் எங்கே ? என்று திரு திருவென முழித்துக் கொண்டிருந்தனர் அந்த நான்கு கடத்தல் பேர்வழிகள்.. அவர்கள் வேறு யாருமல்ல... துரியோதனன், துச்சாதனன் , கர்ணன், இவர்களுடன் கௌரவ குல அழிவுக்கே சூத்திரதாரியாக இருந்து, எமனின் தலை மேலேயே பகடை உருட்டி ஜெயிக்கும் அளவிற்கு மாபெரும் திறன் படைத்த வஞ்சகத்தின் நெஞ்சகம் ஸ்ரீ ல ஸ்ரீ சகுனி மாமா! 

(ஆதாரம் : மகாபாரதம் -  உத்யோக பர்வம்) 


இதே போல் ஸ்ரீ சத்ய சாயி அவதாரத்தில் ஸ்ரீ கிருஷ்ணர் இதேவிதமான பல இக்கட்டு சூழ்ச்சிகளை சந்தித்து இருக்கிறார்! பாபா பால பாபாவாக இருந்த இளமை காலங்களில் ஒரு டிரம்மில் வைத்து வஞ்சகர்கள் அடைத்து பாபாவை மலை மீது உருட்டி விட்டிருக்கிறார்கள்.. இதனை பழம்பெரும் பக்தர் பாலபட்டாபி தனது அனுபவ புத்தகமான "ஸ்ரீ சாயி லீலாமிர்தத்தில்" பதிவு செய்திருக்கிறார்! 

      பாபாவுக்கு விஷம் வைத்த துஷ்ட படலங்கள் ஒருமுறை இருமுறை அல்ல கடைசி வரை அது தொடர்ந்தது! நஞ்சை தொண்டையில் அடைத்த நீலகண்ட சாயிக்கு அவை ஒன்றும் செய்யவில்லை! ஆலகால நாகமே அவர் காலடியில் அடங்கி இருக்க... அது கக்கும் விஷம் எங்கிருந்து அவர் கழுத்தை இறுக்கும்?

      ஆக...ஸ்ரீ கிருஷ்ணர் சந்தித்த அதே உலக சவால்களை அதே ஸ்ரீ சத்ய சாயியாக அவதரித்த பிறகும் சந்தித்து வந்திருக்கிறார்...! சந்தித்தும் வருகிறார்...!  கேடுகெட்ட குண மனிதர்கள் ஏற்படுத்தும் சவால்கள் என்பதே அவருக்கு அன்றாடம் கேழ்வரகு உருண்டை சாப்பிடுவது போல் தான்...!

அதற்கு இன்னொரு உதாரணமாக...


ஒருமுறை தெலுங்கானாவிற்கு சிஞ்சோலி மகாராணியார் பாபாவை அழைக்கிறார்.. பாபாவும் பக்த பரிவாரங்களோடும் காரில் சகலவித மரியாதையோடும் காரில் அழைத்து வரப்படுகிறார்! அதில் பக்தை நாகமணி அம்மையாரும் ஒருவர்! 

அப்போது யாரும் எதிரே பார்க்காத விதமாக ஒரு துஷ்ட கூட்டம் வண்டியை வழி மறிக்கிறது! சிஞ்சோலி மகாராணியார் பயந்தே விடுகிறார்! நம்மால் தான் இந்த இக்கட்டு.. நாம் அழைத்ததால் தான் இப்படி ஒரு தர்ம சங்கடம் என வருத்தப்படுகிறார்... ஆனால் வழக்கத்திற்கு மாறான ஒரு அதிசயம் நடக்கிறது! 

அந்த துஷ்டர்கள் நெருங்கினார்களே தவிர பாபாவை பார்த்தவுடன் எந்தவித பிரச்சனையுமே செய்யவில்லை! சிசுபாலன் போல் வசைபாடவில்லை! கையில் ஏந்திய கருவிகளை வைத்து காரை பதம் பார்க்கவில்லை! கப் சிப் என்று அடங்கி விடுகிறார்கள்! பாபா அவர்களை ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை... "அமைதியாக இருங்கள்!" என்ற அவசிய வார்த்தையைக் கூட பாபாவின் அதரம் உச்சரிக்கவில்லல... பாபாவிடம் அவர்கள் என்ன தரிசித்தார்களோ? பாபாவுக்கும் அவர்களுக்குமே வெளிச்சம்! அந்த கல் இதயங்கள் கனிந்தன.. துரு பிடித்த மூளை குரு பிடித்த ஓலைச்சுவடியாய் அசையாது இருந்தன...!


அது ஜுன் 6- 1993 ஆம் ஆண்டு! அது குரு பூர்ணிமா மற்றும் கிருஷ்ண ஜெயந்தி நிகழ்வு! பாபா தனது ஞானப் பொழிவில் 

"கம்சன் எத்தனையோ விதமான இக்கட்டுகளை ஸ்ரீ கிருஷ்ணருக்கு உருவாக்கினான்! ஆனால் எக்கட்டுகளும் கிருஷ்ணருக்கு இக்கட்டுகளை உருவாக்கவில்லை! ஆம் பகவான் யாரின் வலையிலும் விழுவதில்லை! ஆனால் ஒரே ஒரு வலையில் விழுகிறார்.. அதுவே உண்மை பக்தி கொண்ட இதய வலையில்... 

எத்தனை அரக்கர்கள்.. எத்தனை பூதங்கள்..‌ ஸ்ரீ கிருஷ்ணருக்கு எதிராக களம் இறங்கின... அத்தனையும் இறுதியில் சாம்பலே ஆனது! 


என்னை பொருத்த வரை... சாயியாகிய நான் பக்தர்களின் தூய்மையான இதயத்தில் சுலபமாக சிக்கிக் கொள்பவன்! அதே போல் தீமையை கொண்டிருப்பவர்களின் இதயத்திலும் இருப்பவன்.. ஏன்? நல்லவர்கள் எனை எப்போதாவது நினைக்கிறார்கள்! எனக்கு தீமை செய்ய வேண்டும் என நினைப்பவர்கள்... எப்போதுமே எனை நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்! ஆனாலும் நான் யாரோடும் பந்தப்படுவதில்லை! சுவாமி எப்போது பற்றற்றவனாக, பந்த பாசத்திற்கு கட்டுப்படாத சர்வ சுதந்திரமானவனாக இருக்கிறேன்! எனது வாழ்க்கை எனது கையில்‌... என்னால் எத்தனை ஆண்டுகாலம் வாழவும் முடியும்... வேண்டாம் என்று பாதியிலேயே உடலை துறக்கவும் இயலும்! எல்லாம் என்னுடைய சுய சங்கல்பத்திலேயே அடங்கி இருக்கிறது! என்னுடைய புனிதமான தூய தெய்வீகமே அதற்கான ஒரே சாட்சி! இதற்கு வேறெந்த சாட்சியும் தேவையா?"


"இப்படித் தான் அவதாரங்கள் நிறைய இக்கட்டுகளை சந்தித்தன.. சந்தித்தும் வருகின்றன... ஏன்? பழிச் சொல் வராத அவதாரங்களே இல்லை! ஏன்? அப்படித் தான் இறை அவதாரங்களின் மகிமையே பரவுகிறது! அந்த முட்டுக்கட்டைகளும், வீண் வதந்திகளும், பழிகளுமே அவதாரங்களை பேரொளி மங்காமல் வளரச் செய்கிறது! ஆகவே அவதாரங்களின் பக்தர்கள் இதைப் போன்ற இடைஞ்சல்களில் மனதை அலைக்கழிக்காமல் நிலையான பக்தியில், அசைக்க முடியாத  நம்பிக்கையில் வாழ்வை புனிதமாக்கிக் கொள்ள வேண்டும்!" 


"என்னுடைய சங்கல்பமே இறுதி! அதற்கு எதிராக ஈரேழு உலகத்திலிருந்து யார் திரண்டு அதை தடுக்க முயன்றாலும்... எவராலும் என் சங்கல்பத்தை எதுவும் செய்துவிட இயலாது! அந்த பேரண்ட பிரபஞ்ச பேரிறைவனுடைய பேராற்றலின் சங்கல்பத்தை சர்வ சாதாரண மனிதராகிய நீங்கள் எவ்வாறு புரிந்து கொள்ளவோ? அதன் தெய்வீகத்தை அளவிடவோ?, அதன் ஆன்மீகச் செயல்பாடுகளில் முட்டுக்கட்டை இடவோ முடியும்??"

என்று மிகத் தெள்ளத் தெளிவாக பாபா விளக்கி.. கேட்பவர் இதயத்தையும் துலக்கிச் சொல்கிறார்!


(Source : Sri Krishna Sri Sathya Sai | Page No : 117 - 121 | Author : Dr. J. Suman Babu ) 


பாபா பற்றற்றவர் என்பதற்கு ஒரு உதாரணமே போதும்! அது: பொது தரிசனத்தை நிறுத்தப் போகிறேன் என்று பாபா தன் கூடவே பௌதீகமாக நெருங்கி இருந்த ஒருவரிடம் கூடச் சொல்லவில்லை!

எத்தனை பெரிய சாம்ராஜ்ஜியம்? எத்தனை பெரிய அரண்மனை! எத்தனை திரளான பக்தர்கள்! எத்தனை தேசத்து வழிபாடுகள்! சக்கரவர்த்திக்கும் மேலான நிலை இது! இந்த நிலையே சர்வ சாதாரண மனிதருக்கு பூர்வ புண்ணியப்படி கிடைத்தால் இல்லாத ஆட்டம் எல்லாம் ஆடுவான்! செருப்பைக் கூட தங்கத்தில் அணிவான்! தான் மரணிக்கவே கூடாது என்று நினைப்பான்! தனக்கு எதிரான கருத்தாளர்களை எல்லாம் பழிச் சொல் சுமத்தியும், மனம் நோகடித்தும் விரட்டுவான்! நாற்காலியில் பசை தடவி அமர்வான்! ஆனால் பாபா இவை எதையுமே செய்ததில்லை! காரணம் பாபா சாட்சாத் ஸ்ரீ கிருஷ்ணர்! எவ்வாறு பற்று இல்லாமல் ஒரு சாட்சியாக பாரதப் போரில் நல்லவர் ஐவரோடு உடன் இருந்தாரோ... இப்போதும் பாபா நல்லவர்களின் பக்கத்திலேயே இருந்து மனித குல சேவையை மிக பிரம்மாண்டமாக செய்து வருகிறார்! ஆக பாபாவை உண்மையான பக்தர்களே உரிமை கொண்டாட முடியும்! வேறு யாரும் அல்ல... கெட்டவர்கள் ஜெயித்து வருவது போல் மாயத் தோற்றம் இருக்கும் ஆனால் இறுதியில் தோற்பார்கள் என்பது பாபா ஸ்ரீ கிருஷ்ணாவதாரத்தில் தானே எழுதிய கீதை விதி! அதுவே யுகம் யுகமாக தொடர்கிறது!


  பக்தியுடன் 

வைரபாரதி

1 கருத்து: