தலைப்பு

செவ்வாய், 28 நவம்பர், 2023

"சௌகார்பேட்டை சேட் கடையில் வாங்கியதோ?" என சந்தேகப்பட்டவருக்கு பாபாவின் சிருஷ்டி ட்ரீட்

ஒவ்வொரு மனிதரின் உணர்வு நிலையில் மாற்றம் ஏற்படுத்துவது அவதாரங்களால் மட்டுமே சுலபமாய் முடிகிற திருச்செயல்... அந்த அகமாற்றத்தையும் வருத்தாமல் பேரன்போடு செய்தவர் பாபா.. அவரின் திவ்ய சிருஷ்டிகளும்... தான் இருக்கிறேன் எனும் பேரிருப்புப் பொழுதுகள் சிலவும் சுவாரஸ்யமாய் இதோ...!

சி.டி.ஆர் எனும் ஒரு நபர் பாபாவை தொடர்ந்து கேலியும் கிண்டலும் செய்து கொண்டிருந்தவர்... பாபா சென்னைக்கு ஒரு வீட்டில் பக்தர்களுக்கு தரிசனம் தர வருகிறார் எனில்... சாற்றிய பக்கத்து அறையில் அமர்ந்து கொண்டு ஒரே கேலிப் பேச்சையும்.. கிண்டலையும் சக நண்பரோடு பகிர்ந்து கொள்வார்... பிறகு ஏன் அங்கு வர வேண்டும் எனக் கேட்டால்.. பாபா தரிசனம் முடித்து சென்றபிறகு வித விதமான தின்பண்டங்கள் கிடைக்கும்... அதற்காக அங்கேயே மறைந்திருப்பார்.. பாபா சென்றுவிட்டபின் ஒரு பிடி பிடிப்பார்... பாபா சில பொழுதில் சிருஷ்டி செய்து இனிப்புகள் வழங்குவதை அந்த அறையில் அமர்ந்தபடி காதில் கேட்டால்.. "அதை எல்லாம் எந்த சௌகார்பேட்டை சேட் கடையில் வாங்கி... எந்த பேய் பிசாசு இவர் கையில் வந்து கொடுத்ததோ?" என மனதிற்குள் சிரித்துக் கொள்வார்... நமக்கென்ன சுவையாக இருக்கிறது.. அவர் போனபின் ஒரு பிடி பிடிப்போம் என நினைத்துக் கொள்வார்...

இப்படியே சி.டி.ஆர் ஒரு முறை பாபாவிடம் தொக்காக மாட்டிக் கொள்கிறார்..  அந்த பக்தர் கூடலில் சி.டி.ஆரும் இருக்கிறார்.. ஒரு பக்தருக்கு பாபா சிருஷ்டி மைசூர் பாகு தருகிறார்.. உடனே சி.டி.ஆர் காதுகளில் விழும்படி "பங்காரு இது சௌகார்பேட்டை சேட் கடையில் இருந்து சுவாமி திருடவில்லை... ப்யூர் லவ்'வில் பண்ணினது... " எனச் சொல்லி சிரிக்கிறார்.. வெளவெளத்துப் போகிறார் சி.டி.ஆர்... பாபா சாதாரணமானவர் அல்லர் எனப் புரிந்து கொள்கிறார்... "பிரேம சக்தி எது தான் பண்ணாது.. ஸ்வீட் இல்லாத போது பிரேம சக்தி ஸ்வீட் தராதா? பிரேமையே ஸ்வீட் தானே!" என்கிறார் பாபா சி.டி.ஆரை பார்த்து... அன்று விட்ட கண்ணீர்த் துளி சி.டி.ஆரின் இதயக் கண்ணாடியைத் துடைத்து பளீச் என பிரகாசிக்கச் செய்கிறது! பிறகு மதுரம் மதுரம் என மதுராஷ்டகம் பாடி மதுரபாபா செல்கிறார்! அந்த மைசூர்பாகு இனிப்பா? பாபாவின் குரல் இனிப்பா? பாபாவின் பிரேமை பாகு இனிப்பா? என விடை தெரியாது திக்குமுக்காடிப் போகிறார் சி.டி.ஆர்.


நூலாசிரியர் இந்த அத்தியாயத்தில் ஸ்ரீ பிரேம சுவாமியின் விஜயம் குறித்தும் விளக்குகிறார் 40 ஆவது பக்கத்தில்... ஹிஸ்லாப்'பிற்கு அளித்த ஸ்ரீ பிரேம சுவாமி மோதிரம்... அதில் மெதுமெதுவாய் வளர்ந்த பிரேம பாபா உருவம் என சிலாகித்து எழுதி...பிரேம வைபவம் 40 ஆண்டுகளுக்குப் பிறகு என்கிறார்.. அது தற்காலத்தையேச் சுட்டிக் காட்டுகிறது... ஸ்ரீ பிரேம சுவாமியின் அவதாரப் பிரகடனம் விரைவில் ஆவீர்பவிக்கும்... யாகத்தில் இருந்து எழும் ஜ்வாலையாய் என்பதை உலக சூழல் உணர்த்திக் கொண்டே வருகிறது! 

ஆர்.ஆர்.சி எனும் பக்தருக்கு பாபா ஒரு சிருஷ்டி மோதிரம் அளிக்கிறார்... அதில் பாபா உருவம் பதிவாகி இருக்கிறது... ஒருமுறை அந்த மோதிரத்தை பாபா கடிகாரமாகவே மாற்றி விடுகிறார்... அதே மோதிரம் தான்.. ஆனால் அதில் நேரம் 12 எனில் உருவம் நேராக இருக்கும்.. நேரம் மாற மாற மோதிரத்தில் பதிந்த உருவமும் வளையும்.. நேரம் 6 எனில் தலைகீழாக உருவம் மாறிவிடும்... இப்படி தனது ஸ்ரீ கிருஷ்ண குறும்பு புரிவதில் பாபாவுக்கு நிகர் பாபாவே! அதையே கம்பர் அலகிலா விளையாட்டுடையார் என்கிறார்! இந்த நூதன ஜாலத்தை மோதிரம் பெற்றவர் 2 ஆண்டுகள் யாரிடமும் பகிரவே இல்லை.. பிறகு அவர் பகிர... அதற்குப் பிறகு அந்த குறும்பு விளையாட்டை நிறுத்திக் கொள்கிறார் பாபா! பாபாவால் எதனையும் புரிய முடியும் என்பதையே இது உணர்த்துகிறது!


பாபா இன்றளவும் பல ஊடகம் வழியே தொடர்புக்கு வருகிறார்... கனவு , தியானம் போன்ற வழிவகைகள் போல் தனது திருப்படத்திலிருந்து கடிதம் போடுவது... அந்தக் காலந்தொட்டே இவை நிகழ்ந்து கொண்டிருக்கின்றன...

இதில் ஆச்சர்யப்படுவதற்கு ஒன்றுமே இல்லை! பரப்பிரம்மத்தால் புரிய முடியாதது எதுவுமே இல்லை என்பதை உணர்ந்து கொண்டுவிட்டால் இது ஆச்சர்யமாகப் படுவதைக் கடந்து ஆன்மீகமாக உணரப்பட்டு... நம் அக மாற்றத்திற்கு வழிவகை செய்யும்!

 இப்படி சென்னையில் ஒரு வீட்டில் படக்கடிதம் வருகிறது... ஒருநாள் அந்த வீட்டுப் பையனுக்கு மிளகு ரசமும் வறுவலும் கேட்டு தனது திருப்படத்திலிருந்து கடிதம் போடுகிறார்... அவர்களும் அதனை சமைத்து பாபா படத்தின் முன் வைக்கையில் "சிப்ஸுக்கு காரம் போதவில்லை!" என கடிதம் போடுகிறார்...

வீட்டுப் பையன் மிளகு பொடி தூவிய அடுத்த நொடி.. "இப்போது நன்றாக இருக்கிறது!" என பதில் கடிதம் விழுகிறது...

ரசத்தைப் பற்றி சுவாமி ஒன்றும் சொல்லவில்லையே என அந்த வீட்டார் மனதில் நினைக்கும் போதே... "சுமார்!" எனக் கடிதம் வருகிறது...

பாபாவிடம் எதையும் கேட்க வேண்டியதில்லை... நாம் மனதில் நினைத்தாலே போதுமானது .. அதனை நன்கு அறிபவர் பாபா... தான் இருக்கிறேன் என்பதை உணர்த்த திடீரென இதைப் போல் லீலைகள் புரிவார்... அதிகமாய் எதிர்பார்ப்போ/ தம்பட்டமோ/ தற்பெருமையோ துவங்கிவிட்டால் நிறுத்திவிடுவார்...! பாபாவின் பேரிருப்பை அனுபவிக்காத ஒரு பக்தர் கூட இந்த உலகில் இல்லை!!


(ஆதாரம் : தீராத விளையாட்டு சாயி / பக்கம் : 35/ ஆசிரியர் : அமரர்.ரா.கணபதி) 


பாபாவுக்கு நம் அக மாற்றமே முக்கியம்! அதை மட்டுமே கவனிக்கிறார்... பாபா நம் வாழ்வில் சம்பவிக்கும் எந்த நிகழ்வாயினும் அது நம் அக மாற்றத்திற்காக மட்டுமே... நல்ல குணங்களை கடைபிடிப்பதிலேயே நமது அக மாற்றம் துவங்குகிறது... வாளியை தங்கத்திலேயே நாம் செய்து அதில் அமிர்தத்தையே இறைத்தாலும் ஓட்டை வாளியில் எதுவும் தங்காது! நல்ல குணங்கள் இல்லாமல் பாபா எவரிடமும் நெருங்கிக் கூட வருவதில்லை! சொல்லாமல் கொள்ளாமல் விலகுவது நல்லவர்களுக்கு அழகு என்பார்கள் நல்லவர்களுக்கு மட்டுமல்ல இறைவனும் நம் குணம் பார்த்தே வருவதும்...விலகி இருப்பதும்...! மற்றபடி பாபா யாரையும் தண்டிப்பதில்லை... நாம் செய்து வைக்கிற கர்மாவே ஒருநாள் நம்மை வைத்து செய்துவிடுகிறது!


  பக்தியுடன்

வைரபாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக