தலைப்பு

சனி, 4 நவம்பர், 2023

மனநிலை பாதித்த பெண்மணி பாபாவின் சுதர்சன மகிமையால் குணமடைகிறாள்!

எவ்வாறு சாயி பக்திக் குடும்பத்தில் ஒரு பெண்மணிக்கு சித்தம் கலங்குகிறது? அது எதனால்? பிறகு எவ்வாறு அதிலிருந்து அவள் விடுதலை பெறுகிறாள்? பாபாவின் சுதர்ஷன மகிமை என்றால் என்ன? சுவாரஸ்யமாக இதோ...

அவர் பெயர் புருஷோத்தமன். பாபாவின் தீவிர பக்தர். அவருக்கு ஒரு மகன், ஒரே ஒரு மகன். அவன் பெயர் உதயகுமார்! அது 1976 ஏப்ரல். திருநெல்வேலி - தாழையூத்தில் நுகர் பொருள் வாணிகக் கழகத்தில் பணியாற்றுகிறார்! ஒரு நாள் ஒரு திடுக்கிடும் சம்பவம். அந்த அலுவலகத்தில் 250 ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் களவு போகின்றன... ஆகவே அது உதயகுமார் கவனக்குறைவு என்று வேலை நீக்கத்திற்கான மெமோ தரப்படுகிறது! ஒரே மகன்! தாய்க்கோ மகன் என்றால் உயிர். திருமணம் வேறு அவனுக்கு ஆகவில்லை! திடீர் என நிகழ்ந்த அந்த திடுக்கிடும் சம்பவத்தை தாங்க இயலாமல்  அவனுக்கு தாய் தந்தை முகத்தில் விழிக்கவே மனம் கூசுகிறது! ஆகவே நண்பரின் அறையில் மூட்டைப் பூச்சி மருந்து குடித்து மருத்துவமனை அழைத்துச் சென்றும் காப்பாற்ற முடியாமல் இறந்தே போகிறான்! பெரும் புத்ர சோகம் விளைகிறது!


மாநகராட்சி பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றிடும், பாபாவின் தீவிர பக்தரான புருஷோத்தமனுக்கு அந்த துக்கத் தகவல் சொல்லப்படுகிறது! அந்தச் செய்தி கேட்ட புருஷோத்தமன் மனைவிக்கு (உதயகுமார் தாய்) அந்த நொடியே சித்தம் பேதளிக்கிறது! "என் மகன் இறந்துவிட்டானா? ஏன் இப்படி உளறுகிறீர்கள்? அவன் என்னை திருப்பதிக்கு அழைத்துப் போகிறேன் என்று சொல்லி இருக்கிறான்.. அங்கே சென்றிருப்பான்.. நான் போய் கூட்டி வருகிறேன்!" என்று திருப்பதிக்கு செல்கிறாள்! ஆம் பெற்ற வயிற்றில் எரிமலை வெடிக்கிறது! ஆகையால் செய்வதறியாது திருப்பதி விஜயம் புரிகிறாள்!

அவள் வந்து சேர்வதற்குள் மகனின் அஸ்தி கரைக்கப்படுகிறது! 

"என் மகன் திருப்பதியில் சந்தோஷமாக இருக்கிறான்... அவன் அங்கே பெருமாள் முன் அமர்ந்து பஜன் பாடுகிறான்! அவனையா இறந்து விட்டான் என்று சொல்கிறீர்கள்.. பைத்தியங்களா!" என மேலும் உறுமுகிறாள்! மேலும் மேலும் தினசரி கத்தல்! மாதம் இருமுறை திருப்பதி விஜயம்.. இதில் 1978'ல் ஓய்வு பெற்ற புருஷோத்தமனின் ஓய்வூதியப் பணமும் கரைகிறது! இரண்டு சமையல்! தன்னிலையில் அவள் இல்லை! எவரின் பேச்சுக்கும் அவள் அடங்கவில்லை! மனம் அவளின் மகன் மேலான பாசச் சகதியில் சிக்கி , எதார்த்த உலகிற்கே அது வர மறுத்துவிடுகிறது! என்ன செய்வார் புருஷோத்தமன்?! ஆனாலும் அந்த சூழ்நிலையிலும் பாபாவின் மேலான பக்தியை அவர் விடவே இல்லை! அத்தனை இடையூறுகளிலும் அவர் சாயி வழிபாட்டினை நிறுத்தவே இல்லை! சாயி பஜனைக்குச் செல்வதைத் தவிர்க்கவில்லை! 


இப்படி இன்னல் தொடர... அந்த சமயம் ஒரு நாள் அது 1983 ஆம் ஆண்டு. பாபாவின் சென்னை விஜயம். கிண்டி ஸ்ரீ ஷிர்டி பாபா கோவில் புனருத்தாரணம். பாபா தனது கையாலேயே தனது முந்தைய அவதார உருவத்திற்கு குடமுழுக்கு நிகழ்த்துகிறார்! அப்போது மிகச் சக்தி வாய்ந்த சுதர்ஷன யந்திரத்தை சன்னிதானத்தில் பாபா விக்ரஹ அடியில் பிரதிஷ்டை செய்கிறார்! அதைக் காணும் பாக்கியமும் பெறுகிறார் புருஷோத்தமன்! தீய சக்திகளை வெல்லும் சுதர்ஷன மந்திரத்தைப் பற்றி அறிந்து கொள்கிறார்! ஸ்ரீ ஆதி சங்கரரே கொண்டாடிய மந்திரம் அது! அதை ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரி மற்றும் சாயி பக்தரான ஆர்.என். ஐயர் வழி அந்த மந்திரத்தை அறிந்து தினசரி புருஷோத்தமன் தனது சாயி வழிபாட்டில் சுதர்ஷன மந்திரத்தையும் சேர்த்து அதிக காலை பிரம்ம முகூர்த்தத்தில் ஜபிக்கிறார்! படிப்படியாக அவரது மனைவி குணமடைகிறார்! அது வரை 77 தடவை திருப்பதிக்கு சென்று வந்த அவள், 78'ஆவது முறை செல்ல எத்தனிக்கிற போது , போதும் இனி வராதே என பெருமாள் சொன்னதாக அவள் சொல்லியதில் இருந்து திருப்பதி விஜயம் நின்று, திருப்தி விஜயம் மனதிற்குள் நேர்கிறது! இரண்டு சமையல் ஒரு சமையல் ஆகிறது! கணவர் மீதான அன்பும் அனுசரணையும் மேலோங்குகிறது! புத்ர சோகத்தின் தீய விளைவு மாறி பாபாவின் பவித்ர பக்தியால் புருஷோத்தமனின் குடும்பமே மீட்கப்படுகிறது!

(ஆதாரம் : அற்புதம் அறுபது | பக்கம் : 25 - 31 | ஆசிரியர் : அமரர் ரா.கணபதி )


ஆகவே தான் பேரிறைவன் பாபா "உங்கள் குடும்பத்தோடு அன்பு மட்டும் வையுங்கள், பற்று வைக்காதீர்கள்!" என்கிறார்! பற்று என்கிற புற்று வழி வரும் நாகங்களே பந்த பாச உணர்ச்சிகள்! இறுதியில் அந்த மன நாகம் நமது கண்களையே குத்திவிடுகிறது! மனச் சிதைவு கூட ஏற்பட்டுவிடுகிறது! புருஷோத்தமன் அவர்களின் மனைவிக்கு ஏற்பட்டது போல்...!  ஆகையால் பாபாவிடம் பக்தி செலுத்துகிற போது பந்த உணர்ச்சி அடங்கி பிரசாந்த பாந்த உணர்வு எழுகிறது! இதயம் எனும் தீப்பந்தம் அடங்கி தீச்சுடராக சாயி சந்நிதானத்தில் அது அருள் பாலிக்கிறது!


பக்தியுடன் 

வைரபாரதி

1 கருத்து: